அத்யயன உற்சவம் Adhyayana Utsavam
21 நாட்கள் நடைபெறும் திருவிழா
21 Days Grand Festival in Perumal Temple
– Sri. S.Gokulachari – எஸ். கோகுலாச்சாரி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், தன்னுடைய வாழ்க்கை முடிந்த பின்னால், தான் நிலவுலகில் வாழ்ந்த உத்தமமான வாழ்க்கைக்குப் பலனாக, உயர்ந்த உலகத்தை அடைவான் என்பது எல்லா மதத்தினரின் நம்பிக்கை.
தமிழர்களின் தொன்மையான மதமான வைணவ மதத்தில், ஒவ்வொரு உயிர்களின் குறிக்கோள், இறைவன் உறையும் உத்தமமான வைகுண்ட வான் நகரை அடைந்து அந்தமில் பேரின்பத்தில் திளைப்பது;பகவானுக்குத் தொண்டு புரிவது தான்.
சரி, இந்த வைகுண்டத்தை எப்படி அடைவது? அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒருவன் இங்கு வாழும் வாழ்க்கையால் வைகுண்டத்தை அடைய முடியுமா? அந்த வைகுண்டத்தை அடைகின்ற மார்க்கம் எப்படி இருக்கும்? இவற்றை யெல்லாம் சொல்லுகின்ற ஒரு நிகழ்வுதான் வைகுண்ட ஏகாதசி நிகழ்வு.
இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் டிசம்பர் 3-ந்தேதி திருநெடுங்தாண்டகத்துடன் தொடங் குகிறது.
மறுநாள் 4-ந்தேதி திருமொழி திருநாள் தொடக்கம் (பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள்)
விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 14-ந்தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். நம்பெருமாள் பரமபதவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை, “பாஞ்சராத்ர ஆகமம்’ “Pancharatra agama” முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன.

பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், இராப்பத்து உற்வசமும் கொண்டாடப்படும்.சிலவேளை, மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத்திருநாளும் வந்தால், தை பிரம் மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த் திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. கார்த்திகை மாதத்தில் தான் பரமபத வாசலும் திறக்கப்படுகிறது. இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
ஏகாதசி விரதம் மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும் சொல்லப்பட்டது. சுவாமி நம்மாழ்வார், தன்னுடைய பாசுரத்தில் ஒரு விஷயத்தைச் சொல் கின்றார். தேவர்கள் கூட, வைகுந்தத்தை அடைய முடியாது. வைகுண்டத்தை அடைவதற்கான ஒரே வழி மனிதர்களாகப் பிறந்து, இந்த கர்ம பூமியில் வாழ்ந்து, திருமால் அடியார்களாய் இருந்து, சாஸ்திரத்தில் சொல்லப் பட்ட ஏகாதசி முதலிய விரதங்களை முறையாகக் கடைபிடித்து, பகவானை சரணாகதி அடைந்தால் மட்டுமே, வைகுண்டத்தை அடையமுடியும்.
இதை ஒரு பாசுரத்தில் சொல்லுகின்றார்.
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
தேவர்கள் கூட மனித வடிவம் எடுத்து நாரயணனை சரணாகதி செய்து வைகுண்டம் புக வேண்டும்.வேறு விதி இல்லை என்கிறார்.
அத்யயன உற்சவம் என்றால் என்ன?
What is meant by Adhyayana Utsavam?
மார்கழிமாதம் தேவர்களுக்கு விடியற்காலை, பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வார்கள். மார்கழிமாதத்தில் வளர்பிறை பிரதமை தொடங்கி, 20 நாட்கள் பகவானுக்கு உற்சவம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ பாஞ்ச ராத்திரம் ஸ்ரீ பிரஸன்ன ஸம்ஹிதையில் விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமை முதல் தசமி முடிய பத்து நாள் ஆகும் வேதங்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடி உற்சவம் செய்ய வேண்டும். அந்த பத்துநாள் உற்சவத்திற்கு “அத்யயன உற்சவம்” என்று பெயர். அத்யயனம் என்றால் வேதங்களை பாராயணம் செய்தல் என்று பொருள்.
மோட்ச உற்சவம் என்றால் என்ன?
What is meant by Moksha Utsavam?
அடுத்து வளர்பிறை ஏகாதசி முதல் பஞ்சமி முடிய 10 நாட்கள் நடத்த வேண்டிய உற்சவத்திற்கு “மோட்ச உற்சவம்” என்று பெயர்.
அத்யயன உற்சவம் பகலில் செய்ய வேண்டிய உற்சவம் .
மோட்ச உற்சவம் இரவில் செய்யவேண்டிய உற்சவம்.
இந்த உற்சவங்களில் பகவானை மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி உற்சவங்களை நடத்த வேண்டும். ஏகாதசியன்று பகவத் சன்னதிகளில் , வேதங்களை ஆரம்பித்து, பத்து நாட்கள் தொடர்ச்சியாக நடத்தி, பத்தாவது நாளில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஆகமங்களில் சொல்லப்பட்ட விதி. திருமங்கையாழ்வார் காலம் வரையிலும் இந்த விதிப்படியே நடந்தது .
திருமங்கை ஆழ்வார். Thirumangai Azhwar
திருமங்கை ஆழ்வார் காலத்தில் வேதங்களையும் ஸ்தோத்ரங்களையும் தவிர, வேறு எதுவும் பகவான் முன் சமர்ப்பிக்கப்படவில்லை. திருமங்கை யாழ்வார்தான் இந்த உற்சவத்தின் அமைப்பை முதன்முதலில் மாற்றி யவர்.

திருமங்கை ஆழ்வார், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நாளில் அவ தாரம் செய்தவர் திருமங்கையாழ்வார். வைணவ ஆழ்வார்கள் பரம்பரை நம்மாழ்வாரிடம் தொடங்கி, திருமங்கையாழ்வாரிடம் முடியும். நம்மாழ் வாரை “பராங்குசன்” என்றும், திருமங்கை ஆழ்வாரை “பரகாலன்” என்றும் சொல்வார்கள். வைணவ பரம்பரையைச் சொல்லுகின்ற பொழுது “பராங்குச பரகால எதிவராதிகள் என்று சொல்லும் வழக்கம் உண்டு.
காத்திருந்து சாதித்த திருமங்கை ஆழ்வார்.
திருமங்கையாழ்வார், தம்முடைய தலைவராகிய நம்மாழ்வாரின் பாசுரங் களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங் களையும், நான்கு வேதங்களுக்குச் சமமாகக் கொண்டால், அதற்கு ஆறு அங்கங்களை ஆறு பிரபந்தங்களாக அருளியவர் திருமங்கை ஆழ்வார். அப்பொழுது வடமொழி வேதங்கள் தான் கோயிலிலே ஓதப்பட்டனவே தவிர, ஆழ்வார்களின் தமிழ் பிரபந்தங்கள் முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. நம்மாழ்வாரின் தமிழ் பிரபந்தங்களுக்கு எப்படியாவது ஒரு அந்தஸ்து பெற்றுத் தரவேண்டும். வேதங்களைப் போலவே தன்னுடைய திருச்செவிகளால் எம்பெருமான், தமிழ் வேதமான நம்மாழ்வாரின் திருவாய் மொழியைக் கேட்கச் செய்ய வேண்டும் என்ற உறுதி கொண்டார். இதற்கான ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
திருநெடுந்தாண்டகம் – Thirunedunthandagam
தன்னுடைய ஜென்ம நட்சத்திரமான கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத் திரத்தில், திருவரங்கன் முன்னால், தன்னுடைய ஆறாவது பிரபந்தமான திருநெடுந்தாண்டகம் என்கின்ற பிரபந்தத்தை தேவகானத்தில் இசைத்தார் திருமங்கையாழ்வார்.
அன்றைய இசையும் அபிநயமும் மிக அற்புதமாக இருந்தது. பெரு மாளும் மிகவும் உள்ளமுகந்தார். சாமவேதம் கேட்டுப் பழகிய எம்பெரு மானின் திருச்செவிகளுக்கு, உணர்ச்சிகரமான, உள்ளம் உருக்கும் தமிழ் பிரபந்தமாகிய திருநெடுந்தாண்டகம், எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இதைப் பாடிய திருமங்கையாழ்வாருக்கு ஏதேனும் வரம் தந்தை ஆக வேண்டும் என்பதால், அர்ச்சகர் மீது ஆவேசித்து, திருமங்கையாழ்வாருக்கு பரிசு தர எண்ணினார்.
என்ன பரிசு வேண்டும்?
திருநெடுந்தாண்டகத்தில் மயங்கிய பெருமாள் கேட்டார்.
” உமக்கு நாம் சம்பாவனை செய்யவேண்டும். என்ன சம்பாவனை?”
அப்பொழுது திருமங்கை மன்னன் “நாயந்தே ! அடியேனை தேவரீர் ஏன் என்றும் கேட்கும்படியான பாக்கியத்தை அடைந்தேன். நான் என்ன பிரார்த் தனை செய்யப் போகிறேன்? உன்னால் என்ன வேண்டும் என்று கேட்கப் பட்டதே பெருமை அல்லவா? நான் அடைய வேண்டிய பொருளோ குறையோ ஏதும் இல்லை. ஆனாலும் தேவரீர் கேட்பதால், அடியேன் ஒரு வரம் கேட்கின்றேன்.”
தமிழின் பெருமை Importance of Tamil
பெருமாள் கேட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நம்மாழ்வாரின் தமிழுக்கு ஏற்றம் தேட நினைத்தார் திருமங்கை ஆழ்வார்.
“என்ன வரம்?” என்று பெருமாள் கேட்க, ஆழ்வாரின் தமிழுக்கு “வேத ஸாமியம் தரவேண்டும்” என்று கேட்க, “அது என்ன?” என்று பெருமாளும் திரும்பக் கேட்க,” தேவரீர் வைகுண்டத்தில் எப்பொழுதும் சாமகானம் கேட்டுக் கொண்டிருப்பீர். பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில் மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று உற்சவத்தின்போது நீர் வடமொழி வேதத்தோடு தமிழ் வேதமாகிய திருவாய்மொழியையும் சமமாகக் கேட்டருள வேண்டும்.திருவாய்மொழித் திருநாளாக இந்த விழா நடக்க வேண்டும்“என்று கேட்க, பகவானும் அப்படியே தந்தரு ளினார்.
தமிழ் விழாவாக மாறியது.
இப்படித்தான் “வேதவிழா’ ,திருவாய்மொழி விழாவாக மாறியது. ஆழ் வார்கள் திருவோலக்கத்தில், நம் பெருமாள் தினம் இரவு, மதுரகவி கானமாக திருவாய்மொழி கேட்டருளுகிறார்.ஒரு தமிழ் பிரபந்தத்திற்காக 1400 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விழா இது.
அதற்குக் காரணம் திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம். இப் பொழுதும் வைகுண்ட ஏகாதசி விழா “திருநெடுந்தாண்டக பிரவேசத்தோடு தான் நடக்கும். இதில் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று உண்டு. திருமங்கை ஆழ்வார் இங்கு தம் பாடலுக்கு ஏற்றம் கேட்கவில்லை.தம் தலைவர் நம்மாழ்வார் பாசுரங்களுக்கு ஏற்றம் கேட்டார்.அது தான் திரு மங்கை ஆழ்வார்.

நம்மாழ்வார் வருகை – Swamy Naamzhwar Arrival
இது நடந்தது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்.திருவரங்கனிடம் அனுமதி பெற்ற திருமங்கையாழ்வார், அப்பொழுதே இந்தச் சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது என்று முடிவு செய்தார்.
அதே ஆண்டு ,மார்கழி மாத வேத உற்சவத்தை, நம்மாழ்வாரின் தமிழ் உற்சவமாக அதாவது திருவாய்மொழித் திருநாளாகக் (இதற்கு பெரிய திருநாள் உற்சவம் என்றும் ஒரு பெயர் உண்டு) கொண்டாட வேண்டும் என்று தீர்மா னித்தார். பெருமாளிடம் பிரார்த்தனை செய்ய ,பெருமான் அப்பொழுதே திருமுகம் தந்தருளி, சகல மரியாதைகளையும் தந்து , உற்சவத்திற்கு நம் மாழ்வார் திருவுருவத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று திருமங்கை ஆழ்வாரை பாண்டி நாடு ,ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பிவைத்தார்.

அரங்கனின் அருள் பிரசாதத்தையும் ஸ்ரீமுக பட்டயத்தையும் அங்குள்ள ஸ்தலத்தார் ,நம்மாழ்வார் முன் சமர்ப்பித்து , பல்லக்கு பரிவாரத்துடன் நம் மாழ்வாரை எழுந்தருளச் செய்து திருவரங்கம் வந்து சேர்ந்தார்.
இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் முதலிய திவ்ய தேசங்களில் இந்த விழா மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.
இன்னும் இந்த உற்சவம் பற்றிச் சொல்ல ஆயிரம் செய்திகள் உண்டு.
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- அலகிலா விளையாட்டு – Alagila Vilayattu

- வடநாட்டு திவ்ய தேச புனிதப் பயண அனுபவம்

- வராக அவதாரம் ஏன் சிறப்புடையது? ஸத்ஸங்கம் கேள்வி – பதில்

- ஸ்வாமி தேசிகன் உபதேசங்கள் Desikan Upadesangal – Sri.D.K.Srinivasan

- சிறுநீரகங்களை பாதுகாப்போம்! Protect your Kidney – Dr K Sampathkumar

- Dhivya Desa Yatra Nidhivan Mystery நிதிவனம்

- Tulasi offered to Tirupathi perumal – திருப்பதி பெருமாளும் துளசியும்

