By S.Gokulachari
வராகப் பெருமாளுக்கு பூவராகன் என்று திருநாமம். பூமியை – வராக உருவம் எடுத்து மீட்டதால் இந்தப் பெயர்.புவி சிலிர்க்க பூவராகப் பெருமாள் எழுந்த இடம் ஸ்ரீமுஷ்ணம். தானாகத் தோன்றிய எட்டுத் தலங்களில் ஒன்று.
ஆழ்வார்கள் இந்தப் பெருமாளைப் பாடும்போது எயிற்றிடை மண் கொண்ட எந்தை என்றும் ஏனத் துருவாகிய ஈசன் எந்தை ( ஏனம்= பன்றி)என்றும் கொண்டாடுகிறார்கள்.இந்த வராக மூர்த்தியை மணம் புரிய வேண்டி மகாலட்சுமித் தாயார் ஒரு முனிவருக்கு மகளாகத் தோன்றிய தவம் புரிந்த இடம் ஒன்று உண்டு.
அது ஸ்ரீமுஷ்ணம் தலத்திற்கு அருகாமையில் சுமார் 30 கி.மீ வடக்கே அமைந்துள்ளது.
சேத்தியாத்தோப்பு விருத்தாசலம் பாதையில் அமைந்துள்ள இத்தலம் தாயார் பெயரிலேயே வளையமாதேவி என்று வழங்கப்படுகிறது.
அது என்ன வளையமாதேவி!
தாயார் வராக அவதாரமெடுத்த எம்பெருமானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய அதே நேரம், காத்யாயன முனிவர் என்றொரு முனிவர் தாயின் அருட்கருணையை வேண்டி கடும்தவம் புரிந்தார்.
இவருடைய தவத்தை மெச்சிய தாயார், தானே ஒரு குழந்தையாக வடிவெடுத்து வந்தாள். குழந்தையைக் கண்ட முனிவர் தன் குருவின் சாபம் நீங்கப்பெற்ற புத்துணர்வுடன் ஆசையோடு குழந்தையை வளர்த்து வந்தார்.
பெண்ணுக்கு அவர் வைத்த பெயர் காத்யாயினி.
பருவமடைந்த பெண்ணைக் கட்டித்தர வேண்டுமே! யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்து ஊரெல்லாம் மாப்பிள்ளையைத் தேடினார் முனிவர்.
காத்யாயினி முனிவரிடம் அப்பா! சாதாரண மானிடர்களுக்கு என்னை மணமுடித்துத்தர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நான் ஸ்ரீமுஷ்ணத்தில் எழுந்தருளியுள்ள வராகப் பெருமானையே மணமகனாக உள்ளத்தில் ஏற்றுக் கொண்டேன். எனவே அவரை மணமுடிக்க ஏற்பாடு செய்யுங்கள் …
இதில் மிக முக்கியமான ஒரு விஷயம், புராண காலத்திலேயே பெண்ணின் மனமறிந்து மாப்பிள்ளைத்தேடும் வழக்கம் இருந்தது.
இதற்கு நடுவிலே, காத்யாயினி உள்ளம் அறிந்த வராகப் பெருமாள் ஒரு சிறு நாடகம் ஆடுகிறார்.ஒரு அழகான இளைஞனாக, இப்பகுதிக்கு வருகிறார்.
காத்யாயினி இந்த இளைஞன்தான் தான் எண்ணிய மணமகன் என்பதை உள்ளுணர்ந்து தன்தோழியிடம் சொல்லி தன் எண்ணத்தைச் சொல்லத் தூது அனுப்புகிறாள்.
தோழி எம்பெருமானிடம் சொல்ல, எம்பெருமான் அப்போதைக்கு ஏதும் பதில் சொல்லாமல் சென்று விடுகிறாள்.ஆனால், முனிவர் விட்டுவிடுவாரா!
இறைவனை வரவழைக்க ஒரே வழி பக்தியும் தவமும்தானே!
தவமிருந்து தாயாரைப் பெற்ற முனிவர், இப்போது தாயாரின் திருமணத்திற்காக எம்பெருமானை நோக்கி மறுபடியும் தவமிருக்கிறார்.
காத்யாயின முனிவரின் தவத்திற்கு எம்பெருமான் அருள் பாலித்தார்.
மிக விமர்சையாக காத்யாயினிக்கும் பெருமாளுக்கும் திருமணம் நடைபெற்றது.
முனிவர் தமது மகளுக்குச் சீதனமாக – மங்கலப் பொருளான வளையல்களைத் தந்தார்.
அந்த வளையல்களை அணிந்து கொண்ட தாயாருக்கு வளையமாதேவி என்ற திருநாமம் ஏற்பட்டது.
திருமணத்திற்கு வந்திருந்த தேவர் முதலானோர் இறைவனை இறைஞ்சி திருமணக்கோலத்துடன் கமலவல்லித் தாயாரோடு இப்பாவன தீர்த்தக் கரையில், பின்னனார் வணங்கும்படி கோயில் கொண்டு எழுந்தருளும் படி பிரார்த்திக்க, அவ்வாறே இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இங்கு எழுந்தருளி இருக்கும் மூர்த்திகள்.
- மூலவர்: வேதநாராயணப் பெருமாள், உபய நாச்சியார்களுடன் வீற்றிருந்த திருக்கோலம்.
- உற்சவர்: வேதநாராயனப் பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், உபயநாச்சியார்கள் நின்ற திருக்கோலம்.
- நித்ய உற்சவர் வேதநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலம்.
- காளீயமர்த்தனக் கண்ணன் உற்சவர்.
- ஆதி நாராயணப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம்.
- ஸ்ரீ பூவராகப் பெருமாள், மூலவர் வீற்றிருந்த திருக்கோலம்.
- பிராட்டியுடன் சக்கரவர்த்தித்திருமகன், இளையபெருமாள், அனுமார், உற்சவர் மூலவர் நின்ற திருக்கோலம்.
- ஸ்ரீ ஆண்டாள், மூலவர் உற்சவர் நின்ற திருக்கோலம்.
- ஸ்ரீ நம்மாழ்வார், திருமங்கையாழ்வார மூலவர் உற்சவர்.
- ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் மூலவர்.
16.ஸ்ரீ உடையவர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் மூலவர் உற்சவர்.
17.ஸ்ரீ கமலவல்லித் தாயார் மூலவர் உற்சவர்
- காத்யாயனமுனிவர் மூலவர் வீற்றிருந்த திருக்கோலம்.
- கருடர்,அனுமார் மூலவர் நின்ற திருக்கோலம்.
- விஷ்வக்சேனர் வீற்றிருந்த திருக்கோலம்.
- துவார பாலகர்கள் நின்ற திருக்கோலம்.