By S.Gokulachari
நீங்கள் தெய்வ பக்தி உள்ளவரா? உங்கள் ஆன்மீக உணர்வு உண் மையானதா? உங்களுக்கு தெய்வ அனுகூலம் உள்ளபடி உள்ளதா? குருவின் அருள் பூரணமாகப் பெற்றவரா?
இப்படிப்பட்ட கேள்விகள் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். முதலில் இப் படிப்பட்ட சிந்தனையும் கேள்வியும் மனதில் வந்து விட்டாலே, நீங்கள் ஆன்மீக உணர்வோடும், ஆன்மீகத்தைப் பற்றிய தேடுதலோடும் இருக் கிறீர்கள் என்று பொருள் .ஆனால் இதற்கான விடையை நீங்கள் தேட வேண்டும் என்பது முக்கியம். இப்பொழுது முதல் கேள்விக்கு வாருங்கள்.
நீங்கள் தெய்வ பக்தி உள்ளவரா?
ஆம் .இதில் என்ன சந்தேகம்? இது ஒரு கேள்வியா? தெய்வ பக்தி இருப் பதால் தானே தினசரி பூஜை செய்கிறோம். அதுவும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் செய்கிறோம்.அதுவும் உற்சாகமாக பூஜை செய்கிறோம். மந்திரங்களைச் சொல்கிறோம்.
ஒரு கோயில் செல்வதற்கும் தவறுவதில்லையே…! எத்தனை ஆன்மீக புத்தகங்களை வாங்குகிறோம்?எங்கு கோயில் திருவிழாக்கள் நடந்தாலும் அங்கு எல்லாம் சொல்லுகின்றோம். இதுதான் உங்கள் விடை என்றால், நீங்கள் அடுத்தபடிக்குச் செல்ல வேண்டும்.
என் நண்பர் ஒருவர் வைணவத் திருத்தலங்கள் புத்தகம் வாங்கிக் கொண்டு, 108 திவ்ய தேசத்தில், கடந்த பல வருடங்களாக சேவி த்துக் கொண்டே வருகிறார்.அவர் சேவிக்க சேவிக்க அந்தந்த திவ்ய தேசத்துப் பெயரை சிவப்பு மையினால் அடையாளம் செய்து கொள்வார். ஒவ்வொரு முறையும்,” இன்னும் 15 பாக்கி உள்ளது. இன்னும் பத்து பாக்கி உள்ளது. இன்னும் ஆறு பாக்கியுள்ளது. இந்த வருடம் எப்படியும் பார்த்து விடுவேன்” என்பார்.” கடவுளின் அருள் பூரணமாக உங்களுக்கு இருக்கிறது” என்று சொல் லிவிட்டு வந்து விடுவேன்.
இதைப் போலவே சைவத் திருத்தலங்களைக் குறித்து வைத்துக் கொண்டும், அம்மன் கோயில்களைக் குறித்து வைத்துக்கொண்டும், வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் அந்தந்தக் கோயில்களுக்குச் செல் பவர்கள் உண்டு. இந்த ஆர்வத்தையும் முயற்சியையும் ஊக்கத்தையும் குறை கூற முடியாது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இனி அடுத்த கேள்விக்குப் போவோம்.
உங்கள் ஆன்மீக உணர்வு உண்மையானதா? இதை எப்படி கண்டு பிடிப்பது ?
ஒருவரின் ஆன்மீக உணர்வு உண்மையா இல்லையா என்பதை அறிந்து கொள்ள என்ன அளவைகள்(measures) இருக்கின்றன?இதற்கு ஏதாவது சான் றிதழ்கள் தர முடியுமா? அப்படி தருவதற்கு யாராவது உண்டா(authority)? அப்படி அவர்கள் தந்தாலும் அது உண்மையாக இருக்க முடியுமா?
நிச்சயமாக இருக்காது. நமக்கு ஆன்மீக உணர்வு உள்ளபடி இருப்பதற்கும், இருப்பதாக நினைத்துக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு.
கோயில் குளங்களுக்குப் போவதாலும், பக்தி புத்தகங்கள் ஸ்தோத்தி ரங்களைப் படிப்பதாலும், கேட்பதாலும், ஆன்மீக உணர்வு மேலோங்கி இருப்பதாக நினைத்துக் கொள்வது சரியாக இருக்காது என்பதை மட்டும் மனதில் கொண்டு மூன்றாவது கேள்விக்குச் செல்லுங்கள்.
தேர்வுக்கான புத்தகங்கள் பல இருக்கலாம்.படித்தும் இருக்கலாம்.தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமல்லவா?
உங்களுக்கு தெய்வ அனுகூலம் உள்ளபடி உள்ளதா?
“இதென்ன கேள்வி. தெய்வ அனுகூலம் இல்லாமலா நல்லபடியாக இருக் கிறேன். பணம் காசு இருக்கிறது. மனைவி மக்கள் இருக்கிறார்கள். உத்தி யோகத்தில் பதவி உயர்வு நினைத்தபடி வந்திருக்கிறது. சௌக்கியமாக வீடு கட்டிக்கொண்டு வாகன வசதிகளோடு இருக்கிறேன்.”
இப்படி நினைத்தபடி நடப்பதை வைத்துக்கொண்டு தெய்வ அனுகூலம் உள்ளதாக நினைத்துக் கொள்ளலாம். ஒருவகையில் அது சரிதான் .ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
தெய்வ பக்தி இல்லாமல் இருப்பவர்களுக்கும் இந்த வசதி வாய்ப்புகள் எல்லாம் இருக்கிறதே என்ற விஷயத்தையும்,தெய்வ பக்தி உள்ள பலர், பல சோதனைகளோடு வாழ்வதையும் மனதில் ஒரு ஓரமாக போட்டுக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நான்காவது கேள்விக்கு வாருங்கள். குரு அருள் உள்ளதா ? ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பிரதாயத்துக்குத் தகுந்தபடி ஒரு குரு இருப்பார்.
குரு அன்பையையும் தீட்சையையும் நீங்கள் பெற்றிருக்கலாம் சுமுக மான குரு சிஷ்ய உறவோடு இருக்கலாம் .
ஒரு உதாரணத்தைச் சொல்லுகின்றேன்.
ஒருவருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டது. உடனே தன் குருவிடம் போனார்.. அவர் “நீ ஒன்றும் கவலைப்படாதே. உனக்கு ஒன்றும் ஆகாது. தைரியமாக இரு” என்று ஆசீர்வாதம் செய்து குங்குமமோ அட்சதையோ, பழமோ பிரசாதமாக கொடுத்தார்.நண்பருக்குச் சரியாகிவிட்டது.
குருவின் அருள் பூரணமாக இருப்பதால்தான் சரியாகிவிட்டது என்று நினைத்தார்.குருவின் மீது அன்பு கூடுதலாகிவிட்டது.
குருவின் அருளுக்கு இது ஒன்றே போதுமா? அப்படி எடுத்துக்கொண்டால் சீடர்கள் சிலருக்குப் பலிக்காமல் இருக்கிறது. அதனால் குருவின் அருள் இல்லை என்று ஆகிவிடுமே . உலகியல் விஷயம் ஒன்றிரண்டு பலிப் பதால் குருவின் அருள் பூரணமாக இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
அப்படியானால் இதனை எப்படி அறிவது? இதற்கு சரியான வழி என்ன என்ற கேள்விக்கு பதில் வேண்டும் அல்லவா. வாருங்கள் விடை காணு வோம். இதற்கு விடை காணுவது ஒன்றும் கடினமான செயல் அல்ல. எளிதான செயல்தான்.
நஞ்ஜீயர் என்றொரு வைணவ ஆசாரியர் இருந்தார். அவரிடத்திலே ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
” ஒருவருக்கு வைஷ்ணவத்துவம் இருக்கிறது என்பதை எப்படி அறி வது?
அப்பொழுது நஞ்ஜீயர் சற்றும் தயங்காமல் பளிச்சென்று பதில் சொன்னார்.
” எவன் ஒருவன், அடுத்தவன் துயரத்தைக் கண்டு மனதில் இரக்கம் கொள்கின்றானோ அவனுக்கு வைஷ்ணவத்துவம் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்”
புற அடையாளங்கள் எப்படி இருந்தாலும் அக அடையாளங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும். இது வைணவ மதத்தில் மட்டுமல்ல; சைவ மதத்திலும் உண்டு.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே – திருமூலர்.
முதல் வரியே கேள்விக்கான பதிலாக உள்ளது. அன்பும் சிவமும் வெவ் வாறனது என்று அறிவு இல்லாதவர்கள் தான் கூறுவார்கள். அப்படியானால் அறிவுடையார் கூற்று அன்பும் சிவமும் ஒன்று என்பதாகும்.
வள்ளலார் தன் பிரார்த்தனையாக என்ன கேட்கிறார் தெரியுமா?
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
இந்த அடிப்படையில் மேற்கண்ட கேள்விகளுக்கான விடையை நாம் ஆராய்வோம். தெய்வ பக்தி உண்டா? ஆன்மீக உணர்வு உண்மையானதா? தெய்வ அனுகூலம் குரு அருள் இருக்கிறதா?
அதற்கு பதில் இதுதான்.
- நீங்கள் முன்னிலும் அமைதியாக ஒரு விஷயத்தை அணுகுகிறீர்கள்
- நியாயமாக ஒரு விஷயத்தை அணுகுகிறீர்கள்.
- எளியவர்களிடம் இரக்கம் கொள்கின்றீர்கள்.
4.கோபத்தைக் கட்டுப்படுத்துகிறீர்கள்
- இருப்பதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பதில் சுகம் காண்கிறீர்கள்.
- மற்றவர்கள் உயர்வதைப் பார்த்து சந்தோஷப்படுகிறீர்கள்.
7.நன்றி மறவாமல் இருக்கிறீர்கள்.
- யாராவது ஒருவருக்கு துன்பம் என்றாலும் முதலில் நீங்கள் ஓடு கிறீர்கள்.
9.உங்களால் இயன்ற எல்லா வகையிலும் அடுத்தவர் துன்பத்தை தீர்ப் பதற்கு முயல்கிறீர்கள்.
0.கடுஞ்சொல் பேசாது இனிமையாக நாலு வார்த்தை பேசுகிறீர்கள்.
இவைகள் எல்லாம் உங்களிடத்திலே வளர்பிறை போல வளர்ந்து கொண்டே இருந்தாலும், இயல்பாக இருந்தாலும், நீங்கள் உள்ளபடி தெய்வ அனுகூலம் பெற்றவர் ஆன்மீக உணவு உள்ளவர். குருவின் பூரணமான ஆசியைப் பெற்றவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அப்படியானால் மற்றவர்கள்…..?அதற்கான முயற்சிகளில் இருப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். முயற்சியும் முக்கியமல்லவா?
