ராமநவமியைக் கொண்டாடும் அற்புதமான இந்த மாதத்தின் சிறப்புக் கட்டுரையாக அயோத்தியா ராமனையும் திருவேங்கடத்தில் கண் கண்ட தெய்வமாக அருள் பாலிக்கும் கோவிந்தனையும் இணைத்து சில சுவையான செய்திகளைக் காண்போம்.
1.பூலோக வைகுந்தம்
வைகுந்தத்தை விண் நாடு (த்ரிபாத் விபூதி) என்பார்கள். திருமலை அப்பன் எழுந்து இருக்கும் எழுந்தருளி இருக்கும் திருமலையை பூலோக வைகுந்தம் என்று சொல்கிறோம். வைகுந்தத்துக்கு அயோத்தியா என்று ஒரு பெயர் உண்டு. அதாவது யுத்தங்களாலே வெல்லப்படாத நகரம் என்று சொல்வார்கள். ராமன் அவதரித்த இடம் அயோத்தியா. எனவே கோவிந்தன் குடியிருக்கும் இடமும். ராமன் அவதரித்த இடமும் ஒன்றுதான்..
வைகுந்தத்தில் விரஜாநதி ஓடுகிறது ராமன் அவதரித்த அயோத்தியில் எல்லா உயிர்களுக்கும் அமுதத்தை தரும் சரயு நதி ஓடுகிறது. திருமலையப்பனின் திருமலையில் சுவாமி புஷ்கரணி என்னும் தீர்த்தம் இருக்கிறது. சரயு நதியில் ஸ்ரீ ராமபிரான் தீர்த்தம் ஆடுவார். ஸ்வாமி புஷ்கரணியில் திருமாலையப்பன் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
2.இருவருக்கும் காடு பொது
திருவேங்கடம் என்னும் காட்டுக்குள் அருள் தருவதற்காக நின்று கொண்டி ருக்கிறான் கோவிந்தன். ரிஷிகளும் மற்ற சாதுக்களும் உஜ்ஜீவனம் பெற வேண்டும் என்பதற்காகவே 14 ஆண்டுகள் காடாள வனம் சென்றான் ஸ்ரீ ராமன்.
3.இருவரும் பார்க்கப் பார்க்க அழகு
“தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் “என்று சொல்லும்படியாக, அழகைப் பெற்று உலகையெல்லாம் ரமிக்கச் செய்தவன் ஸ்ரீ ராமன்.
சந்திர காந்தானனம் ராமம் அதீவ பிரிய தர்சனம்
ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிணாம்
-அயோத்யா -3-27- என்று வால்மீகி காந்தத்தை போல் கவர்ந்து இழுக் கின்றவன் ராமன் என்று சொல்லுகின்றார் .
அவனை ஒரு தரம் பார்த்து விட்டால் மற்றொரு தரம் பார்க்க வேண்டுமே என்று உள்ளம் ஏங்கும். திருமலை அப்பன் கோவிந்தனும் அப்படியே. தினசரி 60,000 பேருக்குக் குறையாமல் தரிசனம் பெற்று உஜ்ஜீவனம் பெறுகின்றனர்.பல மணி நேரம் காத்திருந்து சில நொடிகள் தரிசனம் பெற்றாலும் இன்னும் ஒரு சில நொடிகளாவது அவனைக் காண முடியாதா என்று ஏங்குகின்றனர் .அப்படி ஆகர்ஷணம் செய்பவன் கோவிந்தன்.அப்படி ஆகர்ஷணம் செய்வதால் தான் மற்ற திவ்ய தேசங்களை விட திருமலையில் கூட்டம் அலைமோதுகிறது.
4.திரு(ஸ்ரீ)வோடு கூடிய தேவன்
திருவில்லாமல் கோவிந்தன் இல்லை திருப்பதி, திருமலை, திருவேங்கடம் என்கின்ற தலமே திரு (ஸ்ரீ)சப்தத்தினாலே சிறப்பு பெற்றது . அலர்மேல் மங்கை மனாளனாக அவன் இருப்பதால் தான் அவனுடைய அருள் எல்லோருக்கும் கிடைக்கின்றது .
அதைப்போலவே சீதையோடு ராமன் இருக்கின்ற காலத்தில் எல்லோரும் வாழ்ச்சி பெற்றனர் .மன்னிக்க முடியாத தவறு செய்த காகாசூரன் சீதை அருகில் இருந்ததால் தலை தப்பித்தான். அவளுடைய புருஷ காலம் இல்லாததால் 10 தலை இருந்தும் ராவணன் தண்டிக்கப்பட்டான்.
திருவாகிய பிராட்டியை (மஹாலஷ்மியை) முன்னிட்டுக் கொண்டுதான் திருமலைக்குப் பெருமை என்பதை நாம் அறிவோம். அதை போலவே சீதையை முன்னிட்டுத் தான் ராமனுக்கும் ராமாயணத்திற்கும் பெருமை. இராமாயணத்தை ராமனின் கதை என்று சொல்லாமல் ஸீதாயா சரிதம் மஹத் என்று சீதையை முன்னிட்டு ராமாயணம் சொல்லப்பட்டது .
5.இறங்கி(அவதாரம்) வந்த காரணம்
பூவுலகில் உள்ள சம்சாரிகளுக்காகவும் வானுலகில் உள்ள தேவர்களுக் காகவும் திருமலையில் வந்து நின்றவன் திருமலை அப்பன். இதை “வானவர் சந்தி செய்ய நின்றான்” என்ற தொடராலும், “விண்ணோர்க்கும் மண்ணோக்கும் வைப்பு என்ற தொடராலும் நாம் அறியலாம்.
அதேபோலவே இராமபிரானும் வைகுந்தத்திலிருந்து தேவர்கள் வாழ்ச்சி பெறவும் உலகத்தில் அறம் நிலைநாட்டவும் வந்து அவதரித்தான்.
திருவேங்கடவனை “நெடுவரையின் உச்சி மேலாய்” என்று, நீண்ட மலை யின் உச்சியில் ஜோதியாய்((உபநிடதப் பொருளாய்)) விளங்குபவன் என் கிறார் திருமங்கை ஆழ்வார்.
ராமபிரானுக்கும், “இராம திவாகரன்” என்ற திருநாமம் உண்டு. சூரியனை விட கோடி மடங்கு பிரகாசமாய் ஜொலிப்பவன். இதனை கீழ்க்கண்ட கம்பராமாயணப் பாடல் விளக்கும்.
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் –
மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்.
6.இராமானுஜரின் ஈடுபாடு
சுவாமி ராமானுஜருக்கு ராமன் பெயரில் அளவற்ற ஈடுபாடு. அதே ஈடுபாடு திருமலை கோவிந்தனிடமும் உண்டு.
அவருடைய மனத்தில் இரண்டு விஷயங்கள் தான் இருந்தன .
ஒன்று இராமாயணம்.
“படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் எம் ராமானுசன்” என்று ராமாயணத்தை, சதா சர்வ காலமும் அவர் அனுபவித்துக் கொண்டிருந்ததை திருவரங்கத்து அமு தனார் ராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகின்றார்.
அதைப் போலவே “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்” என்று வைகுந் தத்துக்கு அடுத்து முதன்மையாக அவருடைய உள்ளத்தில் இருந்தது திரு வேங்கடமே என்பதையும் அமுதனார் பாடுகின்றார்.
இதில் இன்னொரு சிறப்பு உண்டு. இராமாயணத்தைக் கேட்பதற்காகவே பெரிய திருமலை நம்பிகளிடம் ஒரு வருஷ காலம் பயின்றார் என்பது ராமானுஜர் சரித்திரத்தில் வருகின்றது. அவர் படித்த இடம் திருவேங்கடம்.
7.ராமாயணத்தின் சாரார்த்தம்
இராமாயணம் சரணாகதி மார்க்கத்தைக் காட்டுகின்றது. அபயப் பிரதான சாரமே ராமாயணத்தின் சாரார்த்தம் என்பார்கள். அதிலே வருவதெல்லாம் சரணாகதி தான். பரதன் சரணாகதி, தேவர்கள் சரணாகதி, விபீஷண சரணாகதி,ரிஷிகள் சரணாகதி என்று சரணாகதி பற்றிய விளக்கம் தான் ராமாயணம். திருவேங்கட கோவிந்தனும் சரணாகதி சாஸ்திரத்தை வலி யுறுத்தவே வந்து திருமலையில் நின்றவன்.அதனால் தான் சுவாமி நம்மாழ்வார் திருமலை அப்பனிடம் சரணாகதி செய்கின்றார். “புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என் கிற பாவம் சரணாகதிக்கு முக்கியம்.
8.ஒரு தரம் சொன்னால் போதும்
ஒரே ஒரு தரம் கோவிந்தா என்று சொன்னால் பக்தர்களின் குறைகளை எல்லாம் அவன் தீர்த்து வைத்து விடுவான்.அதைப் போலவே “சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே அபயம் சர்வ புதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம” என்று ஒரே ஒரு தரம் சரணாகதி செய்து விட்டால் அவர்களுக்கு அபயம் தருவதையே தன்னுடைய வாழ்நாள் நோக்கமாகக் கொண்டவன் ராமன்.
9.ராமனுக்கும் கோவிந்தன் பெயர் உண்டு
திருமலை அப்பனுக்கு “கோவிந்தன்” என்கின்ற பெயர் எத்தனை பொருத்தமோ, அதே கோவிந்தன் பெயர் ராமனுக்கும் பொருந்தும். கோ என்றால் அஸ்திர சஸ்திரங்கள். இந்த அஸ்திரங்களை அகஸ்தியரி டமிருந்து பெற்றவன் இராமன் என்பதினாலே ராமனுக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருந்தும். எனவே இருவரும் ஒன்றுதான். இதை நம் மாழ்வாரும் ஒரு அற்புதமான நிகழ்ச்சியில் சொல்லுகின்றார். ராமாயணத்தில் ராமன் சிறுவயதில் கூனி என்ற கைகேயின் அரண் மனையில் வேலை செய்யும் மந்தரை மீது விளையாட்டாக ஒரு கல் உருண்டையால் அடித்ததாக ஒரு வரலாறு உண்டு. ஆனால் நம்மாழ்வார் இந்த நிகழ்ச்சியைப் பாடுகின்ற பொழுது இராமன் கல்லுருண்டையால் அடித்தான் என்று பாடவில்லை கோவிந்தன் அடித்தான் என்று பாடு கின்றார் அப்படியானால் கோவிந்தனும் ராமனும் ஒன்றுதானே.
10.இருவருக்கும் குறை இல்லை
கோவிந்தனுக்கு குறை ஏதுமில்லை அதனால் குறை ஒன்றும் இல் லாதவன் கோவிந்தன் என்று ஆண்டாள் பாடுகின்றார். ராமனும் குறை ஒன்றும் இல்லாதவன். யார் சிறந்த குணவான்(“கோ குணவாந்?) என் கின்ற கேள்விக்கு பதினாறு சிறந்த குணங்களைப் பட்டியலிட்டு அந்த 16 குணங்களும் ராமனிடம் இருந்ததாக பெரியவர்கள் சொல்லுவார்கள்.
அப்படிப்பட்ட உயர்ந்த திருத்தலம் திருவேங்கடம். அந்த திருவேங்கட கோவிந்தனுக்கும், அயோத்தி இராமனுக்கும் பற்பல தொடர்புகளும் ஒற்று மைகளும் உண்டு. அதில் சிலவற்றை மட்டும் இந்தக் கட்டுரையில் நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் நிறைய ஒற்றுமைகள் உண்டு .அதை வேறொரு சந்தர்ப்பத்திலே பார்க்கலாம்..
