வருடத்தில் சில மாதங்கள் விசேஷமானது. மாதங்களில் சில நாள்கள் விசேஷமானது. கிழமைகளில் சில கிழமைகள் விசேஷமான கிழமைகள். நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் விசேஷமான சுப காரியங்கள் செய்வதற்கான நட்சத்திரங்கள் .திதிகளில் சில திதிகள் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்றவை. சில நாள்கள் குறிப்பிட்ட காரியங்களைச் செய்வதற்கு ஏற்றவை .உதாரணமாக பஞ்சாங்கத்தில் கீழ்நோக்கு நாள் என்று போடப்பட்டிருக்கும் அந்த நாளில் போர் போடலாம். கிணறு வெட்டலாம். இப்படி காலம் அறிந்து சில செயல்களைச் செய்ய வேண்டும்
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின் [பொருட்பால், அரசியல், காலமறிதல்]
என்னதான் நாம் நன்றாகச் சிந்தித்துச் சரியான செயல்களைத் தேவையான ஆட்களை வைத்துக் கொண்டு செய்தாலும், அவை முழுமையான வெற்றியடையச் சரியான நேரமும் முறையான இடமும் தேவை.
சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்துச் செய்யும் செயல்கள் இமாலய வெற்றியடைய வாய்ப்பு அதிகம். அதே சமயம், தவறான நேரத்தில் செய்தால் தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம்.
தக்க நேரத்தில் தக்க செயலை தக்க இடத்தில் செய்தால் ஒருவன் விழைந்த இலக்கை அடையலாம். அது இவ்வுலகே ஆனாலும் அடையலாம் என்பது குறளின் பொருள்..
ஒவ்வொரு நாளிலும் சுப காரியங்களைச் செய்வதற்கும், செய்யாமல் இருப்பதற்கும் காலங்களை வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு காரியம் முடியாவிட்டால்,” என்னமோ வேளை சரியில்லை” என்பார்கள். முடிந்தால்,”நல்ல வேளையில் செய்தேன் முடிந்துவிட்டது “என்பார்கள்.
எனவே, ஒரு காரியம் முடிவதற்கும் முடியாமல் இருப்பதற்கும் காலம் துணை செய்கிறது .நேரம் துணை செய்கிறது. ஒவ்வொரு நாளிலும் இருக்கக்கூடிய இந்தப் பகுதிகளை உணர்த்து நாம் செயலாற்ற வேண்டும்.
சுப ஹோரைகள் என்று ஒரு பகுதி உண்டு.இது தவிர ராகு காலம் எமகண்டம் குளிகை காலம். இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு.
ஒரு உதாரணத்திற்கு சொல்லுகின்றேன். ஒருவர் திங்கட்கிழமை காலை எட்டரை மணி வாக்கில் உட்கார்ந்து இருந்தார் .அவர் ஏதோ ஒரு முக்கியமான வேலைக்குப் போக வேண்டும். நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த அவருடைய நண்பர் கேட்டார்.
” எல்லாம் தான் தயாராக இருக்கிறதே, நீங்கள் கிளம்பலாமே”
” இல்லை இல்லை அரை மணி நேரம் போகட்டும்” என்றார்.
” என்ன அரை மணி நேரம்?”
” ஏழரை ஒன்பது ராகு காலம் போய்விடும். உடனே புறப்படலாம்.”
அப்பொழுது கூட இருந்த இன்னொரு நண்பர் சொன்னார்.
“இல்லை நீங்கள் வந்து ஒன்பதரை மணிக்கு மேல் போனால் தான் சரியாக இருக்கும். ராகு காலம் ஒன்பதரை மணி வரைக்கும் இருக்கிறது என்றார்.”அவர் என்ன உளறுகிறீர்கள் ?எல்லா காலண்டர்களிலும் ஏழரை 9 திங்கட்கிழமை ராகு காலம் போட்டிருக்கிறது”
அந்த நண்பர் ஒரு விஷயத்தை சொன்னார்
“அப்படி அல்ல. இந்த வேளைகள் ஏழரை ஒன்பது என்பது உண்மைதான். ஆனால் இன்றைய சூரிய உதயத்தின் அடிப்படையில் தான் இதை கணக்கிட வேண்டும். இன்று திங்கள்கிழமை இதோ பாருங்கள் சூரிய உதயம் நம்முடைய ஊரில் 6:30 மணிக்குத் தொடங்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இன்றைக்கு ஏழரை மணிக்கு ராகு காலம் தொடங்காது. எட்டு மணிக்குத் தான் தொடங்கும். எட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் சேர்த்தால் 9:30க்கு முடியும்.நீங்கள் 9 மணிக்கு முடியும் என்று நினைத்துக் கொண்டு ராகு காலத்திலேயே செய்வீர்கள் அதற்காகத்தான் சொன்னேன்.
அப்பொழுது நான் அந்த இடத்தில் போய்ச் சேர்ந்தேன் என்னிடத்திலே இவர் இப்படி சொல்லுகிறார்களே என்று கேட்ட பொழுது, “அவர் சொன்னது உண்மைதான். அப்படித்தான் பார்க்க வேண்டும் .ஆனால் மிகவும் தவறாகவே பலரும் பார்த்து, எந்த நேரத்தில் செய்யக்கூடாதோ, அந்த கொழுத்த ராகு நேரத்தில் செய்கின்றார்கள் நேரம் காலம் பார்க்காமல் செய்வது என்பது வேறு. ஆனால் ராகு காலத்தையும் எமகண்டத்தையும் பார்க்கிறேன் என்று சொல்கிறவர்கள் மறுபடியும் அந்த ராகு காலத்திலேயே நிகழ்ச்சி செய்கின்றார்களே” .
இந்த ராகு காலம் என்பது ஏன் அசுபமாகக் கருதப்படுகிறது. ராகு, கேது என்பது தலையும் உடலும் மாறி நிற்கும் ஒரு கிரகம். அதாவது ‘அரூபி’ என்பார்கள். நல்லவற்றை ஆகர்ஷணம் செய்து தடுக்கும்.அதனுடைய அந்தத் தன்மை ஒரு நல்ல செயலைச் செய்ய விடாமல் நமது மதியை மயங்கவைத்து செயல்படும்.எதிலும் ஒரு தடங்கலைத் தரும்.
இது தவிர அர்த்தபிரகணன் என்று ஒரு வேளை உண்டு.புதனின் பார்வை பெற்ற ஒரு கோள்அர்த்தபிரகணன். காலன் என்று ஒரு நேரம் உண்டு. சூரியனின் எதிர் குணம் கொண்ட சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோள் கால ன்.. இந்த அர்த்தபிரகணன், காலன் காலம் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அறிந்திராத ஒன்று.
அர்த்தபிரகணன் நேரத்தில் செய்யக்கூடாதவை சுபகாரியங்கள் மட்டுமல்ல, கல்வி சம்பந்தபட்ட எந்தக் காரியமும் தொடங்கக்கூடாது. முதன்முதலான பள்ளியில் குழந்தைகளின் சேர்க்கை, உயர்கல்வியில் சேருதல், புதிய பயிற்சி வகுப்பில் சேருதல், புதிய மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்தல் போன்றவற்றை ஆரம்பிக்கக்கூடாது. காலன் வேளையிலும் காலத்திலும் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது, முக்கியமாக பயணங்கள் செய்யக்கூடாது, மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கக்கூடாது, மருந்துண்ண ஆரம்பிக்கக்கூடாது.
இப்படி காலம் அறிந்து செய்தால் வெற்றி வசப்படும் .
