பகவான் ஸ்ரீமன் நாராயணனை தமிழில் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் திரு என்கின்ற அடைமொழியோடு உள்ள ஆழ்வார்கள் மூன்று பேர் .திருமழிசை யாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார். இதில் திருமங்கையாழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் இணைத்து சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்த கட்டுரையில் ஆராய்வோம்.திருமங்கையாழ்வாரும், திருப்பாணாழ்வாரும் அவதரித்த மாதம் கார்த்திகை மாதம்.முதலில் அவதரித்தவர் திருப்பாணாழ்வார்
பிறகு அவதரித்தவர் திருமங்கை ஆழ்வார்நம்மாழ்வார் நான்கு வேதங்களுக்கு நிகராக நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்தார். திருமங்கையாழ்வார் வேதங்களுக்கு ஆறு அங்கங்கள் இருப்பதைப் போல ஆறு பிரபந்தங்களை தமிழில் பாடி அருளினார்.
மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
ஆறங்கங் கூற வவதரித்த- வீறுடைய
“கார்த்திகையில் கார்த்திகை” நா ளின்றென்று காதலிப்பார்
வாய்த்தமலர்த் தாள்கணெஞ்சே வாழ்த்து.
இவர்கள் அவதரித்த நட்சத்திரங்கள் அடுத்தடுத்த நட்சத்திரங்களான கார்த்திகை நட்சத்திரமும் ரோகிணி நட்சத்திரமும்.
திருமங்கையாழ்வார் சத்ரிய குலத்திலும் திருப்பாணாழ்வார் பாணர் குலத்திலும் அவதரித்தனர்.
திருப்பாணாழ்வாருக்கு பின்னால் அவதரித்த திருமங்கையாழ்வார் முதலில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்திலும் திருமங்கையாழ்வாருக்கு முன்னால் அவதரித்த திருப்பாணாழ்வார் பின்னால் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தனர் என்பது ஒரு சிறப்பு.
கார்த்திகை யுரோகிணிநாள் காண்மினென்று காசினியீர்
வாய்த்தபுகழ்ப் பாணர்வந் துதிப்பால்- ஆத்தியர்கள்
அன்புடனே தானமல னாதிபிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள்.
கார்த்திகை சூரியனுடைய நட்சத்திரம் .
ரோகிணி சந்திரனுடைய நட்சத்திரம்.
சூரியனும் சந்திரனும் தான் இந்த உலகுக்கு ஒளி கொடுக்கின்றன. அதே போலவே இந்த இரண்டு ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்கள் உலகத்துக்கு ஞான ஒளியைக் கொடுக்கின்றன.
திருமங்கை ஆழ்வார் திருப்பாணாழ்வார் இருவருமே அக்காலத்து சோழ நாட்டில் அவதரித்தவர்கள் திருமங்கை ஆழ்வார் சோழ அரசுக்கு உட்பட்ட சீர்காழிக்கு அருகே திருக்குறையலூர் என்னும் திருத்தலத்தில் அவதரித்தார்.
திருப்பாணாழ்வார் திருவரங்கத்து அருகில் காவிரியாற்றின் தென்கரையில் உள்ள உறையூரில் அவதரித்தார். இதில் வியப்புக்குரிய செய்தி என்ன என்று சொன்னால், திருமங்கை ஆழ்வார் மொத்தமுள்ள 24 பிரபந்தங்களில் கால்வாசி பிரபந்தங்களை அதாவது ஆறு பிரபந்தங்களைப் பாடியவர். திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் – 47 அடிகள்),சிறிய திருமடல் (ஒரு பாடல் – 155 அடிகள்),பெரிய திருமடல் (ஒரு பாடல் – 297 அடிகள்), திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்),திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்) பெரிய திருமொழி (1084 பாடல்கள்).ஆக மொத்தம் 1137 பாடல்கள் பாடியுள்ளார்.
மீதி உள்ள 18 பிரபந்தங்களை 11 ஆழ்வார்கள் பாடி இருக்கிறார்கள் . மிக அதிகமான பாசுரங்களைப் பாடியவர் திருமங்கை ஆழ்வார் .மிகக் குறைவான, பத்தே பத்து பாசுரங்கள், (ஒரே ஒரு பிரபந்தம்) பாடியவர் திருப்பாணாழ்வார்.
ஆனாலும் இருவரும் ஒரே விஷயத்தைத்தான் பாடினர். ஆண்டவனுக்கு அடியாராக இருப்பதைவிட பாகவத அடியவராக இருப்பது உயர்ந்த நிலை என்பது வைணவ மதத்தின் கோட்பாடு. பாகவதநிஷ்டை என்பார்கள். திருப்பாணாழ்வார் முதல் பாசுரத்தில்
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே
அடியார்க்கு என்னை ஆட்படுவிமலன் என்ற தொடர் முக்கியம்.
திருமங்கையாழ்வார் தம்முடைய சகல பிரபந்தத்தின் சாரமான கருத்தாக அடியார்களுக்கு ஆட்படுதலை தெரிவிக்கின்றார் .
மற்றெல்லாம் பேசினும் கண்ண புரத்துறை யம்மானே உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்பது திருமங்கையாழ்வாரின் நிலைப்பாடு.
ஆக இரண்டு ஆழ்வார்களும் ஒத்த கருத்து உடையவர்கள்.
திருமங்கையாழ்வாரும் திருப்பாணாழ்வாரும் அரங்கன் மீது ஆராத காதல் கொண்டவர்கள் .திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் கற்களைக் கொண்டு மதில் கட்டினார்.தமிழ் சொற்களால் பிரபந்தம் கட்டினார்.
திருப்பாணாழ்வார் பத்தே பத்து பாசுரங்களில் அரங்கனைப் பாடினார். இருவர் பாடிய பாசுரங்களிலும் அரங்கன் மகிழ்ந்து அவர்களுக்கு வரங்களை வாரி வழங்கினான் .
இருவருமே அரங்கனை கண்களால் கண்டு வாழ்வதையே கண் பயனாகக் கருதியவர்கள்.
திருப்பாணாழ்வார்,
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
“கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே”
என்று பாடினார்.
தம்முடைய கடைசிப் பாசுரத்தை அருளியபொழுது அவர் சொன்ன வார்த்தை கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே.
அரங்கனை கண்ட பிறகு நான் வேறு எதையும் காண விரும்பவில்லை.
திருமங்கையாழ்வாரும் இதே கருத்தை
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினை கண்டுகொண்டு என் கண்ணினைக் களிக்குமாறே
என்று பாடி, அதோடு நிற்கவில்லை, அந்த எம்பெருமானைப் பார்க்க வில்லை என்று சொன்னால், இந்த மனிதக் கண்களுக்கு எந்தப் பயனும் இல்லையே என்று அழுத்தமாகப் பாடுகிறார்.
பூணார மார்வனை புள்ளூரும் பொன்மலையை
காணாதார் கண் என்றும் கண்ணல்ல கண்டோமே
இசை பாடுவதில் வல்லவர்கள்.
திருமங்கையாழ்வார் திருப்பாணாழ்வார் இருவருமே இசை பாடுவதில் வல்லவர்கள். இறைவனை மனம் விட்டுப் பாடுவதன் மூலமாக அவனை குணம் கொண்டு அறியலாம் என்று நினைத்தவர்கள்.
திருப்பாணாழ்வார் வாழ்க்கை முழுக்க பாட்டினால் வாழ்ந்த வாழ்க்கைதான்.
இதை கீழ்வரும் பாடல் உறுதிசெய்யும்.
காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி
தேட்டரு உதரபந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே
திருமங்கையாழ்வாரும் பாட்டினால் வாழ்ந்தவர்.
அவரே சொல்கிறார்.
தோடார் நறுந்துழாய் மார்வனை ஆர்வத்தால்
பாடாதோர் பாட்டு என்றும் பாட்டு அல்ல
இன்னொரு பாசுரத்தில்,
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் (8-10-9)
என்கிறார்.
எல்லா உலகங்களையும் வைத்து காத்த வயிறு பெருமான் வயிறு என்று எம்பெருமானின் வயிற்று அழகை திருப்பாணாழ்வார் இப்படிப் பாடுகின்றார்.
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின்னுயிரே
திருமங்கை ஆழ்வார் பல பாடல்களில் உலகங்களை வைத்து காத்த அவனுடைய திருவயிற்றின் அழகைப் பாடுகின்றார்
முனித் தலைவன்முழங்கு ஒளி சேர்திரு வயிற்றில் வைத்து உண்மை உய்யக் கொண்ட கனிக் கவளத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே (11-6-4)
நான் எந்த தவமும் செய்யவில்லை. ஆனாலும் அடியேனை உய்யக்கொண்டான் அந்த இறைவன் என்று திருப்பாணாழ்வார் பாடுகின்றார்
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே
பாரமான,அநாதி காலமாகத் தொடரும், அடியேன் வினைகளின் தொடர்பை நீக்கி, என்னைத் தன்னிடத்தில் அன்புகொள்ளும்படி செய்த பெரிய பெருமாள், அத்துடன் நில்லாமல் என் நெஞ்சிலும் புகுந்தான். இப்படிப்பட்ட பாக்யத்தைப் பெற நான் முற்பிறவியில் எத்தனை பெரிய தவம் செய்திருப்பேன் என்று தெரியவில்லை.
திருமங்கையாழ்வார்.
வந்தாய் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் என்றும், உற்றான் என்றும் உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்(8-10-5) என்றும் பாடுகின்றார்.
இப்படிப் பல பாசுரங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்
இருவருமே யாழ் மீட்டி ,தாளத்தோடு பாடுவதில் வல்லவர்கள்.
ஆழ்வார்களின் வரிசையைப் பாடவந்த மணவாளமாமுனிகள் இப்படிப் பாடுகிறார்.
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்ய னருள்மாறன் சேரலர்கோன்- துய்யபட்ட
நாதனன்பர் தாள்தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர்தோற் றத்தடைவா மிங்கு.
இதிலே மணவாளமாமுனிகள் வேறு ஆழ்வார்களுக்கு கொடுக்காத நற் பாணன், நற்கலியன் என்ற அடைமொழியை இந்த இரண்டு ஆழ்வார் களுக்கும் ஒருசேரக் கொடுத்திருக்கிறார்.
அரங்கன் கொடுத்த வரம்
இனி இருவருக்கும் அரங்கநாதன் கொடுத்த வரம் என்ன என்று பார்ப்போம். இருவருமே தங்களுடைய கடைசிப் பிரபந்தத்தையும், கடைசிப் பாசுரத் தையும் அரங்கனுக்குச் சமர்பித்தவர்கள். அதனால் அரங்கனிடம் இருந்து வரம் பெற்றவர்கள்.
முதலில் திருப்பாணாழ்வார் பெற்ற வரத்தைப் பார்ப்போம்.
அதைவிட மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், பொதுவாக நாம் பகவானிடம் சென்று, எனக்கு இந்த வரம் வேண்டும் என்று கேட்போம். பகவான் அந்த வரத்தைத் தரலாம். தராமலும் போகலாம். ஆனால் இவர்கள் விஷயத்தில் பகவானே தானே கேட்டும் வரம் தருகின்றான் .கேட்காமலும் வரம் தருகின்றான்.
திருப்பாணாழ்வாருக்கு கேட்காமலேயே வரம் தந்தான்.
அவரை, தமக்கு அருகில் , சதாசர்வகாலமும் தொண்டு செய்யும் மகா ஞானியான லோக சாரங்க மகா முனிவரை அனுப்பி, “நீர் அவரை காவிரி கரையில் இருந்து உம்முடைய தோளிலே சுமந்து கொண்டு என்னுடைய சன்னதிக்கு வர வேண்டும்” என்று உத்தரவிடுகிறார்.
நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி வைணவ சம்பிரதாயத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது .
பாணர் குலத்தில் பிறந்த ஆழ்வார் அக்காலத்தில் உள்ள கட்டுப்பாட்டின் அடிப்படையில் திருவரங்கன் கோயிலுக்குள் நுழைய முடியாதபடியான சூழ்நிலையில் இருந்தார்.
அவரை பகவான், தன்னுடைய அந்தரங்க கைங்கர்ய அர்ச்சகரை,வேதம் வல்ல அந்தணரை அனுப்பி,பாணரை தோளில் சுமந்து வரச் செய் கின்றான் என்ற சரித்திரத்தை கேட்கும் பொழுது நம்முடைய கண்கள் அருவியாய்க் கொட்டும்.
திருவிழாக்காலங்களில் பகவானுக்கு பல்வேறு வாகன சேவைகள் உண்டு. அனுமந்த வாகனம், கருட வாகனம், ஹம்ச வாகனம், கஜ வாகனம் போன்ற வாகன சேவைகள் உண்டு.
ஆனால் தம்முடைய அடியவரான திருப்பாணாழ்வாருக்கு “முனி வாகனம்” என்று வேத பண்டிதரான லோக சாரங்க மகா முனிவரை வாகனம் ஆக்கி னான்.
கேட்டுக் கொடுத்த வரம்
திருமங்கை ஆழ்வாருக்கு கொடுத்த வரம், கேட்டுக் கொடுத்த வரம் . திருமங்கையாழ்வார் தம்முடைய ஆறாவது பிரபலமான திருநெடுந்தாண் டகம் பிரபந்தத்தை ஒரு கார்த்திகை உற்சவத்தில் வீணையும் கையுமாக அபிநயித்துப் பாடினார் .
அந்தப் பாட்டின் சந்தத்திலும், அர்த்தத்திலும், இசையிலும், தாளத்திலும் மயங்கிய அரங்கன், அர்ச்சகர் மூலமாக திருமங்கையாழ்வாரிடம் “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கிறார்.
அப்பொழுது திருமங்கையாழ்வார் தமக்கு எந்த வரமும் கேட்காமல் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ஏற்றத்தைக் கேட்கிறார்.
நம்மாழ்வாரின் நறுந்தமிழை, வேதத்தோடு, மார்கழி உற்சவத்தில் பத்து நாள்கள் கேட்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்கிறார்.
அதை தன்னுடைய வாழ்நாளிலேயே ஒரு உற்சவமாக நடத்தினர் .
திருக்கோயிலில் தமிழ் பிரபந்தத்திற்கு ஏற்றத்தைத் தந்து திருவாய் மொழி விழா என்று பத்து நாட்கள் நடத்தியது திருமங்கையாழ்வார் தான் .
இந்த இரண்டு ஆழ்வார்களின் நட்சத்திரங்களும் அடுத்தடுத்து வருகின்றன.
திருமங்கை ஆழ்வார் அவதரித்த திருநாங்கூர் திவ்ய தேசத்தில் உள்ள திருநகரியில் அவருக்குத் தனி சன்னதி உண்டு .
வேலை சாய்த்துக்கொண்டு இருப்பார்.குமுதவல்லி நாச்சியாருடனும் தம் முடைய திருவாராதனப் பெருமாளான சிந்தனைக்கு இனியானுடனும் காட்சி தருவார்.
வேல் அணைத்த மார்பும் விளங்கு திரு வெட்டு எழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச்செவியும்
தாளிணைத் தண்டையும் தார்க் கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என்கண்
என்று அவர் அழகைக் கண்டு கொண்டே இருக்கலாம்.
ஆழ்வாரின் ஜனன உற்சவம் திருக்கார்த்திகை உற்சவமாக பத்து நாட்கள் நடக்கும். ஆழ்வாருக்குத் தனிச் சன்னதியும் கொடிமரமும் இங்கு உண்டு.
திருப்பாணாழ்வாருக்கு உறையூரில் தனிச் சன்னதி உண்டு. திருவரங்கத் திலும் அவருக்குத் தனி சன்னதி உண்டு. எல்லா திவ்ய தேசங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் இரண்டு ஆழ்வார்களின் அவதார வைபவம் கார்த்திகை கார்த்திகையிலும், கார்த்திகை ரோகிணியிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
