ஆலய தரிசனம் வெள்ளி விழா Aalayadharisanam Silver Jubilee Celebrations
7.3.2021 அன்று புவனகிரி(Bhuvanagiri) சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அருகிலுள்ள தேவாங்கர் மகாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அன்று பிற்பகல் 3.30 மணிக்கு விழா தொடங்கியது. எந்த வைணவ விழாவும் அருளிச்செயல் இசையோடு நடக்கவேண்டும் என்று நாம் பல காலமாக ஆலய தரிசனத்தில் எழுதி வருகின்றோம். சேவா காலம் என்பது வேறு. இசைப்பாடல் என்பது வேறு என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறோம்.
நாம் நடத்துகின்ற விழாவிலாவது இதனைச் செய்து காட்ட வேண்டும் என்கிற முறையில் பக்க வாத்தியங்களோடு அருளிச்செயல் இசைஅரங்கம் என்பது முதல் நிகழ்ச்சியாக – மங்கள நிகழ்ச்சியாக வைக்கப்பட்டது.
அருளிச்செயல் இசைஅரங்கம்
இந்த நிகழ்ச்சியில் திருமதி விஷ்ணுபிரியா சுதர்சன் அவர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களைப் பண்ணிசைத்துப் பாடினார்.பக்கவாத்தியமாக முனைவர் ஸ்ரீராம் வயலின் வாசித்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் விஜயேந்திரன் மிருதங்கம் வாசித்தார். சிதம்பரம் இலட்சிய ராஜ் மோர்சிங் வாசிக்க நிர்மல்குமார் கஞ்சிரா வாசித்தார். நிகழ்ச்சியில் ஆழ்வார்களின் பல பாசுரங்கள் பாடப்பட்டன. சித்ரகூடம் பாசுர பலச்சுருதியோடும் எம்பாரின் இராமாநுஜ வடிவழகோடும் (பற்பமெனத்திகழ்) இசையரங்கு நிறைவு பெற்றது.
விழா முன்னிலை
தொடர்ந்து வெள்ளி விழா அரங்கம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சென்னையிலிருந்து திரு.மை.பா நாராயணன் (ஆழ்வார்க்கடியான்) அவர்களும் சென்னை ஆன்மீகம் பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர் திரு. கிருஷ்ணா அவர்களும் வருகை தந்தார்கள்.
வெள்ளி விழா அரங்க தலைமையை ஆசார்யர் மேலைத் திருமாளிகை. ஸ்ரீஆலி நாடன் ஸ்வாமிகள் ஏற்றுக்கொண்டார்கள். திருச்சித்ரகூடம் முனைவர் ஸ்ரீ.ஏ.வி ரங்காச்சாரியார் சுவாமிகளும் மற்றும் திருவெள்ளக்குளம் சடகோப கல்யாணராமன் சுவாமிகளும் தமிழ் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.கே. பாஸ்கரன் அவர்களும், இலக்கிய வித்தகர் பேராசிரியர் அன்பழகன் அவர்களும் முன்னிலை வகித்து விழா நிறைவு வரை இருந்து நிறைவாக நடத்தித் தந்தனர்.
இந்த விழாவின் முதல் நிகழ்ச்சியாக திருமால் வணக்கத்தை ஆலய தரிசனம் ஆசிரியர் ஸ்ரீமான் சே. பூவராகன் திருச்சித்ரகூடம் பாசுரத்தைப் பாடி(ஊன்வாட உண்ணாது) துவக்கி வைத்தார். வெள்ளி விழாக் குழுவின் முக்கிய உறுப்பினரான வைணவத்திரு. பொறியாளர் எஸ். ஆர். சுதர்சன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
நூல் வெளியீட்டு விழா
இந்த விழாவின் முதல் நிகழ்ச்சியாக மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.
முதல் நூலாக இந்த மணி விழாவுக்கு என்று திருச்சித்திரக்கூடம் ஸ்ரீ ஏ.வி.ரங்காசாரியார் சுவாமிகள் எழுதிய இலக்கிய நோக்கில் திருமங்கையாழ்வாரின் பிரபந்தங்கள் என்கிற நூல் வெளியிடப்பட்டது.
300 பக்கங்களுக்கும் மேல் பெரிய அளவில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி தவிர மீதி உள்ள 5 பிரபந்தங்களுக்கு இலக்கிய நோக்கில் எழுதப்பட்ட இந்நூலில் பலப் பல அரிய செய்திகள் இருக்கின்றன. கடும் உழைப்பில் எழுதப்பட்ட இந்த நூலானது வைணவ இலக்கிய உலகில் ஒரு சிகரமாக இருக்கும்.
இதனைத் தொடர்ந்து ஆலய தரிசனம் வெள்ளி விழா மலர் வெளியிடப்பட்டது. பல வண்ணப் படங்களுடன் ஆலய தரிசனத்தின் சுமார் 25 ஆண்டு கால பதிவுகளோடு ஆலய தரிசன ஆசிரியரின் 40 ஆண்டுகால வைணவ சமய இலக்கியப் பணிகள் நிரல்பட தொகுக்கப்பட்ட இந்த மலரில் 60க்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துக்களைக் கட்டுரைகளாகப் பதிவு செய்திருக்கின்றனர். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கோணத்தில் எழுதப்பட்டது.
இதுதவிர ஆசிரியரின் 40 ஆண்டுகால இலக்கிய வைணவ பணிகள் ஒளிப்படங்களாகத் தொகுக்கப்பட்டு வண்ணப் படங்களாக அச்சிடப்பட்டன.
மூன்றாவது நூலாக வேதாந்த தேசிகனின் கோதாஸ்துதி. ஆண்டாளை மிக அற்புதமான கோணத்தில் அறிமுகப்படுத்தும் ஸ்ரீரங்கம் முரளி பட்டர் சுவாமிகளின் ஆற்றல் வாய்ந்த எழுத்துக்களின் தொகுப்பு.
180 பக்கங்களில் சுமார் 200 ரூபாய் விலை கொண்ட இந்த நூல் அழகான வண்ணப் படத்தோடு வெளியிடப்பட்டது. இந்த நூலில் ஆண்டாளைப் பற்றிய பல செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன.
இந்த மூன்று நூல்களும் முறையாக பெரியவர்களால் வெளியிடப்பட்டு பல சான்றோர்களுக்கு வழங்கப்பட்டன.
சாதனையாளர்களுக்கு பாராட்டு விருது
தொடர்ந்து பாராட்டு அரங்கம் நடைபெற்றது. இந்த பாராட்டு அரங்கம் என்பது மணிவிழா ஆசிரியருக்கும் ஆலய தரிசனத்திற்கும் என்பதைவிட ஆலய தரிசனத்தோடு தொடர்பு கொண்ட அதே சமயத்தில் பல்வேறு சாதனைகள் செய்த பெரியோர்களுக்கான பாராட்டு விழாவாக அமைந்தது என்றே சொல்லலாம்.
90 வயதைக் கடந்த, வைணவத்துக்கு பெரும்பணி ஆற்றி வருகின்ற காரைக்கால். வரிச்சிக்குடி சுவாமிகளுக்கும், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற பலநூறு கவிதைகள் எழுதிய பலநூறு வைணவச் சான்றோர்களை பாராட்டிய கள்ளக்குறிச்சி கல்லைக் கம்பன் .ஆசுகவி ஆராவமுதன் அவர்களது 80 ஆவது அகவையை முன்னிட்டும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டன.
திருவெள்ளக்குளம் திருமால் அடியார்கள் என்கிற அமைப்பினை அமைத்து தொடர்ந்து பல்லாண்டுகள் கலியன் ஒலி மாலை நிகழ்ச்சி நடத்தி நூற்றுக்கணக்கான வைணவப் பெரியவர்களைப் பாராட்டி மகிழ்கின்ற 86 வயது இளைஞர் சடகோப கல்யாணராமன் அவர்களுக்கும் பாராட்டு வழங்கப்பட்டது.
புகழ்பெற்ற மருத்துவராக இருந்தும் கல்லூரிப் பேராசிரியராக இருந்தும் ஓய்வு பெற்று வைணவப் பணியில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கின்ற அற்புதமான தம்பதிகள் ஸ்ரீமதி ஸ்வதந்திரா கோவிந்தராஜன் – பேராசிரியர் கோவிந்தராஜன் தம்பதியினர்.
இவர்கள் செய்து வருகின்ற பணிகளும் சாதனைகளும் கணக்கில் அடங்காதது. குறிப்பாக ஸ்ரீ பாஷ்யத்திற்கு(Ramanujar’s Sribhasyam) இவர்கள் எழுதிய நான்கு பகுதிகளைக் கொண்ட மிகச் சீரிய விளக்க நூலும் தற்சமயம் எழுதி வெளியிட்டுள்ள ஆசாரிய இருதயத்தின் விளக்க (அட்டவணை மூலம்) நூலும் வைணவ சமயத்திற்கு கொடையாகும். வருமானத்தைத் தருகின்ற மருத்துவத் தொழிலை தள்ளிவைத்துவிட்டு திருவரங்கத்தில் குடிபுகுந்து இந்த தெய்வப் பணியை எந்த தொய்வும் இல்லாமல் நடத்தி வருகின்ற இந்தத் தம்பதியரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே அழைத்திருந்தோம். ஸ்ரீமான் கோவிந்தராஜன் அவர்கள் எண்பது அகவையை கடந்து சதாபிஷேகம் செது கொண்டவர். சதாபிஷேகம் நினைவாக தன்னுடைய கைப் பணத்தை செலவிட்டு ஆசாரிய இருதய நூலை வெளியிட்டவர். இந்தத் தம்பதியரை ஆலய தரிசனம் வெள்ளி விழா அரங்கம் பாராட்டி மகிழ்ந்தது.
தொடர்ந்து சிறப்பு வருகை தந்த ஒவ்வொருவர் பணியையும் ஆலயதரிசனம் வெளிப்படையாகப் பதிவு செய்தது. பல சான்றோர் பெருமக்கள் ஆலய தரிசனம் ஆசிரியரின் பணியையும் ஆலய தரிசனத்தையும் பாராட்டினர்.
வாழ்த்துரை வழங்கிய பெரியோர்கள்
தமிழ் பேரவையின் சார்பில் வழக்கறிஞர் கே. கே. பாஸ்கரன், பேராசிரியர் அன்பழகன், எழுச்சி பாவலர் தா.ஜெயராமன், கடலூர் லட்சுமணன், பாச்சுடர் வளவ.துரையன், திருக்குறள் பேரவை சார்பில் முருகன், கண்ணதாசன் பேரவை சார்பில் கல்யாண், மதுரையில் இருந்து வந்திருந்த நண்பர்கள் குறிப்பாக நம்மாழ்வார், மதுரை ரங்கராஜன், திருமதி ஹரிப்பிரியா தேவநாதன், பாகவதர்கள் சார்பில் ராஜ்மோகன் ராமாநுஜதாசர், அருமை நண்பரும் மாணவரும் ஆலய தரிசனத்தின் புரவலருமான விருதாச்சலம்ஏ.கே. ஒன். கன்ஸ்ட்ரக்க்ஷன் அதிபர் சீனி அருள், நண்பரும் ஆலய தரிசன புரவலருமான நண்பர் திரு.செல்வநாயகம், பு.முட்லூர் ராம அனுமான் அறக்கட்டளை சீனு ராமதாஸ் – செந்தமிழ்ச்செல்வி ராமதாஸ் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
அன்றைய தினம் மை.பா. நாராயணன் அவர்கள் தனது பிறந்த நாள் என்பதால் சித்ரகூடம் ஸ்வாமி மூலம் ஆலய தரிசன ஆசிரியத் தம்பதிகளுக்கு வேட்டிசேலை வழங்கி சீரியதொரு சிறப்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து கிருஷ்ணா அவர்கள் ஆசிரியரோடு தமக்குள்ள அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். திருமதி.ஹரிப்பிரியா அவர்கள் உணர்ச்சியோடு கூடிய உரையை நிகழ்த்த, அன்பழகன் அவர்கள் ஆலய தரிசனம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
விழாவின் ஆசியுரை
நிறைவாக திருச்சித்ர கூடம் ஸ்ரீ ஏ.வி.ஆர். ஸ்வாமிகள் சிந்தனைக்கு உரியதான சீருரையை தமக்கே உரிய பாணியில் ஆசியுரையாகவும், ஆய்வுரையாகவும் ஆற்றி மங்களாசாசனம் செய்தார். நிறைவாக ஆலயதரிசனம் ஆசிரியரின் தமையனாரும், விழாக்குழு உறுப்பினருமான ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஸ்ரீமாந். சீதாராமன் அவர்கள் செம்மையான நன்றியுரையை நிகழ்த்தினார்.
சீனு ராமதாஸ் தமைமையில் அமைந்த குழுவினர்கள் சிறப்பானதொரு விருந்து உபசாரத்தை செய்தனர்.திருக்குறள் பேரவை திரு. முருகன் மண்டபத்தை அமைத்துக் கொடுத்தது முதல் நிறைவு வரை இருந்து உதவி செய்தார்.விழாக்குழு உறுப்பினர்கள் அனைவருமே ஒத்துழைத்து விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.
– தொடரும்.
