By எஸ்.கோகுலாச்சாரி ,ஆசிரியர்,ஆலயதரிசனம்
உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே!
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி. நெடியாய் அடியே னாருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குலதொல் லடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே.
திருவாய்மொழி ஆறாம்பத்து பத்தாம் திருவாய்மொழியில் முதல் பாசுரம், அதி அற்புதமான பாசுரம். ஆழ்வார் இந்தத் திருவாய்மொழியில், பிராட் டியை முன்னிட்டுக் கொண்டு, எம்பெருமானைச் சரணம் புகுகின்றார். திரு வாய்மொழியின் உயிர்ப் பாசுரமான “அகலகில்லேன் இறையும்” என்ற பாசுரம் துவையார்த்தமாக இதில்தான் உள்ளது.அந்தத் திருவாய்மொழி யின் முதல் பாசுரம் இது. எம்பெருமானுடைய எல்லையற்ற பெருமை யையும், திருமலையின் பெருமையையும் மிக அற்புதமாக விளக்குகின்ற பாசுரம்.
பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயை யுடையவனே!முடிவில்லாத புகழுடைய பெருமானேஅப்ராக்ருத தேஜோ மயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!மிகப்பெரியோனே! உன்னுடைய திருவடியை நான் கிட்டப்பெறாமல் கிலேசிப்பது பிரளயாபத்தோடொக்கும், இந்த ஆபத்தை நீ போக்கினால்லது பிரளயாபத்தைப் போக்கினாயென்கிற புகழ் உனக்கு நிலைநிற்கமாட்டாதென்கிற கருத்துப்பட “உலகமுண்ட பெரு முண்டது, அந்த ஆபத்ரக்ஷகத்வம் மெய்யானால் என்னையும் ஆபத்தில் நின்று மெடுத்தருளித் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டாவோ வென்றவாறு என்று இந்தப் பாசுரத்தின் உரை சுவையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இனி வரிவரியாக இப்பாசுரத்தில் இனிமையை அனுபவிப்போம்.
முதலில் அவன் எழுந்தருளியுள்ள திருமலையின் சிறப்பை “திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!” என்ற தொடரின் மூலம் கூறு கின்றார்.
எத்தனையோ திருத்தலங்கள் இருக்கின்ற பொழுது விண்ணுக்கும் மண் ணுக்கும் வைப்பாய இந்தத் திருமலையைத் தேடிவந்து, ஏன் எம்பெருமான் நின்று அருள வேண்டும்?
திருமலையின் சிறப்பை பல பாசுரங்களில் பல ஆழ்வார்கள் பாடியிருக் கிறார்கள்.
“மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே” என்று நம்மாழ்வார் பாடி இருக்கிறார்.
“மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்பது திருப்பாணாழ்வார் வாக்கு..
வேங்கட மலையில் நின்று அருள்வதால் வேங்கடவன் என்றுஅவனுக்குப் பெயர்.
திருவேங்கடம் உலகுக்கு நெற்றித் திலகமாக விளங்குகிறதாம் .
நெற்றித் திலகம் ஒரு பெண்ணுக்கு மங்கலம் அல்லவா. நிலமகள் என்னும் பெண்ணின் திலகம் திருமலை என்பதால் உலகுக்கு மங்கலம் தரும் தலம் இது.
கம்பராமாயணத்தில், அயோத்தியை வர்ணிக்கின்ற போது நிலமகளுக்கு திலகமாக விளங்குகிறது அயோத்தி என்பார் கம்பநாட்டாழ்வார்.
நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!
நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின்
இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள்
வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி
உறையுளோ! யாது என உரைப்பாம்?
இத்தலத்தில் அருள்கின்ற எம்பெருமானை, பின்வரும் பெருமைகளைக் கூறிப் போற்றுகின்றார்..
1.உலகம் உண்ட பெருவாயன்
2.உலப்பில் கீர்த்தி அம்மான்
3.நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
4.நெடியான்
பெருவாயா! என்று முதலில் அவன் திருவாயின் பெருமையை ஆழ்வார் சொல்லி பூரிப்படைகிறார்.
எதற்காக அவன் உலகத்தை எல்லாம் உண்டான்?
உலகத்தைக் காப்பதற்காக உண்டான் .
கொஞ்சமும் கெடாமல் இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்பதற்காக உண்டான் .
எப்பொழுது உண்டான்?
பிரளய காலத்திலே உண்டான் .
ஒரு பொருளை பத்திரமாக எடுத்து வைத்திருந்து மறுபடியும் அதை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு அவனுடையது அல்லவா. அதனால் அந்த பாரிப்பு அவனிடத்திலே இருந்தது. அந்தப் பாரிப்பினை இங்கே சொல்லுகின்றார் .
உண்டு என்பது ஒரு செயல்.( வினை )
பெருவாயன் என்பதால் , அண்ட சராசரங்களை எல்லாம் இந்த வாயின் வழியாக உள்ளே செலுத்தி , வெளியே விடுகின்றான் .
“உண்டு, உமிழ்ந்து” என்று இரண்டு செயல்களை ஆழ்வார்கள் ஆச்ச ரியமாகப் பாடுகின்றார்கள்.
நாரம் என்னும் உயிர்த் தொகுதிகள், அயனம் என்னும் இந்த வாயின் வழியாக, உள்ளே சென்று வெளியே வருகின்றன.
அதனால் நாராயணன் என்ற பொருளுக்கு அவருடைய திருவாய் காரணமாக விளங்குகிறது.
பெருவாய் என்றால் பெரிய வாய் என்றும் ஒரு பொருள்.
பெருமை மிக்க வாய் என்றும் ஒரு பொருள்.
இந்த உலகங்களைக் காத்த பெருமை உடையது அந்த வாய் .
அதனால் “உலகம் உண்ட பெருவாயா” என்று அழைத்து,இந்த உலகத்தை காத்த நீ, அடியேனுடைய உயிரைக் காக்க மாட்டாயா என்று தொனிக் கும்படி பாடுகிறார்.
“உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா ,
ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்,
பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே”
என்றும்,
“பாலன்தனதுருவாய் ஏழுலகுண்டு
ஆலிலையின் – மேலன்று நீ வளர்ந்தமெய்யென்பர்”
என்றும் எல்லா ஆழ்வார்களும் உலகம் உண்ட செயலைப் பாடியிருக் கிறார்கள்.
இவ்வளவு செய்தும்,என்ன பெரிதாக செய்து விட்டோம் , என்றே நெஞ்சில் குறை உள்ளவனாய் நிற்கிறான்.
த்ரௌபதிக்காக எத்தனையோ காரியங்கள் செய்தான்.துரியோதனன் சபையில் அவள் பட்ட மகாபரிபவத்தைப் போக்கினான் . துரியோத நாதிகளை அழித்தான்.
தருமபுத்திரன் தலையில் முடி சூட்டினான்.
அவள் கருங்குழலை முடிப்பித்தான்.
ஆனால் அவளுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று “ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நாபஸர்ப்பதி ” என்று குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிறான்
இரண்டாவதாக அவனுடைய முடிவற்ற புகழையும் பெருமையையும் பேசுகிறார்.
உலப்பு என்றால் எல்லை, கரை, அழிவு,முடிவு என்று பொருள்.
“அளவு மிடைந்தவ ருலப்பிலர்” (கம்பரா.உருக்கா. 23 உதவுகை. ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் (கலித். 25).
“உலப்பு இல்” என்றால் எல்லை இல்லாத என்று பொருள்..
உயர்வற உயர்நலம் உடையவன் என்று முதல் பாசுரத்திலேயே அவன் எல்லையற்ற பெருமையை பாடித்தான் திருவாய்மொழியை ஆரம் பிக்கிறார்.
உலகம் நிறைந்த புகழானாக , நிகரில் அமரர் முனிக் கணங்கள் ஏத்தும் திருவேங்கடத்தில் நிற்கிறான் என்பதை இந்த வரியில் சுட்டிக் காட்டுகின்றார்.
எம்பெருமானுடைய பெருமை எப்படிப்பட்டது என்று சொன்னால் , அவரால் தண்டிக்கப்பட்டவர்களின் உறவுகளும் புகழும் படியான பெருமையை உடையவன்
ஸ்ரீராமாயணத்தில் சூர்ப்பணகை, தாரை, மந்தோதரி ஆகிய மூன்று கைம் பெண்டாட்டிகளும் நிந்திக்கவேண்டிய நிலையிலும் வாயார வாழ்த்தினபடி கண்டால் பின் என்சொல்லவேணும்?
காதும் மூக்கு மறுப்புண்டு காதூடணர் பக்கலில் கதறிக்கொண்டு ஓடாநின்ற சூர்ப்பணகை நெஞ்சைப் பறிகொடுத்து “தருணௌ ரூபஸம்பந்நௌ “ என்று தொடங்கி ஆச்சரியமாக வாழ்த்துகிறாள் என்பது காஞ்சி பி.ப.அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் உரை..
நிலவுஞ் சுடர் சூழொளிமூர்த்தி –
அவன் காப்பாற்றவில்லையெனினும் அவனை விடமுடியாதபடி வடிவழகு இழுக்கிறதாம் . \
நிலவும் என்றது எப்போதுமுள்ள தென்றபடி.நித்யஅழகு.அழியா அழகு.
வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் –
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.
ஒரு கருமமடியாக வருவதும் பிறகு கழிந்து போவதுமன்றிக்கே என்று முள்ள, சுடர்மிக்கதான , ஒளிமயமான மூர்த்தி, ரஜஸ்தமோ குணங்கள் கலசாமல் சுத்தஸத்வமயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய் நெய்திணுங் கினாப்போலே உள்ளும் புறம்மொக்க ஒளியே யாயிருக்கை என்பதுஹ் உரையாசிரியர்கள் விளக்கம்.
நெடியாய்! –
தொட்ட தொட்ட துறைதோறும் தரை காணவொண்ணாதபடி பெருகிச் செல்பவனே! “ புருஷம் மஹாந்தம்” என்று வேதம் ஓதிற்று.
அடியேன் ஆருயிரே –
வடிவழகையும் திருக்குணங்களையுங் காட்டிப் பிரிந்து பிழைக்க வொண் ணாதபடி என்னைப்பண்ணினவனே! என்றவாறு. “திருவேங்கடத் தெம்பெரு மானே அடியேனாருயிரே!“ என்று கூட்டுவது. திருமலையிலே நின்று என்னுடைய அடிமை யறிவித்து உன்னாலல்லது செல்லாதபடி பண்ணி னவனே! என்கை. அவ்வர்த்தமே இங்கு நெடியானென்று நிலைத்தது.
என்று செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா குலசேகர ஆழ்வாரும் நெடியான் என்று அழைக்கிறார்.
விளியுருபு ஏற்று நெடியாய்! என்று நின்றது.
நெடியானுக்கு நேர் எதிர் பதம் சிறியவன்.
பேரான்மாவாகிய பரமாத்மாவுக்கு எதிர் பதம் ஜீவாத்மா.
இந்தப் பாசுரத்தில் ஜீவாத்மா, பேரான்மாவாகிய திருமலை அப்பனிடம் உய்வு பெறும் வழியை உருக்கமாகக் கேட்கிறது.
அந்தக் கேட்கும் பிரார்த்தனை ஒலி தான் இப்பாசுரத்தின் ஆன்மா.(சாரமான பொருள்)
