ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒவ்வொரு விசேஷம் உண்டு .ஆனால் வரு கின்ற மாசி மாத பௌர்ணமிக்கு மற்ற பௌர்ணமிகளுக்கு இல்லாத சிறப்பு உண்டு. காரணம் இந்த பௌர்ணமி பெரும்பாலும் மக நட்சத்திரத்திலேயோ அல்லது மக நட்சத்திரத்தை ஒட்டிய பௌர்ணமி யிலோ நிகழ்வது
பொதுவாக பௌர்ணமி அமாவாசைகளில் மட்டும் சமுத்திரத்தில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அன்று சமுத்திரத்தில் நீராடி கரையில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது மிகச் சிறப்பாக சொல்லப்படுகிறது .
ஆனால் இந்த மாசி பௌர்ணமிக்கு என்ன விசேஷம் என்று சொன்னால் மற்ற பௌர்ணமி அமாவாசை போன்ற புனித நீராடலை விட ஆயிரம் மடங்கு அதிக பலனை தரக்கூடியது .
காரணம் என்ன என்று சொன்னால் இந்த மாசி மகத்தில் எல்லா ஆலயங்களிலும் உள்ள உற்சவமூர்த்திகள் அது சைவமாக இருந்தாலும் சரி திருமால் ஆலயங்களாக இருந்தாலும் சரி அம்மன் கோயில்களாக இருந்தாலும் கிராம கோயில்களாக இருந்தாலும் சரி அத்தனை உற்சவ மூர்த்திகளும் வந்து வந்து தீர்த்தவாரி எடுத்துக் கொள்கின்றார்கள் .
இந்த ஆண்டு சில இடங்களில் ஆறாம் தேதி திங்கட்கிழமையும் மக நட்சத்திரம் என்பதால் மாசி மகம் நடக்கிறது.
இன்னும் சில திருத்தலங்களில் குறிப்பாக வைணவத் தலங்களில் பௌர்ணமி திதி உள்ள நாளான ஏழாம் தேதி செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி நடக்கிறது. இது அந்தந்த கோயில்களினுடைய வசதிக்கு தகுந்தவாறு மரபுக்கு தகுந்தவாறு நடைபெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அப்படி சுவாமி தீர்த்தவாரி செய்த அந்த புனிதமான நீர் நிலையில் நாம் நீராடுவதன் மூலமாகவோ அல்லது அந்த காட்சியை தரிசிப்பதன் மூலமாகவோ நம்முடைய ஜென்ம பாப வினைகள் கழியும்.
மக நட்சத்திரம் என்பது கேது பகவானின் நட்சத்திரம்.சூரியனின் சிம்ம ராசியில் உள்ளது. கேதுவை ஞான காரகன் என்று சொல்லுவார்கள். ஞானம் வந்துவிட்டால் பாவம் தீரும். அது மட்டும் இல்லை. பாவத்தின் தன்மையை தெரிந்து அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
சாதாரணமான தண்ணீரில் நீராடினால் புற அழுக்குகள் கழியும். ஆனால் மாசி மகத்தில் சுவாமி தீர்த்தவாரி செய்த புனித நீரில் நீராடினாலோ அல்லது தலையில் தெளித்துக் கொண்டாலோ நம்முடைய புற அழுக்குகளோடு அக அழுக்குகளும் தீரும்; கழியும்.
இதைத்தான் வள்ளுவர்
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப்படும் என்று சொன்னார்.
மாசி மக விரதம் என்பது குறிப்பாக பாவங்கள் தீர்வதற்கு மட்டுமல்ல சந்ததி விருத்திக்கும் செல்வ விருத்திக்கும் உரிய விரதமாக நம்முடைய முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த விரதத்தின் போது மூன்று கடன்களை நாம் நிறைவேற்றுகின்றோம். தெய்வங்களை தரிசித்து தீர்த்தவாரியில் கலந்து கொள்வதால் தெய்வ கடன்களை நிறைவேற்றுகின்றோம்
அதே நேரம் புனித நீராடி விட்டு முன்னோர்களுக்கு நீரை அக்கியம் தருவதால் பிதிர் கடன் எனப்படும் நீத்தார் கடனையும் நிறைவேற்றுகின்றோம்.
இரண்டு கடன்களையும் நீராடி நீக்கி விட்டு சாடசியாக சூரிய நமஸ்காரம் செய்து பஞ்சபூதங்களையும் வணங்கி நம்மால் இயன்ற தானத்தை செய்வதன் மூலமாக குறிப்பாக அன்னதானத்தை செய்வதன் மூலமாக பூத யக் ஞம் செய்கிறோம்.
நொய்யரிசி எடுத்து சிறு உயிரினங்களான எறும்பு முதலிய உயிரினங்களுக்கு போடுவதன் மூலமும் நாம் பூத யக்ஞம் எனப்படும் கடனையும் நிறைவேற்றுகின்றோம்.
இப்படி முக்கடனையும் நிறைவேற்றக்கூடிய முத்தான நாள்தான் மாசி மகம் .
சுவாமி தீர்த்தவாரி முடிந்ததும் பெரும்பாலும் ஆங்காங்கே உபயதாரர்கள் மண்டகப் படிகள் நடக்கும். அந்த காலத்தில் முன்னோர்கள் தீர்த்தவாரி முடித்தவுடன் ஆலயத்துக்குச் செல்லக்கூடிய பெருமாளை தங்கள் ஊர்களில் வந்து தங்கி செல்ல வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான மானியங்களை எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்.
உதாரணமாக திருக்கோவலூரில் மாசி மக தீர்த்தவாரிக்கு புறப்படும் பெருமாள் 100 கிலோ மீட்டருக்கு மேல் பல்வேறு இடங்களில் தங்கி ஆங்காங்கே உள்ள மக்களுக்கு அருள் செய்து கடலூர் கடற்கரையை அடைகிறார். அதைப்போலவே திரும்பச் செல்லும் பொழுது 15, 20 இடங்களில் அவருக்கு மண்டகப்படி நடக்கிறது. ஸ்ரீமுஷ்ணம் பெருமாளும் அப்படித்தான் .
அவர் ஸ்ரீ முஷ்ணத்திலிருந்து அந்த காலத்தில் மாசி மகத்துக்கு புறப்பட்டால், பல இடங்களில் மண்டகப்படி முடிந்து சித்திரை மாதம் தான் ஸ்ரீமுஷ்ணம் தன்னுடைய ஆஸ்தானத்துக்கு திரும்புவார் என்றால் மாசி மக உற்சவத்தின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ளலாம்.
அன்று கட்டாயம் விரதம் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு மிக விதத்தில் உங்கள் ஊருக்கு வருகின்ற சுவாமியை வரவேற்க வேண்டும். வஸ்திரமுமோ மாலையோ அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும். ஆங்காங்கே நடக்கும் அன்னதானத்தில் நீங்களும் அரிசியோ பொருளோ தந்து கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் நீங்களே அன்னதாரத்தைச் செய்ய வேண்டும்.
அன்று மாலை பெரும்பாலும் சுவாமியினுடைய வீதி வலம் இருக்கும். அப்பொழுது சுவாமியையும் சந்திரனையும் தரிசிக்க வேண்டும். காலையில் தீர்த்த வாரி முடிந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்தது போலவே மாலையில் சந்திரனையும் நமஸ்காரம் செய்து சுவாமியையும் நமஸ்காரம் செய்து முன்னோர்களுடைய ஆசீர்வாதத்தை வாங்க வேண்டும்.
மாசி மகத்தின் சிறப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். இந்த நாளில் தான் வருண பகவானின் பிரம்மஹத்தி தோஷம் தீர்ந்தது. இறைவனுக்கே தீர்த்தன் என்று பெயர். தீர்த்தமாகிய வருட பகவானின் குறைகள் தீர்த்தனாகிய எம்பெருமானின் கருணையால் தீர்ந்த தினம் என்பதால் அதே கருணை நமக்கு கிடைக்கும்.
புராண ரீதியாக இந்த நாளில் தான் பார்வதி தேவி தட்சனின் மகளாகத் தோன்றினாள்.
சுவாமி மலையில் தந்தைக்கு குருவாக மந்திரத்தை முருகப்பெருமான் உபதேசித்த நாள் மாசி மகம் . வைணவத்தில் இரண்யாட்சனிடமிருந்து பூமியை வராக பெருமான் மீட்டெடுத்த நாள்.
அதனால்தான் நேராக சுவாமி வங்கக்கடல் இருக்கும் கீழக்கடலுக்கு தீர்த்தவாரி செல்கின்றார். இப்படிப்பட்ட உன்னத நாளில் நாமும் தீர்த்தம் ஆடுவோம். பௌர்ணமி பூஜையை செய்வோம். இறைவனை தரிசிப்போம். நம்மால் இயன்ற அன்னதானங்களைச் செய்வோம் .நல்லதோர் வாழ்க்கையை அடைவோம்.
