நட்சத்திரங்களையும் மாதங்களையும் அடிப்படையாகக் கொண்டு சில முக்கியமான பண்டிகைகள்,உற்சவங்கள் கொண்டாடப்படும். உதாரணமாக ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம்சிறப்பு. தை மாதத்திலும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு. ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் சிறப்பு. அதைப்போல திதியையும் மாதத்தையும் இணைத்து சில பண்டிகைகள் உண்டு. சித்திரை மாதத்தில் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி.
தைப்பூசத்துக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம் என்று யோசித்துப் பார்த்தால் தை மாதம் உத்திராயண காலத்தில் முதல் மாதம். பூச நட்சத்திரம் கடக ராசியில் உள்ள சனியினுடைய நட்சத்திரம். கடக ராசி சந்திரன் ஆட்சி வீடு. தை மாதம் என்பது மகர மாதம் அதாவது சனியின் வீடு. அங்கே சூரியன் இருக்கக்கூடிய காலம்தான் தை மாதம். சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தின் முதல் வீடு மகர வீடு .தை மாதமாகிய மகரத்தில் சூரியன் இருக்க நேர் எதிர் மாதமாகிய கடகத்தில் மகர வீட்டுக்குரிய சனியின் பூச நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க இந்த விசேஷமான பின்னணியில் கொண்டாடுவது தான் தைப்பூசம்.தை பூசம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.பூசம் எட்டாவது நட்ஷத்திரம்.எண் கணிதப்படி 8 என்பது சனியைக் குறிக்கும்.சனி நீதி பரிபாலனத்தைக் குறிக்கும்.சனிக்கு
தை மாதம் பலவகையில் சிறப்பு பெற்ற மாதம். ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் தை மாதத்தில் தான் அவதரித்தார் .ஆசாரியர்களில் கூரத்தாழ்வார் ,குருகைக் காவலப்பன், சொட்டை நம்பி, திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர், இவர்களெல்லாம் தை மாதத்தில் அவதரித்தவர்கள்.
நாயன்மார்களில் திருநீலகண்ட நாயனார், தாயுமானவசுவாமிகள், அப்பூதி அடிகள், கலிக்காம நாயனார், கண்ணப்ப நாயனார், சண்டிகேஸ்வர நாயனார் அரிவாட்டாய நாயனார் முதலியவர்கள் தை மாதத்தில் அவதரித்தவர்கள்.
தையில் தான் பொங்கல் பண்டிகை வருகிறது. தையில் தான் வெள்ளிக்கிழமை விசேஷம். அதேபோல தையல் பூச நட்சத்திரம் விசேஷமானது. சனியினுடைய நட்சத்திரமான பூசம் காலச்சக்கரத்தின் நாலாவது வீடான கடக ராசியில் இருக்கிறது. இது சுப நட்சத்திரம் என்பார்கள் .
பதவி ஏற்கவும் ஒரு சபையைக் கூட்டவும் சீமந்தம் விசேஷங்கள் செய்யவும் பசுமாடு வாங்கவும் வாஸ்து சாந்தி செய்யவும் திருமணம் கிரகப்பிரவேசம் முதலிய விசேஷங்களைச் செய்யவும் யாத்திரை மற்றும் வெளிநாடு பிரயாணம் செய்யவும் ஏற்ற நட்சத்திரம் பூசம் நட்சத்திரம்.
சனிக்கு ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று மகரம் இன்னொன்று கும்பம். மகரம் என்பது வினைகளை, காரியங்களைக் குறிக்கிறது .அதனால் அதற்கு கர்மஸ்தானம் என்று பெயர். அதே சனி அதற்கான பலனையும் கொடுப்பார் என்பதால் அதற்கு அடுத்த பாவத்தை லாப பாவம் என்று சொல்வார்கள்.
பத்தாம் இடத்தில் என்ன விதைக்கிறோமோ அது பதினொன்றாம் இடத்தில் அறுவடையாகும். நல்ல கர்மாவை செய்வதன் மூலமாக நன்மை அடையலாம் என்பதைச் சொல்பவர் சனி அவருடைய நட்சத்திரம் தான் பூசம். அவருடைய மாதம் தான் தை.
இன்னொரு நுட்பத்தையும் நாம் இங்கு கவனிக்கலாம் தை மாதமாகிய மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். செவ்வாய் என்பது முருகப்பெருமானைக் காட்டும் கிரகக் குறியீடு. பெண் தெய்வமாக இருந்தால் துர்க்கையைக் குறிக்கும். அதனால்தான் தை மாதம் வெள்ளிக்கிழமை அம்பாளையும் பூசத்தில் முருகப்பெருமானையும் வணங்கி எட்டாத இலக்கையும் எட்டுகின்றனர் எட்டு என்பது துன்பத்தைக் குறிப்பதால் அந்தத் துன்பத்தையும் முருகப்பெருமான் வழிபாட்டின் மூலம் நீக்கிக் கொள்ளுகின்றனர் சனியின் ஆதிக்கம் கடுமையாக இருக்கும் போது அதே சனி நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் சனியின் மகர ராசியில் உச்சம் பெறும் முருகனை வணங்கி நிவாரணம் பெறுகின்றனர்.தை பூசம் பல சிறப்புக்களை உள்ளடக்கியது.
தைப்பூசத்தில் தான் ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் அவருடைய திருவுருவத்துக்கு சக்தி விசேஷத்தை அளித்தார். ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். புறப்பாடு நடைபெறும். இதனை குரு புஷ்ய உற்சவம் என்பார்கள். புஷ்யம் என்பது தை மாதத்தைக் குறிக்கும். குருவுக்கு ஏற்றம் தரும் மாதம் இது.
தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகள் உண்டு . குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
சைவத்தில் கோயில் என்றால் சிதம்பரத்தை குறிக்கும் அந்த சிதம்பரத்திற்கும் தைப்பூசத் திருநாளுக்கும் ஒரு இணைப்பு உண்டு.சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.அது மட்டுமல்ல,சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தபட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடு கிறார்கள்.கடலூர் மாவட்டம், வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள். காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும்.
