கூரத்தாழ்வான் அவதார நாள் 23.1.22
தரிசனத்திற்கு தரிசனம் தந்தவர்
– புவனை. முனைவர். ஸ்ரீராம். Dr.G.Sriram.
தரிசனத்திற்கு தரிசனம் தந்தவர் என்று ஒருவரைச் சொல்லவேண்டும் என்று சொன்னால்,வைணவத்தில் கூரத்தாழ்வானைச் சொல்லலாம். அவர் தம்முடைய கண்களை இழந்தார். ஆனால் வைணவ சமயத்திற்கு கண்களைத் தந்தார்.
கூரம்
காஞ்சிபுரம் நகருக்கு வடக்கே கூரம் என்ற திவ்ய தேசம் உள்ளது. அங்கே 1009 ஆம் ஆண்டு, தை மாதம், பஞ்சமி திதி வியாழக்கிழமை ஹஸ்த நட்சத்திரத்தில், இராமபிரானின் அம்சமாக அவதரித்தவர் கூரத்தாழ்வான். இவருடைய தந்தையார் பெயர் அனந்தர் .தாயார் பெயர் பெருந்தேவி நாயகி. இவருக்கு பல்வேறு திருநாமங்கள் உண்டு.
மூன்று செருக்கும் இல்லாதவர்
எப்பொழுதும் நம்மாழ்வார் போலவே எம்பெருமானின் குணங்களில் ஆழங்கால் பட்டு இருப்பவர்.
திருவரங்கத்தமுதனார் இவரைப் பற்றி சொல்லுகின்ற போது “குறும்பு இல்லாத ஒரு மகாத்மா” என்று சொல்லுவார் .
காரணம் இவர் பிறந்த உயர்ந்த கோத்திரத்தை பற்றிய செருக்கு இவரிடம் இருந்தது கிடையாது.
ராமானுஜருக்கு ஸ்ரீபாஷ்யம் எழுதுகின்ற பொழுது அவருக்கு வலதுகரமாக விளங்கிய இவருக்கு, தன்னுடைய சாஸ்திர அறிவு குறித்த செருக்கு கிடையாது.
பிறந்த பொது மிகப்பெரிய செல்வந்தராக ,கூரம் என்ற ஊருக்கு ராஜாவாக விளங்கிய இவருக்கு செல்வச் செருக்கும் கிடையாது .
ஒருவனுக்கு செல்வம், கல்வி, குலச் செருக்கு படுகுழியில் தள்ளிவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இப்படிவிழுந்தவர்கள் அநேகம்பேர். ஆனால் இவர் செருக்கால் விழாதவர் மட்டுமல்ல, அந்தக் குழியில் நம்மையும் விழாமல் காப்பாற்றுகின்றவர் என்று திருவரங்கத்தமுதனார் ஒரு பாசுரத்தில் பாடுகின்றார்.
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே
பிள்ளை பிள்ளை ஆழ்வான் என்ற அந்தணருக்கு உண்டான குல செருக்கை திருத்தி ஆட்கொண்டார் ஆத்ம ஞானம் மிக்க ஆழ்வான்.

நினைவாற்றல் மிக்கவர்
கூரத்தாழ்வான் மிகச் சிறந்த கல்வியாளர் நினைவாற்றல் மிக்கவர் .ஒரே ஒருமுறை படித்ததை வார்த்தைகள் மாறாமல் திரும்ப சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர். ஏக சந்த கிராகி.
ஒருமுறை காஷ்மீர தேசத்திற்கு இவருடன் சென்றார் ராமானுஜர். அங்கே பிரம்ம சூத்திரத்திற்கு போதாயன விருத்தி சுவடி இருந்தது.
தான் பாஷ்யம் எழுத அந்த உரை தேவையாய் இருந்தது.பல மாதம் நடந்து சாரதா பீடத்தில் இருந்த அந்த சுவடியோடு தமிழ்நாட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் சில கள்வர்கள் அந்தச் சுவடியைப் பறித்துச் சென்றனர்.மிகவும் கஷ்டப் பட்டு பெற்ற அந்த சுவடியை இழந்து விட்டோமே, இனி எப்படி ஸ்ரீ பாஷ்யம் செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த போது,” நீங்கள் கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு நாள் இரவிலும் அந்த சுவடி முழுவதும் நான் மனப்பாடம் செய்துவிட்டேன். அதில் உள்ள அத்தனை பகுதியும் என்னுடைய நெஞ்சில் உள்ளது.எந்தப் பகுதியை எப்போது கேட்டாலும் நான் சொல்லுவேன். இனி அந்த சுவடி இழந்ததற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி, ஸ்ரீ பாஷ்யம் எழுதுவதற்கு மிக பெரும் துணை புரிந்தவர் கூரத்தாழ்வான்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்.
மிகச்சிறந்த இரக்க குணம் உடையவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார். ஒரு முறை வாழை மரத்தில் உள்ள வாழை இலைகளை ஒருவன் அரிந்து செல்ல,அதிலிருந்து ஒழுகிய நீரைக் கண்டு, வாழைமரம் துடிக்கிறது. அதனால் தான் இந்த வாழை மரத்தின் இலையில் நீர் கசிகிறது. அது நீர் அல்ல. வாழை மரத்தில் குருதி என மயங்கி விழுந்தார்.
பெண்ணுக்கு வாழ்வு தந்தார்
ஒரு நாள் நம்முடைய ராஜ்ஜியத்தில், நகர்வலம் வந்தபோது, ஒரு பெண்ணின் வீட்டில் அழுகுரல் கேட்டது. யாரோ ஒரு ஜோதிடர் இந்தப் பெண்ணை மணந்து கொள்கின்ற ஆண்மகன் உடனடியாக இறந்து விடுவான் என்று சொல்ல, அதை நினைத்துக் கொண்டு அந்தக் குடும்பம் அழுது கொண்டிருந்தது. அவர்கள் பேசிய உரையாடலில் இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டவர், தானே அந்தப் பெண்ணை மணந்து கொள்வதாகக் கூறி அவர்களுடைய சங்கடத்தைத் தீர்த்தார்.
அந்தப் பெண்மணிக்கு ஆண்டாள் என்று பெயர்.
பின்னாளில் சாஸ்திரத்திலும் நிபுணத்துவம் பெற்ற அந்த அம்மையார் கூரத்தாழ்வானின் உயிராக, பரம பாகவதையாகத் திகழ்ந்தார். கூரத்தாழ் வானோடு உன்னத வாழ்க்கையை வெகுகாலம் வாழ்ந்து காட்டினார்.

பெரும் செல்வன்
பசி என்று ஒருவர் வந்தால் அந்தப் பசியை பொறுக்காத கூரத்தாழ்வான் தம்முடைய வீட்டிலே சதாசர்வகாலமும் ஏழை எளியவர்களுக்கு உணவிட்டு பசியாற்றும் பெரும் சேவையைச் செய்து கொண்டிருந்தார்.
இரவு எந்நேரம் ஆனாலும் கூட பசி என்று வந்தவர்களுக்கு உணவு தருகின்ற ஏற்பாட்டினை செய்து இருந்தார். இரவிலும் இனி யாரும் உண்பதற்கு வரமாட்டார்கள் என்று தெரிந்த பிறகுதான் தன்னுடைய வீட்டின் கதவுகளைத் தாழிட வேண்டும் என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
ஒருநாள் இரவில் கூரத்தாழ்வான் திருமாளிகை கதவுகள் சாற்றும் மணியோசை காஞ்சிபுரம் பேரருளாளன் கோயிலில் கேட்டது .அப்பொழுது பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்து கொண்டிருந்தார் திருக்கச்சி நம்பிகள் .
பெருமாள் நம்முடைய அன்பன் கூரேசன் இந்த நள்ளிரவு வரையில் ததி ஆராதனை நடத்திக் கொண்டிருந்தான் போலும் என்று கேட்க, சகல ஐஸ்வர்யங்களுக்கும் இருப்பிடமான பெரிய பிராட்டியார் சந்தோஷத்தோடு,” ஓ மிகப் பெரிய செல்வனோ” என்று சொல்ல, அடுத்தநாள் இச்செய்தியை திருக்கச்சி நம்பிகள் மகிழ்வுடன் தெரிவித்தார்.
உன்னுடைய செல்வத்தை சிலாகித்துப் பேசினார் பெரிய பிராட்டியார் என்று சொல்ல,” ஐயோ, செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி, அடியேன் செல்வத்தைப் பற்றி பேசினாரா? செல்வத்தில் பேரருளாளன் அல்லவா பெரும் செல்வன். அடியானை செல்வன் என்பது தகுமா என்று சொல்லி தம்முடைய பொருள் முழுவதையும் பேரருளாளன் தொண்டிற்கு உரித்தாக்கி விட்டு தம்முடைய மனைவியோடு அரண்மனையில் இருந்து வெளியேறினார் .
மடியில் கனம் இருந்தால் வழியில் பயம்
திருக்கச்சி நம்பிகள் ஆலோசனைக்கு ஏற்ப எம்பெருமானார் சீடராக மாறினார்.திருவரங்கம் புறப்பட்டார். காட்டுவழியில் செல்லுகின்ற பொழுது தம்முடைய மனைவி ஆண்டாள் தயங்கித் தயங்கி நடந்து வருவதைக் கண்டு, ஏன் இவ்வளவு பொறுமையாக நடந்து வருகிறாய்? அச்சத்தோடு நடந்து வர என்ன காரணம் என்று கேட்க,’ இங்கே கள்வர் பயம் இருக்கும்” என்று ஆண்டாள் சொல்ல, நம்மிடம் பயப்படும்படியான பொருள் என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் அல்லவா வழியில் பயம். உன் மடியில் என்ன இருக்கிறது என்று கேட்க ,அப்பொழுது ஆனால் தாங்கள் திருவமுது செய்ய ஒரே ஒரு தங்க கிண்ணத்தை மட்டும் எடுத்துக்கொண்டேன் என்று தெரிவித்தார்.
கூரத்தாழ்வான் சொன்னார். இந்தச் சிறிய ஆசையிலிருந்து தான் அத்த னையும் கிளைவிட்டு தொடங்குகின்றன. எல்லாவற்றையும் விட்டு விட்ட பிறகு இந்தக் பொன் வட்டில் மட்டும் நமக்கு எதற்கு? அதை தூக்கி தூர எறி என்று சொல்லி எறிந்தார்.
“இனி உன் மடியில் கனமில்லை. பயமும் இல்லை வா” என்று அழைத்துக் கொண்டு சென்றாராம்.
ஸ்ரீ வைஷ்ணவ லட்சணம்
அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர் உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார்.
ராமானுஜரின் வலது கரமாகத் திகழ்ந்தார். அவரோடு முதலியாண்டானும் சேர்ந்து தண்டும் பவித்திரமுமாக இருந்தனர்.
ஸ்ரீ வைஷ்ணவ லட்சணம் யாது என்பதை அறிய கூரத்தாழ்வானை நோக்கு என்று எம்பெருமானார் கூறுவாராம்.
ஆழ்வான் எம்பெருமானாரை விட 7 திருநக்ஷத்திரம் மூத்தவர்
சாத்திரம் பல கற்றும் கேட்டும் என்ன பயன்?
ராமானுஜர் ஒருநாள் தம் குழுவில் இருந்த ஊமையை அழைத்து மடத்தின் கதவுகளைச் சாத்திக்கொண்டு தம்முடைய திருவடியை அவர் தலையின் மீது வைத்து ஆசி வழங்கினார். இந்தத் திருவடிகளைத் தஞ்சமாக கொண்டு இரு. என்றார்.
இதனை மறைந்திருந்து பார்த்த கூரேசன் “ஐயோ பிறந்தோம். சாஸ்திரங் களைப் படித்தோம். அது நம்மை வாழவைக்கும் என்று நினைத்தோம் .ஆனால் இந்த ஊமைக்குக் கிடைத்த உன்னதமான வாழ்வு நமக்கு கிடைக்காமல் போய் விட்டதே. சாத்திரம் பல கற்றும் கேட்டும் என்ன பயன்?அந்த ஊமையாகப் பிறகாது போனேனே “என்று மனம் வருந்தினார்.
மடத்து வாசலில் உபவாசம்
எம்பெருமானார், ஸ்ரீபகவத் கீதா சரமச்லோகத்தின் (சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்…..) அர்த்தத்தை, திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றுக்கொண்டார். கடினமான சோதனைகளுக்கு பிறகு தான் இந்த அர்த்தத்தை தனது சிஷ்யர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அறிவுறுத்தினார். கூரத்தாழ்வான் இந்த அர்த்த விசேஷத்தை உபதேசிக்குமாறு கேட்ட பொழுது, எம்பெருமானார் நம்பி கூறியதைக் கூறினார். அதற்கு ஆழ்வான் 1 மாத காலம் மடத்து வாசலில் உபவாசம் இருந்தார். இறுதியில் சரம ச்லோகார்த்தத்தை எம்பெருமானாரிடம் பெற்றுக் கொண்டார்.
திருவாய்மொழி காலட்சேபம்
ஒரு நாள் திருவாய்மொழி காலட்சேபம் நடந்துகொண்டிருந்தது.
எம்பெருமானாரின் நியமனத்தின் பேரில் உயர்வற உயர்நலம் என்கிற பாசுரத்துக்கு விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார் கூரேசன்.
எம்பெருமானுடைய கல்யாண குணங்களை எல்லாம், இப்படி ஆழ்வார் சொல்லி இருக்க, சிலர் பிடிவாதமாக, எம்பெருமான் குணம் இல்லாதவன் (நிர்குணன் )என்று சொல்லுகிறார்களே, இது தகுமா? ஆழ்வார் எப்படி பாடியிருக்கிறார் பாருங்கள் என்று சொல்லிச் சொல்லி அழுதாராம்.
அடுத்த நாள் உபன்யாசம் எப்படி நடந்தது? என்று ராமானுஜர் கேட்க, அவர் “உயர்நலம் உடையவன்” என்ற ஒரு வரியை திருப்பித் திருப்பிச் சொல்வதும் கண்ணீர் விடுவதும், பிறகு அதே வரியைத் திருப்பி சொல்லி உபன்யாசம் கழிந்தது என்று சொன்னராம்.
ராமானுஜர் வியந்து போனாராம்.” ஆகா, நம்மாழ்வார் என்ன உணர்வில் இந்தப் பாசுரத்தை பாடினாரோ, அதே உணர்வை கூரத்தாழ்வான் பெற்றாரே .இதுவல்லவோ ஆழ்வாரின் திருவுளத்தை அறிந்து உணர்ச்சியோடு ஒழுகுவது .இதே உணர்ச்சியைக் கேட்பவருக்கும் கொடுத்தாரே.என்ன அற்புதமான உபன்யாசம் என்று கூறி அதன் பிறகு ஆழ்வார் நிலையை ஒத்ததால் ஆழ்வான் என்று அழைத்தாராம்.
உயிர் இரக்கம்
கூரத்தாழ்வான் மிகுந்த உயிர் இரக்கம் உடையவர். ஒருநாள் தனி வழியே நடந்து போகும் பொழுது ஒரு பாம்பின் வாயில் தவளை ஒன்று அகப்பட்டு கத்திக்கொண்டிருந்தது. அந்தக் குரலைக் கேட்டார். உயிருக்கு போராடும் அந்தக் குரலைக் கேட்ட கூரத்தாழ்வான், எந்த திசையில் அந்த குரல் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அங்கும் இங்கும் ஓடினார். தன்னால் அந்தத் தவளையைக் காப்பாற்ற முடியவில்லையே என்று அதன் துன்பத்தை பார்த்து கீழே விழுந்து விட்டார்.
ஒருமுறை யாரோ ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற விஷயத்தை கேட்டவுடன், கூரத்தாழ்வான் ரங்கநாதர் திருமுன்பே சென்று அழுதாராம். ஏன்? என்று சிலர் கேட்டதற்கு, “யாரேனும் ஒருவர் இந்த சம்சாரம் என்கிற சிறையில் பிறக்கும் போது, இந்த சம்சாரதிலிருந்து யாரால் விடுவிக்க முடியுமோ அவரிடம் சென்று நாம் அழவேண்டும். அரங்கன் மட்டுமே நாம் அனைவரையும் இந்த சம்சாரத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதால் தான், நான் அவரிடம் சென்று இந்த குழந்தை பிறந்ததற்காக அழுதுவிட்டு வந்தேன்” என்று கூறினார்.
நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும்
நாலூரான் என்பவனால், அரசனின் அவையில் கண்ணிழந்தார் கூரத்தாழ்வான். ராமானுஜருக்கு இவர் கண் இழந்த விஷயம் மிகுந்த வருத்தத்தை அளித்தது. அவர் சொன்னார்.” நீ காஞ்சிப் பேரருளாளனைச் சென்று தரிசனம் செய். உனக்கு தரிசனத்தை அளிப்பார். கண்பார்வையையும் தருவார்.
ஆசாரியன் உத்தரவை ஏற்றுக்கொண்டு காஞ்சி மாநகரை அடைந்தார் .அங்கே காஞ்சிப் பேரருளாளனைப் போற்றி வரதராஜ ஸ்தவம் என்ற நூலை இயற் றினார்.அந்த பாசுரங்களைக் கேட்டு மகிழ்ந்த வரதராஜப்பெருமாள் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, எனக்கு கண் பார்வை வேண்டும் என்று கேட்காமல் , கூரத்தாழ்வார், நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று தன் கண் பார்வை போவதற்கு காரணமாக இருந்தவனுக்கும் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
இதுதான் வைணவ லட்சணம் என்று சொல்லுவார்கள்.

ஸ்ரீரங்கனாதனுடைய கடமை
அவருடைய திருக்குமாரர்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் அவருடய தர்ம பத்னி பிள்ளைகளுக்கு வயதாகிறது தகுந்த மணப்பெண் பார்க்குமாறு கேட்டபொழுது, “ஈச்வர குடும்பதுக்கு நாம் யார் கரைவது?” என்று கூரத்தாழ்வான் கூறினார். அதாவது “பகவானுடைய குடும்பத்திற்கு நான் ஏன் கவலைப்படவேண்டும்? இது ஸ்ரீரங்கனாதனுடைய கடமை” என்று கூறினார். அவ்வளவு வைராக்கியம்.
ஒருநாள் ரங்கநாதப் பெருமாளை வணங்குகின்ற பொழுது ரங்கநாத பெருமாள் கேட்டார்.
“உனக்கு என்ன வேண்டும் “
கூரத்தாழ்வான் இன்னும் எத்தனை காலம் இந்த சம்சாரத்தில் இருக்க முடியும்? அடியேனுக்கு மேல்வீடு(மோட்ஷம்) அளிக்க வேண்டும்.அங்கு நித்திய சூரியனோடு ,திருமாமணி மண்டபத்தில், கைங்கர்யம் செய்யும் பேற்றை அருள வேண்டும் என்று சொல்ல உடனே திருவரங்க நாதன் அப்படியே ஆகட்டும் என்று வாக்குறுதி அளித்தாராம்.
இந்த வாக்குறுதியில் கலங்கிய எம்பெருமானார் சற்றுத் தெளிவடைந்து, ஆழ்வான் உறவால் தனக்கும் மேல்வீடு கிடைத்தது என்று மகிழ்வோடு சொன்னாராம்.
ஒரு சீடன் எப்படி இருக்க வேண்டும்? ஒரு ஆசாரியன் எப்படி இருக்க வேண் டும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தியாகச் செம்மல் தான் கூரத் தாழ்வான்.
அவர் வரதராஜ ஸ்தவம், சுந்தரராஜபாஹு ஸ்தவம், அதிமானுசஸ்தவம், ஸ்ரீவைகுண்டஸ்தவம் என்று பல நூல்களை இயற்றினார்.பல தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.
ஆழ்வானுடைய தனியன்
ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:
கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன் என்பது இந்த சுலோகத்தின் பொருள்.
(திருநக்ஷத்ரம் : தை, ஹஸ்தம்).
- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

- தெளிவு பெறுவோம் (1.6.2025)

