ஆதிவராக திருத்தலங்களில் ஒன்று திருமலை. சீனிவாச பெருமாள் இங்கு எழுந்தருளுமுன் வராகப்பெருமாள் தான் திருத்தலப் பெருமாளாக இருந்திருக்கிறார். இவரை அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். பூமியைத் தூக்கி காப்பாற்றிய பெருமை அற்புதம். ஞானப் பிரான் என்று ஆழ்வார் போற்றுகின்றார்.
ஈனச் சொல் ஆயினும் ஆக, எறி திரை வையம் முற்றும்
ஏனத்து உருவாய் இடந்த பிரான், இருங் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும்
ஞானப் பிரானை அல்லால், இல்லை நான் கண்ட நல்லதுவே. (2576)
இன்று வேங்கடவன் காட்சி தந்து ஆட்சி செய்யும் திருமலை முதலில் வராகரின் திருக்கோயிலாகவே இருந்தது.அங்கே இருக்கக்கூடிய புஷ்கரணிக்கு சுவாமி புஷ்கரணி என்று பெயர். அதன் கரைமேல் ஆதிவராக சுவாமி கோயில் உள்ளது. இப்பொழுதும் முதல் பூஜை வராகருக்குத்தான்.
ஸ்ரீ வேங்கடவராகாய சுவாமி புஷ்கரணி தடே
ச்ரவணர்ஷே துலா மாஸே ப்ராதுர்பூதாத்மனே நம:
திருவேங்கட மலையில் சுவாமி புஷ்கரணியில் ஐப்பசி மாதம் திருவோண நன்னாளில் தோன்றிய வராகப் பெருமாளுக்கு வணக்கம் என்பது இந்த சுலோகம்.பாத்ம புராணத்தில் திருமலை வராகத் தலமாக இருந்தது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. பொற் குடத்திலிருந்து தொடர்ந்து பசும்பாலை ஒரு புற்றின் துவாரத்தில் அரசன் அபிஷேகம் செய்யத் தொடங்கிய பொழுது அதன் உட்பகுதியில் இருந்து வராகப்பெருமாள் தோன்றினார் என்று இருக்கிறது. ஆயினும் இங்கே ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு தான் பிரத்தியேகமான பூஜைகள் நடைபெறுகின்றன. காரணம், ஒரே திருத்தலத்தில், இரண்டு பெருமாளுக்கு முக்கியப் பூஜைகள் நடப்பது உசிதம் இல்லை என்பதால், (ஸ்ரீ வராகப் பெருமாள் முன்னதாக இத்தலத்தில் எழுந்தருளி இருந்தாலும்,) ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பலி பீட, பூஜை, ஹோமம், ப்ரம்மோத்சவம் முதலியவை நடத்தும்படியாக ராமானுஜர் நியமித்தார்.
ஆயினும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பூஜை நடப்பதற்கு முன்பே, வராக பெருமாளுக்கு பூஜை செய்யப்படவேண்டும். யாத்திரை செய்பவர்கள் வராக தீர்த்தத்தில் நீராடி வராக விமானத்தை வணங்கவேண்டும் என்று பகவத் ராமானுஜர் வரையறை செய்தார்.
பவிஷ்யோத்ர புராணத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் தனக்கு இடம் வேண்ட அவருக்கு வராகப்பெருமாள் இடம் வழங்கியதாக குறிப்பு இருக்கிறது .ஸ்ரீநிவாசப் பெருமாள் வராகப் பெருமாளிடம் கேட்கிறார்.
“இம்மலையில் உம்மைக் காணும் பாக்யம் பெற்றேன். இங்கேயே நான் வசிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. கலியுகம் முடியும் வரையில் எனக்கு வசிக்க இடம் அளிக்க வேண்டுகிறேன்” என்று விண்ணப்பித்தார்.
அதற்கு அவர்,” என்னிடம் இருந்து விலை கொடுத்து வசிக்கும் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் “என்று கூற, அது கேட்டு ஸ்ரீநிவாசன், “இங்கு எல்லோரும் எனக்கு முன்பு உம்மையே வணங்குவர். பால் திருமஞ்சனமும் நைவேத்தியமும் உமக்கே நடைபெறும். இப்படி உமக்கு முக்கியத்துவமாக நடத்தி வைப்பதையே உயர்ந்த விலை பொருளாகச் சமர்ப்பிக்கிறேன்” என, வராகப் பெருமாளும் சீனிவாசனுக்கு நூறு அடியாக உள்ள ஸ்தலத்தைக் கொடுத்தார் என்று புராணத்தில் இருக்கிறது.
ராமானுஜர் வராக பெருமாளுக்கு ஒரு உற்சவ மூர்த்தியையும் பிரதிஷ்டை செய்தார். அவருக்கு ஒரு நாள் அத்யயன உற்சவம், வராக ஜெயந்தி உற்சவம் நடத்தினார். திருமலையில் வராகர் தோன்றிய ஐப்பசி திருவோண தினத்தன்றும் சிறப்பாக உற்சவம் நடத்தி வைத்தருளினார். இன்றும் அப்படியே நடந்து வருகின்றது.இன்றும் வராகரை வணங்கி விட்டே மலையப்பனை வணங்க வேண்டும் .அப்பொழுது தான் வழிபாடு பூரணத்துவம் பெறும்.
