திருக்குறள் ஆய்வரங்கம்
சில மாதங்களுக்கு முன் திருக்குறளும் கீதையும் என்னும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அடியேன் திருக்குறளையும் கீதையையும் இணைத்து பலமுறை சிந்தித்து இருக்கிறேன். நம்முடைய ஆலய தரிசனத்திலேயே அதுகுறித்த தொடர்களை இரண்டு முறை எழுதி இருக்கிறேன்.
ஒன்று கீதையை நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற முடியுமா என்பது குறித்த சில கட்டுரைகள். இரண்டாவதாக திருக்குறளையும் கீதையையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு கட்டுரைத் தொடர் .

இப்போது மறுபடி திருக்குறளும் கீதையும் குறித்து பேசும் ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் வேறு ஒரு கோணத்தில் புதிய செய்திகளோடு அணுகினால் என்ன என்று தோன்றியது.
அந்தச் சொற்பொழிவுவும் வெற்றிகரமாக அமைந்தது. அதை ஒரு கட்டுரையாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பல அன்பர்கள் விரும்பி கேட்டனர்.
இப்பொழுது அதில் சொன்ன சில விஷயங்களை நினைவு படுத்தி எழுத முற்படுகிறேன்.
ஒரு அருமையான குறள்.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:615)

இந்த அதிகாரத்தை அமைத்தவர்கள் மடியின்மை என்ற அதிகாரத்திற்கு அடுத்ததாக வைத்தார்கள். மடியின்மை என்பது சோம்பல் இல்லாமல் இருத்தல். சோம்பல் என்பது பல காரணங்களால் வரும். ஒரு வேலையும் செய்யாமல் இருத்தல் குறிக்கோளை அடைவதற்கு பெரும் தடையாக இருக்கும். ஆள்வினை உடமைக்கு நேர் எதிர் தட்டு நிலை இது.
ஆள்வினை உடைமை என்பது இடைவிடாது முயற்சி செய்தல்.
எனவேதான் ஆளும் வினை எனக் காரியத்தால் கூறப்பட்டது. மடி கெடுத்தாலும் வினை முயற்சியால் அன்றி ஆளப் படாமையின் இது மடியின்மையின் பின் வைக்கப்பட்டது.
பரிமேலழகர் உரை: இன்பம் விழையான் வினை விழைவான் – தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம்.
(இஃது ஏகதேச உருவகம், ’ஊன்றும்’ என்றது அப்பொருட்டாதல், ’மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு’ (நாலடி.387) என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம், எனவே தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.)
சரி, இந்த குறளில் என்ன கருத்தை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார் என்று பார்க்க வேண்டும்.

இன்பம் விழையான் என்றால் மகிழ்ச்சியை விரும்பாதவன் என்று பொருள். வினைவிழைவான் காரியத்தில் கண்ணாக இருந்து செய்ய வேண்டும் என்று வினை ஆற்றுவதில் கவனம் உள்ளவன். இந்தக் காரியம் எப்படியாவது முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பவன்.
இதைச் சுருக்கமாக சொல்லவேண்டும் என் சொன்னால், எத்தனையோ குடும்பங்களில் பார்க்கலாம். நம்பிய அந்த குடும்பத்திற்காக,பிடிக்கிறதோ இல்லையோ அவன் ஒரு வேலையைச் செய்வான். அதற்குக் காரணம் அந்த வேலையின் மீது கொண்ட விருப்பத்தை விட, அந்த வேலையில் கிடைக்கும் ஊதியத்தை கொண்டு தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற விருப்பமே அதிகமாக இருப்பதால், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைப்பற்றிய எந்த ஒரு கருத்தும் இல்லாமல் தன்னுடைய காரியத்தால் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது என்று நினைத்து காரியத்தைச் செய்வான். தன்னுடைய குடும்பத்திற்காக வெளிநாட்டுக்குச் செல்வதோ அல்லது கடுமையான சில பணிகளை மேற்கொள்வதோ ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவதோ என்று பல வேலைகளை இதிலே நாம் சொல்லலாம்.
இந்த இடத்தில் தன்னுடைய மகிழ்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் அவன் கடமையாற்றுவது முக்கியம் என்பதுதான் வள்ளுவரின் கருத்து.
இப்பொழுது இந்த கருத்தின் அடிப்படையில் கீதையைப் பார்ப்போம். போர் புரியத் தயங்கி நிற்கிறான் அர்ஜுனன். அவனுக்குப் போர் புரிவதில் மகிழ்ச்சி இல்லை.
அவன் சொல்கிறான்.
“நான் வீரன்தான். என்னிடம் இருக்கக்கூடிய காண்டீபம் தோல்வியே காணாத ஆயுதம்தான். ஆனாலும் கூட போர் புரிய என்னுடைய மனம் விரும்பவில்லை. இத்தனை பேரை சாகடித்து, நான் என்ன காணப் போகிறேன்? நான் என்னுடைய இன்பத்துக்காக- துன்பமான இந்தப் போரை ,அதாவது உறவினர்களை ,நண்பர்களை,பாடம் சொல்லித்தந்த ஆச்சாரியர்களை எதிர்த்து நின்று, அவர்களைக் கொன்று போர் செய்துதான் ஆக வேண்டுமா? இது எனக்கு மகிழ்ச்சி தருமா?”
அப்பொழுது கண்ணன் சொல்வது இதுதான்.
முதலில் இந்தச் செயலை உன்னுடைய மகிழ்ச்சிக்காக நீ செய்வதாக நினைத்துக் கொள்ளாதே. சில செயல்களை, நீ மற்றவர்களுக்காக உன்னை நம்பியவர்களுக்காகச் செய்துதான் ஆகவேண்டும். இங்கே திரண்டு இருக்கக்கூடிய உன்னுடைய சேனையைப் பார். அவர்கள் அனைவரும் உன் வீரத்தை நம்பி வந்தவர்கள். உன்னுடைய சகோதரர்கள், மனைவிமார்கள், குழந்தைகள், உறவினர்கள், எல்லோரும், உன்னை நம்பி அல்லவா இந்தக் காரியத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
இப்பொழுது நீ ஒருவன் எனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று சொன்னால், என்ன பொருள்? அங்கே எதிரிலே பார். துரியோதனனுக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு உன்னுடைய ஆச்சாரியர்கள் உட்பட உன்னுடைய உறவினர்கள் நிற்கிறார்கள் .சற்று நேரத்தில் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த போர் நடக்கத்தான் போகிறது.
இந்தப் போரின் வெற்றியை நீ ஏற்றுக் கொள்ளலாம். அல்லது மறுக்கலாம். ஆனால் அந்த வெற்றி உன்னுடைய சுற்றத்தவர்களுக்கு தேவைப்படுகிறது. அவர்கள் வாழ்வதற்காக நீ இதைச் செய்து தானே ஆக வேண்டும்.
இன்னொன்று அர்ஜுனா! இது லாபாதிலாபங்களைக் கணக்கிட்டுச் செய்யும் செயல் அல்ல. தவிர்க்கமுடியாமல் செய்தே ஆக வேண்டிய செயல். இதில் வெற்றி தோல்வியைப் பற்றியோ, மகிழ்ச்சி மகிழ்ச்சியின்மையைப் பற்றியோ , சுகதுக்கங்களைப் பற்றியோ நீ கருதுவது கூடாது. இதில் மகிழ்ச்சியும் உண்டு. துக்கமும் உண்டு. அவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பகுதிகள். அவற்றை நிதானமாகக் கருதினால் ,அதனால் வருகின்ற உணர்ச்சிகளால் ஆளப்படாமல் இருப்பாய். வெற்றி-தோல்வி விஷயங்களை அவ்வளவு எளிதாக நினைத்துவிட முடியாது. எனவே அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டியதில்லை. நீ செய்ய வேண்டியது இப்பொழுது இந்தக் கணத்தில் இதுதான். நீ யாருக்காகச் செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.
குறளின் கருத்து கீதையோடு எப்படிப் பொருந்துகிறது பாருங்கள். (தொடரும்)

- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

- தெளிவு பெறுவோம் (1.6.2025)

