- 11. 223 செவ்வாய் கிழமை திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்
பொதுவாக பகவானை நாம் கோயிலுக்குச் சென்று சேவிக்கிறோம். ஆனால் பகவானே ஒருவரை தம்முடைய ஆலயத்துக்கு அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பினார் என்றால், அந்த வரலாறு எத்தனைச் சிறப் புடையது? அப்படி அனுப்பப்பட்டவர் சாதாரணமானவர் அல்ல, நான்கு வேதங்களும் படித்து கரை கண்டவர். ஆசார சீலர். அரங்கனுக்கு அந்தரங்க கைங்கரியம் செய்யும் தலைமை அர்ச்சகர். அவருடைய திருநாமம் லோக சாரங்க மகாமுனி. இவரை அனுப்பி அழைத்து வரச் சொன்ன ஆழ்வார் தான் திருப்பாணாழ்வார். பாண் பெருமாள் என்று இவரை அழைப்பார்கள். இறைவனுடைய பாதாதி கேசமான, திருவடி முதல் திருமுடி வரை கண்டு அனுபவித்து 10 பாடல்களைப் பாடி ஆழ்வார் என்கின்ற சிறப்பினை அடைந்தவர். இவர் ஸ்ரீரங்கத்திற்கு அருகில் உறையூரில் அவதரித்தவர் .பாணர் குடியில் பிறந்தவர் .யாழ் மீட்டிப் பாடு வதில் வல்லவர் .அரங்கனையே அனவரதமும் நினைத்தவர். இவருடைய திரு அவதார தினம் இன்று கார்த்திகை ரோகிணி.
அவருடைய அற்புதமான பாசுரம் இது.
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்டவாயன், என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
இந்த நட்சத்திரம் எல்லா திருமால் ஆலயங்களிலும் மட்டுமல்லாது திருமால் அடியார்களின் திருமாளிகையிலும் அனுசரிக்கப்படும்.
