By S.Gokulachari
மார்கழி மாதம் பிறந்து விட்டது. பனி விடியலில், நம் செவி குளிர, பக்தி பாடல்கள் மாதம் முழுக்கஒலித்துக் கொண்டே இருக்கும். எல்லாக் கோயில் களும் வழிபாட்டிற்கு திறந்திருக்கும். எங்கெங்கு பார்த்தாலும் பக்தி மணம் கமழும். ஆன்மீக விழிப்புணர்வின் உன்னதமான மாதம் மார்கழி மாதம். திருமால் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவையும் சிவாலயங் களில் திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சியும், ஒலித்துக் கொண்டே இருக்கும்.
1.திருப்பாவை ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அவள் நோற்ற மார்கழி நோன்பு திருப்பாவை பாசுரங்களாக விரிந்திருக்கிறது.
2.மார்கழி மாதத்தின் பெயரோடு மார்கழித்திங்கள் என்று தொடங்குகிறது திருப்பாவை என்பது சிறப்பு.
“மார்கழி”த் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.(திருப்பாவை, முதல் பாசுரம்)
3.வைணவத்தில் மார்கழி மாதத்தை திருப்பாவை மாதம் என்று அழைப்பார்கள். மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளையும் அந்தந்த நாளுக்குரிய பாசுர வரிகளைச் சொல்லிக் குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஓங்கி உலகளந்த என்று குறிப்பிட்டால், மார்கழி மூன்றாம் நாள் என்று பொருள்.
4.பொதுவாக பகவானை துயில் எழுப்புவது சுப்ரபாதம் (தமிழில் திருப்பள்ளியெழுச்சி) என்பார்கள். ஆனால் திருப்பாவை வித்தியாசமான சுப்ரபாதம்.முதலில் அடியார்களை துயிலெழுப்பி, அவர்களோடு இணைந்து பெருமாளை துயில் எழுப்பி தன்னுடைய வேண்டுதலைச் சொல்வதாக அமைந்திருக்கிறது.
5.அனைத்து வேதாந்தக் கருத்துக்களும் திருப்பாவையில் இருப்பதால், வேதம் அனைத்திற்கும் வித்து என்று ஆன்றோர்கள் கொண்டாடு கிறார்கள்.. திருப்பாவையின் தத்துவத்தை முழுவதும் புரிந்து கொண்டால் வைணவத்தின் முழுமையான தத்துவத்தை ஒருவன் புரிந்து கொண்டவன் ஆகிவிடுவான்.
6.தமிழில் பாடப்பட்ட திருப்பாவை பாசுரங்கள் மார்கழி மாதத்தில் இந்தியா முழுவதும் உள்ள எல்லா திருமால் ஆலயங்களிலும் பாடப்படுகிறது. மற்ற மொழிக்காரர்கள் தங்கள் மொழிகளில் திருப்பாவை பாடல்களை எழுதிக் கொண்டு தமிழில் பாடி வழிபாடு நடத்துகிறார்கள்.
7.இந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தவர் சுவாமி ராமானுஜர். திரு மலையில் 11 மாதங்களில் வடமொழி சுப்ரபாதம் தான் ஒலிக்கும் ஆனால் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளின் திருப்பாவையும் திருப்பள்ளி எழுச்சியும் தான் ஒலிக்கும்.
8.நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் அர்ச்சனை செய்வது போல் போற்றி மந்திரம் திருப்பாவையில் உள்ளது இந்தப் பாடலைச் சொல்லி ஒவ்வொரு பூவாக இறைவனுக்குச் சமர்ப்பிக்கலாம் .
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றுஎன்றுஉன் சேவகமே ஏத்திப் பறை கொள்வாய்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
9.வைணவ ஆலயங்களில் எந்த விழாவாக இருந்தாலும் கூட ஆண்டாளின் திருப்பாவை பாடல்களைப் பாடாமல் வழிபாடு நிறைவு பெறாது.
10.இறைவனை அடைவதற்கு ஆண்டாள் காட்டும் மூன்று வழிகள் .1.தூய்மையான மனதோடு
2.தூய்மையான மலர்களோடு
3.இறைவனின் திருநாமத்தை
பாடுவதன் மூலம், மிக எளிதாக இறைவனை அடையலாம்.
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
