திருநெல்வேலிக்கு அருகில் திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசம்.திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோயில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.சிவாலயங்களில் பரிவார தேவதையாக விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘ பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்..
இங்கேதான் திருமங்கையாழ்வார் பரமபதித்தார். அவருடைய திருவரசு இங்கு உண்டு. சுவாமி ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது பகவான் ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றான் .அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்.
இங்கு கைசிக ஏகாதசி விசேஷம்.அதோடு ஸ்வாரஸ்யமான கதை உண்டு .
இதே திருக்குறுங்குடியில் பாணர் குலத்தில் நம்பாடுவான் என்ற ஒரு எளிய பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் பேர் கூடச் சரியாகத் தெரிய வில்லை. பெருமாள் நம்மை தினமும் பாடுகின்றவன் என்பதனால் பிரியத்தோடு நம்பாடுவான் என்று பெயர் சூட்டினார்.
வராக புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மகாத்மியம் இப்படித்தான் கூறுகின்றது. இவர் ஒவ்வொரு ஏகாதசிக்கும் முழுமையாக உபவாச மிருந்து, இரவெல்லாம் திருக்குறுங்குடி கோயில் நம்பியை பாடி, காலையில் துவாதசி பாரணை செய்வார்.
பிரம்மராட்சஸ்

இப்படி ஒரு கார்த்திகை வளர்பிறை ஏகாதசி அன்று இவர் கோயிலுக்குப் பாடச் சென்ற போது வழியில் பிரம்மராட்சஸ் பிடித்துக்கொண்டது.
“எனக்கு பசிக்கிறது. உன்னைச் சாப்பிடப் போகிறேன் “என்று பயமுறுத்தியது. நம்பாடுவான், ஒரு உயிருக்கு தான் உணவாவது குறித்து எந்தக் கவலையும் படவில்லை.
ஆனால் பெருமாள் கைங்கரியம் அதாவது பாடும் தொண்டுக்கு தடை வருமே என்று வருத்தப்பட்டார். தான் கோயிலுக்குச் சென்று பாடி முடித்து விட்டு வந்தவுடன், உனக்கு உணவாகிறேன் என்று சத்தியம் செய்து விட்டு, கோயிலுக்குச் சென்று விடுகிறார் நம்பாடுவான்.
இவர் செய்த சத்தியம் குறித்து அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சாஸ்திர நிர்ணய விஷயங்கள் வெகு அழகாகச் சொல்லப்ப ட்டுள்ளன.
நம்பாடுவான் பாடிவிட்டு திரும்பி வருகின்ற பொழுது, பிரம்ம ராட்ஸசன் நம் பாடுவான் பெருமையைப் புரிந்து கொண்டு,”தனக்கு சாபவிமோசனம் செய்யும்படி” வேண்டுகிறான்.
நம்பாடுவான் பலவாறு மறுத்து, கடைசியில் தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து, பிரம்ம ராட்சசை சாபத்திலிருந்து விடுவிக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் .
வேதம் ஓதிய அந்தனர் தவறான செயலால் பிரம்மராட்சஸாக மாறினார். ஆனால் கானம் பாடிய பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான் தான் பாடிய ஒரே ஒரு பண்ணின் பலனைத் தந்து சாபவிமோசனம் தந்தார் என்று சொன்னால் , பகவான்,
1. ஒருவர் பிறந்த குலத்தைப் பார்ப்பதில்லை; பக்தியை மட்டுமே பார்க்கின்றான்.
2. பகவான் தமிழ்பண்களைக் கேட்பதில் பிரியமானவனாக இருக் கின்றான். கைசிக ஏகாதசி அன்று இரவு கண் விழித்து பகவானைப் பாட வேண்டும்.அது நமக்கான புண்ணியங்களைத் தருவது மட்டுமல்ல, பிறருடைய பாவங்களையும் எரிக்க வல்லது.
இன்றைக்கும் திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி தினத்தன்று இரவில் கோயில் மண்டபத்தில் நம்பாடுவான் சரித்திரம் அபாரமாக நடைபெறும். இந்த நாடகத்தை பார்ப்பதற்கென்றே திருக்குறுங்குடியில் ஆயிரக் கணக்கானவர் வந்து சேருவார்கள் .
கைசிக புராண படனம்
இது தவிர அன்றைக்கு எல்லா வைணவ ஆலயங்களிலும் கைசிக புராண படனம் நடைபெறும்.. இந்த ஏகாதசியின் மற்றொரு பெருமை, ஆனி மாத வளர்பிறை ஏகாதசியில் ஜேஷ்டாபிஷேகம் செய்து கொண்டு, ஆவணி வளர்பிறை ஏகாதசியில் சயனத்திற்கு செல்லும்(யோக துயில்) பெருமாள், கார்த்திகை வளர்பிறை ஏகாதசியில் சாதுர்மாஸ்ய யோக நித்திரையில் இருந்து எழுகிறார். அதனால் இந்த ஏகாதசிக்கு உத்தான ஏகாதசி என்றும் பெயர் உண்டு. இந்த ஏகாதசி இரவில் பகவானுடைய புண்ணிய கதை களையும் புராணங்களையும் படிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்லியிருக்கின்றன.
ஸ்ரீ வராக புராணத்தில் சொல்லப்பட்டுள்ள கைசிக மகாத்மியத்தை வியாக்கியானத்தோடு எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் படிப்பார்கள்.
திருவரங்கத்தில் கைசிக ஏகாதசி
108 திவ்ய தேசங்களில் தலைமை திவ்ய தேசமான திருவரங்கத்தில் கைசிக ஏகாதசி அன்று காலையில் நம்பெருமாள் சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருள்வார். இரவு நம்பெருமாள் துலுக்க நாச்சியாருக்கு படி ஏற்ற சேவை சாதிப்பார். பின் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருள்வார். பகவானுக்கு செய்யும் வஸ்திர கைங்கரியங்களில் சில குறைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய, நம்பெருமாளுக்கு 360 போர்வையைச் சாற்றுவார்கள். அதன்பிறகு அரையர் சேவை அபி நயத்தோடு நடக்கும். திருக்குறுங்குடி பாசுரத்தை தாளத்தோடு பாடு வார்கள் .கைசிக புராணத்தை அக்காலத்தில் வாசிக்கும் உரிமை பராசர பட்டருக்கு இருந்தது. இப்பொழுதும் அந்த வம்சத்தவர்கள் திருவரங்கத்தில் இருப்பதால் அவர்களை புராணம் வாசிக்க அழைத்து வருவார்கள்.
கைசிக புராண புத்தகத்தோடு (ஸ்ரீ கோசம்)வருவார்.அர்ச்சகர் ஸ்ரீ கோசத்தை பெருமாளிடம் சமர்ப்பித்து வழக்கமான வழிபாடுகளை முடிப்பார். தீர்த்த பிரசாதங்களை கொடுத்தபிறகு பட்டர் அந்த புத்தகத்தை(ஸ்ரீ கோசம்) பார்த்து கைசிக புராணத்தை வியாக்யானத்தோடு வாசிப்பார்.
புராணம் பூர்த்தியானதும் அவருக்கு பிரசாதங்களை கொடுத்து கோயில் மரியாதையோடு அழைத்துச்சென்று அவருடைய திருமாளிகையில் விட்டு வருவார்கள்.
பிரம்ம ரதம்
அதன்பிறகு நம் பெருமாளுக்கு வேத விண்ணப்பம் நடக்கும். கட தீபம் ஆகும். நம்பெருமாள் ஆஸ்தான புறப்பாடு நடக்கும்.
அப்பொழுது பட்டார் தமது பாரம்பரிய அங்கி பட்டு குல்லாய் அணிந்து கொண்டு சன்னதிக்கு வருவார். அரையர்கள் பாடும் இன்னிசையை நம்பெருமாள் கேட்பார். அப்பொழுது அரங்கனின் திருமுடியிலும் திரு மேனியிலும் பச்சை கற்பூரப் பொடிகள் வாரி இறைப்பார்கள். புஷ்பங் களை சமர்ப்பிப்பார்கள்.ஆஸ்தான மேல் படியில் நம்பெருமாளுக்கு திருவந்திக்காப்பு ஆகும். கைசிக புராணம் அவதரித்த நாளில் ,புராணம் வாசித்த “நம் பட்டரை திருமாளிகையில் ( வீட்டில்) விட்டு வா” என்ற பெருமாள் உத்தரவு வாங்கி அர்ச்சகர் சொல்வார். ஸ்தானிகர் அதை கோயில் மணியக்காரரிடம் சொல்லுவார்..நம்பெருமாள் தம்முடைய திருமேனியில் சாத்தி இருந்த மாலையை களைந்து பட்டருக்குச் சாதிப்பார். ஸ்ரீசடாரி, அபயஹஸ்த மரியாதைகள் நடைபெறும் .
பட்டர் உள்ளே சென்று பெரிய பெருமாளை சேவித்து, வெளியே ஆர்ய படாள் வாசல் வந்தவுடன், வாத்தியங்களோடு புறப்படுவார். பெரிய பெருமாளை வலம்வந்து ஆலய வாசலில் இருக்கும் ரதம் போன்ற ஒரு கேடயத்தில் தம்முடைய திருமாளிகைக்கு பட்டர் செல்வார். இதற்கு பிரம்ம ரதம் என்று பெயர் .
இந்த பிரம்ம ரதம் ஏறிய பட்டர் ,தாயார் சன்னதி வரை உள்ள பல சன்னதிகளில் நின்று ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் இவர்களின் மாலையைப் பெற்றுக்கொண்டு நாச்சியார் சன்னதி வாசலில் மேட்டழகிய சிங்கர் மாலை யையும் பெற்றுக்கொண்டு தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருள்வார்.
இதைப்போலவே பிரம்மா ரதம் நிகழ்ச்சி திருக்கோவலூரிலும் திருச் சித்ரகூடம் முதலிய பல்வேறு திவ்ய தேசங்களிலும் நடைபெறும்.
கைசிக புராணம் புத்தகத்தை பார்த்து பெருமாளுக்கு முன்னால் படிக்கப் படும். பெருமாள் சன்னதியில் அவரவர்களுக்கு மரியாதை செய்த பிறகு கோயில் மரியாதையோடு திருமாளிகையில் (வீட்டில்) விட்டு வரச் செய்வர். மேளதாளங்களோடு கோயிலில் இருந்து புறப்பட்டு தங்கள் வீடு களுக்கு வந்து சேர்வார்கள்.
நம்பாடுவான் சரித்திரமும்,கைசிக புராணம் படித்தலும்,பிரம்ம ரத மரியா தையும் கைசிக ஏகாதசியில் நடைபெறும் மகத்தான விசேஷங்கள் .
