வேதம் அனாதியானது. சதுர் வேதம் என்பதற்கேற்ப வேதத்தை வியாசபகவான் நான்காகப் பிரித்து, ரிக் வேதத்தை பைலவ மகரிஷிக்கும், சாம வேதத்தை ஜெய்மினி ரிஷிக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும் , அதர்வண வேதத்தை சுமந்து மகரிஷிக்கும் கற்பித்தார்.
அவரவர்கள் தங்கள் சிஷ்யர்களுக்கு கற்பித்து வேதத்தை உலகத்தில் நிலை நிறுத்துவதற்கு முயன்றார்கள். வேதத்தை எல்லோரும் புரிந்துகொள்ள முடியாது.அதில் சில நுணுக்கம் இருப்பதால் , சில குழப்பமான பொருள் மயக்கங்களும் ஏற்படும்.
வேதத்தின் உட்பொருளை அறிவது என்பது, ஞானிகளுக்குக் கூட சமயத்தில் சிரமம் .அப்படியானால் பாமரர்களுக்கு இதனால் என்ன பயன்?
எனவே வேதத்தின் உட்பொருளை விளக்கும் வண்ணம் இதிகாசங்கள் செய்யப் பட்டன. இதிகாசங்கள் என்றால் இப்படி நடந்தது என்று பொருள் .
வேதத்தின் அர்த்தத்தை அறுதியிடுவது இதிகாச புராணங்களினாலே என்பது ஸ்ரீ வசன பூஷணம் . வேதத்தின் எல்லா உண்மைகளும் புலனாகும் வண்ணம் வேதத்தைத் தொகுத்த வியாசரே மகாபாரதம் என்றொரு வாடாமலரை உலகத் துக்கு தந்தார்.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப் படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.
இதனைத் தமிழில் “வில்லிபாரதம்” என்ற இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார்.

அதிலே இல்லாத தத்துவங்களோ செய்திகளோ இல்லை.ஐந்தாவது வேதம் என்று மகாபாரதம் அழைக்கப்படுகிறது. இதனை வில்லிபுத்தூர் ஆழ்வார்,
நீடாழி உலகத்து மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே
வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.
இப்படி மகாபாரதம் எழுதினாலும் கூட வியாசருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஏதோ ஒரு ஆற்றாமை, உறுத்தல் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் நாரத மகரிஷி வந்தார்.வியாசர் மனக்கவலையோடு இருப்பதைப் புரிந்து கொண்டார். வேதத்தைத் தொகுத்து, அதே சமயத்தில் மகாபாரதத் தையும் எழுதிய உமக்கு ஏன் இத்தனைச் சங்கடம்? என்று கேட்க,” ஏனோ தெரியவில்லை. எனக்கு ஒரு மனக்குறை இருந்து கொண்டே இருக்கிறது” என்று வியாசர் சொன்னார் . அவருடைய மனக்கஷ்டத்தை ஊகித்துக் கொண்ட நாரத மகரிஷி அவருக்கு சில விஷயங்களை எடுத்துச் சொன்னார்.
” வியாசரே, பிறந்த ஒவ்வொரு சாதாரண மனிதனும் இந்தச் சமுதாயத்திற்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும். வேத விற்பன்னரும் அசாதாரணமானவரும் ஆன தாங்கள் இந்த உலகத்திற்காக, செயற்கரிய பல செயல்களைச் செய்திருக்கிறீர்கள். ஆனால் இதுவரை நீங்கள் செய்துள்ள நூல்கள் மனிதர்களுக்கு பல்வேறு விருப்பங்களையும், அதைத் தேடிக் கொண்டு அலையும் கர் மானுஷ்டான நாட்டத்தையும் உண்டாக்கி விட்டன. பகவானிடத்திலே நிர் மலமான பக்தியை ஏற்படுத்த வேண்டுமானால் அவருடைய பல்வேறு குணங் களையும் பெருமைகளையும் சொல்லக் கூடிய காரியத்தைச் செய்ய வேண் டும். பகவானின் பல்வேறு லீலா வினோதங்களையும் சொல்வதாக அந்த நூல் அமைய வேண்டும். அந்த நூலைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் பக்தியில் ருசி பிறக்க வேண்டும். அப்படி பக்தியில் ஈடுபாடு ஏற்பட்டால் தான் மக்களி டத்திலே உண்மையான சந்தோஷமும் அமைதியும் சுபிட்சமும் ஏற்படும். எனவே, வியாசரே, உயர்வுகளில் எல்லா உயர்வுகளையும், செயல்களில் எல்லாச் சிறப்புகளையும், புகழில் எல்லாப் புகழினையும், பொருள்களில் எல்லாப் பொருள்களையும் உடைய அந்த பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பல் வேறு நலன்களை வளர்க்கும், ஸ்ரீமத் பாகவதத்தை தாங்கள் இயற்ற வேண்டும். அதன் மூலமாக இந்த உலகம் நன்மை பெறும். நீங்களும் மன அமைதியை அடையலாம்” என்று சொன்னவுடன் வியாசருக்கு மனம் தெளிவடைந்தது. அதன் பின் உலக மக்களுக்காக அவர் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாட ஆரம்பித்தார்.
