திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவத்தில், வைணவ தத்துவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ் பாடல்களைக் கொண்டு அளித்தவர்கள் ஆழ்வார்கள்.
அவர்கள் அருளிச்செய்த பாடல்களின் எண்ணிக்கை 4000.
ஆழ்வார்களின் பாடல் தொகுப்பை நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றே வழங்குகிறோம்.
இதைப் பாடிய ஆழ்வார் பன்னிருவர்.
இவர்கள் வரிசையை பின்வருமாறு சொல்வார் மணவாளமா முனிகள்.
பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ் மழிசை அய்யன்,
அருள் மாறன், சேரலர் கோன், துய்ய பட்ட நாதன்,
அன்பர் தாள் தூளி, நற்பாணன், நற்கலியன்,
ஈது இவர் தோற்றத்து அடைவாம் இங்கு
இந்த ஆழ்வார்கள் பாசுரங்களில் உள்ள உயிர்ச் சொற்களை அனுப விக்கலாம்
இந்தத் தலைப்பிலேயே மூன்று உயிரான பதங்கள் இருக்கின்றன ஒன்று; ஆழ்வார்கள்
இரண்டு; பாசுரங்கள்
மூன்றாவது; உயிர் சொற்கள்
அதென்ன உயிர் சொற்கள்?
சொற்களுக்கு உயிர் உண்டா?
இது முதல் கேள்வி.
இதற்கான பதில் சொற்களுக்கு உயிர் உண்டு என்பதுதான்.
அதனாலேயே அதனை உயிர் சொற்கள் என்று சொல்லுகின்றோம்.
ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வார் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தபொழுது அவருக்குத் துணையாக கணிகண்ணன் என்று ஒரு சீடன் இருந்தான்.
ஒரு நாள் பல்லவ மன்னனுக்கும் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மன்னவன் கணிகண்ணனை ஊருக்குள் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டான். கணிகண்ணன் தன்னை மன்னன் நாடு கடத்தி விட்டதாகவும், அதனால் தான் இந்த பெருமாள் கோயிலை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் சொன்னான் .
ஆழ்வாருக்கு சீடனான கணிகண்ணனைப் பிரிய மனமில்லை ஆனால் அதே சமயம் அங்குள்ள பெருமாளையும் பிரிவதற்கு மனமில்லை. எனவே ஆழ்வார் பெருமாளைத் தன்னுடன் புறப்படும் படி வேண்டவில்லை. கட்டளையிட்டார்.
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம் -துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உந்தன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்
பகவானே! உன்னுடைய பாயாகிய இந்த பாம்பைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, என்னோடு புறப்படு என்று தமிழால் ஆணையிட்டார்.
அந்தச் சொற்கள் உயிர்பெற்று எம்பெருமானின் அர்ச்சாவதாரத்தையே அதாவது சிலை வடிவத்தையே அசைத்து விட்டது
அவரோடு புறப்பட்டு ஊருக்கு வெளியே பாலாற்றங்கரை ஓரமாகச் சென்று விட்டார். இரவு வந்தது. ஒரு மண்டபத்தில் தங்கி விட்டார்கள்.
பிறகு மன்னன் நிலைமையை அறிந்து மன்னிப்பு கேட்கவே, திரும்பவும் ஒரு பாடலால் ஆழ்வார் பழைய இடத்துக்குப் பெருமாளை கொண்டு வந்து சேர்த்தார்.
அப்படி பெருமாள் ஆழ்வார் புறப்பட்டு வந்து தங்கிய இடம் ஓர் இருக்கை என்று வழங்கப்படுகிறது.
-பேராசிரியர் எஸ் கோகுலாச்சாரி
