தினம் ஒரு பாசுரம் -1
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே.
தமிழில் கண்ணனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடிய பெரியாழ்வாரின் முதல் பாசுரம் இது.
கண்ணனுக்குப் பிறந்தநாள்.
அது சரி, கண்ணன் எங்கே பிறந்தான்?மதுராவில் அல்லவா பிறந்தான். பெரியாழ்வார் திருக்கோட்டியூரில் என்று சொல்லுகின்றாரே…
இதற்கு இரண்டு காரணங்கள்.
அசுரர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக, தேவர்களெல்லாம் ஒன்றாக கூடிய ஊர் திருக்கோட்டியூர்.
தேவர்கள் கூட்டமாயிருந்து ஆலோசித்த ஸ்தலமென்கிற காரணம் பற்றியே இதற்கு கோஷ்டீபுரம் என்று திருநாமமாயிற்று. அதுவே தமிழில் கோட்டியூர் என்றாயிற்று என்பது உரை ஆசிரியர்கள் விளக்கம்.கதம்பமுனியின் சாபத்தினால் துஷ்டரொருவரும் கிட்டவர முடியாமலிருந்த இந்த (திருக்கோட்டியூர்) க்ஷேத்திரம் க்ஷீராப்தி போலவே ஆலோசிப்பதற்கு ஏகாந்த ஸ்தாகமாய் இருந்தபடியாலும், தேவதைகளின் கூட்டத்தில் எழுந்தருளி அவர்களை ரக்ஷிக்க வேண்டிய ரீதியைச் சிந்திக்கின்ற க்ஷீராப்தி நாதன் போலவே இந்த க்ஷேத்திரத்து எம்பெருமானும் சேஷசாயியாய் இருப்பதனாலும் என்று அந்த உரை விளக்கம் சுவைபட நீள்கிறது.
அது சரி.தேவர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்…
தேவர்கள் என்பது நல்ல எண்ணங்களின் குழுமம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் என்பதில் உள்ள வண்ணம் அழகிய எண்ணங்கள். அங்கே உள்ளவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் உயர்ந்து நிற்பதால் மாடங்களும் உயர்ந்து நிற்கின்றன.
எண்ணம்போல் தானே வாழ்வு.
அடுத்து பெரியாழ்வாரின் மதிப்புக்குரிய செல்வநம்பியின் ஊர் அது.
அந்த அபிமானமும் இங்கே வருகிறது.
அங்கே தான் பகவான், தன்னுடைய அவதாரத்தைப் பற்றிய சிந்தனையோடு இருக்கிறான் என்பதால், அது பாற்கடலுக்கு இணையான திவ்ய தேசம் .
எனவே இந்த இடத்தில் திருக்கோஷ்டியூரை எடுக்கிறார் என்பது ஒரு விஷயம்.
கண்ணன் மீது அளவற்ற ஈடுபாடு. பிரேம பாவம் பெரியாழ்வாருக்கு.
கம்சனுக்குத் தெரிந்தால் எங்கே கண்ணனுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று மற்றவர்கள் துடிக்கிறார்களோ இல்லையோ,பெரியாழ்வார் துடித்தார்.
அந்த பிரேம பாவம் தான் முதல் வரியில் வெளிப்படுகிறது.
இரண்டாவது வரியில் கண்ணன் கேசவன் என்று சொல்லுகின்றாரே ..கேசவன் என்கிற பதத்தை ஏன் எடுக்க வேண்டும்?
கேசவன் என்பதைப் பிரித்தால் சிவன், பிரம்மா, திருமால் என்ற மூன்றின் கூட்டுப் பொருள் வரும்.
கேசவன் என்பது பன்னிரு நாமத்தில் முதல் திருநாமம்.
வைணவர்கள் எப்பொழுதும் கேசவனைத் தான் முதலில் நினைப்பார்கள்.
ஆண்டாளும் “கேசவனைப் பாட நீ கேட்டே கிடத்தியோ?” என்று பாடுகின்றாள் .
கேசவன் என்ற பொருளுக்கு கிலேசங்களைப் போக்குபவன் என்று பொருள் உண்டு.
அதாவது துன்பங்களைப் போக்குபவன் .
மற்றவர்களுக்கு எல்லாம் தங்களை பற்றிய அச்சம் இருக்கலாம்.
ஆனால் பெரியாழ்வாருக்கு கண்ணனுக்கு ஏதாவது ஆகி விடப் போகிறதே என்ற அச்சம். இந்த அச்சத்தை யார் போக்க முடியும்?
யார் மீது அச்சம் கொண்டாரோ, அந்த கண்ணனே,துக்கத்தை நீக்கும் கேசவனாக வந்தால் தான் நீக்க முடியும் .
மூன்றாவது வரி பாருங்கள்.
ஒரு குழந்தையின் பிறந்த நாள் எப்படிக் கொண்டாடப்பட வேண்டும்?.. என்ன உணர்ச்சி…என்ன அற்புதம் பாருங்கள்….
அந்தக் காலத்திலே எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை விளக்குகின்றார்.
ஒரு குழந்தை பிறந்து விட்டால் ஊரார்கள் எல்லாம் சந்தோஷப்பட்ட காலம்.
குழந்தை அந்த பெற்றோர்களுடைய கவலையை தீர்ப்பதற்காக மட்டும் பிறப்பது கிடையாது. ஊருக்கும் உலகுக்கும் உபயோகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிறக்க வேண்டும்.
“நன் மக்களைப் பெறுதல்” என்றே ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் சித்பவானந்தர்.
(1977ல் நான் திருச்சியில் படித்துக்கொண்டிருந்த போது மலைக்கோட்டை தாயுமானவர் சந்நதி முன்பு இருந்த புத்தகக் கடையில் வாங்கினேன்.மிக அற்புதமான புத்தகம்.விலை 2 ரூபாய் அப்போது.)
ஒரு பெற்றோருடைய நோக்கம், தங்களை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என்கிற எண்ணம் மட்டும் கிடையாது ;அல்லது தங்கள் வைத்திருக்கிற சொத்துக்கு ஒரு வாரிசு கிடைத்தது என்கிற நோக்கமாக இருக்கக் கூடாது.
இதை இராமாயணத்தில் நாம் பார்க்கலாம். இராமாயணத்திலே தசரதன் தனக்கு ஏன் பிள்ளை வேண்டும் என்பதற்கான காரணத்தைக் கூறுகின்றார் இறந்தபின் கொள்ளி போட ஒரு பிள்ளை வேண்டும்; அல்லது நான் “புத்” என்ற நகரத்தில் போய் விழுந்து விடுவேன், காப்பாற்ற ஒரு பிள்ளை வேண்டும். இது அல்ல நோக்கம்.
இவ்வளவு பெரிய ராஜ்யத்தை சம்பாதித்து வைத்திருக்கிறேனே, இதை ஆடம்பரமாக வாழ வேண்டும்; அதற்காக ஒரு பிள்ளை வேண்டும் என்றெல்லாம் அவன் கேட்கவில்லை.
இந்த நாட்டில் உள்ள மக்களை எல்லாம் நல்லபடியாக காப்பாற்றுவதற்கு இந்த நாட்டுக்கு ஒரு அரசன் வேண்டும். சாதுக்களை காப்பதற்கு கருணை உள்ள ஒருவன் வேண்டும் என்பதற்காக பிள்ளை வரம் வேண்டுகின்றார்.
அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற.
உறு பகை ஒடுக்கி. இவ் உலகை ஓம்பினேன்;-
பிறிது ஒரு குறை இலை; என பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ.
அப்படிப்பட்ட பிள்ளையாக ராமன் பிறந்ததினால் தான், ராமன் வனவாசம் போகிறான் என்று சொன்னவுடனே, சந்தோஷமாக போய் வா என்று யாரும் சொல்லவில்லை.
அத்தனை பேரும் அடித்துக் கொண்டு அழுதார்கள்.
கிள்ளையோடு பூவை அழுத; கிளர் மாடத்து
உள்ளுறையும் பூசை அழுத; உருவறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல!
வள்ளல் வனம் புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்”
என்கிறார்.
ராமன் காட்டுக்குச் செல்கிறான் என்றவுடன் கிளிகள் அழுதன; பூனைகள் அழுதன; பசுக்கள் அழுதன; அதன் கன்றுகளும் அழுதன; அன்று மலர்ந்த மலர்கள் அழுதன; இப்படி எல்லா உயிரினங்களுமே அழுதன என்று சொல்லும் கம்பன், மிக உருக்கமான முறையில் “அதுமட்டுமா, தாயின் கருவறையில் உருப்பெறாமல் இருக்கும் பிள்ளையும் சேர்ந்து அழுதது” எனக் கூறுகிறான்.
அப்படிப்பட்ட அன்பினை ஒரு பிள்ளை சம்பாதித்தால், அந்த ஊராருக்கு எப்படி இருக்கும் ?
கண்ணன் பிறந்ததை, எல்லா மக்களும், தங்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைத்து விட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டார்கள் .
அந்த மகிழ்ச்சியால் ஒருவர் மீது ஒருவர் எண்ணெயையும் நறுமணப் பொருள்களையும் வாரி இறைத்து கொண்டாடினார்கள்.
இங்கும் ஒரு நுட்பமான பொருள் ஒன்று உண்டு.
“எதிர் எதிர் தூவிட கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே” என்பது நுட்பமான சிந்தனைக்குரிய இடம்.
மகிழ்ச்சியை ஒரு அறைக்குள் பூட்டிக்கொண்டு இருப்பதில்லை. துக்கம் வேண்டுமானாலும் ஒரு தனி அறையில் இருந்து கொண்டு அழலாம்.
சந்தோஷம் என்பது வெளிப்படுத்த வேண்டியது. மற்றவர்களிடத்திலேயும் அது பரவி விடும். சந்தோஷத்தின் இயல்பு அப்படித்தான்.
இரண்டாவதாக ஒருவர் சந்தோஷம் அடுத்தவருக்கு பகிர வேண்டும் . அவர்கள் சந்தோஷம் இவர்களுக்கு பகிர வேண்டும். நாம் மகிழ்ச்சியோடு ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கினால் மகிழ்ச்சி பெருகும்.
ஆகையினால் தான் எதிர் எதிர் தூவிட என்கிற வார்த்தையை போட்டார்.
இப்போது என்னவாயிற்று?
கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே என்று முடிக்கிறார். அதாவது கண்ணனுடைய திருமுற்றம் அந்த வீட்டின் சேறு ஆகிவிட்டதாம். வெறும் தரையில் எதுவும் முளைக்காது. சேற்றில் தான் எல்லாம் முளைக்கும். இந்த சேற்றில் கிருஷ்ண பக்தி முளைக்கும்.