நாம் பிதுர் காரியங்கள் குறித்துத் திரும்பத் திரும்பப் பேசுகிறோம்.
காரணம் இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பலவிதமான நீக்க முடியாத தீராத சங்கடங்களை கவனித்துப் பார்த்தால் இதுவே மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது..
ஒரு காலத்தில் எல்லார் வீட்டிலும்அவர்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் குறைவில்லாமல் முன்னோர்களுக்கான காரியங்களைச் செய்தார்கள்.
ஆனால், இப்பொழுது இது தடைபட்டுக் கொண்டே இருப்பதை பார்க்கிறோம்.
ஒன்று, நேரமில்லை என்கிறார்கள்.
இன்னொன்று, செய்து தருவதற்கு ஆள் இல்லை என்கிறார்கள்.
மூன்றாவதாக, நம்பிக்கை இல்லை என்கிறார்கள்.
இதைச் செய்யாதவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்று சொல்கின் றார்கள்.
நாம் நமக்கு வருகின்ற கஷ்டங்களுக்கு என்ன தீர்வு என்பதைப் பற்றி தான் சிந்திக்கலாமே தவிர, அடுத்தவர்களுக்கு அது வரவில்லையே அவர்கள் இதை செய்யாமல் இருக்கின்றார்களே என்பது தீர்வாக இருக்காது.
அதை ஆராய்ச்சி செய்யவேண்டிய விஷயமும் கிடையாது. எனவே இதில் மிகுந்த கவனம் தேவை.

எல்லாவற்றிற்கும் பிராயச்சித்தம் உண்டு.
ஒரு நாள் கோயிலுக்கு போகாவிட்டாலும் அடுத்த நாள் போய் விடலா ம். ஏதேனும் தெய்வத்துக்குச் செய்கின்ற விஷயங்களில் குறையிருந்தாலும் அதைச் சேர்த்து செய்துவிடலாம்.
ஆனால் பிதுர் காரியங்களை அப்படி செய்ய முடியாது
நாம் காசி போய் வந்து விட்டோம்; கயாவுக்கு போய் பிண்டதானம் செய்து விட்டோம் இனி பிதுர் காரியங்களை மறந்து விடுவதுதான் என்று பலர் மறந்து விடுகிறார்கள். அது சரியல்ல.
காசியும் கயாவும் புண்ணியமான தலங்கள் தான் என்றாலும் கூட அங்கு போய் வந்த பின்னும் பிதுர் காரியங்களை இன்னும் தீவிரமாக செய்ய வேண்டுமே தவிர அதை விட்டுவிடக்கூடாது
இந்த பித்ரு லோகத்தை அவன் விஷ்ணு காப்பாற்றுகின்றார். எனவே இவர்களுக்கு செய்யாமல் கோயிலுக்குச் சென்று தனக்கு ஆராதனம் செய்வதைக் கூட அவர் விரும்பமாட்டார். லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு தர்பன பிரியாயை நமஹா என்று ஒரு வரி வரும்
இதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் , முன்னோர்கள் செய்யவேண்டிய தென்புலத்தார் வழிபாடு விட்டுவிடாமல் இருக்கவேண்டும் என்பது தெரிய வரும் .
பிதுர் உலகம் அது ஒரு தனி உலகம்.
அங்கே போன நம்முடைய முன்னோர்கள் மறுபிறவி எடுத்து இருக்கலாம். இல்லை அங்கேயே இருக்கலாம்.
இல்லை அந்த உலகத்துக்கு சேராமல் கூட இருக்கலாம்.
ஆனால் இங்கு உள்ளவர்களுக்கு அது ஒரு கடமையாக சாஸ்திரத்தால் விதிக் கப்பட்டிருக்கிறது. எனவே அதைச் செய்யாமல் இருந்தால் நம்முடைய முன் னோர்கள் காட்டிய வழியை மதிக்காதது போல ஆகிவிடும்.
அடுத்து நன்றி கொன்ற பாவமும் சேர்ந்து விடும்.
அதனால்தான் பெரியவர்கள் வலியுறுத்திச் சொல்லி இருக்கின்றார்கள்.
“நான் அன்னதானம் செய்கின்றேன் சொர்ண தானம் செய்கின்றேன் என்றெல் லாம் பல பேர் சொல்லுவார்கள்.
அன்றைக்கு இரண்டு பேருக்கு சாப்பாடு போடு விட்டுவிட்டால் அது உடனே அவர்களுக்கு போய் சேர்ந்துவிடும் என்று சொல்வார்கள்.
காஞ்சி பெரியவரிடம் ஒருமுறை இதை ஒருவர் சொன்னபோது அவர் மிகத் தெளிவாகச் சொன்னார்.
நீங்கள் அன்ன தானத்தையும் தர்பணத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்
அன்ன தானம் என்பது வேறு.
பிதுர் காரியம் என்பது வேறு.
அன்னதானம் செய்வது புண்ணியம் தானே தவிர அது பிதுர்காரியத்திற்கு ஈடாகாது என்று மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
பிதுர் லோகத்திற்கு இந்த அன்னதானம் என்பது போய்ச் சேராது.
அங்கே அவர்களுக்கு அன்னம் என்பது திலமும் ஜலமும் தான். அதாவது எள்ளும் தண்ணீரும் தான்.
சந்தியாவந்தனம் செய்யும் போது கூட இந்த தர்ப்பணங்கள் உண்டு. அமாவாசை மாதப்பிறப்பு கிரகணம் போன்ற காலங்களில் இது அவசியம் செய்தாக வேண்டும்.
இது மிகுந்த தொல்லை தரக்கூடிய ஒரு காரியம். கஷ்டமான காரியம். அதிக நேரம் பிடிக்கும் காரியம். அதிக செலவு பிடிக்கும் காரியம் என்று நாம் நினைக்கிறோம்.
உண்மையில் இதைச் செய்வதற்கு அதிகபட்சம் 10 நிமிடம் போதும்.
அதிகபட்ச பணம் ஐந்து ரூபாய்.அதுவும் அந்த கருப்பு எள்ளை வாங்குவதற்கு. மற்றபடி தண்ணீர் நம் வீட்டிலேயே இருக்கிறது.
தாம்பாளத் தட்டு போன்றவைகளும் நம்முடைய உள்ள இல்லத்திலேயே இருக்கிறது.
எனவே இதற்கு அவகாசமும் பொருளோ தேவையில்லை.
சிக்கனமாகச் செய்துவிடலாம்.
இப்பொழுது சென்னையில் இதற்கு தேவையான தர்ப்பையில் ஆன பவித்ரம் தர்ப்பை கூர்ச்சம் எல்லாம் கிடைக்கின்றன.
மூன்று தர்ப்பைகளாலும் கூர்ச்சத்தை தெற்கு நுனியாக ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து அதில் உங்கள் தந்தை வழியில் உள்ள மூன்று பேரை தாத்தா கொள்ளுத்தாத்தா அவர் அப்பா ஆவாகனம் செய்யவேண்டும்.
ஆவாகனம் செய்வது என்று சொன்னால் உங்கள் தாய் தந்தை உங்கள் தாத்தா பாட்டி உங்கள் கொள்ளுத் தாத்தா கொள்ளுப் பாட்டி இந்த மூன்று ஜோடிகளின் பெயரைச்சொல்லி இவர்களெல்லாம் இந்த கூர்ச்சத்தில் வந்து அமர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அதைப் போலவே இன்னொரு கூர்ச்சத்தை எடுத்து தாய் வழியில் தாயின் அப்பா அம்மா தாத்தா பாட்டி தாயினுடைய கொள்ளுத் தாத்தா கொள்ளுப் பாட்டி ஆகிய மூன்று பேரை அந்த கூர்ச்சத்தில் வந்து தங்கும்படி ஆக பிரார்த்தனை செய்து கொஞ்சம் எள்ளை மேலே போட வேண்டும்.
பிறகு கொஞ்சம் எள்ளை நம்முடைய உள்ளங்கையில் வைத்து அப்படியே சாய்த்து வலது கை கட்டை விரல் வழியாக , தந்தைவழியில் உள்ள மூன்று குடும்பங்களையும் தாய் வழியில் மூன்று குடும்பங்களையும் சொல்லி உங்களுக்கு மனப்பூர்வமாக இன்றைக்கு நான் இந்த எள் கலந்த நீரை இறைக்கின்றேன்.
இதனைப் பெற்றுக் கொண்டு நீங்கள் நம் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்று சொல்லி அந்தத் தர்ப்பணத்தை முடித்து விடலாம். இது போதுமே.
