திருக்கோவலூர்-S.Gokulachari

தசாவதாரங்களிலே மிகவும் சிறப்பு பெற்ற அவதாரம் வாமன அவதாரம். சிறியதுதான் பெரியதாகின்றது. அணு தான் அண்டம் ஆகின்றது. சிறியதாக வந்த வாமனன் விண்ணையும் மண்ணையும் அளக்கும் திருவிக்ரமா கிறான்.
இந்த அவதாரத்தில் பகவான் யாரையும் அழிக்கவில்லை .எல்லோரையுமே வாழ வைக்கிறான். அதனால் தான் ஆண்டாளும் கூட இவனைப் போற்றி, ” ஓங்கி உலகளந்த உத்தமன் “என்று பாடுகிறாள் .
கருணைக் கடலான திருவிக்கிரமப் பெருமானைச் சேவிப்பது நம் வாழ் வின் பாக்கியம் அல்லவா. அந்த பாக்கியத்தைப் பெறுவதற்குச் செல்ல வேண்டிய திருத்தலம் திருக்கோவலூர் என்ற திவ்ய தேசம்.
பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், திருக்கோவலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்.
திருக்கோவலூர் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்று. தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் இருக்கும் தலம்.
கிருஷ்ணன் கோவில் என்று பெயர் பெற்ற இந்தத் திருத்தலம் பல சதுர் யுகங்களுக்கு முற்பட்டதாகும். நாரதரும், பிரம்மனும் அகத்தியரும், பரசுராமரும் மற்றும் பலரும் இந்தக் கிருஷ்ண ஷேத்திரத்தில் தவம் செய்து உள்ளனர்.
விழுப்புரம் திருவண்ணாமலை முதலிய நகரங்களில் இருந்து அடிக்கடி பேருந்துகள் உண்டு. புகைவண்டி நிலையமும் உண்டு. பேருந்து நிலையத்தில் இறங்கினால் மிக எளிதாக கோயில் வாசலை அடையலாம்.
கம்பீரமான ராஜகோபுரம். 192 அடி உயரமுடன் பதினொரு நிலைகளோடு உள்ளது. இது தமிழ் நாட்டின் மூன்றாவது உயரமான கோபுரம் ஆகும். இது தவிர கோயிலின் முன்னும் பின்னுமாக இரண்டு கோபுரங்கள் அணி செய்கின்றன. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் நாம் காண் பது கொடிமரம். அதனைக் கடந்தால் திருமங்கை மன்னன் திருப்பணி செய்த கோபுர வாயில். ஒரு பெரிய மண்டபம். பாண்டியன் மண்டபம் என்று சொல்கிறார்கள். மண்டபத்தையும் கடந்து இடது புறமாகச் சென்று திரும்பினால் கருவறை. இந்த விமானத்தை ஸ்ரீகர விமானம் என்று சொல்கிறார்கள்.

துவார பாலகர்களின் அனுமதியோடு நாம் நிற்கிறோம். சுவற்றில் இரண்டு பக்கமும் திருமங்கை மன்னனின் பாசுரங்களை வைத்திருக்கிறார்கள். அற் புதமான பாசுரம்.
கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில்,
சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை
தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,
வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து
வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,
சிந்தனைசெய் திருபொழுது மொன்றும்
செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன்நானே.
இறைவனை இடை விடாது எந்நேரமும் சிந்திக்கும் பேறு பெற்றோர் வாழு கின்ற ஊர் திருக்கோவலூர் என்று திருமங்கையாழ்வார் இங்கே சிறப்பித் துப் பாடுகிறார்.
இறைவனை விட இறைவனை இரவும் பகலும் ஏற்றும் அடியார்கள் பெருமையால் அல்லவா ஒரு திருத்தலத்தின் ஏற்றம் சிறக்கிறது .
திருமங்கை ஆழ்வார் தனியாக ஒரு பத்து பாடலைகளை (பெரிய திருமொழி 2.10) பாடியதோடு, பெரிய திருமொழியிலும் மற்றைய ப்ரபந்தங்களிலும் இன்னும் ஒரு எட்டு பாசுரங்களில் இந்த திவ்யதேசத்தை குறிப்பிட்டுள்ளார்.
திருநெடுந்தாண்டகத்தில், திருமங்கையாழ்வார், “நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த ” என்று சொல்கிறார். அதாவது, தென்பெண்ணை ஆறாகிய பெண்மணி, ஆயனைப் பார்க்கும் மகிழ்ச்சியில், பேரார்வத்துடன் கரையை அழித்து, வரும் வழியில் உள்ள மூங்கில்களை எல்லாம் உடைத்துக்கொண்டு வருகிறாள் என்பதாகும்.
இதைச் சிந்தித்த வண்ணம் கருவறையில் நுழைவோம். நம் கண்களை அப்புறம் இப்புறம் செல்லாவண்ணம் அப்படியே ஈர்த்துவிடுகிறது உல களந்த உத்தமனின் உன்னத நெடிய தோற்றம் .
தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு
சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,
காவடிவின் கற்பகமே போல நின்று
கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,
சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை
செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,
தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
மூலவர் திருவுருவம் அபாரமான தோற்றம். முகத்தில் அற்புத வசீகரம். கிழக்கு நோக்கிய திருமுகம் மண்டலம்.
வலது திருவடி அருகே நான்முகனும் இடது திருவடி அருகே மகாபலி யின் மகன் நமுசி.
பெரிய பிராட்டியார் ,மகாபலி சக்கரவர்த்தி, சுக்கராச்சாரியார், மிருகண்டு முனிவர் முதலாழ்வார்கள் சூழ்ந்து நின்று எம்பெருமானை ஆராதிக் கிறார்கள்.
மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டு சுட்டும் வழக்கை விரல்.
மிருகண்டு மகரிஷியின் உன்னத யோக நிலையால் உலகம் மாந்தர்க்கு கிடைத்த அற்புத தரிசனம் இது.
திவ்ய பிரபந்தத்தை முதல் ஆழ்வார்கள் தொடங்கி வைத்த திருத்தலம். அதனால் இது ஆழ்வார்கள் இன் அருந் தமிழை ஈன்றெடுத்த தலம் ஆகிறது.
எப்படி இங்கே இருந்து ஆழ்வார்களின் அருந்தமிழ் தொடங்குகிறது என்றால் அது ஒரு தனிக் கதை.
ஒரு மழை காலம். பொழுது சாயம் நேரம் .இருட்டு. படபடவென்று மழை.
மழையில் நனைந்து ஓடிவரும் பெரியவர் சட்டென்று ஒரு சிறிய வீட்டில் நுழைகிறார்.அமர்ந்து இளைப்பாறியவர் “படுக்கலாம்” என்று நினைக்கிறார். கதவு தட்டும் சத்தம்.கதவை திறந்து,” வாருங்கள் இந்த ரேழியில் (இடைக் கழி) வந்து இருங்கள்.மழை விட்டுப் போகலாம்” என அழைக்க உள்ளே நுழைகிறார்.
கொஞ்ச நேரத்தில் இன்னொரு பெரியவர் வருகின்றார் .அவரையும் வரவேற்கிறார் .” இந்த இடம் மூவருக்கு நிற்கப் போதுமே” எனச் சொல்ல மூவரும் நிற்கின்றனர். தெய்வத்தின் திருவருளைச் சிந்தித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
திடீரென்று ஒரு இருக்கம். இருட்டில் இனம் புரியவில்லை. அனுமதி இல்லாமல் நான்காவதாக ஒருவர் புகுந்து நெருக்குவதாக உணர்கிறார்கள்.
“யார் அவர்?”
ஒரு விளக்கு இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்குமே என்று நினைக்க, முதலாமவர் ஒரு விளக்கு ஏற்றுகின்றார்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரவன் விளக்காக செய்யச்
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று
இந்த விளக்கினால் வந்தவர் யார் என்று கொஞ்சம் புரிய, இன்னொரு விளக்கு ஏற்றுகின்றார் இரண்டாவது ஆழ்வார் .அது ஞானத்தமிழ் விளக்கு.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி
ஞானசுடர் விளக்கு ஏற்றினேன் நாரணனுக்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்
ஆகா.. இப்போது வெளிச்சம் வந்து விட்டது. மாலவன் மார்பிலே உறையும் மகாலட்சுமி தெரிகிறார். மூன்றாவது ஆழ்வார் அந்தக் காட்சியை வர்ணிக்கிறார்.
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கண் அணி நிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கை கண்டேன்
என் ஆழி வண்ணன் பால் இன்று
இடைகழியான ரேழியை வடமொழியில் தேகளி என்பர் . தேகளியில் காட்சி தந்த இறைவன் என்பதால் அவரை தேகளிஸ்வரர் என்கிறார்கள்.
சாளக்ராமத்தால் ஆன வேணுகோபாலன் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார். கேரளாவில் திருக்காட்கரை என்ற திவ்யதேசத்தில், வாமன னுக்கு என்று தனி கோவில் உள்ளது. இங்கே வாமனன் மூலவருக்கு பின் எழுந்தருளி உள்ளார்.
இங்கு பெருமாள் சன்னதிக்கு எதிரே 40 அடிஉயர தூண் ஒன்று உள்ளது, அதற்கு மேல் உள்ள சிறிய கோவிலில் கருடன் இருந்து எம்பெருமானை வணங்குகிறார். இந்த கோவில் பிரஹாரத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறார்.
அஞ்ஞான இருள் அகற்றும் மெய்ஞ்ஞான ஒளிப்பிழம்பாய் திகழும் திரு விக்கிரமனை , முதல் ஆழ்வார்கள் தரிசித்து பக்தி பெருக்கிய தலம் தான் திருக்கோவலூர்.
அந்தப் பாசுரங்களின் சில துளிகளை நாம் மனதிலே சிந்தித்தபடி எம் பெருமானை தரிசித்து வெளியே வருகின்றோம் .

தாயார் சன்னதி தனிச் சன்னதி. புஷ்ப வள்ளித்தாயார் என்று திருநாமம். உற்சவருக்கு ஆயனார் என்று பெயர். லட்சுமி நாராயணன், லட்சுமி வராகன், லட்சுமி நரசிம்மன், ராமர், ஆண்டாள், உடையவர், திருக்கச்சி நம்பிகள், மணவாளமாமுனிகள் என்று பல சந்நதிகள் உண்டு.
கோயிலுக்கு எதிரிலே தெப்ப உற்சவம் நடத்துவதற்கான பெரிய நீராழி உண்டு. ஸ்ரீ கிருஷ்ண பகவான் நித்திய சாந்நித்யம் செய்தருளும் இந்தத் தலம் பஞ்ச கிருஷ்ண ஆரண்ய ஷேத்திரங்களில் ஒன்று. முதல் ஆழ்வார் களும் திருமங்கை மன்னனும் மணவாள மாமணிகளும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
