யாருக்கு அச்சமில்லை?

மகாகவி பாரதியார் கூறுகின்றார்.
‘ அச்சத்தினால் நாடி தளர்கிறது. பயத்தினால் நாடி அடங்கி ஒடுங்குகிறது. கோபத்தினாலே நாடித்துடிப்பு அதிகமாகின்றது. ஆசையினாலே நாடி வரைமுறை இல்லாமல் இயங்குகிறது. இந்த வரைமுறையற்ற இயக்கத்தினாலே மரணம் சம்பவிக்கிறது. “
இன்றைய அலைச்சல் மிகுந்த மனிதனின் வாழ்க்கைச் சூழலை நான்கே வரிகளில் பாரதியார் கணித்து விட்டார். அச்சமும் பயமும் ஏன் ஏற்படுகிறது?
எதிலும் நம்பிக்கை இல்லாத தன்மையினால் ஏற்படுகிறது.
இன்றைக்கு மிகுந்த அளவு பணம் சம்பாதித்தே தீர வேண்டும்; பணம் மட்டும் சேர்த்து வைத்து விட்டால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். எதனைப் பற்றியும் சிந்திக்காமல், வேறு எதனைப் பற்றியும் கவலைப்படாமல் மனிதன் பணத்தைத் துரத்திக் கொண்டு ஓடுகிறானே, என்ன காரணம்?
அவனிடத்தில் இருக்கும் வாழ்க்கையைப் பற்றி அச்சம் .ஏதேனும் ஆகிவிடுமோ, எதிர்காலத்தில் என்கின்ற பயம். யாரிடத்திலும் நம்பிக்கை இன்மை. யாரிடத்திலும் என்று சொன்னால் கடவுளிடத்தில் கூட நம்பிக்கை இல்லை.
இறைவன் நம்மைக் காப்பாற்ற மாட்டான். எதைச் செய்தாவது பணம் சம்பாதித்து வைத்து விட்டால், அது நம்மைக் காப்பாற்றி விடும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் அடிமனத்தில் இருப்பதுதான் அச்சத்திற்குக் காரணம். ஆனால் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
பணம் எல்லா நிலையிலும் ஒரு மனிதனைக் காப்பாற்றி விடுமா? பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கை அச்சத்தையும் பயத்தையும் கொடுக்கிறது .
என்ன ஆகுமோ? ஏதாவது யாராவது எடுத்துக் கொண்டு சென்று விடுவார்களோ? என்ற எண்ணம் எப்பொழுதும் மனதில், ஒரு விதமான சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது
பணம் சம்பாதிப்பதில் ஏதேனும் பிரச்சனை என்று வந்து விட்டால் கோபம் வருகிறது. தொழில் போட்டி. அதனால் வருகின்ற பல சிரமங்கள் உண்டு.சமயத்தில் அது தகாத செயல்களையும் செய்ய வைக்கிறது.
ரத்த ஓட்டத்தை மிகவும் அதிகப்படுத்தி இருதய நோயை உண்டாக்குகிறது. நரம்பு தளர்ச்சியை உண்டாக்கி எதிலும் எங்கும் அமைதி இழந்து செயல்பட வைக்கிறது.
கோமணம் கட்டிய தீர்க்கதரிசி காலை வெயிலில் ஆற்றங்கரையில் படுத்து இருக்கிறார்.
நாடாளும் மன்னன் பரிபாரங்களோடு வந்து கேட்கிறார்.
” சுவாமி, நான் ஏதேனும் தங்களுக்குச் செய்ய வேண்டும், என்ன செய்யட்டும்?” என்கிறான்.
சுவாமி நிதானமாகச் சொல்லுகிறார்.
” கொஞ்சம் தள்ளி நில்.வெயில் மறைக்கிறது”
இருப்பதைக் கொண்டு வாழ்பவனுக்கும் இன்னும் என்னும் என்று அலையாதவனுக்கும் என்ன பயம் வந்துவிடும்? என்ன அச்சம் வந்துவிடும்?
