(c) S.Gokulachari
கேள்வி:சுப நாட்களை தேர்ந்தெடுப்பது எப்படி ?
பதில்: “ஆள் செய்யாததை நாள் செய்யும்” என்பார்கள்.சுப காரியங்களைச் செய்வதற்கு நாள் முக்கியம் ஒரு நல்ல நாள், எப்படித் தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கு பல விதமான விதிமுறைகள் இருக்கின்றன. முதலில் எந்த காரியத்திற்கு, எப்படிப்பட்ட நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்ற விதிகளை பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயத்திற்கு ஒருவிதமான நாள்கள், திருமணத்திற்கு ஒரு விதமான நாள்கள், பள்ளிக்கூடத்தில் குழந்\தைகளைச் சேர்ப்பதற்கு ஒரு விதமான நாள்கள், கடன் கொடுப்பதற்கு ஒரு விதமான நாள்கள், மருந்து உண்பதற்கு ஒருவிதமான நாள்கள் என இப்படி பல்வேறு காரணங்களுக்கு பல்வேறு விதமான நாள்கள் இருக்கின்றன. நாம் எந்த காரியத்திற்கு நாள்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? யாருக்காக நாள்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதெல்லாம் அனுசரித்துத்தான் நாள்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
கேள்வி:பொதுவான நாள்களைத் தேர்ந்தெடுக்க முடியுமா?
பதில்: எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள். பஞ்சாங்கம் அல்லது காலண்டரைப் பார்த்து பொதுவான சுப தினத்தை, தங்களுக்குரிய சுப தினமாகக் கருதி தேர்ந்தெடுத்து விடுகிறார்கள் .ஆனால் ஒருவருக்கு உரிய சுபதினம், இன்னொருவருக்கு பொருந்தாமல் இருக்கும் என்பதை கருத்தில் கொள்வது கிடையாது. உண்மையில் ஜாதகபலன் சொல்வதைவிட, முகூர்த்த லக்னம் அல்லது ஒரு நல்ல காரியத்திற்கு மிகத்துல்லியமாக நாள் குறிப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஆனால் இதில் உள்ள விஷயங்களை விட்டுவிட்டு, நாம் எளிதாக காலண்டரைப் பார்த்து நாள் குறித்து விடுகின்றோம். உதா ரணமாக பூச நட்சத்திரம் முகூர்த்த லக்னமாக வைக்கிறோம். பூச நட்சத்திரம் நல்ல நட்சத்திரம் தான். ஆனால் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரகாரர்களுக்கு இந்த பூச நட்சத்திர முகூர்த்தநாள் பொருந்தாது. காரணம் அன்றைக்கு அவர் களுக்கு தாராபலம் இல்லை. இப்படி பல விஷயங்களை பார்த்து தான் நாள் வைக்க வேண்டும். எனவே நாள் வைப்பது என்பது மிகச் சிறந்த கலை. நாம் பிறந்த லக்னமும் ராசியும் நட்சத்திரமும் நம் வசம் இல்லை. ஆனால் ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்ற வாய்ப்பு நமக் குக் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது .ஒரு விஷயம் வெற்றி யடைவதற்கு அதனுடைய துவக்கம் சரியானதாக இருக்கவேண்டும்.
கேள்வி: எல்லாம் பொருந்துவது போல அவ்வளவு துல்லியமாக நாளை குறித்து விட முடியுமா?
பதில்: நிச்சயமாக அப்படி ஒருநாள் அமைவது கடினம். மிக அதிகமான நன்மைகளையும் குறைவான தோஷங்களையும் வைத்துத்தான் நாள் குறிக்க முடியும். சில விஷயங்கள் பிரதானமாக இருக்கின்றன. உதார ணமாக முகூர்த்த லக்னம், கிரகநிலை, முகூர்த்த நட்சத்திரம்,ஹோரை முதலிய விஷயங்கள், நாள் வைப்பதில் முக்கியப் பங்கு ஆற்றுகின்றன. இதையும் மீறி நம்மை அறியாத பல தோஷங்கள் இருக்கும் என்பதால் மந்திரப் பூர்வமாக நாம் ஒரு சுலோகத்தைச் சொல்லி நிகழ்ச்சி துவங் குகிறோம்.
ததேவ லக்னம் சுதினம் ததேவ
தாராபலம் சந்திரபலம் ததேவ
வித்யா பலம் தைவ பலம் ததேவ
லட்சுமிபதேங்கிரி யுகலம் ஸ்மாராமி
இதற்கு என்ன அர்த்தம்? இன்றைய தினம் நல்ல தினமாக இருக்கட்டும். இன்றைய நாள், தாராபலம் மிகுந்த நாளாக இருக்கட்டும். இன்று சந்திர பலம் கிடைக்கட்டும். நல்ல லக்கினமாக அமையட்டும். படித்த வித் தையும் தெய்வத்தின் அருளும் துணை புரியட்டும். அதற்காக நான் லட்சுமி பதியாகிய நாராயணனை வணங்குகின்றேன் என்பது இந்த மந்திரத்திற்கு பொருள்.
நாம் முழுமையாக ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுக்க முடியாது என் பதினால், தேர்ந்தெடுத்த நாளின் தோஷத்தை நீக்கிக் கொள்வதற்காக இப் படிப்பட்ட பிரார்த்தனையை செய்கிறோம். இரண்டாவதாக எந்த காரியத் தைத் தொடங்குவதற்கு முன் பல தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் பெரும்பாலும் பிள்ளையார் பூஜையைச் செய்து விக் னங்களை தடுத்துக் கொள்ளுகின்றோம். வைணவர்களும் இதே பூஜையை விஷ்வக்சேனர் ஆராதனமாகச் செய்வார்கள். அதிலேயும் “நான் செய்கின்ற இந்த செயலில் இருக்கக் கூடிய தடைகளை நீக்கி, நீ அருள்வாயாக” என்று நாம் ஒரு பிரார்த்தனையை வைப்போம்.
கேள்வி: நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்தாலும் அன்றைக்கு திருமண மண்டபங்கள் முதலிய வசதிகள் கிடைப்பது இல்லையே?
பதில்: இங்கேதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. நமக்கு நாள் முக்கியமா? மண்டபம் முக்கியமா என்கின்ற கேள்வி வருகின்ற பொழுது, மண்டபத்துக்கு ஏற்ற நாள் என்று போய்விடுகிறது. அப்படியானால் அந்த நாள் பல விதமான தோஷங்கள் உடைய நாளாகத்தான் இருக்கிறது. நாள் குறிப்பதற்கான அவகாசம் கிடைப்பதில்லை.
ஒருமுறை நான் சொன்னேன்.
திருமணத்தை நீங்கள் , மணமக்களுக்கு ஏற்ற நல்ல நாளிலே, ஏதாவது ஒரு இடத்தில் குறைந்த நபர்களோடு நடத்திக்கொள்ளுங்கள். பிறகு ஒரு நாள் விரிவாக ஆடம்பரமாக நீங்கள் விரும்பும் வண்ணம் வரவேற்பை வைத்துக் கொள்ளலாமே என்று சொன்னேன். ஆனால் அது நடை முறையில் சரியாக வராது என்றார்கள். இரண்டு முறை மெனக்கிடுவது வீண் என்று விட்டுவிடுகிறார்கள்.
அக்காலத்தில் அவரவர்கள் வீடுகளில் பந்தல் போட்டு அல்லது தெரிந்த வர்கள் வீடுகளில் திருமணத்தை வைத்துக் கொள்வார்கள் .நிதானமாக நாள் பார்த்து சரியாக முகூர்த்தத்தைத் தேர்ந்து எடுத்து வைப்பார்கள். அதனால் பல விதமான தோஷங்கள் கழிந்து மணமக்கள் நீண்ட வாழ்க்கை வாழ்ந்தததையும் பார்க்கிறோம்.
எத்தனை தோஷ ஜாதகமாக இருந்தாலும் ஒரு துல்லியமான லக்னத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது நீடித்து நிற்கும் என்று நாம் சாத்திரங் களில் படித்திருக்கிறோம்.
ஆதிகால ஜோதிடம் என்பது தனி நபர்களுக்கான பலன்களைப் பற்றி கவலைப்படாமல், நாள், முகூர்த்த லக்னம் வைப்பதில்தான் அதிக கவனம் செலுத்தியது. ஆனால், இப்போது அது மாறுபட்டு, தனி நபர்களுக்கான பலாபலன்கள்தான் அதிகம் அலசப்படுகின்றன.
கேள்வி: நல்லநேரம் வைப்பதில் பலவிதமான குழப்பங்கள் நிகழ்கின்றனவே! நாள் வைப்பதில் அவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?
பதில்: நிச்சயம் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக மகாபாரதத்தைப் படித்திருக்கலாம். அதிலே குருஷேத்திரப் போர் நடை பெறுகிறது. ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடிய பெரும் போர். ஆனாலும் அதில் யாராவது ஒருவர் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி பெறுபவர் இந்த போரை சரியான தினத்தில் ஆரம்பித்தால்தான் வெற்றி கிடைக்கும்.
துரியோதனன் இதற்கு தகுதியான நாளை குறிக்க வேண்டும் என்று நினைக்கின்றான்.அவனிடம் இல்லாத மந்திரிகளா?நிபுணர்களா? புரோகிதர் களா ? பீஷ்ம பிதாமக,துரோண கிருபர் என பல நிபுணர்கள். அவர்கள் நல்ல சுப முகூர்த்தத்தை வைத்து கொடுக்கலாமே. ஆனால் என்ன நடக் கிறது என்று ஒரு குறிப்பு மகாபாரதத்தில் இருக்கிறது.
மிகத்துல்லியமான, தகுதியான, ஜோதிடரிடம் சென்று நாளை குறித்துக் கொண்டு வரவேண்டும் என்று துரியோதனன் நினைக்கின்றான். அப்படித் துல்லியமாக குறித்து கொடுக்கக்கூடிய ஆற்றல் படைத்தவன் பாண்டவர் பக்கத்தில் இருக்கக்கூடிய சகாதேவன் என்பதையும் அவன் தெரிந்து கொள் கின்றான்.
எதிரியாக இருந்தாலும் கூட சகாதேவனிடத்திலேயே போய் நாள் குறிக்கக் கேட்கிறான். தன்னையும்,தன்னைச் சார்ந்தவர்களையும் கொல்வதற்கு ஒரு நாளைக் குறித்து கேட்கிறானே என்று சகாதேவன் நினைக் கவில்லை. தன்னிடம் வந்து, தன்னுடைய கலையை மதித்து, நாள் கேட் கிறானே என்பதற்காக, தன்னுடைய மனச்சான்றின் பிரகாரமும், தான் கற்ற ஜோதிடக் கலையில் பிரகாரமும் ஒரு துல்லியமான நாளை துரியோத னனுக்கு குறித்துக் கொடுக்கிறான்.
சகாதேவன் நினைத்திருந்தால், அவன் தோல்வி அடையக் கூடிய ஒரு நாளையும் குறித்துக் கொடுத்திருக்கலாம். அது துரியோதனனுக்குத் தெரியப்போவதில்லை. ஆனால் மிகச்சிறந்த நாளையே சகாதேவன் குறித்துக் கொடுக்கிறான்.
ஆக இங்கே ஜோதிடக்கலை மிக சீரிய கலையாக மதிக்கப்பட்டது. ஒரு நல்ல நேரம் என்பது தகுதியானவர்களிடம் கேட்டு பெற வேண்டும் என் பதும் இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.
கேள்வி:திருமண நாளைக் குறிக்கும் பொழுது மணப் பெண் ணுக்கு உரிய நாள் இருக்க வேண்டுமா? கணவனுக்குரிய நாளை குறிக்க வேண்டுமா?
பதில்: பொதுவாக இருவர் நட்சத்திரத்திற்கும் உரிய நாள் தான் மிகச்சிறந்த நாள். ஆனால் அப்படிப்பட்ட நாள்கள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் ஒரு நல்ல நாள் என்பது பெண் நட்சத்திரத்துக்கு உரியதாகத் தான் முதன்மையாகப் பார்க்கப்பட வேண்டும் என்று சாஸ் திரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது .அதைப்போலவே கிரகப்பிரவேசம் செய்கின்ற போது, வீட்டினுடைய தலைவிக்கு உரிய நட்சத்திரத்தின் படி தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் அப்படி இல்லாது ஆணின் நட்சத்திரத்தை வைத்து நாளை தேர்ந்தெடுத்து விடுகின்றார்கள்.”இல்லாள்” என்பவள் இல்லத்தை ஆள்பவள். அவர்தான் வீட்டுத் தலைவி என்று சொல்லுகின்ற பொழுது, அந்த வீட்டில் முழுமையாக புழங்குவது பெண் தான் என்பதினால் அந்த பெண்ணின் நட்சத்திரத்தை ஒட்டியே நாள் இருக்க வேண்டும்.
