
வருகின்ற செவ்வாய்க்கிழமை மார்ச் 21-ம் தேதி அமாவாசை நாள். இந்த அமாவாசைக்கு என்ன சிறப்பு என்பதைப் பார்ப்போம்.
இந்த வருடத்தின் கடைசி அமாவாசை. பொதுவாக அமாவாசை என்பது உச்சிக்கால பொழுதில் முன்னோர்களுக்குச் செய்யப்படும் நீர்க்கடன். இது அவசியம் செய்ய வேண்டும். தெய்வ கடன் செய்வதில் சற்று தாமதம் இருந்தாலும் நீத்தார் கடன் செய்வதில் தாமதமோ அலட்சியமோ கூடாது. அது செய்கின்ற நேரம் பெரும்பாலும் முற்பகல் கடந்த நேரமாக இருக்கும். அதே அமைப்பு இந்த பங்குனி மாதத்தில் வருகிறது .பங்குனி மாதம் என்பது தேவர்களுக்கு 10 முதல் 12 மணி வரை உள்ள முற்பகல் கடந்த உச்சிக்கால நேரம். இந்த நேரத்தில் நீத்தார் கடன் செய்வது நிறைவான மகிழ்ச்சியை அவர்களுக்குத் தரும்.
அது பசி நேரத்தில் சாப்பாடு போடுவது போல. அந்தச் சாப்பாடு முன்னால் போட்டாலும் சரியாக சாப்பிட முடியாது. தாமதமாகப் போட்டாலும் பசியைப் பொறுக்க முடியாது. இதை மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டு நீர் கடனுக்கு என்று ஒரு காலம் நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
இந்த பங்குனி மாதம் என்பது இயல்பாகவே அப்படி அமைந்து விடுகிறது. முன்னோர்களின் பூரணமான அருளைப் பெற்றுத் தரும் இது குருவினுடைய பூரட்டாதி நட்சத்திரத்தில் வருகிறது. அன்று பூரட்டாதி 41 நாழிகை நேரம் முழுமையாக இருக்கிறது .
குரு காலச்சக்கரத்தின் பாக்கிய ராசிக்கும் மோட்ச ராசியான மீன ராசிக்கும் உரியவர். சகல பாக்கியங்களும் நாம் அனுபவிக்க வேண்டும், இந்த உலகத்தில் நன்றாக அனுபவித்து நிறைவாக மோட்சத்தை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் குருவின் கடாட்சத்தைப் பெற்றவர்கள்.
நம்முடைய காஞ்சி மகா ஸ்வாமிகள் அவரைத் தேடி வருகின்றவர்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அது பலனைத் தரவில்லை; தடைகள் இருந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லுகின்ற பொழுது அவர் கேட்கின்ற முதல் கேள்வி” முறையாக நீத்தார் கடனை நிறைவேற்றுகிறீர்களா?” என்று கேட்பார். அப்படி நிறைவேற்றாவிட்டால் உடனடியாக அதைச் செய்யுங்கள் .பிறகு தெய்வத்திடம் வரலாம் என்று சொல்வார்.
அப்படிப்பட்ட நீத்தார் கடனுக்கு உரிய இந்த பங்குனி மாதத்தில் நீங்கள் காலை எழுந்து நீராடி சுத்தபத்தமாக வீட்டைத் துடைத்து அன்று மட்டும் நீங்கள் வெளி வாசலில் கோலம் போடாமல் மற்ற விஷயங்களை எல்லாம் முறையாக விரத நாட்களில் எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்து காலை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருங்கள்.
உச்சி கால வேளையில் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துங்கள் .எள்ளும் நீரும் இறைத்து அவர்கள் பசியையும் தாகத்தையும் போக்குங்கள். அவர்களது பெயரைச் சொல்லி தானம் செய்யுங்கள். பசியோடு இருப்பவர்களை அழைத்து அன்னதானம் செய்யுங்கள். குறைந்தபட்சம் யாராவது ஒருவருக்காவது அமாவாசை அன்று அன்னம் அளிக்க வேண்டும்.சாப்பிட்டு விட்டு அவர் செல்லுகின்ற பொழுது சிறிது தட்சணையும் தர வேண்டும். அப்படிச் செய்கின்ற பொழுது முன்னோர்களுடைய ஆசி நமக்கு கட்டாயம் கிடைக்கும்.
தெய்வ பூஜையை அல்லது வழிபாட்டை அல்லது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்ற பொழுது சில தடைகள் வரும் என்று சொன்னால் ஒரே ஒரு காரணத்தினால்தான் வரும். அது நீத்தார் கடன் நிறைவேற்றாததால் வரும் .அதனால்தான் முதலில் அதை நிறைவேற்றிவிட்டு பிறகு தெய்வத்துக்கான நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டும் என்றார்கள்.
அதைப் போலவே நம் வீட்டில் குலதெய்வ வழிபாடு திருமணம் போன்ற சுபச்சடங்குகள் , வீடு கிரகப்பிரவேசம் முதலிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்னால் ஒரு முறை நீத்தார் கடன்கள் முறையாகச் செய்தீர்களா என்று பாருங்கள். அதன் பிறகு குலதெய்வ வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள். பிறகு இஷ்ட தெய்வக் கோயிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள். அதன் பிறகு நீங்கள் எப்படி முறையாக இந்த சுப காரியத்தைச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்யுங்கள்.
சர்வ அமாவாசை நாளான செவ்வாய்க்கிழமை குருவின் நட்சத்திரத்தில் இந்த அமாவாசை வருவதால் செவ்வாய் சம்பந்தப்பட்ட தோஷங்கள் கழியும். குறிப்பாக நிலம் மற்றும் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிலே தடைகள் இருந்தாலும் விலகிவிடும். அதேபோலவே திருமணம். ஆகாத பெண்களுக்கு செவ்வாய் தடையாக இருந்தால் முன்னோர்கள் ஆசியோடு இந்தத் தடைகள் விலகும் அன்று சர்வ அமாவாசை நாள் . பிண்ட பித்ரு நாள் என்றெல்லாம் இருப்பதால் அந்த நாளை தவற விட்டு விட வேண்டாம்.முன்னோர் ஆசியோடு முழுமையான வாழ்க்கையை வாழுங்கள்.
