நீங்கள் பெருமாள் கோவிலுக்குப் போகிறீர்கள்.. அங்கே தீர்த் தமும், துளசியும், பிரசாதமாகத் தருவார்கள். அதற்குப் பிறகு எல் லோருடைய தலையிலும் பெருமாள் திருவடிக்கு அருகில் வைக் கப்பட்டிருக்கும் சடாரியை தலையில் வைப்பார்கள். இரண்டு கைகளையும் கூப்பி, சற்று குனிந்து, அந்தச் சடாரியை தலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். தலையெழுத்தை மாற்றும் சக்தி சடாரிக்கு உண்டு.
நாம் எம்பெருமான் திருவடிகளில் சரணடைகின்றோம். சரண டைதல் என்றால் நம்முடைய தலையும் அவருடைய திருவடியும் பொருந்துகின்றன என்று பொருள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொருவரும் பெருமாளின் திருவடிகளில் சென்று தலையைப் பொருத்துகின்ற வாய்ப்பு இல்லை.
ஆனால், அவனுடைய திருவடி நிலைகளான பாதுகைகளை சடாரியாக மாற்றி, பெருமாளின் திருவடித் தொடர்பு பெற்ற பாதுகைகளை அதாவது சடாரியை, நம் ஒவ்வொருவர் தலையின் மீது வைப்பதன் மூலமாக, பெருமாளின் திருவடிகள் நம் தலை யில் பட்டு ,நம்முடைய பாவங்கள் அகன்றதாக நாம் கருதுகின் றோம்.
அடுத்த முறை பெருமாள் கோயிலுக்குச் சென்று, சடாரியை உங்கள் சிரசில் வாங்குவதற்கு முன், அதனுடைய பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை..
ஸ்வாமி வேதாந்த தேசிகர் “பாதுகா சகஸ்ரம்” என்றொரு அற்புதமான நூலை இயற்றியுள்ளார். ஸ்ரீ ரங்கநாதரின் திருவடிப் பாதுகைகளின் பெருமையைப் பேசும் அற்புதமான இந்த நூல், அவருக்கு கவிதார்க்கிக சிம்மம் என்ற விருதினைப் பெற்றுத் தந்தது.
ஒரே நாள் இரவிலே எழுதப்பட்ட அந்த அற்புதமான நூலில் சொல்லப்பட்ட கருத்துக்கள்,ஸ்ரீ பாதுகைகளின் பெருமையை மட்டும் அல்லாது, ஸ்ரீ வைஷ் ணவ சமயத்தின் பெருமையையும், நமக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிய வைக்கும் .
பாதுகைகள் பகவானின் திருவடிகளைச் சுமக்கின்றன. அந்தப் பாதுகைகளை நாம் தலையாலே சுமக்கின்றோம். ஸ்ரீ வைஷ்ணவர்கள் தம்முடைய நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருமண் காப்பு இந்த பாதுகைகளையே குறிக்கிறது.

பெருமாளின் திருவடித் தாமரைகளில் பொருந்திய பாதுகைகளை திருமண் காப்பாக மட்டுமல்ல, ஸ்ரீ ச டாரியாகவும் அணிகின்றோம்.
சரணாகதி மார்க்கமாகிய பிரபத்தி மார்க்கத்தை, சுவாமி நம்மாழ்வார் வலி யுறுத்துவார். “புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக் கீழ அமர்ந்து புகுந்தேனே” என்பது அவர் காட்டும் சரணாகதி மார்க்கம். வேதத்தின் விளக்கமாகத் திருவாய்மொழியை நமக்கு அருளிய ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ ரங்க நாதரின் திவ்ய மணிப்பாதுகையாக அவதரித்தார். மறுபடியும் ஸ்ரீ பாதுகைகளே ஸ்ரீ ராமானுஜராகவும் அவதரித்தன. இதை சுவாமி மணவாள மாமுனிகள்
பூமகள்கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்
தாமகிழுஞ்செல்வச் சடகோபர் – தேமலர்த்தாட்கு
ஏய்ந்தினிய பாதுகமாம் எந்தை யிராமாநுசனை
வாய்ந்தெனது நெஞ்சமே வாழ்.
என்று பாடுகின்றார்.
சரணாகதி மிக எளிதானது.அதேசமயம் மிக உயர்வானது. பக்தி உடைய அடி யவர்களுக்கு எளியவனான எம்பெருமானின் திருவடிகளுக்கு தினசரி கைங் கரியம் செய்யும் பாதுகைகள், சரணாகதர்கள் பற்றிக் கொள்வதற்கு எளிமை யான சாதனமாக விளங்குகின்றன.
ஒருவருடைய கர்ம வினைகள் அவரவர் தலை எழுத்தாக பொறிக்கப் பட்டிருக்கின்றன. அதை மாற்றவோ நீக்கவோ ஒருவருக்கும் உரிமை இல்லை. ஆனாலும், ஸ்ரீ ரங்கநாதனின் திருப்பாதுகைகளை, எந்த பக்தன் தன் தலைமேல் ஏற்றுக்கொள்கின்றானோ, அந்த பக்தனின் தலைமேல் இந்த சடாரி(பாதுகை) பட்டதும், அவர்கள் தலையெழுத்துக்கள் ரசவாதம் செய்தது போல் மாறிவிடுகின்றன.
பாதுகா சஹஸ்ரத்தின் ஒரு சுலோகத்திலே ஸ்ரீ தேசிகன் , குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவை பாதுகையோடு ஒப்புமைப்படுத்திப் பாடுகிறார் .
ஸ்ரீ ராமபிரானின் பாதுகைகள் ராமபிரானுடைய கால்களால் மிதிக்கப்பட்டு இருந்தது .ஆனால் தகுந்த காலத்தில் அது ராமனிடம் அரசையே பெற்று விட்டது .ஆம்; ராமன் ஆள வேண்டிய அரசை ,அவனுடைய பாதுகைகள் அன்றோ ஆண்டன! பாதுகைகளை போலவே ஒரு சீடனும் இருந்தால், தகுந்த சமயத்தில் குருவின் ஆசியினால் உலகத்தையே வென்று விடலாம்.
அகல்யா சாப விமோசனம் ராமாயணத்தில் வரும் ஒரு அற்புதமான, உயிர் துடிப்பான நிகழ்ச்சி. முனிவரின் சாபத்தால் கல்லாய்ப் போனாள் அகலிகை. பகவானின் பாதுகையின் துகள் பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்றாள். பாதுகைகளில் ஒட்டி இருந்த பாத தூசி, அகலிகையைக் காத்தது. அப்படிப்பட்ட அந்தப் பாதுகைகளின் தூசுகள் நம்மை மட்டும் காக்காதா என்ன? என்று ஸ்ரீ வேதாந்த தேசிகர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் .
தசரதர் என்ன நினைத்தார்? ராமனுக்கு முடிசூட்ட நாள் குறித்தார். கைகேயியோ பரதன் நாட்டை ஆள வரம் கேட்டாள் . சத்தியத்தை நிலை நாட்ட எண்ணம் கொண்ட தசரதன், வரங்களைத் தந்தான். ஆனால் இருவர் நினைத்ததும் நடக்கவில்லை.
பரதன் காட்டிலே சென்று ராமனை நாடு திரும்ப வேண்டுகின்றான். அவன் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு மன்றாடுகின்றான். ஆனால் பரதனை ராமனின் திருவடிகள் காக்கவில்லை. அந்த ராமன் அணிந்த திருவடி நிலைகளான பாதுகைகள் காத்தன. பரதனைக் காத்த அந்த திருவடி நிலை களை தன் தலைமேல் வைத்து பரதன் கொண்டாடுகின்றான். காரணம் பரதனின் விருப்பத்தை நிறைவேற்றியது ராமன் அல்ல, ராமனின் பாதுகைகள். அதனால் பரதன் அதனை முடி மீது சூடிக் கொள்கிறான்.
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவை என முறையில் சூடினான்
என்பது கம்பர் வாக்கு .
ராமனின் தலையில் அமர வேண்டிய மகுடம், அவன் பாதுகைகள் மீது அமர்கிறது. எது அதிக மதிப்போ, அந்தப் பொருளைத்தான் நாம் பணயமாக வைப்போம். ராமன் அதிகப் பெருமையை ஸ்ரீ பாதுகைகளுக்கு தர எண்ணினா ன். அதனை தனக்குச் சமமாக பரதனோடு அனுப்புகிறான்.
ஆனால், பகவானை பிரிந்து பரதனோடு செல்லும் பாதுகைகளின் மனம் எப்படி இருந்தது என்பதை வேதாந்த தேசிகரைத் தவிர வேறு யாரும் சொல்ல முடியாது.
எம்பெருமான் இராமனின் திருவடிகளுக்குச் செய்யும் கைங்கரியத்தை விட, பரம பாகவதனான பரதாழ்வான் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது சிறந்தது என்று எண்ணி அந்தப் பாதுகைகளை பரதனோடு சந்தோஷமாகச் சென்றதாம்.
ஸ்ரீ ராம பாதுகா பிரபா வத்தை முதலில் அறிந்தவன் பரதன் .
ஒரு பக்தனுக்காக பகவானிடம் தகவுரை செய்பவள் பிராட்டி. இதனை வைண வத்தில் “புருஷகாரம்” என்று கொண்டாடுவார்கள். பகவானின் திருவடிகளை தஞ்சம் என அடையும் பக்தர்களுக்கு பிராட்டியின் நிலையிலிருந்து புருஷகாரம் செய்வது பாதுகைகள் அதாவது பகவானின் திருவடி நிலைகள்.
பக்தனை பகவானிடம் சேர்ப்பது, பல்வேறு மங்கலங்களைக் கொடுப்பது, அஞ்ஞானத்தை விலக்கி ஞானச் சுடர் விளக்கு ஏற்றி வைப்பது, எதிரிகளை இல்லாமல் ஆக்குவது என இத்தனை நன்மைகளையும் செய்யும் ஸ்ரீ பாது கைகளை மற்றொரு சுலோகத்தில் ஏற்றிப் போற்றுகின்றார் ஸ்ரீ தேசிகன்.
பிறவிப் பெருங்கடல் என்பது மிகப்பெரிய சமுத்திரம் .அதனைக் கடக்க வழி இல்லாமல் உயிர்கள் தவிக்கின்றன. அந்தப் பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கு ஏதேனும் ஒரு பிடிமானம் வேண்டும் அல்லவா. அந்த பிடிமானம் தான் இறைவனின் திருப்பாதுகைகள்.
ஒருவருக்கு நாளும் கோளும் பாதுகைகள் தான். பாதுகைகள் தான் சூரிய மண்டலத்திலே துலங்கும் செவ்வாய், சுக்கிரன், சனி, குரு முதலிய கோள்களாக விளங்குகின்றன. ஸ்ரீ பாதுகைகளை ஒருவன் பற்றி விட்டால், நவகிரக தோஷங்கள் எதுவாக இருந்தாலும், நிவர்த்தி ஆகிவிடும். அதனால் ஜாதக தோஷங்களுக்கு ஸ்ரீ பாதுகா சகஸ்ரத்திலிருந்து சில சுலோகங்களை தினசரி பாராயணம் செய்யச் சொல்லும் வழக்கமும் இருக்கிறது.
மரண பயம் என்பது நரக வேதனை. அந்தக் காலம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நாள் வரத்தான் போகிறது. அதோ காலன் வந்து விட்டான்.” சீக்கிரம் சீக்கிரம்” என, அவன் நம்மை அவசரப்படுத்துவான். நம்மைச் சுற்றி அமர்ந்து உறவினர்கள் அழும் ஓசை ஒரு பக்கம்.” புறப்படு சீக்கிரம்” என்று எம படர்கள் அதட்டும் அதட்டல் ஒரு பக்கம்.
அந்த நிலையில் அதோ ஒரு மெல்லிய சப்தம் கேட்கிறதே ,அந்த மெல்லிய சதங்கை ஒலி நம் காதிலே விழுந்து மரண பயத்திலிருந்து விடுவிக்கிறதே அந்த ஒலிதான் ஸ்ரீ ரங்கநாதனின் பாதுகை ஒலி.
ஒரு அரசு நல்லாட்சியாக நடந்தால் அதற்கு ராம ராஜ்ஜியம் என்று பெயர் சூட்டி அழைப்பது வைதீக மரபு. ஆனால் 14 ஆண்டுகள் ராமனின் பாதுகைகள் ஆட்சி செய்தன. அந்த ஆட்சி, ராமனின் ஆட்சியை விட ஒரு படி மேலே இருந்ததாகப் பெரியவர்கள் சொல்லுவார்கள்.
ஸ்ரீ பாதுகா ராஜ்ஜியத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். சிறு பிள்ளைகள் வியாதியால் துன்பப்படவில்லை. வயதானவர்கள் சந்தோஷமாக இருந் தார்கள். இயற்கை கொடுமைகள் எதுவும் நடக்கவில்லை. வானம் மும்மாரி பெய்து, பூமி நனைந்து பயிர்கள் செழித்தன. பெரும் பசுக்கள் பாலைப் பொழிந்து பால் வளத்தை அதிகப்படுத்தின. இவையெல்லாம் ஸ்ரீ பாதுகா பிரபாவங்கள்.
ஸ்ரீ வேதாந்த தேசிகன் பலப் பலவாக ஸ்ரீ பாதுகைகளின் பெருமைகளை, கற்பனை நயத்தோடும், தத்துவார்த்தத்தோடும், வெகுலாக லாவகமாகப் பாடுகின்றார் .அதுவும் ஆயிரம் சுலோகங்களில். அதில் சில சுலோகங்களையாவது வாசித்துப் பழக வேண்டும். அப்படிப்பட்ட உணர்வை நிச்சயம் தூண்டும் நூல் தான் பாதுகா சகஸ்ரம் என்கின்ற அற்புதமான நூல்.
அடுத்த முறை, பெருமாள் கோயிலில் சடாரி வாங்கும் போது, இதில் சில விஷயங்களாவது உங்களுக்கு நினைவுக்கு வர வேண்டும்.
