
தேஜஸ்வி
சுபகாரியங்களைச் செய்யும்பொழுது நாள் குறிக்கிறோம். நாள் குறிக்கும் போது குறிப்பிட்ட விஷயங்களை மனதில் கொண்டு, தகுந்த ஜோதிடரிடம் ஆலோசித்து, நாளைக் குறிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளிலும் சில சுப நேரங்கள் உண்டு. அந்த நாளில் கொடுக்கப்பட்ட சுப வேளையில் சுப காரியங்களை நடத்துவது சிறந்தது. இதைத்தான் நமது முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்தனர். அதுமட்டுமல்ல, நாள், முகூர்த்தம் தேர்ந்தெடுப்பது பற்றிய அடிப்படை புரிதலும், பஞ்சாங்க (வானியல் அறிவியல்) ஞானமும் அக்காலத்தில் இருந்தது.
ஒவ்வொரு செயலுக்கும் தகுந்த, சரியான, கால நேரங்கள் முக்கியம் என்பதை அறிந்திருந்தார்கள். மனை முகூர்த்தம் செய்ய வேண்டிய நாளுக்கும், திருமண சுப முகூர்த்த நிர்ணய நாளுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள்.
வாஸ்து நாள்கள் என்று தனியாக உள்ளது. கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் எதுவாக இருந்தாலும் வாஸ்து புருஷன் நித்திரை விட்டு உணவும் வெற்றிப்பக்கு போடும் நேரமும்(இதுவும் பஞ்சாங்களில் கொடுக் கப்பட்டிருக்கும்)பார்த்து,வீடு வாசல்கால் வைத்தல், கிரக ஆரம்பம் முதலிய வற்றைச் செய்யலாம்.அந்தந்த இடத்தின் சூரிய உதயத்தை வைத்துநேரம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
அதைப்போலவே பிரயாணத்திற்கு வாரசூலை என்று ஒரு அமைப்பு உண்டு. உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் பத்து மணி நாற்பது நிமிடம் வரை என்று போட்டிருப்பார்கள். இது சூரிய உதயத்தைப் பொருத்து மாறும். மேற்கு வடமேற்கு திசை வாரசூலை என்று கொடுக் கப்பட்டிருக்கும் .அன்று அந்த திசை நோக்கிய பிரயாணங்களை தவிர்க்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால் அவசியம் செய்ய வேண்டி வந்தால் அதிலேயே பரிகாரமும் சொல்லப்பட்டிருக்கிறது. வாரசூலை நேரத்திற்கு மேல் ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டுவிட்டு, அந்தக் காரியத்தைச் செய் யலாம்.
அதைப்போலவே , விவசாயத்திற்கு, மாடு வாங்க, ஏர் விட, விதை விதைக்க, கிணறு வெட்ட என்று தகுந்த நாட்களை தனி நேரமாகக் கொடுத்திருப்பார்கள். “காலத்தில் செய்” என்று இவைகள் அனுபவத்தின் அடிப்படையில் முன்னோர்கள் கொடுத்த விஷயங்கள். இதே தான் திருமண சுப முகூர்த்த நேரம் குறிக்கப் பொருந்தும் .
மிக முக்கியமாக திருமணம் செய்து கொள்ளும் மணமகன் மணமகள் இவர்கள் இருவரின் ஜாதக அமைப்பின் அடிப்படையில் தான் நாள் நேரங் களை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும்.
பொதுவான திருமண முகூர்த்த நேரங்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருந்தால், அந்தத் தேதிகள் எல்லாமே குறிப்பிட்ட மணமகன் அல்லது மணமகளின் ஜாதகத்துக்குப் பொருத்தமாக இருக்காது.
திருமண தேதி குறிப்பது தான் அந்தக் காலத்தில் முதல் வேலை .
நிச்சயம் செய்து விட்டால் “நாள் குறித்து ஆகிவிட்டதா?” என்று முதல் கேள்வியாகக் கேட்பார்கள் . முகூர்த்த ஓலை எழுதுதல் என்று ஒரு சடங்கே இருக்கிறது.”நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு” என்று நாள் குறித்தல் பற்றி ஆண்டாள் பாசுரத்தில் வரும்.
நாள் என்று சொன்னாலே நல்ல நாள் தான்.
பஞ்சாங்க விதிகளின்படி 100% பொருத்தமுள்ள, துல்லியமான நாள்கள் யாராலும் குறிக்க முடியாது. ஒவ்வொரு நாளிலும் நல்ல நேரங்கள், தோஷமுள்ள நேரங்கள் என்பது கலந்தே இருக்கும். இதில் அற்ப தோஷங்களைத் தள்ளிவிட்டு,அதிக குணமுள்ள நேரமே தேர்வு செய்ய வேண்டும் .அதற்குத்தான் ஆராய்ச்சியும், பொறுமையும், சாஸ்திர அறிவும் தேவைப்படுகிறது.
விதிகளைப் போலவே, விதிவிலக்குகளும், பரிகாரங்களும் பார்க்க வேண் டும். உதாரணமாக, பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் யாத்திரை செய்யவும் ,அறுவைசிகிச்சை முதலியவற்றைச் செய்து கொள்ளவும், கடன் கொடுக்கவும், வாங்கவும் ஆகாத நட்சத்திரங்கள் என்று பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். அதை அப்படியே எடுத்துச் சொல்லிவிட முடியாது. காரணம், சந்திரனுக்கு குரு சுக்கிரன் போன்ற சுபப் பார்வைகள் இருந்தாலும், லக்கினத்திற்கு சுபாம்சம் இருந்தாலும் இந்த நட்சத்திர தோஷம் கிடையாது. மேற்கண்ட நாள்களில் குறிப்பிட்ட சுபவேளையில் யாத்திரை, ஆபரேஷன், முதலிய காரியங்களைச் செய்வதில் தடையில்லை.
நாள் நேரம் குறைப்பதில் முக்கியமாக 3 விஷயங்களை அடுக்கடுக்காக பார்க்க வேண்டும்.
முதலாவது மாததோஷம் .
இரண்டாவது நாள் நட்சத்திர தோஷம்
மூன்றாவதாக அந்த நாளில் நேர தோஷம் (ராகு காலம் போன்றவை ) .தோஷமில்லா நேரம் குறிக்க வேண்டும்.
எத்தனை நல்ல நாள் நட்சத்திரம் இருந்தாலும்கூட அந்த நாளிலும் தோஷ முள்ள வேளைகள் இருக்கும். அதை நீக்கி சுப வேளை தேர்ந்தெடுக்கவே ஹோரை சாஸ்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முகூர்த்த நாள் குறிக்கும் போது கீழ்கண்ட விஷயங்களை கவனத்தோடு பரிசீலனை செய்ய வேண்டும்
1.மணப்பெண் லக்கினத்திற்கும் மணமகன் லக்னத்திற்கும் எட்டாவது லக்னமாக முகூர்த்த லக்னம் அமைந்துவிடக்கூடாது
2.மணப்பெண் ராசிக்கும் மணமகன் ராசிக்கும் அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக அமையக்கூடாது
3.மணப்பெண் நட்சத்திரம், மணமகன் நட்சத்திரம் இவர்கள் இருவரின் நட்சத்திரத்திற்கு முகூர்த்த நாள் குறிக்கப்பட்ட நட்சத்திரம் தாராபலன் பெற்று இருக்க வேண்டும். அதாவது ஜன்ம நட்சத்திரம் முதல் அன்றைய தின நட்சத்திரம் வரை எண்ணி வருவதை 9ஆல் வகுக்க வேண்டும். மீதி 1. ஜென்மம். 2. சம்பத்து. 3.விபத்து. 4 ஷேமம் 5.பிரத்தியக்கு 6.சாதகம் 7 வதம் 8 மைத்திரம் 9 பரம மைத்திரம்
இவைகளில் பிரத்தியக்கு ,வதம் வந்தால் எந்த கர்மாவும் செய்யக்கூடாது .
இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. அவைகளையும் அனுசரிக்க வேண்டும்.
4.சுப முகூர்த்தத்திற்கு திதி யோகம் முக்கியம். மரண யோகம் சித்த யோகம் பிரபலாரிஷ்ட முதலிய யோகங்கள் இருக்கக்கூடாது
5.தனிய நாள், கரிநாள் போன்ற நாள்கள் கூடாது
6.ராகு காலம் எமகண்ட காலம் போன்ற நேரங்கள் கூடாது .இந்த ராகு காலம் எமகண்ட காலம் நிர்ணயம் செய்யும் பொழுது மிகவும் எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும். உதாரணமாக எந்த இடத்தில் பார்க்கிறோமோ, அந்த இடத்தின் சூரிய உதய காலத்தை அனுசரித்துத் தான் ராகுகாலம் ,எமகண்டம் தீர்மானம் செய்யவேண்டும்.
உதாரணமாக திங்கட்கிழமை காலை 7.30 முதல் 9 .00 மணி வரை ராகு காலம் என்பது எல்லோருக்கும் தெரியும் .ஆனால் குறிப்பிட்ட மாதத்தில் சூரிய உதயம் காலை 6.24 க்கு ஆரம்பிக்கிறது என்று சொன்னால், ராகு காலம் 7 .54 க்கு தான் ஆரம்பிக்கும். 9 24க்கு முடியும். நாம் ராகுகாலம் முடிந்துவிட்டது என்று 9 .10-க்கு ஆரம்பிக்கக்கூடாது.
இப்படி நுட்பமாக கவனித்து துல்லியமாக நேரத்தை நிர்ணயித்து கொடுக் கக் கூடியவர்கள் உண்டு .திருமண முகூர்த்த நேரத்தைப் பார்ப்பது போலவே மாங்கல்யம் செய்யும் நேரத்தைப் பார்ப்பார்கள் . காரணம் அந்த மாங்கல்யம் பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலித்துவம் கொடுக்கக்கூடியது. நீண்ட தாம்பத்திய வாழ்க்கையை தரக்கூடியது என்பதால் பார்த்து பார்த்துச் செய்தார்கள்.
அதைப்போலவே நல்ல பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக சாந்தி முகூர்த்தத்துக்கு துல்லியமான நேரத்தை கவனித்து அதற்கு முன்னால் வைதிகமான ஹோமங்களைச் செய்வார்கள். இதன் மூலமாக குடும்பத் துக்கும் லோகத்துக்கும் மிகுந்த நன்மையைத் தரும் சத்புத்திர பிராப்தி கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு.
நேரம் குறிப்பதில் இவ்வளவு விஷயங்கள் உண்டு.நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?