சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய நாள். எந்த புண்ணிய பலனும் மாறாது கொடுக்கும் நாள் சனி. சனி பகவானுக்குரிய மகர ராசியில்தான் திருவோண நட்சத்திரம் இருக்கிறது என்பதால் சனிக்கிழமையும் திருவோ ணமும் கலந்து வந்தால் அந்த நாளுக்கு ஒரு மகத்தான சிறப்பு உண்டு. அப்படி மகத்தான சிறப்பு பெற்ற நாள் இன்றைய நாள்.குறிப்பாக ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விசேஷ மான திருமஞ்சனங்கள் உண்டு. ஒப்பிலியப்பன் கோயிலில் சிரவணத் திற்கு கிரிவலம் போல பிரதக்ஷிணம் உண்டு. அன்று விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால் “திரு “என்று சொல்லக்கூடிய அத்தனைச் செல்வங்களும் நீங்காது நிலைத்திருக்கும். திங்கட்கிழமையும் திரு வோணமும் சேர்ந்த தினங்களாக ஆண்டிற்கு ஓரிரு தினங்கள் வரும். இந்த தினத்தில் விரதம் இருந்து அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி பெருமாளையும் தாயாரையும் வழிபட வேண்டும். முதல்நாள் இரவு திடஉணவு உண்ணக் கூடாது.திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாற்றி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்கள் ,ஆழ்வார் பாசுரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தல் வேண்டும். மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு அழகான குழந்தை பாக்கியம் கிட்டும். விரத நாள் அன்று சந்திர தோஷம் விலக மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப் பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும்.இன்று பாட வேண்டிய பாசுரம் வாமனனைப் பற்றியது.
மண்ணை இருந்து துழாவி
‘வாமனன் மண் இது’ என்னும்,
விண்ணைத் தொழுது அவன் மேவு
வைகுந்தம் என்று கை காட்டும்,
கண்ணை உள்நீர் மல்க நின்று
‘கடல்வண்ணன்’ என்னும் அன்னே! என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
என் செய்கேன் பெய் வளையீரே?
நாம் நம் பெயரில் பத்திரம் எழுதி வைத்திருக்கும் நிலம் நம்முடைய நிலமல்ல .அது பெருமாளுடைய நிலம் என்கிற செய்தியைச் சொல்லுகின்ற பாசுரம். இந்தப் பாசுரத்தை மனம் உருகிப் பாடினால் எம்பெருமான் திருவருளால் இந்திரனுக்கு பூமி கிடைத்தது போல நமக்கும் பூமிச் செல்வங்கள் கிடைக்கும்.
