(21.1.23 சனிக்கிழமை)
உண்மைதான்.அமாவாசைக்கு மிக முக்கியத்துவம் நம்முடைய மரபில் உண்டு. கிராமத்தில் கூட அமாவாசை அன்று விரதம் இருந்து தங்களுடைய முன்னோர்களுக்கு படைத்துவிட்டு உணவு உட்கொள்வார்கள்.
ஒவ்வொரு அமாவாசையும் முக்கியம்தான் என்றாலும் மூன்று அமாவா சைகள் மிக முக்கியம்.
ஒன்று ஆடி அமாவாசை.
இன்னொன்று தை அமாவாசை.
இன்னொன்று புரட்டாசியில் வருகின்ற மகாளய அமாவாசை.
ஒரு ஆண்டைப் பிரித்தால் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயணம் என்று சொல்வார்கள்.ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரைக்கும் தட்சணாயணம் என்று சொல்வார்கள். உத்தராயணத்தின் முதல் மாதம் தை மாதம். தட்சிணாயனத்தின் முதல் மாதம் ஆடி மாதம். ஒன்று பகல் தொடங்கும் நேரம். ஆடி மாதம் இரவு தொடங்கும் நேரம்.
இந்த இரண்டு நேரங்களிலும் வழிபாடு முக்கியம் என்பதால் தட்சிணா யணத்தின் முதல் மாதமான ஆடி மாதத்தில் ஆடி அமாவாசையும் உத்திரா யணத்தின் முதல் மாதமான தை மாதத்தில் தை அமாவாசையும் மிக முக்கியமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தை அமாவாசை சனிக்கிழமை பூராட நட்சத்திரம் உத்திராட நட்சத்திரம் கலந்த தினத்தில் வருகின்றது. பூராடம் சுக்கிரனுக்குரிய நட்சத் திரம். உத்திராடம் சூரியனுக்கு உரிய நட்சத்திரம். சனிக்கிழமை ஸ்திரவாரம். சனியின் மகர ராசியில் சூரியனும் சந்திரனும் சுக்கிரனும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கக்கூடிய தருணம் .
இப்பொழுது சனி மகர ராசியில் ஆட்சியாக இருக்கின்றார். சனியின் தந்தை தான் சூரியன் என்று சொல்வார்கள். எனவே தாயும் தந்தையும் பிள்ளையும் ஒன்றாகச் சேர்ந்த அமாவாசை இந்த அமாவாசை.
சனி ஆட்சி பெற்ற நிலையில் சுப பலத்தில் இருக்கின்றார் .பொதுவாகவே ஒரு ஜாதகத்தில் சனி அதிக பாதிப்பைத் தருகிறது என்று சொன்னால், அவர்கள் பிதுர் காரியங்களை மறந்து விட்டார்கள் அல்லது சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம். பிதுர் தோஷம் இருக்கிறது என்பார்கள். இதற்குத் துணையாக ராகுவும் கேதுவும் வந்து நிற்கும்.
இந்த தை அமாவாசையில் முறையாகத் தர்ப்பணம் செய்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்றால், இந்த பிதுர் தோஷமானது மறைந்துவிடும். வீட்டில் சுபகாரியத் தடைகள் நீங்கி, மங்கல காரியங்கள் நடைபெறும். உத்தியோக உயர்வு, வருமான உயர்வு, தொழில் தடைகள் நீங்கும்.
இது தவிர இந்த அமாவாசைக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு.
இந்த அமாவாசையில் தான் திருக்கடையூரில் அபிராமி பட்டர் அபிராமி அந் தாதி அரங்கேற்றினார் அவர் அமாவாசை நாளை பௌர்ணமி நாள் என்று சொல்ல அபிராமி பட்டர் வாக்கை நிறைவேற்றுவதற்காக அம்பிகை அமாவா சையை பௌர்ணமியாக மாற்றி காட்டினாள் .
எனவே இந்த அமாவாசை மாலை நேரத்தில் விளக்கு வைத்து அபிராமி அந்தாதி படிப்பது பலன் அளிக்கும் .இயன்ற அளவு அமாவாசை தர்ப்பணம் செய் கின்ற பொழுது நீர்நிலைகள் இருக்கக்கூடிய ஆற்றங்கரையிலோ குளத்தங் கரையிலோ தர்ப்பணம் செய்வது நல்லது. வீட்டிலும் செய்யலாம். அந்த தர்ப்பண நீரை கால்படாத இடத்தில் கொண்டு போய் கொட்டி விட்டு சூரிய பகவானை நோக்கி நமஸ்காரம் செய்து பிதுர்கடனை ஆற்றி விட்டேன் என்று சொல்ல வேண்டும்.
பிதுர்காலம் என்று சொல்லக்கூடிய உச்சிக் காலத்தில் தர்ப்பணம் செய்வது நல்லது. காலம் கடந்து தர்ப்பணம் செய்யக் கூடாது. குறிப்பாக பிற்பகலுக்கு மேல் தர்ப்பணத்தை செய்வது விசேஷமாக இருக்காது. தர்ப்பணம் செய்கின்ற குருக்களுக்கு வெற்றிலை, பாக்கு, வாழைக்காய், அரிசி இதோடு தட்சிணையும் தர வேண்டும்.
வாழை சம்பந்தப்பட்ட இனங்களைப் பயன்படுத்துவது நல்லது. காரணம் இது குல விருத்திக்கும் சந்ததி விருத்திக்கும் உரிய வழிபாடு.
இந்த தை அமாவாசையில் இன்னொரு விசேஷமும் உண்டு.சீர்காழிக்கு அருகாமையில் உள்ள திருநாங்கூர் திவ்ய தேசத்தில் 11 கருட சேவை அமா வாசைக்கு மறுநாள்(22/1/23) நடைபெறும். அமாவாசை அன்று திருமங்கை யாழ்வாருக்கு மஞ்சள் குளி உற்சவம் என்ற உற்சவம் நடைபெறும்.
