
ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வார் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தபொழுது அவருக்குத் துணையாக கணிகண்ணன் என்று ஒரு சீடன் இருந்தான்.
ஒரு நாள் பல்லவ மன்னனுக்கும் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மன்னவன் கணிகண்ணனை ஊருக்குள் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டான். கணிகண்ணன் தன்னை மன்னன் நாடு கடத்தி விட்டதாகவும், அதனால் தான் இந்த பெருமாள் கோயிலை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் சொன்னான் .
ஆழ்வாருக்கு சீடனான கணிகண்ணனைப் பிரிய மனமில்லை ஆனால் அதே சமயம் அங்குள்ள பெருமாளையும் பிரிவதற்கு மனமில்லை. எனவே ஆழ்வார் பெருமாளைத் தன்னுடன் புறப்படும் படி வேண்டவில்லை. கட்டளையிட்டார்.

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம் துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும்
உந்தன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்
பகவானே! உன்னுடைய பாயாகிய இந்த பாம்பைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, என்னோடு புறப்படு என்று தமிழால் ஆணையிட்டார்.
அந்தச் சொற்கள் உயிர்பெற்று எம்பெருமானின் அர்ச்சாவதாரத்தையே அதாவது சிலை வடிவத்தையே அசைத்து விட்டது
அவரோடு புறப்பட்டு ஊருக்கு வெளியே பாலாற்றங்கரை ஓரமாகச் சென்று விட்டார். இரவு வந்தது. ஒரு மண்டபத்தில் தங்கி விட்டார்கள்.
பிறகு மன்னன் நிலைமையை அறிந்து மன்னிப்பு கேட்கவே, திரும்பவும் ஒரு பாடலால் ஆழ்வார் பழைய இடத்துக்குப் பெருமாளை கொண்டு வந்து சேர்த்தார்.
அப்படி பெருமாள் ஆழ்வார் புறப்பட்டு வந்து தங்கிய இடம் ஓர் இருக்கை என்று வழங்கப்படுகிறதுுு
ஆழ்வார் திருக்குடந்தை வந்து அங்குள்ள பெருமாளை சேவிக்கும் பொழுது சில கேள்விகள் கேட்கிறார்
நீ இப்படி படுத்து இருக்கிறாயே ?
உன் கால்கள் வலிக்கிறதா?
இந்த பூமியை வராக அவதாரத்தில் தூக்கி நிறுத்திய களைப்பா?
இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட பின்னும்,அர்ச்சாவதார பெருமாள் எழுவதாகத் தெரியவில்லை . ஆழ்வார் விடவில்லை. அடுத்து அதட்டலாக எழுந்திருந்து பேசு என்று ஒரு கட்டளை இட, அந்த உயிர் சொற்களால் பெருமாள் உணர்வு பெற்று எழ எத்தனிக்கிறார். அந்தப் பாசுரம் இது
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே
ஐயோ அர்ச்சாவதாரத்தைக் கலைத்து விட்டோமே என்று பதறிய ஆழ்வார்,” வேண்டாம்.. வேண்டாம்… எனக்காக எழ வேண்டாம்.. அப்படியே இரு” என்று வாழி கேசனே என்று பல்லாண்டு பாடுகிறார்.
எந்த நிலையில் எழுந்தாரோ, அந்த நிலையில் அப்படியே இருந்துவிட்டார் பெருமாள்.
திருக்குடந்தை சார்ங்கபாணி கோயிலில் (சாரங்கபாணி அல்ல சார்ங்கபாணி) இன்றைக்கும் பெருமாளைப் பாதி எழுந்த நிலையில் நாம் சேவிக்கிறோம் .
பள்ளிகொண்ட பெருமாலின் இந்த அமைப்புக்கு உத்தான சயனம் என்று பெயர்.
பெருமாளின் மூன்று நிலைகளில் ஒரு நிலை சயனநிலை.
பெருமாளின் 108 திருத்தலங்களில் சயனத் திருக்கோலங்கள் 24 தலங்களில் உண்டு.
பத்து வகையில் சயனநிலைகள் உண்டு.
ஒவ்வொரு சயனநிலைக்கும் ஒரு பெயர் உண்டு. ஜல சயனம்,போகசயனம், புஜங்க சயனம், உத்தான சயனம், தல சயனம்,வீர சயனம் ,தர்ப்ப சயனம்,பத்ர சயனம்,மாணிக்க சயனம் என்று பல பெயர்கள் உண்டு.
ஆனால் குடந்தையில் உத்தான சயனம் என்ற நிலையை பெருமாள் மேற்கொண்டது ஆழ்வார் பாடிய உயிர் சொற்களால் தான்.
எனவே சொற்களுக்கு உயிர் உண்டு என்பது புலனாகிறது.
ஒவ்வொரு ஆழ்வார்களின் ஒவ்வொரு பாசுரங்களிலும் இப்படிப்பட்ட உயிர் சொற்கள் உண்டு. அந்த உயிர் சொற்கள்தான் அந்தப் பாடலின் திரண்ட கருத்தை -சொல்ல வந்த கருத்தை- மையமான கருத்தை -நமக்கு உணர்த்தும்.

- வாலாஜாபேட்டை ஸ்ரீமத். வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 245 வது ஜெயந்தி இசை விழா

- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

