தமிழ் மாதங்கள் 12 ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ஆன்மீகச் சிறப்பு உண்டு. விழாக்கள்உண்டு. உற்சவங்கள் உண்டு. அதில் சில மாதங்கள் மிக மிகச் சிறப்பான மாதங்கள். அப்படிப்பட்ட ஒரு மாதம் தான் தை மாதம் இந்த தை மாதத்திலும் பூச நட்சத்திரம் மிகச் சிறப்பான நட்சத்திரம். தை மாதத்தின் சிறப்பையும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தின் சிறப்பையும் காண்போம்.
நட்சத்திரங்களையும், மாதங்களையும் அடிப்படையாகக் கொண்டு சில முக்கியமான பண்டிகைகள்,உற்சவங்கள் கொண்டாடப்படும். உதாரணமாக ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு. தை மாதத்திலும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு. ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் சிறப்பு. அதைப்போல திதியையும் மாதத்தையும் இணைத்து சில பண்டிகைகள் உண்டு. சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி. தையில் பூசம்.
தைப்பூசத்துக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம் என்று யோசித்துப் பார்த்தால் தை மாதம் உத்திராயண காலத்தில் முதல் மாதம். நமக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளின் 24 மணி நேரம் 12 மாதங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் ஒவ்வொரு மாதமும் இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். தை மாதம் என்பது விடிகின்ற காலை 6 மணி முதல் 8 மணி வரை உள்ள 2 மணி நேரத்தைக் குறிக்கும் என்பதால் தை மாதத்தை விடியல் நேரம் என்று ஆன்மீக ரீதியில் சொல்லுவார்கள். காலை ஆறு மணிக்குத்தானே சூரிய உதயம் ஆகும். சூரிய உதயம் பிறந்து விட்டால் விடிந்து விட்டது என்று அர்த்தம். வழி கிடைத்துவிட்டது என்று அர்த்தம். இதன் அடிப்படையில்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கின்ற சொற்றொடரே உருவானது.
தை மாதம் பலவகையில் சிறப்பு பெற்ற மாதம். ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் தை மாதத்தில் தான் அவதரித்தார் .ஆசாரியர்களில் கூரத்தாழ்வார் , குருகைக் காவலப்பன், சொட்டை நம்பி, திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர், இவர்களெல்லாம் தை மாதத்தில் அவதரித்தவர்கள்.
நாயன்மார்களில் திருநீலகண்ட நாயனார், தாயுமானவசுவாமிகள், அப்பூதி அடிகள், கலிக்காம நாயனார், கண்ணப்ப நாயனார், சண்டிகேஸ்வர நாயனார் அரிவாட்டாய நாயனார் முதலியவர்கள் தை மாதத்தில் அவதரித்தவர்கள்.பூச நட்சத்திரம் கடக ராசியில் உள்ள சனியினுடைய நட்சத்திரம். கடக ராசி சந்திரன் ஆட்சி வீடு.
தை மாதம் என்பது மகர மாதம்.அதாவது சனியின் வீடு. அங்கே சூரியன் இருக்கக்கூடிய காலம்தான் தை மாதம். சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தின் முதல் வீடு மகர வீடு .தை மாதமாகிய மகரத்தில் சூரியன் இருக்க, நேர் எதிர் மாதமாகிய கடகத்தில் மகர வீட்டுக்குரிய சனியின் பூச நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க, இந்த விசேஷமான பின்னணியில் கொண்டாடுவது தான் தைப்பூசம். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் தை பூசம் விழா முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.பூசம் எட்டாவது நட்ஷத்திரம்.எண் கணிதப்படி 8 என்பது சனியைக் குறிக்கும்.சனி நீதி பரிபாலனத்தைக் குறிக்கும்.
மார்கழியில் நிறுத்தப்பட்டிருந்த சுப காரியங்கள் எல்லாம் தை மாதத்தில் தொடங்கும். தை மாதம் முதல் நாள் இப்போது பொங்கல் பண்டிகை வைத்தாலும் கூட, ஒரு காலத்தில் தையில் அறுவடை செய்த புது நெல்லை, பூச நட்சத்திர நாளன்று பொங்கல் வைத்து கொண்டாடுகின்ற வழக்கமும் இருந்தது இது குறித்த பல குறிப்புகள் இலக்கியங்களில் இருக்கின்றன. தையில் தான் பொங்கல் பண்டிகை வருகிறது. தையில் தான் வெள்ளிக்கிழமை விசேஷம். சைவத்தில் எல்லா அம்பாள் கோயில்களிலும் ,திருமால் ஆலயங்களில் எல்லா தாயார் சன்னதிகளிலும் தை வெள்ளிக் கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
சனிக்கு ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று மகரம். இன்னொன்று கும்பம். மகரம் என்பது வினைகளை, காரியங் களைக் குறிக்கிறது .அதனால் அதற்கு கர்மஸ்தானம் என்று பெயர். அதே சனி அதற்கான பலனையும் கொடுப்பார் என்பதால் அதற்கு அடுத்த பாவத்தை லாப பாவம் என்று சொல்வார்கள். பத்தாம் இடத்தில் என்ன விதைக் கிறோமோ, அது பதினொன்றாம் இடத்தில் அறுவடையாகும். நல்ல கர்மாவை செய்வதன் மூலமாக நன்மை அடையலாம் என்பதைச் சொல்பவர் சனி.
உங்கள் பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கிறது
உங்கள் செயலை நீங்கள் தொடங்குகின்ற நேரம் காலை நேரம் அல்லவா. அந்த காலை நேரத்தில் நீங்கள் எந்த செயலைத் தொடங்குகிறீர்களோ,(10ம் பாவம்) அதற்கான விளைவு, அதற்கு அடுத்த பாவமாகிய லாப பாவத்தில்(11ம் பாவத்தில்) சனி தந்து விடுவார்.எனவே இரண்டு வீடுகளும் அவருக்கு உரியதாக இருக்கிறது. அந்த லாப பாபத்துக்கு(11), 12 ஆவது பாவம் கர்ம பாவமாக(10ம் பாவம்) அமைவதால், உங்கள் புண்ணியங்களின் விளை வுகளையும்(அறுவடை) நீங்கள் பத்தாம் பாவமாகிய மகர மாதத்தில் செலவு செய்யப் போகிறீர்கள்(reflection to your action) என்று பொருள். அந்தச் செலவை நீங்கள் எப்படி செய்கிறீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி அதற்கு அடுத்த பாவத்தில் லாபம் கிடைக்கும் என்கிற அற்புதமான உண்மையைச் சொல்லுவது இந்த மகர மாதம்( தை மாதம்).
புராண ரீதியாக சூரியனுக்குப் பிள்ளையாகப் பிறந்தவர் சனி பகவான். சூரியதேவரின் மனைவி சந்தியாதேவி, நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக தன்னுடைய சக்தியை இழந்திருந்தார். ஆகவே அவர் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினார். அதை சூரியனிடம் சொல்ல பயந்த சந்தியா, தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தார். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டார்.சூரிய தேவன் – சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர் சனி . பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனம்.அதனால் மந்தமாக நடப்பவர் . மந்தன் எனும் பெயர் வழங்கப்படுகிறது.ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருப்பார். ஒரு பிள்ளையின் மிக முக்கியமான கடமை, தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகள். தந்தை உயிரோடு இருக்கின்ற வரை, அவருக்கு பணிவிடைகளைச் செய்வது உத்தமமான கர்மா. அதைச் செய்யாமல் தந்தையை அலட்சியப்படுத்துவதோ அவமானப்படுத்துவதோ அவர் மனம் புண்படும்படி நடந்து கொள்வதோ மிகப் பெரிய பாவம் என்கின்றன தர்ம சாஸ்திரங்கள். அவர் இருக்கும் போது எல்லாப் பணிவிடைகளையும் செய்து, அவர் காலத்துக்குப் பின் தொடர்ந்து அவருக்கான மற்ற வைதிகச் சடங்குகளையும் தவறாமல் செய்ய வேண்டும் என்பதும் சாஸ்திரம். அது ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிய கடமை என்பதால் சூரியனின் பிள்ளையாகிய சனியின் தை மாதத்தில் தை அமாவாசை போன்ற கடமைகளை அவசியம் செய்யச் சொன்னார்கள்.
அதேபோல தை பூச நட்சத்திரம் விசேஷமானது. சனியினுடைய நட்சத் திரமான பூசம், காலச்சக்கரத்தின் நாலாவது வீடான கடக ராசியில் இருக்கிறது. இது சுப நட்சத்திரம் என்பார்கள் .பதவி ஏற்கவும், சபையைக் கூட்டவும், சீமந்தம் முதலிய விசேஷங்கள் செய்யவும், பசுமாடு வாங்கவும், வாஸ்து சாந்தி செய்யவும், திருமணம், கிரகப்பிரவேசம் முதலிய விசேஷங்களைச் செய்யவும், யாத்திரை மற்றும் வெளிநாடு பிரயாணம் செய்யவும் ஏற்ற நட்சத்திரம் பூசம் நட்சத்திரம்.
பூச நட்சத்திரம் கடக ராசியில் இருக்கிறது. கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் முதலிய மூன்று நட்சத்திரங்கள் இருக்கின்றன.. இதில் பூச நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் காலம் தான் தைப்பூசம் கொண் டாடப்படுகிறது. கடக ராசி சந்திரனுடைய ஆட்சி வீடு. சந்திரனுக்கு எத் தனையோ காரகத்துவங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், மிக முக்கியமான காரகம் மனத்தை ஆள்பவன் என்பது. அதனால் தான் சந்திரனை “மதி” என்று சொன்னார்கள் அந்த கடக ராசியின் நேர் ஏழாவது ராசி தான் தை மாதத்திற்குரிய மகர ராசி. அப்படியானால் என்ன பொருள்? நான்காவது ராசி மனம், சுகம் அல்லவா? அதனுடைய நேர் எதிர் விளைவு தான் கர்ம ராசி. எனவே மனத்தை ஒழுங்கு செய்தால் கர்மாவை ஒழுங்கு செய்யலாம் என்பதைக் காட்டுவது தை மாதம் பூச நட்சத்திரம். இதைத்தான் திருமூலரும் மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்று குறிப்பால் உணர்த்தினார்.. அதற்கு இறையருள் வேண்டும் என்பதற்காகத்தான் பூச நட்சத்திர நாளில் எல்லாக் கோயில்களிலும் சிறப்பான விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்.
