ராமாயணத்தில் அளவில்லா ஈடுபாடு கொண்டவர் அனுமன். எங்கு ராமாயணம் நடந்தாலும் அந்த இடத்தில் தவறாது தோன்றி ராமாயணத்தைக் கேட்பவர்களுக்கும் சொல்பவர்களுக்கும் ஆசிர்வாதம் செய்பவர். அதனால் தான் நடைமுறையில் ராமாயணம் சொல்பவர்கள், தனியாக ஒரு மரப்பலகையில், கோலம் போட்டு, தூப தீபங்கள் ஏற்றி வைத்து, அனுமன் அங்கே எழுந்தருளுவதாக பாவனை செய்துகொண்டு ராமாயணத்தை ஜாக்கிரதையாக சொல்வார்கள்.அனுமத் பீடம் என்று பெயர். சில இடங்களில் ராமாயணம் சொல்லுகின்ற பொழுது எங்கிருந்தோ ஒரு வாநரம் வந்து அமர்ந்து கேட்பதையும் பலர் கண்ணாரப் பார்த்து இருக்கிறார்கள். ஒருமுறை ராமாயணம் சொல்லும் பொழுது ஒரு பெரியவர் தவறாமல் வந்து கொண்டிருந்தார். கண்களில் கண்ணீர் வழிய மிகவும் உருக்கமாக அந்தக் கதையைக் கேட்பார் .அவரை உள்ளூர்க்காரர்கள் விசாரித்தபோது அவர் யார் என்பது யாருக்குமே தெரியவில்லை. ஆனால் ராமாயணம் முடிந்த பிறகு அவர் அந்த ஊரில் இல்லை. அப்பொழுது ஒரு பெரியவரிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் சொன்னார்.
வேறென்ன சந்தேகம். அந்த பெரியவர் சாக்ஷாத் அந்த மாருதி ராயர்தான். வேறு யாருக்கு ராமாயணத்தில் அவ்வளவு ஈடுபாடு இருக்க முடியும்?‘எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ.. அந்த இடங்களில் எல்லாம் கண்களில் நீர் பெருக்கெடுக்க, பக்திப் பரவசத்துடன் அமர்ந்திருக்கும் நபர் எவரோ, அவரே அனுமன் .
‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’
ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவரை வணங்கி வழிபடும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகம் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.
வால்மீகி ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறினார் . அங்கே பாறைகளின் மீது சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
ஸ்ரீராமனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்த அவற்றைப் படித்த வால்மீகிக்கு மெய் சிலிர்த்தது.
யார் இதை உருவாக்கியிருப்பார்கள் என்று சிந்தித்த போது அருகிலே ஓர் சிறு குகையில் அனுமன் ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டிருந் ததைக்கண்டார்.
நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்த அவரிடம், கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டார் மஹரிஷி.
அதற்கு அனுமன் பதில் சொன்னார், ”ஸ்ரீராமனின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன்!” என்றார்.
அப்போது வால்மீகி மஹரிஷியின் கண்களில் நீர் கசிந்ததை அனுமன் கவனித்தார்.
”மஹாப்ரபோ ! நீர் எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. நான் எழுதிய ராமாயணம் இதற்கு இணையாகாது. உம்முடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்” என்றார்.
அனுமன் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வால்மீகியை வணங்கி, ”தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! நான் செதுக்கியது என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தங்கள் ராமாயணம் தான் நிலைத்து நிற்கும்.”
அடுத்து அனுமன் சற்றும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தைச் செய்தார். தான் எழுதிய ராமாயணத்தை தன் கடை கடவென்று வாலினால் அழித்தும் விட்டார்.வான்மீகி வியந்து போனார்.என்ன ஒரு தியாகம்….
”அனுமனே ! நீர் எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டீர் . ஆனால், எமது ராம காவியத்தில் நீர் செதுக்கிய ராம கதையும் இடம் பெறும்” என்று கூறி, வாழ்த்திச் சென்றார்.
