மாயவரம் பக்கத்திலே ஆனந்ததாண்டவபுரம் என்று ஒரு ஊர். ஆனந்த தாண்டவம் இப்பொழுது ஆனதாண்டவபுரம் என்று வழங்கப்படுகிறது. அந்த ஊரிலே வேளாளர் குலத்திலே அவதரித்தவர் மானக்கஞ்சாற நாயனார். அரசனுக்கு சேனைத் தலைவராக பதவி வகித்தவர். சிவ நெறிச்செல்வர்.
அவர் சிலகாலம் பிள்ளைப் பேறின்மையால் அதிதுக்கங்கொண்டு, பிள்ளைப் பேற்றின் பொருட்டுப் பரமசிவனை உபாசனைபண்ணி, அவருடைய திரு வருளினால் ஒரு பெண்குழந்தையைப் பெற்றார். பேரழகும் பெருங் குணமும் வாய்ந்த அந்தப் பெண் குழந்தையை பெருமையோடு வளர்த் தார். அந்தப் பெண் குழந்தையும் நல்ல பண்போடு வளர்ந்தது. உரிய வயது அடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதற்காக, தகுந்த மண மகனைத் தேடினார். ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்ற சிவபக்தர் கிடைத்தார்.
திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த நேரத்தில் மாவிரத முனி வர் என்ற பெயரோடு ஒரு வயதான சிவனடியார் வந்தார். மானக்கஞ்சாற நாயனார் அவருக்கு பல விதமான உபசாரங்கள் செய்தார்.. தன்னுடைய மகளையும் ஆசி பெற வைத்தார்.
மணமகளின் நீண்ட கூந்தலை பார்த்த அந்த முனிவர் அவளுடைய கூந்தலை அரிந்து கொடுத்தால் தமக்கு உதவும் என கேட்க, ஒரு சிவனடி யார் கேட்டதை தராமல் இருப்பதா என்று எண்ணிய மானக்கஞ்சாற நாயனார், உடனடியாக தம்முடைய பெண் ணின் கூந்தலை அரிந்து கொடுத்தார். இந்த விஷயங்களைக் கேட்ட கலிக்காம நாயனார், தன்னு டைய மாமனாரின் சிவபக்தியை எண்ணி மகிழ்ந்தார் .இந்த நிகழ்ச்சியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்று ஏங்கினார்.
கலிக்காம நாயனார் விரைந்து சென்று மணப் பெண்ணை பார்த்தார். ஆனால் , அவள் சர்வ அலங்கார பூஷிதையாக கருத்த குழலோடும் கலை மான் விழியோடும் அற்புத அழகோடும் காட்சி தந்தாள். ஆம். சிவபிரான் அவள் கூந்தலை மறுபடியும் தோன்றச் செய்தார்.சாதாரண மனிதர்களின் செயலுக்கு அப்பாற்பட்ட சிவபக்தியும் வைராக்கிய சீலமும் கொண்ட மானக்கஞ்சாற நாயனாரின் குருபூஜை தினம் இன்று. அவர் குருபூஜையில் கலந்து கொள்வோம்.
கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்சீர்க்
காதன்மகள் வதுவைமணங் காண நாதன்
வஞ்சமலி மாவிரதத் தலைவ னாகி
வந்துபுகுந் தவளளக மகிழ்ந்து நோக்கிப்
பஞ்சவடிக் காமென்ன வரிந்து நீட்டும்
பத்தரெதீர் மறைந்திறைவன் பணித்த வாக்கா
லெஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை
யேயர்பிராற் குதவியரு ளெய்தி னாரே.
