வரலட்சுமி என்கின்ற வார்த்தையில் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று வாசலை அலங்கரித்து மகாலட்சுமியை நாம் “வர”வேண்டும் என்று வரவேற்கின்றோம். அப்படி திருமகளை “வர”வேற்கும் பூஜை வரலட்சுமி பூஜை. இன்னொன்று மகாலட்சுமியின் திருவருளுக்காகச் செய்யப் படுகின்ற பூஜை, வரம் என்றால் அருள். மகாலட்சுமியை பிரார்த்த னையால் வரவழைத்து அவளிடம் வரம் வாங்குகின்ற பூஜை வரலட்சுமி பூஜை.
ஆவணி மாதத்தின் பௌர்ணமிக்கு முன்னால் வருகின்ற வெள்ளிக்கிழமை எதுவாக இருந்தாலும் அந்த வெள்ளிக்கிழமை விரதம் தான் வரலட்சுமி விரதம். பொதுவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட் சுமிக்கு உரியது .ஆவணி என்பது மிகச் சிறப்பான மாதம் .எனவே ஆவணியும் வெள்ளிக்கிழமையும் இணைந்த நாளை வரலட்சுமி விரதம் கொண்டாடும் நாளாக பெரியவர்கள் நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்கள். சில நேரங்களில் இது ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையாகவும் வந்துவிடும்..
அளவில்லாச் செல்வங்களுக்கு உரியவர் மகாலட்சுமித் தாயார். அதனால் தான் பெருமாளே தன்னுடைய மார்பில் மகாலட்சுமிக்கு இடம் தந்துள்ளார் . பெருமாளுக்கு “திரு”மால் ,திருமகள் கேள்வன், திருவாழ் மார்பன் என்று பெயர். வடமொழியில் ஸ்ரீ:பதி என்று சொல்வார்கள் பெரி யாழ்வார் பெருமாளைப் பாடுகின்ற பொழுது ,”நின் வல மார்பினில் வாழ் கின்ற மங்கையும் பல்லாண்டு” என்று மகாலட்சுமிக்கு வாழ்த்து சொல்லி விட்டுத் தான் பெருமாளைப் பாடத் துவங்குகின்றார்..
வரலட்சுமி விரதம் என்பது தொன்று தொட்டு, நம்முடைய பெரியவர்கள் நமக்கு காட்டி கொடுத்திருக்கும் நோன்பு . அதனுடைய பலன்கள் எண்ணில் அடங்காதது. இருந்தாலும் சிறப்பான சில பலன்களைச் சொல்லலாம் வரலட்சுமி விரதம் இருப்பதால்
1.குடும்பத்தில் வறுமை அகலும். செல்வம் சேரும். செல்வம் சேர்ந்த குடும்பங்கள் சிறப்பாக வாழும்.
- குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாத நல்லிணக்கமும் நல்லுறவும் செழிக்கும்.
3.பெண்களுக்கு கணவனின் குணமும் நலனும் வருமானமும் தீர்க்காயுளும் வளர்ந்து கொண்டே இருக்கும். மாங்கல்ய பலம் விருத்தியாகும். தீர்க்க சுமங்கலித்துவம் கிடைக்கும். எந்தக் குடும்பத்தில் சண்டை, சச்சரவு ,கோபம், பகை போன்ற உணர்ச்சிகள் இருக்கிறதோ, அங்கே திருமகளின் அருள் குறைந்திருப்பதாகப் பொருள். எங்கு அன்பும் சந்தோஷமும் மரியாதையும் பரோபகாரமும் நிறைந்திருக்கிறதோ, அந்த இடத்தில் நாம் அழைக்காமலேயே மகாலட்சுமி வந்து குடி அமர்வாள்.
வரலஷ்மி விரதம் மிக எளிய விரதம்.முதல் நாள் அதாவது வியாழக்கிழமை (வெள்ளி அன்று வீட்டை துடைப்பதோ, விளக்கு முதலிய பூஜை பொருட்களைத் துலக்குவதோ கிடையாது) வீட்டை நன்றாகக் கழுவித் துடைத்து, தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். தரையிலும் சரி, கூரையிலும் சரி, இந்தத் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். ஒட்டடைகள் படித்திருந்தால் அடிக்க வேண்டும். ஒட்டடை சேரச் சேர காசு தங்காது என்பார்கள். நல்ல பெரிய மாக்கோலம் வாசலில் போட வேண்டும். வண்ணக்கோலமாகப் போட்டால் இன்னும் சிறப்பு. அழகும் திருமகளும் இணை பிரியாதவர்கள். எதெல்லாம் அழகின் அம்சமோ அதெல்லாம் திருமகளின் அம்சம். எங்கே அழகு இருப் பினும் அது திருமகளின் இடமாகிவிடும்.
