அற்புதமான தலம் .. சாட்சிநாதர் ஆலயம். ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்ட பொழுது அந்தப் பிரளய வெள்ளம் இந்த ஊரில் போகாமல் புறத்தே நின்றதால் இதற்கு திருப்புறம் பயம் பெயர் வந்தது. சிவபெருமான் ஆணையால் இந்த வெள்ளத்தை காத்தவர் விநாயகப் பெருமான் என்பதால் இந்த விநாயகருக்கு பிரளயம் காத்த விநாயகர் என்று பெயர்.
கும்பகோணத்திற்கு வடமேற்கே 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மதுரை ஆதீனத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. பழைய காலத்தில் ஏழு கிணறு என்கிற இடத்தில் இந்த வெள்ளத்தை எல்லாம் விநாயகர் காத்தார் அந்த கிணறு கோயிலுக்கு வெளியே இருக்கின்றது. காவேரி வடகரை திருத்தலங்களில் புகழ்பெற்ற திருத்தலம். சோழ அரசு உருவாகக் காரணமான போரில் வென்ற முதலாம் ஆதித்த சோழன் திருக்கோயிலை கற்றளியாகக் கட்டினான்.இத்தல விநாயகர் (பிரளயங்காத்த விநாயகர்) சிப்பி, சங்குகளால் ஆக்கப்பெற்றவர்.
இங்குள்ள விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடிய விடிய தேனாபிஷேகம் நடைபெறுகிறது. அத்தனை தேனையும் விநாயகர் உறிஞ்சி விடுகின்றார். இந்த தேனாபிஷேகத்தைக் காண மக்கள் திரள் திரளாக வருகின்றார்கள்.இக் கோவில் பணிமகள் ஒருவரைக் கொன்று, அவ்வம்மையாருடைய அணிகலன்களை திருடிய ஒடம் விடுபவன், தானும் ஆற்றைக் கடப்பதற்குள், ஆற்றில் தவறி விழுந்து இறந்தான். இச்செய்தியைச் சுந்தரர், தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இறைவனுக்கு ஏன் சாட்சிநாதர் என்கிற பெயர் ?
அரதனகுப்தன் என்கின்ற வணிகன் ஒருமுறை ஒரு இளம் பெண்ணோடு இந்தத் திருத்தலத்திற்கு வந்தான். அவனைப் பாம்பு கடித்து விட்டது..இறந்துவிட்டான். .அவனோடு வந்த பெண் ரத்னாவளி இறைவனை அழுது பிரார்த்தனை செய்தாள் . எப்படியாவது இந்த வணிகரை உயிர்ப்பித்துத் தரும்படி மன்றாடினாள் .பக்தையின் கோரிக்கைக்குச் செவி சாய்த்த சிவபெருமான் வணிகனை உயிர்ப்பித்ததோடு ரத்னாவளிக்கு மணமுடித்து தந்தான் .
ஆனால் இந்த வணிகன் மதுரைக்குச் சென்ற பொழுது மூத்த மனைவி இவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் பஞ்சாயத்துக்கு சென்று விட்டாள் . அப்பொழுது இந்த திருமணத்திற்கு யார் சாட்சி என்கிற கேள்வி எழுந்த பொழுது, அந்தப் பெண் சிவபெருமானையே சாட்சியாகச் சொல்ல , சிவபெருமான் மடப்பள்ளி கிணறு வன்னி மரத்தோடு வந்து சாட்சி சொன்னதால் சாட்சிநாதர் என்ற பெயர் வந்தது .புன்னைவன நாதர் என்ற நாமமும் உண்டு.
இப்போதும் அந்த மடப்பள்ளி கிணறு வன்னி மரம் மதுரையில் இருப்பது இதற்கு அத்தாட்சி. பிரம தீர்த்தம், சப்த சாகர தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம் முதலிய தீர்த்தங்கள் உண்டு.
தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் இந்த ஆலயத்தில் விசேஷம். அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்ரர் முதலியோர் வழிபட்ட தலம்.
நால்வருக்கு அறம் உரைத்த அண்ணல் என்று பெயர் .அம்பாளுக்கு இச்சுவாணி தமிழில் கடும்படு சொல்லியம்மை . வாயிலிருந்து இனிமையான சொற்களை பேச அருள் தருவாள்.
மறம்பய மலைந்தவர்
மதிற்பரி சறுத்தனை
நிறம்பசுமை செம்மையொ
டிசைந்துனது நீர்மை
திறம்பய னுறும்பொருள்
தெரிந்துணரு நால்வர்க்
கறம்பய னுரைத்தனை
புறம்பயம் அமர்ந்தோய். 1
விரித்தனை திருச்சடை
யரித்தொழுகு வெள்ளம்
தரித்தனை யதன்றியும்
மிகப்பெரிய காலன்
எருத்திற வுதைத்தனை
இலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை
புறம்பயம் அமர்ந்தோய். 2
விரிந்தனை குவிந்தனை
விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி
பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை
பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை
புறம்பயம் அமர்ந்தோய். 3
வளங்கெழு கடும்புன
லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கம ரிளம்பிறை
சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர்
சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை
புறம்பயம் அமர்ந்தோய். 4
பெரும்பிணி பிறப்பினொ
டிறப்பிலையொர் பாகம்
கரும்பொடு படுஞ்சொலின்
மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண அரும்பவிழ்
திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பயம்
அமர்ந்தஇறை யோனே. 5
அனற்படு தடக்கையவ
ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர்
வினைப்பகையு நீயே
தனற்படு சுடர்ச்சடை
தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடைக்கையை
புறம்பயம் அமர்ந்தோய். 6
மறத்துறை மறுத்தவர்
தவத்தடிய ருள்ளம்
அறத்துறை யொறுத்துன
தருட்கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை
மதித்தகல நின்றும்
புறத்துள திறத்தினை
புறம்பயம் அமர்ந்தோய். 7
இலங்கைய ரிறைஞ்சிறை
விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக
ளடர்த்திடலு மஞ்சி
வலங்கொள எழுந்தவன்
நலங்கவின அஞ்சு
புலங்களை விலங்கினை
புறம்பயம் அமர்ந்தோய். 8
வடங்கெட நுடங்குண
இடந்தவிடை யல்லிக்
கிடந்தவன் இருந்தவன்
அளந்துணர லாகார்
தொடர்ந்தவ ருடம்பொடு
நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள்செய் தொன்றினை
புறம்பயம் அமர்ந்தோய். 9
விடக்கொருவர் நன்றென
விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவ
ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை
படுத்துமையொர் பாகம்
அடக்கினை புறம்பயம்
அமர்ந்தவுர வோனே. 10
கருங்கழி பொருந்திரை
கரைக்குலவு முத்தம்
தருங்கழு மலத்திறை
தமிழ்க்கிழமை ஞானன்
சுரும்பவிழ் புறம்பயம்
அமர்ந்த தமிழ்வல்லார்
பெரும்பிணி மருங்கற
ஒருங்குவர் பிறப்பே.(சம்பந்தர் தேவாரம்)