திருவரங்கத்திலும் மற்ற எல்லாப் பெருமாள் கோயில்களிலும் திருநெடுந் தாண்டகம் இன்று தொடக்கம்.. மார்கழி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று வைகுண்ட ஏகாதசி.. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும் பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள் பெருமாள் ஆலயங்களில் நடைபெறும். இதற்கு திரு அத்யயன உற்சவம் என்று பெயர். ஸ்ரீரங்கத்தில் இந்த உற்சவம் நடைபெறும் இருபத்தொரு நாட்களும் விழாக்கோலம் கொண்டிருக்கும். அதன் தொடக்கம்தான் திருநெடுந்தாண்டகம். (இன்று)
திருநெடுந்தாண்டகம் என்பது திருமங்கையாழ்வாரின் ஆறாவது பிரபந்தம். இதை வைணவர்கள் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் என்பார்கள். இந்தப் பிரபந்தத்தை வைத்துத்தான் பராசரபட்டர் வேதாந்தியான மாதவாசாரி யாரை நஞ்ஜீயர் என்கின்ற ஆச்சாரியராக மாற்றினார்.
திருமங்கையாழ்வார் இந்தத் திருநெடுந்தாண்டகத்தை பெருமாள் முன் பாடி, அதற்குச் சன்மானமாகத் தான் திருவாய்மொழி உற்சவத்தை நடத்த பெருமாளிடம் அனுமதி பெற்றார் என்பது வரலாறு.
இந்த உற்சவத்தின் ஒரு பகுதிதான் வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் 22 12 2022 வியாழக்கிழமை தொடங்குகிறது, அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (23 12 22 )முதல், பகல் பத்து ஆரம்பமாகிறது ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெருமாள் மோகினி அலங் காரத்தில் காட்சிதருவார்.அடுத்த நாள் (2.1.23) வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் காலை 4.30க்கு திறக்கப்படும்.ஜனவரி மாதம் 8ஆம் தேதி கைத்தலச் சேவையும், 9ஆம் தேதி திருமங்கை மன்னனின் வேடுபறி உற்சவமும், ஜனவரி 10ஆம் தேதி தீர்த்தவாரியும் பதினோராம் தேதி ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷமும் நடைபெறும்.
