
By S.Gokulachari
திருமங்கை ஆழ்வார் பெருமாளைத் தரிசிக்க திருவேங்கடம் வந்தார்.
பெருமாளைப் பார்த்த பரவசத்தில் மகிழ்ச்சி அளவு கடந்தது. ஆழ்வாரைப் பார்த்த பரவசத்தில் பெருமாளும் இருந்தார்.
பெருமாள் நினைத்தார்.
“நற்றமிழால் பாட வந்த நாற்கவிப் பெருமாள் இதோ வந்து விட்டார். இனி அவர் வாயமுதத்தமிழ் கேட்டு நாம் மகிழ்வோம்” என்று ஒரு துடிப்பில் பெருமாள் இருந்தார். ஆழ்வாரும் சும்மா யில்லை.வேங்கடவனைப் பார்த்த மகிழ்ச்சியில் அருவியாய் அருந் தமிழை அள்ளிக்கொட்டினார்.
வேங்கடவனும் ஆழ்வாரின் தமிழால் மகிழ்ந்தான். அமுதத்தமிழ் பருகிய மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. எத்தனை குதூகலம் அவன் திருவதனத்தில்!
ஆழ்வாரைக் கருணையோடு நோக்கிய பார்வையில் ஆழ்வாரின் உள்ளமும் இளகியது. இப்போது அவர் தன் மனதைப் பார்த்துக் கேட்கிறார். அதில் ஒரு கேலி தெரிந்தது.
“என்ன அடிமையாகி விட்டாய் போலிருக்கிறதே?”
நெஞ்சம் திருப்பிக் கேட்டது.
“யாருக்கு அடிமையானேன்? என்ன சொல்கிறீர்கள்?”
“என்ன ஒன்றும் தெரியாதவன் போல் கேட்கிறாயா? இந்த மலை மேல் ஆடும் கூத்தனுக்குத்தான் நீ அடிமையாகி விட்டாய் ”
“என்ன மலையப்பன் ஆடுகின்றானா ?”
“அவன் ஆடிய ஆட்டத்தில் தானே, மனமே, உன் ஆட்டம் அடங் கியது. ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா என்று ஒருவர் பிற்காலத்தில் இதையே பாடப் போகிறார் பாரேன்”
“என்ன செய்வது? பெருமாளைப் பார்த்தவுடன் நான் விழுந்து விட்டேன்”
“பிறகு என்ன செய்வாய்? நின்றதும் வேங்கடம் அல்லவா”
“ஆமாம்.. ஆமாம்..இந்தப் பெருமாளை, தாமரை மலர் அமர்ந்த பிரம் மாவும் சிவனாரும், தேவர் தலைவன் இந்திரனும் வணங்கு கிறார்கள்…. அப்புறம் நான் மட்டும் என்ன?”
” அது சரி அங்கே பார்…. பலரும் பாடிப் பணிந்து ஏத்தும் காட்சியை…”
“அப்படியும் உள்ளபடி அறிய முடியவில்லையே…ஆனாலும் அவன் திருவடியில் விழுகிறார்கள்”
“ஆமாம்… அவன் திருவடியில் விழுந்து தான் ஆக வேண்டும் .மலர் என்ற ஒன்று இருந்தால் அந்த மன்னவன் திருவடியில் விழுந்து தானே ஆக வேண்டும்… இந்த மனமும் ஒரு மலர் அல்லவா..
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய,
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே,
தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே,
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே. என்றல்லவா பாடி இருக்கிறார்கள்… இந்த மனதை அவன் திரு வடியில் சமர்ப்பிப்பது தானே ஆத்ம சமர்ப்பணம்… அதற்குத்தானே அவன் பரமபதத்தை விட்டு இந்த பாரத பூமியை நாடி வந்து மலைமேல் காலம் காலமாய் நிற்கிறான்….”
“அடடா.. பிரம்மலோகம் , சிவலோகம், இந்திரலோகம் எல்லாம் இங்கே வந்து விட்டதே,,, ஆயினும் மனசே, எனக்கு உன்னை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது”
“ஏன்,பரிதாபம்?”
நேற்றுவரை நீ எப்படி இருந்தாய்?”
“எப்படி இருந்தேன்?”
“பூர்வ அவஸ்தையில் தவித்துக் கிடந்தாயே”
“புரியவில்லை”
“உனக்குப் புரியாது ….இருந்தாலும் சொல்கிறேன்… உண்டதையே உண்டு, உறங்கிய பின் மீண்டு, கண்டதையே பேசிக் களிப்புற்று கிடந்தாயே…. நினைவில்லையா….. சம்சாரிகள் விஷய சுகங்களில் மண்டி கிடப்பார்கள். நீயும் அவர்களோடு சேர்ந்து கூடி ஆடி கும்மாளமிட்டாயே…. உருப்படியாக ஒரு பலனும் இல்லாமல் தேவையற்ற விஷயங்களைப் பேசினாயே …. இப்படிக் கூடி ஆடிப் பேசி திரிந்த நீ, எல்லாவற்றையும் மறந்து விட்டு இங்கு வந்த பிற கல்லவா திருந்தினாய் . விடிவு காலம் பிறக்க வேங்கடம் வந்தது உனக்கு நல்லதாகப் போயிற்று…. அப்படியே மாறிவிட்டாய் . உன்னுடைய குணங்களை விட்டுவிட்டு அந்த அனந்தனின் திரு வடியில் விழுந்து அடிமைத்தொழில் பூண்டாய் … என் நெஞ்சமே! காலம் கடந்து செய்தாலும் இச்செயல் எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது.. நான் மகிழ்ந்தேன்.. நீ வாழ்க ”
இப்படித் தன்னுடைய நெஞ்சத்தை வாழ்த்துகின்றார் திருமங்கை யாழ்வார்.
மாறாத மனதும் மாற ஒரே வழி மலையப்பனின் திரு வடி வாரம்தான் என்று திருமங்கையாழ்வார் சொல்லும் அற்புதப் பாடல் இது.
“கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்
என் நெஞ்ச மென் பாய் துணிந்துகேள்,
பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா,
ஆடு தாமரையோனு மீசனும்
அமர்கோனும் நின்றேத்தும், வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்று
அடிமைத்தொழில் பூண்டாயே”
என்பது பெரிய திருமொழி பாசுரம்
விளக்க உரை
கூடியாடி உரைத்ததே உரைத்தாய், என்றவிது தமது நெஞ்சின் பூர்வாவஸ்தையைச் சொல்கிறார்.நெஞ்சே! நீ நேற்றுவரை எப்படி போதுபோக்கித் திரிந்தாய்!; இன்று எப்படியானாய்! என்று ஆச்சரியம் தோற்ற அருளிச் செய்கிறார்.நீ நேற்று வரையில் விஷயாந் தரங்களிலே மண்டித்திரிகிற ஸம்ஸாரிகளோடே கூடியும், அவர்கள் அநுபவிக்கிற விஷயங்களையே அநுபவித்தும், அவர்கள் பேசுகிற பேச்சுக்களையே பேசியும் போந்தாயன்றோ ; இப்படியிருந்த நீ இன்று திடீரென்று எப்படிப்பட்ட நிலைமைக்கு வந்துவிட்டாய்!;
நீ பெற்ற பாக்கியம் நீ அறியவில்லையாகையால் நான் எடுத்துச் சொல்லுகிறேன், அன்புடன் கேளாய் நெஞ்சமே!; பக்திக்குப் போக்கு விட்டுப் பாடியுமாடியும் பலரும் பணிந்து ஏத்தி அவ்வளவிலும் காண முடியாதவனும், பிரமன் சிவனிந்திரன் முதலான மேலாத் தெய்வங் கள் மேவித்தொழப் பெற்றவனுமான திருவேங்கடமுடையான் திறத் திலே அடிமைத்தொழில் பூண்டாய் காண் என்கிறார்.
இரண்டாமடியின் முடிவில் “காண்கிலா” என்றும், “காண்கிலார்” என்றும் பாடபேதமுண்டு. காண்கிலா வென்பதைத் திருவேங்கடமுடை யானுக்கு விசேஷணமாக்கி யுரைத்தல் ஒரு யோஜநை; தாமரையோனுக்கும் ஈசனுக்கும் அமரர்கோனுக்கும் விசேஷணமாக்கி யுரைத்தல் மற்றொரு யோஜநை. தங்களைப் பணிந்தவர்களுங்கூடத் தங்களைக் காணப்பெறாதபடியான ஏற்றமுடைய பிரமன் முதலியோர் நின்று ஏத்தப்பெற்ற திருவேங்கமுடையான் என்கை.
ஆடு தாமரையோன் = ‘ஆடு’ என்று வெற்றிக்குப் பெயர்; வெற்றியையுடைய பிரமன்-உலகங்களைப் படைக்க வல்லவனாகையாகிற ஸாமர்த்தியம் வாய்ந்த பிரமன் என்கை.