22/ 3/2023 புதன்கிழமை
பொன் கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்காது என்பார்கள். அந்த புதன் இன்று கிடைத்திருக்கிறது .இன்று பல விசேஷங்கள் உண்டு. சாந்த்ரமான முறையில் இன்றைய தினம் சைத்ர சுத்தம் அதாவது பங்குனி அமாவாசைக்கு அடுத்த நாள் சித்திரை மாதம் துவங்கி விடுவதாக பொருள்.
சூரிய கதியின் மூலம் நிர்ணயிக்கும் பொழுது, மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாகையில் சூரியன் நுழையும் நேரம் சித்திரை என்று கணக்கிடப்படுகிறது. இவை இரண்டுக்கும் 15 நாள் வித்தியாசம் இருக்கும்.
பெரும்பாலான கோயில் பண்டிகைகள் சாந்திரமான முறையில் கொண்டாடப்படுகிறது, ஆகையினால் இன்றைய தினம் யுகாதி பண்டிகை என்று ஆண்டின் முதல் மாதப் பிறப்பாகக் கருதிக் கொண்டாடுகிறார்கள். உகாதி என்றால் யுகம் பிளஸ் ஆதி யுகத்தின் தொடக்கம்.
பங்குனி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த நாள் தான் யுகம் தொடங்கியதாக ஒரு கணக்கு. அதையே ஆண்டுக்கு தொடக்கமாகவும் வைத்துக் கொள்ளுகின்றார்கள். சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாகக் கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இன்றைக்கு பல விசேஷங்கள் உண்டு. ஒன்று சனியினுடைய உத்திரட்டாதி நட்சத்திரம். விநாயகப் பெருமானுக்கு இன்றைய தினம் சித்தி கணபதி விரதம் . சதுர்த்தி விரதம் எப்படி இருக்கிறார்களோ அதை போலவே இருப்பார்கள். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் கணபதி பூஜையை செய்து அவருக்கு அருகம்புல் மாலையை சாற்றிக் கொண்டாடுவார்கள்.
யுகத்தின் ஆதி என்பது போல ஒரு பூஜையின் தொடக்கமாக விக்னேஸ்வர பூஜையை செய்வது வழக்கம் அல்லவா. அதை ஒட்டி இந்த நாளில் சித்தி கணபதி விரதம் இருப்பது சிறந்தது.
அதைப்போல இன்றைய தினம் வசந்த நவராத்திரி தொடங்குகிறது. நவராத்திரியில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆஷாட மாதம் என்று சொல்லப்படும் ஆடி மாதத்தில் வாராகி தேவிக்கு ஒரு நவராத்திரி. புரட்டாசி ஐப்பசியில் மிகவும் விரிவாகக் கொண்டாடப்படுகின்ற சரஸ்வதி பூஜை விஜயதசமி உள்ள சாரதா நவராத்திரி. தை மாதத்தில் சியாமளாதேவிக்கு கொண்டாடப்படும் சியாமளா நவராத்திரி. வசந்தகாலமான பங்குனி சித்திரை மாதத்தில் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரிக்கு உரிய வசந்த நவராத்திரி. ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா யுகாதி பண்டிகை நாளில் தொடங்குவது விசேஷம்.
இன்றிலிருந்து ஒன்பது நாட்கள் தினசரி மாலை விளக்கேற்றி வைத்து அம்பாளின் ஸ்தோத்திரங்களைச் சொல்லலாம். குறிப்பாக லட்சுமி சஹஸ்ர நாமத்தையோ லலிதா சகஸ்ரநாமத்தையோ சொல்வது விசேஷமான பலன்களைத் தரும்.
உகாதி அன்று நாம் செய்ய வேண்டிய வேலைகள் .
காலையில் எழுந்து எழுந்து எண்ணெய் குளியல் நீராட வேண்டும்.. வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். கோலம் போட வேண்டும். மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். அதிகாலையில் புத்தாடை அணிந்து கொள்வார்கள்.
மேலும் அன்றைய தினம் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.
பெரும்பாலான கோயில்களில் யுகாதி ஆஸ்தானம் என்று சொல்லி பஞ்சாங்க படணம் அதாவது பஞ்சாங்கம் வாசிப்பார்கள். விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம் குல தெய்வங்களை நினைத்து இன்றைக்கு விசேஷமான படையல் போட வேண்டும். முக்கியமாக போளி புளியோதரை பால் பாயாசம் வைத்து தெய்வங்களுக்கு படையல் செய்து ஆரத்தி எடுக்க வேண்டும்.உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இதனால், இப் பச்சடியில் இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு போன்ற சுவைகள் கலந்துள்ளன. இது, வருகிற புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது.
சிலர் ஜோதிடரை வீட்டிற்கு வரவழைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு வருட காலம் எப்படி இருக்கிறது என்று சொல்கின்ற வழக்கமும் சில குடும்பங்களில் உண்டு. இந் நாளில் தனித்துவமான உகாதி பச்சடி செய்து விருந்தில் பரிமாறுவார்கள்.
