By S.Gokulachari
திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து.
கடவுள் என்ற வார்த்தைக்குச் சிறப்பான பொருளே அன்பு தான்.
கடந்து உள்ளிருப்பவர் கடவுள். கடந்து உள்ளிருப்பது அன்பு.
கடவுளால் ஆகாதது இல்லை.
அன்பினாலும் ஆகாதது இல்லை.
கடவுள் எதையும் எதிர்பார்ப்பது இல்லை.
அன்பும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை.(எதிர்பார்த்தால் அதற்கு பெயர் அன்பு அல்ல)
அறிவிற்கு அப்பாற்பட்டவர் கடவுள்.
எனவேதான் அறிவினால் மட்டும் கடவுளை அடைய முடியவில்லை.
அன்பும் அறிவிற்கு அப்பாற்பட்டதுதான்.
சில நேரங்களில் அறிவைத் தள்ளிவிட்டு அன்பு வேலை செய்யும்.
அறிவினால் மட்டும் கடவுளை அடைய முடியாது என்பதற்கு பல முனிவர்களும், ஞானிகளும் தாங்கள் பெற்ற அறிவினைக் கொண்டு கடவுளை அடைய முடியவில்லை என்று கூறும் இதிகாசப்புராணக் கதைகளை மேற்கோளாகக் கொள்ளலாம்.
கடவுளை அடைவதுதான் வாழ்க்கையின் குறிக்கோள்.
அன்புடைத்தன்மையை பூர்ணமாக அடைவதே வாழ்க்கையின் குறிக்கோள்.
கடவுளின் பொருள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
அன்பின் உண்மையான பொருளும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
இப்படிப் பல கோணங்களில் சிந்தித்தே கடவுளை அடை – அன்பை அடை – அன்புதான் கடவுள் என்ற பொருளில் முதல் அதிகாரத்தை வைத்தனர் என்று எனக்குத் தோன்றுகிறது.
திருவாய்மொழியின் முதல் பாசுரமான உயர்வற உயர்நலம் என்கிற பதத்திற்குப் பொருள் அன்புதான் என்று நிச்சயமாகக் கொள்ளலாம்.
அன்பு = உயர்வற உயர்நலம் உடையவன் (கடவுள்).
அன்பின் முதுல் எழுத்து அ
கடவுளின் முதல் எழுத்து அ
அகார வாச்சியன் என்று கடவுளை வேத உபநிடதத் தத்துவங்கள் விளக்குகின்றன.
அஹம் அக்ஷராணாம் அகார: (கீதை 10:33) எழுத்துக்களில் நான் “அ”
ஒரு நுட்பத்தை இங்கே சொல்கிறேன்.
பொதுவாக நாம் பல்வேறு விஷயங்களைக் கற்கிறோம்.
கற்பது என்றால் அறிவு பெறுவது!
எத்தகைய அறிவு?
நாம் படிக்கின்றோமே – பல செய்திகளைத் தெரிந்து கொண்டு எனக்கு அது தெரியும். இது தெரியும் என்கிறோமே அந்த அறிவா?
இல்லை.
இங்கே வள்ளுவர் அறிவின் பயன்பாட்டைச் சொல்கிறார்.
அறிவினான் ஆகுவதுண்டா?என்றே ஆரம்பிக்கிறார்.
பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை. (மற்றவரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதாதபோது அறிவினால் என்ன பயன்).
அறிவு அன்பாக மாறும்போதுதான் இந்த வேலையைச் செய்யும்!
அவனவன் வயிற்று வலியும் தலைவலியும் அவனவனுக்குத்தான் தெரியும் – என்பது கிராமத்து பழமொழி! இயல்பான விஷயம் எது? – அறிவு!
அடுத்தவன் வயிற்று வலியை தான் உணர முடிந்தால் அது அன்பு!
அதனால் நஞ்ஜீயரிடம் ஒருவர் வைணவன் யார் என்று கேள்வி கேட்டபோது அவர் அழுத்தமாகச் சொன்னார்.
“பிறர் துன்பம் கண்டு நெஞ்சில் கை வைத்து தன் துன்பம் போல் பதறுபவன் வைணவன்சு என்றார் ”
இதில் பிறர் என்ற வார்த்தை முக்கியம்.
பிறிதின் நோய் என்ற குறள்நெறி இந்த வார்த்தையில் பிரதிபலிப்பதைக் காணலாம்.
இது பாரபட்சமில்லாத – எதையும் எதிர்பார்க்காத – தன்னைக் கொடுக்கும் குணத்தைக் குறிப்பது.
பிற உயிர்களுக்காக தன்னை இழப்பது மேகம். எனவே கடவுள் வாழ்த்துக்குப்பின் வான்சிறப்பை வைத்தார்.
அடுத்த அதிகாரம் நீத்தார் பெருமை. இதிலே கூட அன்பின் சிறப்பைத்தான் விரிவாகவும் முடிவாகவும் பேசினார்.
அந்த அதிகாரத்தின் கடைசி குறள் இது.
அந்தணர் என்போர் அறவோர் மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான். (குறள் 30)
மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை என்பது அன்புதானே?அன்பின் கனிதானே அருள்.
அறவோர் அன்புள்ளோராக இருக்க வேண்டும்.
சரி அந்த அறம் எப்படி இருக்க வேண்டும்?
அடுத்த அதிகாரத்தில் சொல்கிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற (குறள் 34)
மனத்தூய்மைதான் தலையாய அறம் என்கிறார்.
மனதில் தூய்மை இல்லாதவர்களால் அன்பு செலுத்தவே முடியாது. காரணம், அழுக்காறு, அவா சேர்ந்து அன்பை சுரக்காமல் செய்து விடும்.
இதை அடுத்த அதிகாரத்தில் இன்னமும் மேம்படுத்திப் பேசுகிறார்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை என்று அறவழியில் வாழ்வதே இல்வாழ்க்கை என்று சொல்லி, அதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு! என்கிறார்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!
அறனும் அன்பும் என்று கூட எழுதியிருக்கலாம். ஆனால், அன்பில்லா அறத்தால் பயன் இல்லை! ஆனால் அறம் என்கிற செயல் இல்லாவிட்டாலும்கூட அன்பிருப்பின் அதுவே அறமாகிய பயனைத் தரும்.
எனவே திருக்குறள் முழுமையும் ஆராய்ந்து பார்க்கும்போது, அன்பு நெறியையே அவர் அதிகமாக வலியுறுத்துகிறார்.
அன்பில் தழைத்திடும் வையம்
அன்புடையார் எல்லாம் உடையார்
அன்பில் வழியது உயிர்நிலை
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அறத்திற்கே அன்பு சார்பு
யாக்கையின் அகத்துறுப்பு அன்பு
இவ்வளவையும் சொல்லிவிட்டு, உலகத்திலுள்ள மக்களை இரண்டே பிரிவாகப் பிரிக்கிறார்.
1.அன்பில்லாதவர்கள்.
2.அன்புடையவர்கள்.
சரி. இவர்களை அடையாளம் காண்பது எப்படி என்கிற கேள்வி எழும்!
அன்பில்லாதவர்கள் சுயநலக்காரர்கள். தான், தன் குடும்பம், தன் மனைவி, தன் சுகம், தன் பொருள் என்று கருதி உயிர்கொடுத்து உழைப்பவர்கள். அல்லது உழைத்து உயிர் கொடுப்பவர்கள்!
தமக்குரியர் அன்பு என்பதால் இவர்கள் அன்பு நெறி கடைபிடிக்காதவர்கள் என்றே திருவள்ளுவர் காட்டுகிறார்.(அன்பிலார் எல்லாம் தமக்குரியர்)
என்னிடமும் ஒரு நண்பர் சொன்னார்.
என் வாழ்க்கையை முழுக்க அன்பு பாராட்டியே வாழ்ந்தேன். எனக்காக நான் எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. எல்லாப் பொருட்களையும் பிறருக்காகவே சேர்த்து சேர்த்து ஓடாய்த் தேய்ந்தேன்.
ரொம்ப சரி! பிறர்களுக்காக என்கிறீர்களே அது யார்? யார்?
என் மனைவி, பிள்ளைகள்தாள்!
மனைவியின் மீதும் மக்களின் மீதும் (மக்கள் = பிள்ளைகள்) எத்தனை அன்பு இவருக்கு என்று தோன்றும்.
அன்புள்ளவர்களோ – தாங்கள் வாழ்க்கை, பொருள், அறிவு எல்லாவற்றையும் பிறருக்காகச் செலவழிப்பவர்கள். பொதுநலம் கருதும் புண்ணியர்கள்.
ஆண்டாள், திருப்பாவையிலே, வாமன அவதாரத்தை வெகுவாகப் புகழ்வாள். அந்த அவதாரத்தைச் சொல்லும்போது, உத்தமன் என்ற பதத்தைப் போடுவாள்.
இதற்கு உரையாசிரியர் விளக்கம் தரும்போது மிக அற்புதமாகத் தருவார்.
இந்திரனுக்காக – தானே குறளுருவாய்த் தாங்கிச் சென்று – பிச்சை கேட்கவும் தயங்காதவன். அதற்காகவே எடுத்த வடிவம் என்பதால் உத்தமன் என்று ஆண்டாள் போற்றினாள்.
அன்பே சிவம் என்றார்கள் ஆன்றோர்கள்.
பிறர்க்குரியதான அன்பைத்தான் திருக்கோட்டியூரில் தான் நரகம் போனாலும் பரவாயில்லை என்று காட்டி சரித்திரத்தில் இடம் பிடித்தார் இராமாநுஜர்.
வள்ளுவத்தின் மையப்புள்ளியான இந்த அன்பு நெறிதான் இன்றைய தேவை!
இந்த அன்பு நெறி காட்டும் தலைவர்கள்தான் இன்றைய தேவை!
