வடநாட்டு திவ்ய தேச புனிதப் பயண அனுபவம்
மு. வெ. ரெங்கராஜன், மதுரை.
பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ண லீலைகள்:
கோகுலத்தில் இருந்தபோது பூதனை, சகடாசுரன் மற்றும் திருணாவர்த்தன் போன்ற அசுரர்களை வதம் செய்தான். பெரும் உயிர் பயத்திலிருந்த கம்சனுக்கு தூக்கம் வரவில்லை. ஸ்ரீகிருஷ்ணன் பிருந்தாவனத்தில் வளர்கிறான் என்ற செய்தியை அறிந்த கம்சன் மறுபடியும் அசுரர்களை ஸ்ரீகிருஷ்ணன் மேல் ஏவ ஆரம்பித்தான். அப்படி முதலில் பிருந்தாவனத்திற்கு வந்த அசுரன் வத்ஸாசுரன்.
வத்சுர வதம்: (கன்று வடிவ அசுரன் வதம்)
வத்ஸ என்றால் கன்று என்று பொருள். சுமார் மூன்று வயதைத் தாண்டிய ஸ்ரீ கிருஷ்ணன் ஆநிரை மேய்க்கச் சென்றபோது, இந்த அசுரன் கன்று வடிவில் வந்து ஆநிரைக் கூட்டத்திலிருந்து கன்றுகளோடு கன்றாக சேர்ந்து கொண்டான். ஸ்ரீகிருஷ்ணனை வதம் செய்ய, தக்கத் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான். அதே சமயத்தில் மற்றொரு அசுரன் பக்கத்திலுள்ள விளாமரத்தின் பழமாக உருவெடுத்து மரத்தில் தொங்கியவாறு இருந்தான். இருவரையும் கண்ட மாயக் கண்ணன், கன்றாக வந்த அசுரனின் இருபின்னங்கால்களை ஒருசேரப் பிடித்து கவண் வைத்து எறிந்தாற்போல் விளாம் பழமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் அசுரன் மேல் எறிந்தான். இரு அசுரர்களும் மோதி மாண்டனர். இந்த லீலையைத்தான் “கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி” என்று ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையில் ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றிப் பாடுகிறாள்.
பகாசுர வதம்: (கொக்கு வடிவ அசுர வதம்)
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு சுமார் நான்கு வயதாகும்போது, கம்சனால் அனுப்பப்பட்ட ஒரு அசுரன் பெரிய கொக்கு வடிவம் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் மேல் பாய்ந்து வந்தான். ஸ்ரீகிருஷ்ணன் அதன் அலகுகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்து வதம் செய்தான். இந்த லீலையைத்தான்“புள்ளின்வாய் கீண்டானை” (புள் -பறவை) என்று ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையில் ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றிப் பாடுகிறாள்.
தேனுகாசுரன் மற்று அரிடாசுரன் வதங்கள்:
கழுதை வடிவ தேனுகாசுரன் மற்றும் காளைவடிவ அரிடாசுரன் என்ற அனைத்து அசுரர்களையும் தக்க சமயத்தில் அடையாளம் கண்டு அனாயாசமாக வதம் செய்தான் ஸ்ரீ கிருஷ்ணன். விட்டில் பூச்சிகள் தானே வந்து விளக்கில் சிக்கி மாள்வது போல இவர்களும் தானே வந்து ஸ்ரீ கிருஷ்ணன் பிடியில் சிக்கி மாண்டார்கள்.
அகாசுர வதம் : ( மலைப்பாம்பு வடிவ அசுர வதம்)
இந்த அசுரன் பூதனைக்கும் பகாசுரனுக்கும் தம்பி. தமக்கை மற்றும் தமயனைக் கொன்ற ஸ்ரீ கிருஷ்ணனைக் கொல்ல பல நாட்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான். ஸ்ரீகிருஷ்ணன் ஆயர்பாடிச் சிறுவர்களுடன் கோவர்த்தன மலைப்பக்கம் பசுக்களுடன் சென்றான். தக்க சமயம் பார்த்த அகாசுரன் ஒரு பெரிய மலைப்பாம்பாக உருவெடுத்து வாயை ஒரு குன்றின் குகையாக மாற்றிக்கொண்டான். அதனை மலைக்குகை என்று எண்ணி பாம்பின் வாய்க்குள் சென்றனர்.

அந்தச் சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆயர் சிறுவர்களிடமிருந்து சற்று விலகி கன்றுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். இவர்கள் பாம்பின் வாய்க்குள் சென்றதைக் கவனிக்கவில்லை. அகாசுரன் எண்ணியதுபோல சிறுவர்களைத் தேடி இருவரும் வந்தனர். ஸ்ரீகிருஷ்ணன் அகாசுரனின் மாயஜாலம் என்று தெரிந்து கொண்டு அவன் வாய்க்குள் நுழைந்தான். காத்துக் கொண்டிருந்த அகாசுரனும் வேட்டை கிடைத்துவிட்டது என்று எண்ணி வாயை மூடினான். உள்ளே சென்ற ஸ்ரீகிருஷ்ணன் தொண்டையில் போய் தன்னுடைய உருவத்தைப் பெரிதாக்கினான். அகாசுரன் வயிறு கிழிந்து மாண்டான். அப்போது கண்ணன் வயது சுமார் நான்கு வயதைத் தாண்டும்.
பிரம்ம மோகன லீலை: (பிரம்மதேவனை மயக்கிய விளையாட்டு)
வனபோஜனம்:
ஸ்ரீகிருஷ்ணன் மலைப்பாம்பு வடிவில் வந்த அகாசுரனை அழித்து, அனைத்து சிறுவர்களையும் பசுக்களையும் காத்து ரட்ஷித்தான் என்று பார்த்தோமல்லவா? அந்த அகாசுரன் உயிர்பிரியும்போது அவனது உடலிலிருந்து ஒரு சிறு ஒளியானது புறப்பட்டு ஸ்ரீகிருஷ்ணனுடைய திருவடிகளில் சரணடைந்து மறைந்தது. அதாவது அந்த அசுரனுக்கு முக்தி கிட்டியது. இந்த நிகழ்வுகளை எல்லாம் வானிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த தேவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து ஸ்ரீகிருஷ்ணன்மேல் பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர்.
அதன்பின் அங்கிருந்து புறப்பட்ட ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் ஆயர் சிறுவர்களும் யமுனைக் கரையில் பசுக்களை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, மதிய நேரத்தில் ஆற்றின் நடுவிலுள்ள ஒரு மணற்திட்டில் அமர்ந்தனர். ஸ்ரீகிருஷ்ணன் நடுவில் அமர, மற்ற சிறுவர்கள் வட்டவடிவில் அமர்ந்து கொண்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் கொண்டுவந்த பலவித உணவுப் பண்டங்களை, ஸ்ரீகிருஷ்ணன் அங்கிருந்த இலை தழைகளில் வைத்து, அனைவருக்கும் பரிமாறினார். அனைவரும் உணவை வாங்கி இடது கையிலே வைத்துக் கொண்டு, சிறு விரல்களின் இடுக்கில் ஊறுகாயை வைத்து ஆனந்தமாக ருசித்துப் புசித்தனர். அதன்பின் அவரவர்களுக்குப் பிரியமான பண்டங்களை எச்சில் கைகளாலேயே ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். ஆயர் சிறுவர்கள் எச்சில் செய்த பண்டங்களை ஸ்ரீகிருஷ்ணன் பிரியமாக வாங்கிக் சாப்பிட்டார். இவ்வாறு மணற்திட்டைச் சுற்றிப் பாய்ந்துவரும் தூய யமுனை நீரோட்டத்தை ரசித்தவாறும், ஒருவருக்கொருவர் பரிகாசம் செய்து விளையாடியவாறும் மதிய வனபோஜனம் செய்த முடித்தார்கள்.
தேவர்களின் ஏக்கம்:
தேவர்கள் ஸ்ரீகிருஷ்ணனிடம் அன்று காலையில் அகாசுர வதத்தில் கண்ட மேன்மையும், மதியம் வனபோஜனத்தில் கண்ட எளிமையும் கண்டு வியந்தார்கள். மேன்மையான யாகங்கள் செய்யப்பட்டு அதன் சுத்தமான ஹவிர்பாகம் பெறும் யக்ஞ புருஷனான, யக்ஞ நாராயணன், இப்பொழுது ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்து எத்தனை எளிமையாக ஆயர் சிறுவர்களின் எச்சிலை எடுத்து உண்கிறான் என்று எண்ணி, அந்த மாயனின் மாயங்களின் மகிமையில் மயங்கினார்கள். சிறந்த ஞானிகளுக்கும், யோகிகளுக்குமே எட்டாக் கனியான பரம்பொருள், ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்து இடக்கை வலக்கை அறியாத ஆயர்களின் ஆத்ம பந்துவாக இருக்கிறானே. சிறந்த பிறவியான தேவர்களாகப் பிறந்த நமக்கு இந்த எளிய ஆயர் சிறுவர்களுக்கு கிடைக்கின்ற பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஏங்கினர். பசுக்களும் ஆயர் சிறுவர்களும் காணவில்லை:
வனபோஜனம் முடிந்தநிலையில், சிறுவர்கள் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களைக் காணவந்தனர். அக்கம் பக்கத்தில் பசுக்களைக் காணவில்லை. சிறுவர்களை யமுனைக்கரையில் நிறுத்திவிட்டு பசுக்களைத்தேடி அடர்ந்த காட்டிற்குள் சென்றார் ஸ்ரீகிருஷ்ணன். பசுக்களின் பெயர்களைச் சொல்லி கூவிக்கூவி அழைத்தார். எங்கிருந்தும் பதில் இல்லை. மறுபடியும் யமுனைக்கரைக்கு திரும்பி வந்தார். அவ்விடத்தில் ஆயர் சிறுவர்கள் காணப்படவில்லை. கள்வனுக்குக் கள்வனான கண்ணனுக்கா தெரியாமலிருக்கும்?. தேடிச் சென்றதெல்லாம் இந்த மாயாவியின் மாய விளையாட்டுதானே!. பசுக்களையும் சிறுவர்களையும் கவர்ந்து ஒளித்து வைத்தது பிரம்மதேவன்தான் என்பதை அறிந்தார். ஆம்! அந்த பிரம்மதேவனிடத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவரான பரம்பொருள் ஸ்ரீகிருஷ்ணன் அல்லவா?.
பிரம்மதேவனின் விளையாட்டு:
ஸ்ரீகிருஷ்ணனின் மாய விளையாட்டுகளால் கவரப்பட்ட பிரம்மதேவன் தானும் ஏதாவது ஒரு மாயவிளையாட்டு செய்து, ஸ்ரீகிருஷ்ணனின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டார். எனவே சிறுவர்கள் வனபோஜனம் செய்து கொண்டிருந்த தருணத்தைப் பயன்படுத்தி, பசுக்களையும் சிறுவர்களையும் அபகரித்து, தன்னுடைய பிரம்மலோகத்தில் ஒளித்து வைத்துக்கொண்டார். குழந்தைக் கிருஷ்ணன்தானே! தன்னிடம் வந்து கேட்டால் பசுக்களையும் சிறுவர்களையும் திரும்ப ஒப்படைப்போம் என்று எண்ணி, மாயையில் சிக்கி தன்னைப் படைத்தவனிடமே விளையாடுகிறோம் என்பதையும் மறந்தார்.
ஸ்ரீகிருஷ்ணனே சிறுவர்களாகவும் பசுக்களாகவும் உருமாறினார்:
கள்வனுக்குக் கள்வனான ஸ்ரீகிருஷ்ணன் பிரம்மதேவனுக்கு பாடம் புகட்ட எண்ணினார். எனவே தானே அத்தனை சிறுவர்களாகவும் பசுக்களாகவும் உருமாறினார். எப்படி என்றால் உருவம், நிறம், நடை உடை பாவனை அணிந்திருந்த உடைகள், கைகளில் வைத்திருக்கும் கோல்கள் போன்ற அனைத்திலும் அந்தந்த சிறுவர்கள் எப்படி இருந்தார்களோ அதேபோலவும். அந்தந்த சிறுவர்கள் மேய்க்க அழைத்துவந்த பசுக்கள் மற்றும் கன்றுகள் ஆகியவை எந்தெந்த நிறம், உருவம், கொம்பு, மடி போன்றவை இருந்ததோ, அதேபோல உருமாறினார். சர்வ வல்லமையுள்ள ஜகத்காரணனான அவர் நினைத்தால் முடியாதது உண்டோ?. வழக்கம்போல் அன்று மாலை ஸ்ரீகிருஷ்ணனே உருமாறிய அந்தந்த சிறுவர்கள் தங்கள் தங்கள் உருமாறிய பசுக்களுடன் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். அந்தந்த பசுக்களும் கன்றுகளும் அந்தந்த வீட்டு மாட்டுக் கொட்டிலுக்கு வழக்கம்போல் சென்றது. பலராமன் கண்டுபிடித்தார் இவ்வாறு இரவில் தங்கிய பசுக்களை வழக்கம்போல் மறுநாள் அந்தந்த சிறுவர்கள் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறு சிலநாட்கள் தொடந்தன. இந்தக் காலகட்டத்தில் அந்தந்த வீட்டுப் பெரியவர்கள் எப்பொழுதும் இல்லாத அளவில் சிறுவர்களிடம் அதிக பாசத்துடன் இருந்து வந்தார்கள். பசுக்களோ நன்றாக பால்சுரந்தும், பால்குடி மறந்த பெரிய கன்றுகளிடத்திலும் மிக அன்புடன் நாவால் நக்கிக் கொடுத்த வண்ணம் இருந்து வந்தது. இந்த அசாதரண நிலையைக்கண்ட ஸ்ரீகிருஷ்ணரின் அண்ணன் பலராமன் தன்னுடைய ஞான திருஷ்டியால் சிறுவர்களாகவும் பசுக்களாகவும் உருமாறியிருப்பது ஸ்ரீகிருஷ்ணனே என்று அறிந்தார். உடனே ஸ்ரீகிருஷ்ணனை அணுகி அவரிடம் இந்த லீலையின் நோக்கத்தை வினவ, மாமாயனான ஸ்ரீகிருஷ்ணன் பிரம்மதேவனின் செயலின் பொருட்டு, இவ்வாறு தான் இருப்பதாக புன்னகையுடன் கூறினார். வழக்கம் போல் மேய்ச்சல் தொழில் தொடர்ந்தபடியாக ஒருவருட காலம் முடிந்ததது.
பிரம்மதேவனின் வியப்பும் கலக்கமும்:
இந்த மனிதவாழ்வின் ஒருவருடகாலம் என்பது பிரம்மதேவனின் கால அளவிற்கு ஒரு நொடிப் பொழுதாகும். தனது ஒரு நொடிக்காலம் கடந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ணன் தன்னைத் தேடி வரவில்லை என்று எண்ணிய பிரம்மதேவன், வியப்பும் கலக்கமும் கொண்டார். எனவே பிரம்மதேவன் பிருந்தாவனம் வந்தார். இவர்அன்று அபகரித்த அனைத்து சிறுவர்களும் பசுக்களும் இன்று இங்கு இருப்பதைக் கண்டு வியந்தார். அவ்வாறு வியந்தவர் மறுபடியும் வேகமாக பிரம்மலோகம் சென்று பார்த்தார். பிருந்தாவனத்தில் கண்ட அதே சிறுவர்களையும், பசுக்களையும் பிரம்மலோகத்தில் கண்டு வியந்து கலக்கமடைந்தார். எது நிஜரூபம் என்று பிரம்மதேவனால் அறிந்து கொள்ளமுடியவில்லை.
மறுபடியும் பிருந்தாவனம் திரும்பினார். அங்கிருந்த அனைத்து சிறுவர்களும், பசுக்களும், நீலமேக சியாமளக் கண்ணனாக, பீதாம்பரம் தரித்து சகல ஆபரணங்கள் அணிந்து , சங்கு சக்கரத்துடன் நான்கு திருக் கரங்களுடன் காட்சி கொடுத்தார்கள். அடுத்த விநாடியில் அனைத்து காட்சிகளும் மறைந்தன. சற்று தள்ளி பிருந்தாவன புல்வெளியை நோக்கினார். அங்கு அத்தனை சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருக்க, பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு ஆயர் சிறுவனாக ஸ்ரீகிருஷ்ணன் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருந்தவாறு, மதிமயங்கி பீதிகொண்ட பிரம்மதேவன் படும்பாட்டை ஓரக்கண்ணால் ரசித்தவாறு ஒன்றும் அறியாதவர் போல் பசுக்கணங்களிடம் கவனம் செலுத்தினார்.
இந்தக் காட்சியைக் கண்ட பிரம்மதேவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று மதிமயக்கத்திலிருந்து வெளிவந்த பிரம்மதேவன், உலகத்தையே தன் மாயத்தால் மயக்குகின்ற மாமாயன் மஹாவிஷ்ணுவான ஸ்ரீகிருஷ்ண மாயையில் தான் சிக்கியதை உணர்ந்தார்.
பிரம்மதேவன் ஸ்ரீகிருஷ்ணரிடம் சரணடைதல்:
மயக்கம் தெளிந்த பிரம்மதேவன், உடனே ஸ்ரீகிருஷ்ணன் திருவடிகளில் பணிந்து நின்று தழுதழுத்த குரலில் தன்னை மன்னிக்குமாறு இவ்வாறு வேண்டினார். “அச்சுதா! அடியேன் அறிவில்லாதவன், ரஜோ குணமுள்ளவன், நானே படைப்பவன் என்ற கர்வம் என்னை ஆட்கொண்டுவிட்டது. மதிமயக்கத்தால் நீர் பரம்பொருள் என்பதையும் மறந்து, தவறு செய்துவிட்டேன். அடியேனை மன்னித்து அருள்புரிய வேண்டும். எந்த பகவானுடைய மேன்மையான திருவடிகளை எல்லா வேதங்களும் இன்னமும் தேடுகின்றனவோ, அந்த வேதங்களால் தேடப்படும் நீர் இந்த கோகுல பிருந்தாவன பகுதிகளில் எளிய ஆயர்குலத்தவருடன் எங்கும் பரவியுள்ளீர். எனவே இந்தப் பகுதியில் ஒரு மரம், செடி, கொடி, புல் என எதாவது ஒன்றாக பிறந்து ஆயர்குல மக்களின் பாததூளிகள்பட்டு புனிதமடைவதே சிறந்த பாக்யம் என்றார்.
சிறந்த சிந்தை, சொல், செயல் இம்மூன்றாலும், சிறந்த ஞானத்தாலும் உம்முடைய அருமை பெருமைகளை உள்ளபடி அறியமுடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். எல்லையுள்ள அறிவு கொண்ட எங்களைப் போன்றவர்களால் எல்லையில்லா உம்முடைய வைபவத்தை எப்படி அறியமுடியும்?. மேலும் அறிவால் உம்மை அறிய நிதை்தால், தான் தனது என்ற தடைகள் தலைதூக்கி உம்மை அறியவிடாமல் செய்யும் வாய்ப்புகளும் உள்ளது. பிரேம பக்தியே உம்மை அடையும் எளிய வழி. அறிவொன்றுமில்லாத ஆய்க் குலத்தவரின் பிரேம பக்தியே இதற்குச் சாட்சி. அவர்களின் பிரேமைக்குக் கட்டுப்பட்டவன் நீ! என்பதை அடியேன் இன்று அறிந்து கொண்டேன் என்றார். இவ்வாறு கூறியவர் ஸ்ரீகிருஷ்ணனின் பரமாத்வ தத்துவத்தை பலவாறு போற்றி அவரை மும்முறை வலம்வந்து வணங்கி தான் அபகரித்துச் சென்ற சிறுவர்களையும் பசுக்களையும் ஸ்ரீகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். ஸ்ரீகிருஷ்ணனும் பிரம்மதேவனை மன்னித்து அருளினார். ஸ்ரீகிருஷ்ணன் தானே உருமாறிய சிறுவர்களும் பசுக்களும் ஸ்ரீகிருஷ்ண மாயையில் மறைந்தனர். இவ்வாறு சுமார் ஒருவருடம் கழித்து பிரம்மலோகத்திலிருந்து திரும்பிவந்த நிஜ சிறுவர்கள் அன்று மாலை தங்கள் தங்கள் நிஜ பசுக்களுடன் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். ஒருவருட காலத்திற்கு முன் நடந்த மலைப் பாம்பு வடிவில் வந்த அசுரனை அழித்ததையும், அனைத்துச் சிறுவர்கள் மற்றும் பசுக்களை ஸ்ரீகிருஷ்ணன் காத்ததையும், அவரவர் வீட்டுப் பெரியவர்களிடம் அன்று காலையில் நடந்ததாகவே எண்ணி, ஸ்ரீகிருஷ்ணனின் பெருமையைப் பேசினார்கள். ஒருவருடம் முன் அவர்கள் பிரம்மலோகம் சென்ற நிகழ்வை, அவர்கள் அறியாதவாறு மாயக் கண்ணன் மாயத்தால் மறைத்தார். தேவர்களையும் அஞ்ஞானம் பற்றிக் கொள்ளும் என்பதை எடுத்துக்காட்டவே இந்த லீலை. பிரம்மதேவனே மோகித்ததால் (மதிமயக்கம் கொண்டதால் ) இந்த லீலை பிரம்ம மோகன லீலை எனப் பெயர் பெற்றது.
– தொடரும்.
