(c) S.Gokulachari
வேங்கடவனைப் பாடினால்
பாவங்கள் பறக்கும்
புண்ணியங்கள் சிறக்கும்’
தொண்டரடிப்பொடியாழ்வார் தவிர எல்லா ஆழ்வார்களும் மங்களா சாசனம் செய்த இடம் திருவேங்கடம். தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கத்தை மட்டும் மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்பார்கள். உண்மைதான். அந்த திருவரங்கநாதனே,திருவேங்கடநாதன்தான் என்பதை திருப்பாணாழ்வார் அழகாகக் காட்டுகின்றார்.
மந்திபாய் வட வேங்கட மாமலை
வானவர் சந்தி செய்ய நின்றான்
திருவேங்கடத் தரவின் அணையான்.
எனவே, பதின்மர் பாடிய பெருமாள் என்பது திருவேங்கடநாதனுக்கும் பொருந்தும்.
நம்மாழ்வார் திருவாய்மொழியை த்வய மந்திரத்தின் சாரம் என்று சொல்வார்கள்.
த்வயம் எனப்படும் மந்திரம்
ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம: .
திருமால் திருவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.
இதன் பொருள்:
பிராட்டியுடன் கூடிய பெருமாளின் உபய திருவடியை உபாயமாகப் பற்றி இருவரின் சேர்த்தியிலே கைங்கரியம் செய்ய வேண்டும்.
அதைத்தான் நம்மாழ்வார் தம்முடைய சரம பிரபந்தமான திருவாய் மொழி யின் சாரமான பாசுரமான இந்தப் பாசுரத்தில் தெரிவிக்கின்றார்.
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா,
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்! என்னை ஆள்வானே,
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
துவய மந்திரத்தின் சுருக்கம் தான் திருமந்திரம் .அந்த திருமந்திரத்தின் நாராயணாய சப்தத்தின் விரிவு தான் பெரிய திருமொழி.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியை அடியொற்றி பாசுரங்களைப் பாடி அருளிச்செயலை நிறைவு செய்தவர் திருமங்கையாழ்வார்.
நம்மாழ்வார், யாரிடத்திலே போய் சரணடையச் சொன்னாரோ, அந்த வேங்கடவனைச் சரணடைய வேண்டும் என்பதற்காகவே, தாம் சரண் அடைவதற்கு முன்னால், தம்முடைய நெஞ்சினை வேகமாக அனுப்பியவர் திருமங்கையாழ்வார் .
பெரிய திருவொழியில் முதல் பத்து,எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, திருமொழியிலும் இரண்டாம் பத்து முதல் திருமொழியிலும் இதை அழுத் தமாகத் தெரிவிக்கின்றார் திருமங்கை ஆழ்வார்.
கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
என்று பாடி அருளிச் செய்திருக்கிறார்.
திருவேங்கடம் முதல் பதிகத்தில் தான் போவதற்கு முன் தன்னுடைய நெஞ்சை அனுப்புகின்றார். நம்மாழ்வார்
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
என்று நம்மாழ்வார் சொன்னார் அல்லவா.
அதை அப்படியே திருமங்கை ஆழ்வார்,
வாச மா மலர்நாறுவார் பொழில்
சூழ் தரும் உலகுக்கு எல்லாம்
தேசமாய் திகழும் மலைத்
திருவேங்கடம் அடை நெஞ்சமே
என்று வழிமொழிகின்றார்.
திருவேங்கடதிற்கு திருமங்கையாழ்வார் செல் வதற்கு முன் அவர் நெஞ் சம் சென்று விட்டது .ஆழ்வாரின் வருகையை அவருடைய நெஞ்சு எம்பெருமானிடம் தெரிவித்துவிட்டது.
அடுத்த பதிகத்தில் இவரே
விண்ணார் நீள் சிகர விரையார் திரு வேங்கடவா
அண்ணா, வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே
என்று கதறுகின்றார்.
காரணம் அவன் திருவடிகளில் விழுந்து விட்டால் பாவங்கள் பறந்து விடும்.
பொதுவாக சாத்திரங்களில் தூலமான பகுதிகளும் உண்டு. சூட்சுமமான பகுதிகளும் உண்டு.எது பாவம்? எது புண்ணியம்? என்பதற்கு நுட்பமான விளக்கங்கள் உண்டு.
நாம் நல்ல காரியங்களைச் செய்து விட்டால் அதனால் புண்ணியம் கிடைத்துவிடும் என்று நம்புகின்றோம் அது உண்மைதான் .
உதாரணமாக ஒருவன் நிறைய தான தர்மங்களைச் செய்து விட்டான் அதன் புண்ணிய பலனாக பல காலம் சொர்க்க உலகத்தை அனுபவித்து விட்டு மண்ணுலகில் மிகப்பெரிய செல்வந்தனாகப் பிறக்கின்றான்.
இத்தனைச் செல்வங்களோடு பிறந்தாலும், அவன் ஆன்மாவுக்கு நன்மை யான, சத் விஷயமான எம்பெருமானை அறியவில்லை என்று சொன்னால், ஐஸ்வரியங்களோடு வாழும் அவனுடைய வாழ்க்கை கூட பாவ வாழ்க்கை தான்.
அதனால்தான் திருமங்கை ஆழ்வாரே தம்முடைய கீழ்கால வாழ்க்கையை
கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா!
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.
என்று பாடுகின்றார் .
வைணவ சமயத்தைப் பொறுத்தவரை எம்பெருமானை அடைவதற்கு தடையாக இருக்கக்கூடிய எதுவாக இருந்தாலும் அது பாவங்கள் தான் .
அத்தகைய பாவங்கள் போய்விடும் என்பதையே திருவேங்கட பதிகத்தின் இந்தப் பாசுரத்தில் பலச் சுருதியாக வைத்து திருமங்கை ஆழ்வார் பாடு கின்றார்.
கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை,
விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை,
திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன் கலியன்,
பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே
இறைவன் ஏழு உலகக்கும் கண்ணாக விளங்குபவன். ஏழ் என்பது எல்லா உலகம் என்று பொருள் தரும். எல்லா இசையும் ஏழ் இசையில் அடங்கி இருக்கிறது அல்லவா அப்படி எல்லா உலகம் என்பதைத்தான் ஏழ் உலகம் என்று சொல்லுகின்றோம்.ஏழு என்பதன் பெயரடை வடிவம் .
அடுத்து கண்ணைப் போல் காக்கின்றான். கண் என்பதற்கு இடம் என்ற பொருளும் உண்டு .கண்ணன் என்றால் எல்லா இடமும் பரந்து இருப்பவன். கண்ணென்றால் ஒளி என்று ஒரு பொருள் உண்டு .சூரியன் என்று ஒரு பொருள் உண்டு. புருஷ சூக்தத்திலே சூரியனை இறைவனின் கண்ணாக வர்ணிக்கிறார்கள்.
எல்லா உலகுக்கும் சாட்சியாக விளங்குபவன் இறைவன். இங்கே எல்லா உலகத்தையும் கண்ணைக் காப்பது போல் காப்பவன் என்கின்ற பொருள் படும்.
அது மட்டும் இல்லை. நாராயண சப்தத்தின் விரிவும் மிக அழகாக சொல்வதற்கு அடுத்த பதத்தை “உயிராகிய’ என்று போடுகின்றார் .
உடம்பு ஸ்தூலமானது. உயிர் சூட்சுமமானது. உடம்பின் அசைவைக் கொண்டுதான் உயிரை உணர்ந்து கொள்ள முடியும். பிரபஞ்சத்தின் அசைவுகளைக் கொண்டு தான் எம்பெருமானின் இருப்பைத் தெரிந்து கொள்ள முடியும்.
சேதன அசேதனங்களைத் தனக்கு உடலாகக் கொண்டிருப்பவன் இறைவன் என்கின்ற பொருளும் இங்கே வந்துவிடும்.
இதை நம்ஆழ்வார்,
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள்* இவை உண்ட சுரனே.
என்று பாடுகின்றார் .
திருமங்கையாழ்வார் உயிராய வெங் கார்வண்ணனை என்று பாடு கின்றார்.
அடுத்து அவன் மேகம் போன்ற நிறத்தை உடையவன். மேகவண்ணன். கார்மேனி செங்கண் என்று ஆண்டாள் பாடுகிறாள்.
இதற்கு அடுத்தபடியாக விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கட வேதியனை, என்று சொல்கின்றார்.
நித்யசூரிகள் தினம் வந்து துதிக்கக் கூடிய இடமான திருமலையிலே எழுந்திருப்பவன். இங்கே திருமலை என்பதால் துவய மந்திரத்தின் ஸ்ரீ என்ற சப்தத்தின் விளக்கமும் வந்துவிடுகிறது.
நித்யசூரிகள் பரமபதத்தை விட ஒரு படி மேலாக திருவேங்கடத்தை விரும்புவார்கள் .
அவர்கள் வந்து வணங்குகின்ற திருவேங்கடம்,விண்ணில் இல்லை. சத்ய உலகம் போன்ற வேறு உலகங்களில் இல்லை. மனிதர்களாகிய நாம் இருக்கக்கூடிய பூமியிலே இருக்கிறது என்பது சிறப்பு .
அதனால் என் கார்வண்ணன் , எமக்காகவே திருமலையில் வந்து எழுந் தருளியிருப்பவன் என்கிறார்.
நித்யசூரிகள் எம்பெருமானைத் தேடி திருவேங்கட மலைக்கு வருகின் றார்கள். ஆனால் நமக்காக ,பரமபதத்தை விட்டு விட்டு, அர்ச்சாவதாரம் எடுத்து , இந்த பூலகத்துக்கு வந்தான் என்பதை திருமங்கை யாழ்வார் இந்த பாசுரத்திலே தெரிவிக்கின்றார்.
சகல வேதங்களும், அந்த வேதத்தின் பொருளாக, அவனைப் போற்று கின்றன. எம்பெருமானை யார் அறிந்தார்களோ, அவர்கள் வேதியர்கள். பிரம்மத்தை அறிந்தவர்கள் பிராமணர்கள் .
அப்படியானால் வேதத்தின் பிரதிபாத்தியனாய், வேதத்தின் பொருளாய், வேதத்தின் சாரமாய், வேதத்தின் சுவையாய்,பயனாய் அவன் விளங் குவதால் அவனை “வேதியன்” என்கின்ற சொல்லால் திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகின்றார் .
அர்ச்சாவதார எம்பெருமானை பல இடங்களில் அவர் இந்தச் சொல்லால் அழைக்கின்றார்.
திருவல்லிக்கேணி இரண்டாவது பாசுரத்திலும்,
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
என்று குறிப்பிடுவதை இங்கே மனதில் கொள்ள வேண்டும் .
அப்படிப்பட்ட எம்பெருமானை அழகான மாடங்கள் சூழ்ந்த திருவாலி நகரின் திருமங்கை ஆழ்வார் இசை கூடிய பத்து பாசுரங்களால் பாடி இருக்கின்றார்
அந்தப் பத்து பாசுரங்களையும் ஓதுபவர்களுக்கு பாவங்கள் சேராது. இங்கே இரும்புச் சங்கிலியால் கட்டினாலும், பொன் சங்கிலியால் கட்டினாலும் ஒன்றுதான். இந்த இரண்டு சங்கிலிகளிலிருந்தும் இந்த ஆன்மாவை விடுவிக்கக் கூடியவன் திருவேங்கடமலையில் எழுந்திருக்கும் எம்பெரு மான் ஒருவனே.
அந்த அலர்மேல் மங்கை நாயகனிடம் சரணடையச் சொன்ன திருமங்கை மன்னனின் இந்தப் பாசுரம் ஒன்று போதும் ;நம்முடைய பாவங்களை நீக்கிக் கொள்வதற்கு..
காரணம் அவன், திருவேங்கடநாதன். இவரோ திருமங்கை ஆழ்வார்!
