இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை வருவது மிக மிகச் சிறப்பு காரணம், சனிக்கு உரிய ராசியில், சூரியனுக்குரிய உத்திராட நட்சத்தி ரமும், சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரமும் கலந்த நிலையில் ஸ்திரவாரமான சனிக்கிழமை மகா சிவராத்திரி வருவது இந்த ஆண்டுக் குரிய விசேஷம். திரயோதசி திதி சனிக்கிழமை வந்தால் அதனை சனி பிரதோஷம் என்று சொல்வார்கள். அந்த அமைப்பும் இந்த ஆண்டு வருகிறது.

சைவர்களுக்கு பிரதோஷ நாள் எத்தனைச் சிறப்போ,அத்தனைச் சிறப்பு வைணவர்களுக்கு பிரதோஷ நாள். இந்த பிரதோஷ நாளில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்குவதன் மூலமாக சகல நன்மைகளையும் பெறலாம்.
சனி பிரதோஷம் அன்று மாலை நேரத்தில், சிவன் கோயிலுக்கு செல்வதும், அங்கே நந்தி பகவானின் அபிஷேகத்தைத் தரிசிப்பதும், சிவன் கோயில் பிராகாரத்தை வலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும். சனிக்கிழமை பிரதோஷ விரதம் என்பது மற்ற நாளில் வரும் பிர தோஷத்தை விட ஆயிரம் மடங்கு சிறப்பு வாய்ந்தது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அதே நேரத்தில் சிவராத்திரியும் வருகின்றது.
மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம்.சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும் பிப்ரவரி 18ஆம் தேதி சனிக்கிழமை இரவு, 08.02 மணிக்கு சிவராத்திரி தொடங்குகிறது. மறுநாள் பிப்ரவரி 19, ஞாயிறு, மாலை 04:18 மணிக்கு முடிவடையும்.
இந்த மகா சிவராத்திரி நாளில்தான் உமையம்மையார் சிவபெருமானை மணந்து கொண்டார். தனது இடப்பாகத்தை பார்வதி தேவிக்கு வழங்கினார். பிரளைய காலத்தில் மாசி மாத தேய்பிறை சதுர்த்தி நாளில் இரவெல்லாம் கண் விழித்து நான்கு யாமங்களிலும் சிவனுக்கு பார்வதி பூஜை செய்தாள் . லோக மாதாவாகிய பார்வதி தேவி சிவனுக்கு பூஜை செய்த ராத்திரி சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.
இந்த சிவராத்திரியில் சூரியன் மறையும் மாலை நேரத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் எழும் காலை நேரம் வரை, யாரெல்லாம் கண் விழித்து சிவனுக்கு பூஜை செய்கிறார்களோ, அவர்களுக்கு அனைத்து பாக்கியங் களும் கிடைக்கும்.
இந்த விரதத்தை சிவராத்திரிக்கு முந்தைய நாளே தொடங்கி விட வேண்டும். அன்று பகல் உணவுக்கு பின் எது\வும் சாப்பிடக்கூடாது. உபவாசம் இருக்க வேண்டும். இரவு சிவபூஜை செய்ய வேண்டும். நமசிவாய மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து நீராடி, ருத்ரம் முதலிய வேத மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். சிவபுராணத்தை ஓத வேண்டும். தேவார திருவாசகப் பாடல்களைப் பாட வேண்டும். அருகாமையில் உள்ள சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட வேண்டும்.
இரவெல்லாம் கண் விழித்து சிவ நாம ஜெபம் செய்து, மறுநாள் அதி காலை நீராடி, பூஜை புனஸ்காரங்களை முடித்து, சிவனுக்குப் படைக்கப் பட்ட நிவேதனங்களை உண்டு, சிவராத்திரி விரதத்தை முடிக்க வேண்டும்.
சிவாலயங்களில் நான்கு யாமங்களிலும் பூஜை நடக்கும். முதல் யாமத்தில் பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் செய்வார்கள் மஞ்சள் நிறப் பட்டாடை அணிவித்து தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வார்கள். பாசிப்பருப்பு பொங்கல் நிவேதிக்கப்படும்.
இரண்டாவது யாமத்தில் பஞ்சாமிர்தாபிஷேகம் நடைபெறும். வெண் பட்டாடை சாத்தி சந்தனக் காப்பு செய்வார்கள். பாயசத்தை நிவேதனம் செய்வார்கள்.
மூன்றாவது யாமத்தில் தேன் அபிஷேகம் செய்து,சிவப்பு ஆடை சாத்தி, வில்வம் மல்லிகையாலும் அர்ச்சனை செய்வர் . எள் சாதம் நிவேதனம் செய்வார்கள்.
நான்காம் யானத்தில் கரும்புச்சாற்றில் அபிஷேகம் நடத்தி நத்தையா வட்டை பூவால் அர்ச்சனை செய்து சுத்த அன்னத்தை நிவேதனம் செய் வார்கள்.
அன்று பல சிவன் கோயில்களில் நாட்டியாஞ்சலி விழா நடைபெறும். காரணம் மகா சிவராத்திரி பார்வதி தேவியுடன் சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடிய நாள்.
