சோழநாட்டிலே வரிஞ்சை என்னும் ஊரிலே பிறந்தவர் சக்தி நாயனார். வேளாண்மைத் தொழில் செய்தவர். எப்பொழுதும் சிவ சிந்தனையோடு இருப்பவர். அவருடைய வழக்கம் சற்று வித்தியாசமானது. அவருடைய எதிரில் யாராவது சிவத்துரோகம் செய்தாலும், சிவ அபசாரம் செய்தாலும் சற்றும் பொறுத்துக்கொள்ள மாட்டார் சிவனை இகழ்ந்து பேசினாலும் உடனடியாக அவரைக் கண்டிப்பார் . தண்டிப்பார். இதற்கான காரணத்தைக் கேட்ட பொழுது அவர் சொன்னார்.
“சிவ அபசாரம் ஒருவனை நரகத்தில் தள்ளும். இப்பொழுதே தண்டனையைப் பெறுவது நல்லது இல்லாவிட்டால் அவர்கள் மிகப் பெரிய ஆன்ம நாசத்திற்கு ஆளாகி, நரகத்தில் மீட்டெடுக்க முடியாமல் உழல்வார்கள்” என்பார்.
“ஒருவகையில் தண்டனை அவர்களுக்கு நல்லதுதான்” என்பார்.அதனால் அவர் முன்னாலே சிவனைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு அனைவரும் அஞ்சுவார்கள்.
அவர் தம்முடைய செல்வம், நேரம், உடல் உழைப்பு இவற்றால் முழு நேரம், சைவ சமய வளர்ச்சிக்கு தொண்டு புரிந்தார். எந்த சிவனடியார்களைக் கண்டாலும் அவர்களை அழைத்து வந்து அவர்க ளுக்குப் பாதபூஜை செய்து அன்னமிட்டு ஆதரித்து வந்தார். சிவன் கோயில்களுக்குத் தேவையான பல தொண்டுகளைத் புரிந்தார். நிறைவாக அவர் பிறந்த ஊரிலேயே சிவபதம் அடைந்தார். அவர் சிவபதம் அடைந்த தினம் ஐப்பசி பூசம் குருபூஜை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
“கழல்சத்தி வரிஞ்சையார் கோன் அடியார்க்கும் அடியேன்” என்று அவருடைய பெருமையை சுந்தரர் போற்றுகின்றார் .அவர் வாழ்வை சுருக்கமாகச் சொல்லும் பாடல் இது.
விரிதருகா விரிநாட்டு வரிஞ்சை யூர்வாழ்
வேளாளர் சத்தியார் விமலர் பாதத்
துரியவர்க ளடிபரவு மொருமை யார்நா
வோவாமே யைந்தெழுத்து முரைக்கு நீரா
ரிருளின்மிட றுடையபிரா னடியார் தம்மை
யிகழ்வார்நாத் தண்டாயத் திடுக்கி வாங்கி
யரியுமது திருத்தொழிலா வுடையார் மன்று
ளாடியசே வடிநீழ லடைந்து ளாரே.
பொருள்:சோழநாட்டிலே, வரிஞ்சியூரிலே, வேளாளர் குலத்திலே, சத்திநாயனார் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடித்தாமரைகளைச் சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்தார். அவர் சிவனடியார்களை இகழ்ந்து பேசுபவர்களை தண்டித்தார்., நெடுங்காலம் பல தொண்டுகள் அன்பினோடு செய்துகொண்டிருந்து, சிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.
