S Gokulachari.
எங்கிருந்தோ வந்தான் ;இடைச்சாதி நான் என்றான் பாரதிநாதன்
பாரதியார் “கண்ணன் என் சேவகன்” பாடலில் அழகான வரி. எல்லோரும் கேட்டு ரசித்த வரிதான்
“எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்“
இதிலே “இடைச்சாதி” என்கின்ற சொல்லுக்கு “ஆயர் குலம்” என்றுதான் நாம் பொருள் காண்கின்றோம்.
ஆயர் குலத்தில் உதித்தவன் தான் கண்ணன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
ஆனால், இந்த வரியில், பல விதமான தத்துவ ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

இடையன் என்பதற்கு இடையில் இருப்பவன் என்று பொருள்.
மனித ஜாதிக்கு இடை ஜாதி என்று பெயர்.
காரணம் மனிதர்களுக்கு மேல் தேவர்கள் என்று சொல்லுகின்றோம்.இது மேல் நோக்கிய பயணம்.
மனிதர்களுக்கு கீழே உள்ளது விலங்குகளில் ஆரம்பித்து கீழே தாவர ஜங்கம ங்களில் முடியும்.
இதை மணிவாசகப் பெருமானும்
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,
எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு
இன்று வீடு உற்றேன்”
என்கின்ற திருவாசகப் பாடலில் விளக்கமாக உரைக்கின்றார்.
எத்தனையோ பிறவிகளைக் கடந்து, ,பிறவியில்லாப் பேரின்ப நிலையை அடைவதற்கு ஒரு இடைநிற்றலாக மனிதப் பிறவியில் இருக்கின்றோம்.
இப்பிறவியில் நாம் எப்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகின்றோம் என்பதைப் பொறுத்தே, நாம் மேல் பிறவிக்குச் செல்வதா இல்லையா என்கிற முடிவு தெரியும்.
“இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ!” என்று இம்மனித பிறவியின் மதிப்பை ஆன்றோர்கள் போற்றுகின்றனர்.
பலர் இப்படிப்பட்ட இடைப்பிறவியாகிய மனிதப் பிறவி கிடைத்தும், அதை மதிக்காமல் வீணாக்குகிறார்களே என்று திருமங்கை ஆழ்வார் வருத்தப்படுகிறார்.
“வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க – தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே”
என்னும் திருக்குறுந் தாண்டக பாசுர வரிகளால் இதனை அறியலாம்.
மனித பிறவியில் “மதில் மேல் பூனை போல”, நாம் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.
நம்முடைய பிழைகள் நம்மைக் கீழே தள்ளி விடலாம்.
நம்முடைய குணங்கள் புண்ணியங்கள் நம்மை மேலே ஏற்றி விடலாம்.
பரமபத விளையாட்டில் ஏணிகளையும் பாம்புகளையும் கடந்து மேலே நிற்கிறோம்.அங்கே ஒரு இடைநிற்றல் இருக்கிறது. அதைக் கடந்து விட்டால் பிறகு எந்த கஷ்டங்களும் கிடையாது.
ஆனால் அங்கே நம்மைப் விழுங்குவதற்கு ஒரு பாம்பு இருக்கிறது. இதற்கு முன்னால் இருந்த பாம்புகள் போல் அல்ல இது.
நம்மை கீழே தள்ளுவதற்காகவே, காம, க்ரோத, மத, மாச்சரியங்கள் என்கின்ற தீமையின் வடிவாக இருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று கடித்து விட்டால் கூட விஷமேற்றி நம்மைக் கீழே தள்ளிவிடும்.
என வே, இந்தப் பிறவி மேலே செல்லவும் கீழே தள்ளவும் சோதனை செய்யும் இடைப் பிறவி என்று சொல்லப்படுகிறது.
இந்த பூமியையும் ,இடைஉலகம் என்று சொல்லலாம்.
இதற்கு மேலே ஏழு உலகங்கள் இருக்கின்றன.
பூ லோகம்,புவர் லோகம்,சுவர் லோகம்,மகர லோகம்,ஜன லோகம்,தப லோகம்,சத்ய லோகம்.
இதற்குக் கீழே ஏழு உலகங்கள் இருக்கின்றன.
தல லோகம்,விதல லோகம்,சுதல லோகம்,தலாதல லோகம்,மகாதல லோகம்,ரசாதல லோகம், பாதாள லோகம்
மனிதனுடைய வாழ்க்கையைப் பொறுத்து மேலே இருக்கின்ற உலகங்களுக்குச் செல்லலாம்;அல்லது கீழே இருக்கக்கூடிய
உலகங்களில் விழலாம்.
ஒருவன் வீழ்ச்சியைக் குறிப்பிடும் போது “அதல பாதாளத்தில் விழுந்தான்” எனும் எளிய மக்களின் வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.
அவன் விழுவதும் எழுவதும் அவருடைய சுவாதினத்தில்(சுய அறிவில்) இருக்கின்றது
கீழே விழுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இந்த உலகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஐம்பொறிகளாலும் கீழே தள்ளுவதற்கான பலவிதமான தூண்டில்கள் இந்த உலகத்தில் உண்டு.
கருட புராணத்தில் ஒரு சுலோகம் உண்டு.
விட்டில் பூச்சி விளக்கின் ஒளியை பழம் என்று எண்ணி விழுந்து மாய்கிறது.மீனானது தூண்டில் புழு என்கின்ற சுவை உணர்ச்சியில் மாய்கிறது. ஆனால், மனிதன் ஐந்து புலன்களாலும் கீழே விழுகிறான்.
அதே சமயத்தில் மேலே ஏறுவதற்கு தர்ம சாஸ்திரங்கள் புண்ணியங்கள் என்கின்ற நற்செயல்கள் ஏணியும் கயிறும் இருக்கிறது.
இதை திருவள்ளுவர் மிக அழகான ஒரு குறட்பாவில் கொடுக்கின்றார்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”
கயிறு பிடித்துக்கொண்டு அவன் மேல் ஏறலாம். அல்லது காம குரோதங்களில் விழுந்து கீழே சாயலாம்
அவன் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறான்?
இதை வாழ்வியலிலும் நாம் பொருத்திப் பார்க்கலாம்.
இடை என்பதற்கு மத்தி, நடு என்ற பொருள் உண்டு. மக்களை மூன்று விதமாகப் பிரிக்கின்றார்கள்
ஒன்று மேல்தட்டு அதாவது பணக்காரர்கள்.
அடுத்தது நடுத்தட்டு.மிடில் கிளாஸ். மத்தியதர வர்க்கம் அவர்கள்தான் இடைநின்றவர்கள்.
மூன்றாவது கீழ்த்தட்டு.
கீழ்த்தட்டு மக்களை விட கொஞ்சம் பணம் வைத்திருப்பதால், இவர்கள் கீழ்த்தட்டு மக்களை விட மேலானவர்கள். மேல்தட்டு மக்களை விட பணம் குறைந்து இருப்பதால் இவர்கள் மேல் தட்டு மக்களை விட கீழானவர்கள். எனவே இவர்களை கீழேயும் சேர்க்க முடியாது. மேலேயும் சேர்க்க முடியாது.
எனவே இவர்கள் “இடை சாதியினர்”. “நடுத்தர வர்க்கத்தினர்”. “மத்தியதர வர்க்கத்தினர்”.
ஒரு முடிவு எடுப்பதில் மேல்தட்டு மக்களுக்கு சிக்கல் இருப்பது இல்லை.
உதாரணமாக இப்பொழுது கடுமையான நோய்த் தொற்று இருக்கிறது. அவர்களுக்கு நோய் வந்துவிட்டால் ,அவர்கள் ஒரே முடிவைத் தான் எடுப்பார்கள், எத்தனைச் செலவானாலும், எது உயர்ந்த மருத்துவமனையோ, அந்த மருத்துவமனையில் அவர்கள் சேர்ந்து விடுவார்கள் .அவர்களுக்கு இரண்டாவது சிந்தனை கிடையாது .
அதைப்போலவே கீழ்தட்டு மக்களும், காசு பணம் இல்லாததால், ஒரு தனியார் மருத்துவமனையை, கனவிலும் நினைக்க மாட்டார்கள் . அவர்களுக்கும் இரண்டாவது சிந்தனை கிடையாது.

ஆனால் மிடில் கிளாஸ் என்று சொல்லப்படுகின்ற மக்களுக்குக் குழப்பம் வந்துவிடும். அரசு மருத்துவமனைக்குச் சென்றால் வைத்தியம் சரியாகப் பார்ப்பார்களா?ஓரளவு வசதியான இடம் கிடைக்குமா?என்று துடிப்பார்கள்.
அதே நேரத்தில் மிக அதிகமாகச் செலவாகி விட்டால் , தாம் ஏழையாகி விடுவோமே என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கும். எனவே ,தனியார் மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் செய்து கொள்வதா? அரசு மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் செய்து கொள்வதா? என்ற குழப்பத்தில் காலம் கழியும்.
இடைநின்றவர்களுக்கு ஏற்படுகின்ற குழப்பம் .அவர்களால் மிக எளிதாக ஒரு முடிவும் எடுத்து விட முடியாது. அவர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னால் , அவர்களே தங்கள் நிலையை ஆராய்ந்து பரிசீலனை செய்ய வேண்டும் அல்லது யாராவது அவர்களுக்கு ஆலோசனைகூறி உதவ வேண்டும்.
மனிதர்களுக்கும் இதே நிலைதான்.
அவர்களால் சாத்திரங்களைப் பயன்படுத்தி மேலே போக முடியாத இயலாமையாலும்,சாத்திரங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதால் கீழே போய் விடுவோமே என்கின்ற அச்சத்தினாலும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்காகத் தான் குருமார்கள், ஆச்சாரியர்கள் இருக்கின்றார்கள். பலவிதமான தர்ம சாஸ்திர நியமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதைக் கொண்டு வாழ்வதும், வாழாமல் வீழ்வதும் அவர்கள் மதியோடு இணைந்த விதியாக இருக்கிறது.
இந்நிலையில் அவர்களுக்கு ஒரு “கதி” தேவைப்படுகின்றது.அந்த கதி தான் ஆன்றோர்களின் சங்கமமும் ஆண்டவனின் அருளும்.
இதை மேலும் தெளிவுபடுத்த தொண்டரடிப் பொடி ஆழ்வார் பாசுரமும் நமக்கு உதவலாம்.
“ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரின் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே”
இடையர்களாகிய மனித ஜாதியைச் சார்ந்த நாம்,இடையனாக வந்து அவதரித்த கண்ணனின், கழல் பற்றினால் , அவன் நம்மை காப்பாற்றிக் கரையேற்றி விடுவான்.
குழப்பமில்லாத வழி.
அதை சொல்லவே கண்ணன்
“எங்கிருந்தோ வந்தான் ;இடைச்சாதி நான் என்றான்”.
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை


