ஸ்ரீ ராமபிரான் அனுஷ்டித்த ஏகாதசி பங்குனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி. மிகவும் புனிதமான இந்த ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். எல்லாப் பாவங் களையும் போக்கக் கூடியது. விஜயா ஏகாதசி விரதம் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு எப்பொழுதும் வெற்றியே கிடைக்கும். இராமபிரான் வானரசேனையோடு இலங்கைக்கு படையெடுத்து வருகிறார் சேதுக் கரைக்கு வந்தவுடன் நீண்ட கடலைப் பார்க்கிறார். இத்தனை வானர சேனைகளோடு இந்தக் கடலை எப்படித் தாண்டுவது என்று யோசிக்கிறார் வக்தால்ப்யர் என்ற முனிவரிடம் சென்று ஆலோசனை கேட்டால், அவர் இந்த கடலை தாண்டக் கூடிய யோசனையைச் சொல்லுவார் என்று ராமன் அந்த முனிவரைச் சந்தித்தபோது ஏகாதசி உபவாசத்தைப் பற்றி எடுத்துக் கூறுகின்றார்.”பங்குனி தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி உபவாசம் இருந்தால், நீ எளிதில் சமுத்திரத்தைக் கடக்கலாம். ராவணனை வென்று சீதையை அடையலாம். ” என்று ஏகாதசி விரதத்தின் மகாத்மியத்தை முனிவர் சொல்லுகின்றார். தசமி அன்று தங்கம் வெள்ளி, தாமிரம் ,அல்லது மண்ணினால் செய்த ஒரு குடத்தை வைத்து அதில் பரிமளங்களுடன் கூடிய தீர்த்தத்தைச் சேர்க்க வேண்டும். அதன் கீழே கோதுமை முதலிய நவதானியங்களை பரப்பவேண்டும். கும்பத்தின் மேல் சந்தனம் வைத்து, புஷ்பங்களைச் சுற்றி அலங்கரித்து, கும்பத்தில் உள்ள தீர்த்தத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண மூர்த்தியை ஆவாகனம் செய்து உபசாரம் செய்யவேண்டும். பதினாறு வகை உபசாரங்களுடன் பூஜிக்க வேண்டும். ஏகாதசியன்று காலையில் நீராடி, கும்பத்தில் ஆவாஹனம் செய்த பெருமாள் தாயாரை பல ஸ்தோத்ரங்களாலும், விஷ்ணு சகஸ்ர நாமம் போன்ற சுலோகங்களாலும், ஆழ்வார்களின் பாசுரங்களாலும் பூஜை செய்ய வேண்டும். அடுத்தநாள் துவாதசியில் வேதம் படித்தவர்களுக்குத் தானம் செய்ய வேண்டும் .இவ்வாறு செய்தால் வெற்றி அடையலாம்.
இந்த நாளில் துளசியை வழிபடுதல், துளசியினால் விஷ்ணுவை பூஜித்தல் நன்மை பயக்கும்.
ராமர் அனுஷ்டித்த இந்த ஏகாதசி விரதத்தை நாம் அனுஷ்டித்தால், நம் முடைய வாழ்வில் பல வெற்றிகளை அடையலாம்.
