மாசி மகம்
1.முன்னுரை
கும்ப மாதம் என்று வழங்கப்படும் மகத்தான மாசி மாதத்தில் பற்பல உற்சவங்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. சில உற்சவங்கள் பௌர்ணமியை ஒட்டியும், சில உற்சவங்கள் அமாவாசையை ஒட்டியும் சிறப்பாக அனுசரிக்கப்படும். அந்த வகையில் மாசி மாத அமாவாசை ஒட்டி முதல் நாள் மகா சிவராத்திரி உற்சவமும் அமாவாசை அன்று அங்காளபரமேஸ்வரி போன்ற அம்மன் கோயில்களில் மயான கொள்ளை உற்சவமும் சிறப்பாக நடைபெறும். முழுநிலவு நாளான பௌர்ணமி நாளில் எல்லா ஆலயங்களிலும் தீர்த்தவாரி எனப்படும் மாசி மக உற்சவம் நடைபெறும். சில ஆலயங்களில் மாசி மகத்தை ஒட்டி பெருவிழாவாகக் (10 நாள் பிரம்மோற்சவம்) கொண்டாடப்படும். மாசி மகத்தின் சிறப்பினை முத்துக்கள் முப்பது தொகுப்பில் காண்போம்.
- மாசி மாதத்தின் பெருமை
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு அதனால் மகா விஷ்ணுவை இம்மாதம் முழுவதும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும்.மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது சிறப்பு. மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர். மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது. காரடையான் நோன்பு என்று இதைக் கொண்டாடுவார்கள்.
- மக நட்சத்திரத்தின் பெருமை
மக நட்சத்திரத்தை “பித்ருதேவ நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன்,பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். ஞானமும், முக்தியும் அளிக்கும் கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாவார். எனவே இந்நாளில் கேது பகவானை வழிபட அறிவாற்றல் சிறக்கும் என்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் நவகிரக சந்நிதியில் இருக்கும் கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம்.
- மாசி மகமும் மகாமகமும்
கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுணர்மியுடன் கூடிய மாசி மகமாகக் கொண்டாடப்படுகிறது.இதே மாசி மாதம் பௌர்ணமி அன்றுதான் பன்னிரெண்டு வருஷத்துக்கொரு முறை நிகழும் மஹாமஹம் கும்பகோணத்திலும், ப்ரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் பிரஸித்தமானது. அன்று ஸ்னானம், தானம் விசேஷமானது. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி பிராம்மணர்களுக்கு கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்கள் செய்வது மிகுந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது.
- கடலாடு விழா
சங்ககாலத்தில் இறை திருமேனிகளை நீர்நிலைகளில் நீராட்டும் வழக்கத்தின் தொடர்ச்சியாக நீரணி விழவு என்ற பெயரில் கொண்டாடப்பட்டதே மாசிமகமாகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியிலும், சிலப்பதிகாரத்திலும் இவ்விழா கொண்டாடியது பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன…!ஏழு நாட்கள் கொண்டாடப்பட்ட இவ்விழாவின் ஏழாவது நாள் இறை திருமேனிகளை நீராட்டியுள்ளனர். புறநானூற்றில் முந்நீர் விழவு என்று அழைக்கப்படும் இப்பண்டிகையை, “மாசிக் கடலாட்டு கண்டான்” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். முதலாம் ராஜராஜன், வரகுண பாண்டியன், ஆய் மன்னர்கள், இராஜேந்திரச் சோழனின் காலத்திலும் குலோத்துங்கச் சோழனின் காலத்தில் மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபம் எடுத்த செய்தியும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது…!
- வருணனும் மாசி மகமும்
முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.
7.சிவபெருமானும் மாசிமகமும்
சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் வள்ளாள மகாராஜாவுக்கு நீத்தார் கடன் செய்யும் சடங்கு மாசிமகத்தன்று நடைபெறும். பிள்ளைப் பேறில்லாத மகாராஜாவுக்கு ஈசனே மகனாக எழுந்தருளி, மேளதாளமில்லாமல் பள்ளி கொண்டாபட்டிலுள்ள கௌதம நதிக் கரைக்குச் சென்று இந்தக் கடன்களை நிறைவு செய்துவருவது வழக்கம்.. மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பெளர்ணமியில்தான். திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரர் ஆலயத்தில் காமதகன நிகழ்ச்சியே மாசிமக சிறப்பாகும்.அன்றைய தினம் ஈசன் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுவர். திருவாஞ்சியம் தீர்த்தக்குளத்திற்கு குப்தகங்கை என்று பெயர். கங்கை தன் 999 கலைகளை இக்குளத்தில் கரைத்துவிட்டு மீதி ஒரு கலையைத்தான் கங்கை நதியில் கரைத்தாளாம். இத்தகைய சிறப்புமிகுந்த தெப்பக்குளத்தில் வாஞ்சிநாதர் தெப்பவிழா கண்டபின் எமவாகனத்தில் உலாவருவார்.
- பார்வதி தேவியும் மாசி மகமும்
ஒருமுறை பார்வதி தேவி சிவனின் கோபத்தினால் பூமியில் அவதரிக்க நேரிட்டது.அதே சமயம் தக்கனும் தனது மகளாக பார்வதி பிறக்க வேண்டும் என்று சிவனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான். தக்கன் தவத்தை ஏற்ற சிவன் “உனக்கு மகளாக பார்வதிதேவி தோன்று வாள். நீ அவளை வளர்த்து வரலாம். தக்க காலத்தில் நாம் பார்வதி தேவியை மணம் முடிப்போம் “என்றார்.பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.தக்கன், தன் மனைவி வேதவல்லியோடு அந்த நதியில் நீராட வந்தான். அப்போது அங்கிருந்த வலம்புரி சங்கை கையில் எடுத்தான். அது அழகிய பெண் குழந்தையாக வடிவம் கொண்டது.இப்படி அம்பிகை வலம்புரி சங்காகக் கிடந்து, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான்..
- முருகனும் மாசி மகமும்
மக நட்சத்திரம் முருகனுக்கும் உகந்த நாளாகும். அன்று விரதமிருந்து முருகனை வழிபடுபவர்களின் பிறவிப்பிணி தீரும். மாசிமகத்தன்று நடை பெறும் பூண்டி முருகன் தேர்த்திருவிழா பிரசித்தமானது.முருகப்பெருமான் தந்தைக்கு உபதேசம்செய்ததும் மாசிமக நாளில்தான். சுவாமிமலையில் மாசிமகத்தன்று இந்நிகழ்வு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் வள்ளியை மணந்துகொண்டது மாசிமாத பூச நட்சத்திர நாளில். அதனால் மாசி மாதம் மாங்கல்ய மாதமாக-திருமணத்திற்கு உகந்ததாகத் திகழ் கிறது. மாசிமாத சுக்ல பஞ்சமி அன்று ஞானதேவதையான சரஸ்வதியை நறுமண மலர்களால் அர்ச்சித்து, தூபதீப நைவேத்தியம் செய்து வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.