தை மாதமாகிய மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். செவ்வாய் என்பது முருகப் பெரு மானைக் காட்டும் கிரகக் குறியீடு. பெண் தெய்வமாக இருந்தால் துர்க் கையைக் குறிக்கும். அதனால்தான் தை மாதம் வெள்ளிக்கிழமை அம் பாளையும் பூசத்தில் முருகப்பெருமானையும் வணங்கி, எட்டாத இலக்கையும் எட்டுகின்றனர். எட்டு என்பது துன்பத்தைக் குறிப்பதால் அந்தத் துன்பத்தையும் முருகப்பெருமான் வழிபாட்டின் மூலம் நீக்கிக் கொள்ளுகின்றனர். சனியின் ஆதிக்கம் கடுமையாக இருக்கும் போது(ஏழரைச் சனி,அஷ்டமச்சனி,கண்டச் சனி ,அர்த்தாஷ்டம சனி) அதே சனி நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் சனியின் மகர ராசியில் உச்சம் பெறும் முருகனை வணங்கி நிவாரணம் பெறுகின்றனர்.
முருகப் பெருமானுக்கு எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்றன ஒவ்வொரு ஆலயத்திலும் தைப்பூசத் திருவிழா மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும். தைப்பூசம் அன்று உற்சவங்கள் இல்லாத முருகப்பெருமான் கோயிலே இல்லை என்று சொல்லலாம் நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் முருக பெருமான் கோயில்களில், தைப்பூச திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாட ப்படும். மலேசியா, சிங்கப்பூர் பினாங்கு, மத்திய ஐரோப்பா நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நூற்றுக்கணக்கான நாடுகளில் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
ஆனாலும், முருகனுக்கு மிக மிக விசேஷமான தலங்களாகச் சொல்லப் படுவது ஆறு படை வீடுகள். ஆறுபடை வீடுகள் என்பது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை.
ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆறுபடை வீடுகள் என்பது குறித்து முதல் முதலில் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இலக்கியத்தில் வருகிறது. அதில் ஆறுபடை என்று வரவில்லை ஆற்றுப்படை என்று வருகின்றது. முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் ‘வழிப்படுத்தல்’ என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. சமய தத்துவங்கள் ஒருவருடைய வாழ்க்கையின் உன்னதத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதற் காகவே ஏற்பட்டன. ஆறு என்றால் வழி என்று பொருள். ஒருவன் வாழ்வில் உயர்வும் உன்னதமும் பெற உய்வும் பெற என்ன வழி என்பதைக் காட்டுவது தான் ஆறுபடை வீடுகள்.ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆறு என்கிற எண் முருகப்பெருமானோடு எப்படித் தொடர்பு படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். முருக பெருமானுக்கு முகங்கள் ஆறு.
ஏறுமயிலேறி விளை யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.
என்று ஆறுமுகத்தின் தத்துவத்தை அருணகிரிநாதர் அற்புதமாகப் பாடுகின் றார்.
முருகப்பெருமானின் மந்திரம் “சடாட்சர மந்திரம்” .ஆறு எழுத்துக்களை உடைய மந்திரம் “சரவணபவ” எனும் மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு சூட்சும தத்துவத்தைக் குறிக்கிறது சரவணபவ மந்திரத்தின் விளக்கத்தை வள்ளலார் அருளியிருக்கிறார். ச- என்பது உண்மை; ர- என்பது விஷய நீக்கம். வ- என்பது நித்ய திருப்தி; ண – என்பது நிர்விஷயம்; ப – என்பது பாவ நீக்கம்; வ- என்பது ஆன்ம இயற்கை குணம். இதை இன்னும் பல விதமாகவும் சொல்லுவார்கள். யோக சாஸ்திர அடிப்படையிலும் சொல்லுவார்கள். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு படை வீடு உண்டு. ஆறு எழுத்துக்கும் ஆறுபடை வீடு. முருகனுக்கு உரிய விரதம் சஷ்டி விரதம் அது ஆறாவது திதி. எண் கணித சாஸ்திரத்தில் ஆறு என்கிற எண் சுக்கிரனைக் குறிக்கிறது. சுக்கிரன் செல்வத்தைக் குறிக்கக்கூடிய கிரகம். இகத்திலும் பரத்திலும் ஒருவனுக்குத் தேவையான எல்லா ஐஸ்வர்யங்களையும் தரக்கூடிய, சுக்கிரனின் ஆதிக்கம் உடைய, ஆறு என்கின்ற எண்ணின் தத்துவமாக விளங்குபவர் முருகப் பெருமான்.
ஆற்றுப்படை வீடுகளை அறு படை வீடுகள் என்றும் சொல்வார்கள். ஏற்கனவே தை மாதம் என்பது வினைகளையும், வினைகளால் ஏற்படுகின்ற விளைவுகளையும் குறிக்கக்கூடிய மாதம் என்ற தத்துவத்தைப் பார்த்தோம். பூச நட்சத்திரம் என்பது மனத்தைத் தூண்டும் ராசியான கடக ராசியில் இருக்கக்கூடிய நட்சத்திரம் என்பதையும் பார்த்தோம். இந்த வினையும் விளைவுகளும் என்பது சக்கரத்தைப் போல் சுழன்று கொண்டே இருக்கும். இந்த கர்ம வினையின் சுழற்சியை விலக்கினால் தான் கதி மோட்சம் கிடைக்கும் .கர்ம வினையின் சுழற்சியை அறுக்கின்ற வீடுகள் இந்த படை வீடுகள் என்பதால் அறுபடை வீடுகள் என்றும் சொல்வார்கள். கூரான ஞானவேல் கொண்டு நிற்கும் முருகப்பெருமானை, தைப்பூசம் அன்று அறுபடை வீடுகளிலும் வணங்குவதன் மூலமாக தீவினைகளை அடியோடு அறுத்துக் கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநிக்கு திருவாவினன்குடி , சக்திகிரி என்று பெயர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று .தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் .ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் வள்ளி தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருவார்.. பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறும் .
இசை வடிவங்களில் புகழ் பெற்ற எளிய மக்களால் பாடக்கூடிய வடிவம் காவடிச்சிந்து.தைப்பூசத்தன்று பக்தர்கள் பல பகுதிகளிலிருந்தும் பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக விரதமிருந்து முருகனுக்குக் காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. முற்காலத்திலே முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் எடுத்து வருபவர்கள் ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பொழுது அவர்களின் ஆட்டத்திற்குப் பாடப்படும் பாடல் வகைகளிலிருந்து இக்காவடிச் சிந்து என்ற பாவடிவம் தோன்றி உருவாகியது.சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.
கண்ணுக்கும், காதுக்கும், நெஞ்சுக்கும் பக்தி உருக்கத்தைத் தரும் தைப் பூசம் அன்று முருகப்பெருமானுக்கு எண்ணற்ற பக்தர்கள் காவடி எடுக் கிறார்கள் அந்த காவடியிலேயே எத்தனை எத்தனை வகைகள்?
1.அலகு குத்துதல் – நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
2.சர்க்கரை காவடி – சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
3.தீர்த்தக் காவடி – கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
4.பறவைக் காவடி – அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
5.பால் காவடி – பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
6.மச்சக்காவடி – மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
7.மயில் காவடி – மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது..இது தவிர சர்ப காவடியில் உண்டு.நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் காவடி எடுத்துக் கொண்டு முருகனின் பாடல்களைக் பாடிக் கொண்டு, அற் புதமான நாதஸ்வர இசையோடு வருவது மனதை உருக்கும். அதுதான் தைப்பூசம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி. ஆறுபடைவீடுகளில் ஐந்தாம்படை வீடு. நக்கீரரின் திருமுருகாற்றுப்படையிலும் ,அருணகிரி நாதர் திருப்புகழிலும் பாடிய தலம். முத்துசாமி தீட்சிதர் இந்தத் தலத்து முருகப்பெருமானை போற்றிக் கீர்த்தனை பாடியிருக்கிறார். இங்கு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் . விழாவை முன் னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். தங்க கவசம், வைர கீரிடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்படும். பக்தர்கள் விரதமிருந்து உடலில் அலகு குத்தியும், காவடிகள் சுமந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவர்.
முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்த கடற்கரைத் தலமான திருச் செந் தூரிலும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தை மாதம் நடைபெற இருக்கும் தைப்பூச நிகழ்வுக்காக மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதையாத்திரையாக செந்தூர் நோக்கி படையெடுக்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் முதலிய அருகாமை மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான ஊர்களில் இருந்து சாரி சாரியாகத் திருச்செந்தூர் நோக்கி, கால்நடையாக, பாடல் களைப் பாடிக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளம் காணக் கிடைக்காத பரவசக் காட்சி. கொடியைப் பிடித்துக் கொண்டு, காலில் பாத அணி அணியாது, கிடைத்த வண்டிகளில் முருகப்பெருமானை அலங்கரித்து வைத்து, பாட்டு பாடிக்கொண்டே அவர்கள் செல்லுகின்ற பொழுது, உள்ள உணர்வு மற்ற மக்கள் மனதிலும் தைப்பூசத் திருநாளின்அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, மயிலம், எண்கண், எட்டுக்குடி, சிக்கல், மருதமலை முதலிய பல்வேறு முருகன் தலங்களில் மிக விரிவாக தைப்பூசம் கொண்டாடப்படு.ம்தைப்பூசத்தில் தான் யாழ்ப் பாண மக்கள் புதிர் எடுப்பர். அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங் காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று, சூரியனை வணங்கி, ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனை பூஜை அறையில் வைத்து, அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பூஜை செய்து உண்பர். முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.
மலேசியாவில் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது பத்து மலை முருகன் கோவில் . இது ஒரு மலைக் கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலானது. மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்து மலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மலேசி யாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
