இராமானுஜ நூற்றந்தாதி 108 – Ramanuja Nootrandhi 108 – Part 1
இராமானுஜர் காலத்தில் ராமானுஜரைப் பற்றி எழுதப்பட்ட அருமையான நூல் இராமானுஜ நூற்றந்தாதி (Ramanuja Nootrandhi)
இராமானுஜரைப் பற்றி வேறு பல நூல்கள் அவர் காலத்திலேயே எழுதப்பட்டிருந்தாலும், தமிழில் எழுதப்பட்ட நூல் இராமானுஜ நூற்றந்தாதி.
இராமானுஜ நூற்றந்தாதி நூத்தி எட்டு தமிழ்ப் பாடல்களால் அமைந்தது. இராமானுஜரின் சீடராகிய திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இந்த நூல் மற்ற நூல்களை விட சிறப்பான இடத்தைப் பிடித்து இருப்பதற்கு காரணம் இராமானுஜ நூற்றந்தாதி பாசுரங்கள் வைணவ தினசரி வழிபாட்டில், அது கோயிலாக இருந்தாலும் வீடாக இருந்தாலும்,இடம்பெறுகின்றன. எந்த வழிபாடாக இருந்தாலும் அதனுடைய இராமானுஜ நூற்றந்தாதி பாசுரங்கள்,குறிப்பாகச் சாற்றுப் பாசுரங்கள் பாடப்படாமல் நிறைவு பெறுவதில்லை.
ஆழ்வார்களின் அருளிச்செயலோடு இராமானுஜ நூற்றந்தாதி சேர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் பிரிக்கமுடியாத நூலாக இராமானுஜ நூற்றந்தாதி இருக்கிறது.
இந்த நூலை பிரபன்ன காயத்ரி அல்லது பிரபன்ன சாவித்திரி என்று சிறப்பான ஒரு இடத்தை வைணவர்கள் வைத்திருக்கிறார்கள் .
இராமானுஜருக்கும் (SriRamanuja) அமுதனாருக்கும் திருவரங்கத்தில் கருத்து வேறுபாடு இருந்தது. ஆரம்ப நிலையில் இராமானுஜரை அவர் சற்றும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல் அரங்கநாதன் திருக்கோயிலில் இராமானுஜர் செய்ய முயன்ற சீர்திருத்தங்களை எதிர்த்தார். அவருடைய தலையீட்டை இயன்ற அளவு மறுத்தார்.
இனி அரங்கநாதர் திருக்கோயிலில் தமக்கு வேலை இல்லை என்று இராமானுஜர் வெறுத்துப்போய் ஊரை விட்டு நாம் வெளியேறி விடலாம் என்று நினைத்த பொழுது, இராமானுஜர் சீடராகிய கூரத்தாழ்வான் தடுத்து, இந்தக்கோயில் நம்பியை அடியேன் திருத்தி தங்கள் தொண்டுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறேன் என்று உறுதி அளித்து அதன்படியே செய்தார்.
கோயில் நம்பிக்கு இராமானுஜரின் பெருமையைப் புரிய வைத்தார். கடைசியில் அவர் இராமானுஜரின் சீடர் ஆகி தன்னுடைய வாழ்நாளில் மிகப் பெரிய காரியமாக இராமானுஜரின் புகழைப் போற்றிப் பரவவேண்டும் என்று நினைத்தார். மிகச் சிறந்த புலவரான அவர் நம்மாழ்வாரின் பெருமையை பாடியது போல் ஆசார்யன் மீது பிரபந்தம் பாட விரும்பினார். நம்மாழ்வார் மீது பிரபந்தம் பாடிய ஆழ்வாருக்கு இயற்பெயர் மறைந்து மதுரகவி என்ற பட்டம் கிடைத்தது. அதைப்போலவே இராமானுஜரின் பெருமையைப் பாடிய அமுதனாருக்கு கோயில் நம்பி என்கிற பெயர் மறைந்து திருவரங்கத்து அமுதனார் என்கிற ஒரு விருது கிடைத்தது.
இந்த இராமானுஜ நூற்றந்தாதி இராமானுஜரின் பெருமையை மட்டும் கூறுவதாக எடுத்துக் கொண்டு விடக்கூடாது.
ஆரம்பத்தில் இந்த நூலை இயற்றிய போது ராமானுஜரும் அப்படித்தான் நினைத்தார். தன்னுடைய பெருமையை மட்டுமே பேசுவதற்கு என்று வரும் நூல் என்று முதலில் எழுதப்பட்ட நூலை அவர் நிராகரித்தார்.
ஆனால் அமுதனார் அவர் நிராகரிக்காத வண்ணம் மறுபடியும் அந்த நூலை மாற்றி அமைத்தார். முதலில் இராமானுஜர் பெருமையை மட்டும் தனித்துப் பாடியவர், பிறகு வேத வேதாந்தக் கருத்துக்களையும் ஆழ்வார்களின் பெருமையையும் இணைத்து, அந்த ஆழ்வார்களையும் ஆழ்வார்கள் பாடிய அரங்கனையும் அடி பணிந்தவர் இராமானுஜர் என்று பொருள் வருமாறு அமைப்பை மாற்றினார் என்று வரலாறு.
இராமானுஜருக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் கூட இந்த ராமானுஜ நூற்றந்தாதி யில் இராமானுஜர் என்கிற பெயர்தான் பிரதானமாக இருக்கிறது.எல்லா பாசுரங்களில் வருகிறது. காரணம் அவருக்கு முதல் முதலில் அவருடைய தாய் மாமனாகிய பெரிய திருமலை நம்பிகள் வைத்த பெயர் இளையாழ்வார். இளையாழ்வார் என்பது லட்சுமணனைக் குறிக்கும்.அவர்தான் ஒழுவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்தவர்.
ஆழ்வார்கள் லட்சுமணனை இளையபெருமாள் என்றும் இளங்கோ என்றும் சிறப்பாகப் பாடுகின்றனர்
அவரின் அவதாரமே ராமானுஜர் . அவர் போலவே தூய தொண்டினை செய்யக்கூடிய தகுதியும் ஆற்றலும் இருந்ததால் பெரிய திருமலை நம்பிகள் இளையாழ்வார் என்று இவருக்கு திருநாமம் சாற்றினார்.
ராமனுக்கு தம்பி (அனுஜன்) என்கிற பொருளில் இராமானுஜன் என்கிற பெயர் வரும். இராமனைச் சொல்லி இராமனுக்கு தம்பி என்று ஒவ்வொரு பாசுரத்தில் வருவதன் மூலம் அந்த ஈரெழுத்து நாமமாகிய தாரக நாமம் 108 பாசுரங்களிலும் இடம்பெறுவதால் ராம நாமத்தை 108 முறை பாராயணம் செய்த பெருமை இந்த நூலை பாராயணம் செய்யும் பொழுது வரும். அதனாலே உயிர்களுக்கு போக்கியத்தையும் தாரகத்தையும் கொடுக்கக்கூடிய பீஜாட்சரமாகிய ராம என்கிற ஈரெழுத்து மந்திரத்தை பாடல்கள் தோறும் வைத்தார் அமுதனார். ஆசார்யன் பெயரும் ராம என்னும் பகவான் பெயரும் இணைந்து சொல்லும் பேற்றினை அளித்தார்.
இந்த நூலின் பாசுரங்கள் 108.
108 என்ற எண் மேஜிக் எண் என்று சொல்வார்கள். ஒருவன் சாலையில் திடீரென்று விபத்தில் அகப்பட்டுக் கொண்டான்.உடனே நமக்கு நினைவுக்கு வருகின்ற எண் 108.சுகாதாரத்துறையில் அவசர எண் என்று ஆம்புலன்ஸ் சேவைக்கு இதனைக் கொடுத்திருக்கிறார்கள்.
எனவே ஆபத்தில் காப்பாற்றுகின்ற ஒரு எண்ணாக 108 இருக்கிறது.
இந்த எண்ணின் கூட்டுத்தொகை 9.இந்த ஒன்பது என்பது மிகச்சிறப்பான நிலையான எண் என்று சொல்லலாம்.மிக அதிக மதிப்புடைய எண் .
நவரத்தினங்கள்,நவரசங்கள்,நவ துவாரங்கள், நவகோள்கள்,நவ உறவுகள்,நவராத்திரி,என்று இந்த ஒன்பதின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணும் பெண்ணும் அல்லாத ஒருவரை இந்த எண்ணால் குறிப்பிடுகின்ற வழக்கம் இருக்கின்றது என்று சிந்தித்தால்அதிரும் பொருள் நுட்பம் நமக்குப் புரியும்
ஆணும் பெண்ணும் அல்லாத ஒரு வடிவத்தில் ஆண்டவன் இருக்கிறான் என்பதால் அவனை அர்த்தநாரீஸ்வரர் என்று சைவத்தில் அழைக்கின்றோம்.ஆழ்வாரும் ஆண் அல்லன் பெண் அல்லன் என்று பாடுகின்றார்.
இந்த எண்ணோடு எந்த எண்ணைப் பெருக்கினாலும் அதன் கூட்டுத் தொகையான எண் ஒன்பது என்றே வரும்.
ஒன்றால் பெருக்கினால் 9 வரும். இரண்டால் பெருக்கினால் 18 வரும் இரண்டையும் கூட்டினால் ஒன்பது வரும் என்றால் மூன்றால் 9 ஐ பெருக்கினால் 27 வரும். கூட்டினால் ஒன்பது வரும் .
அதனால் இந்த எண் மிகச்சிறப்பு வாய்ந்த எண். இந்த எண்ணின் விரிவு 108 என்பதால் இந்த எண்ணுக்கு மிகப்பெரிய சிறப்பு இருக்கிறது. .
இனியென்ன குறை நமக்கு எம்பெருமானார் திருநாமத்தால்
முனி தந்த நூற்றியெட்டு சாவித்திரி என்னும் நுண் பொருளை
கனி தந்த செஞ்சொல் கலித்துறை அந்தாதி பாடித்தந்தான்
புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே
என்று தனியனில் வேதபிரான் பட்டர் அருளிச் செய்திருக்கிறார். திருவரங்கத்து அமுதனார் இந்த நூலை எழுதியதால் ஒரு மிகப்பெரிய புண்ணியத்தை பெற்றுவிட்டார் என்பதினால் அவரை மற்ற ஆச்சாரியர்கள் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே என்று போற்றுகின்றனர்.
108 என்கிற எண்ணிக்கை வைணவத்தில் மிக முக்கியம்.பல்வேறு நாமங்களை பாராயணம் சொல்லுகின்ற பொழுது சில முறைகள் உண்டு.
இதை மூன்று வகையாக சொல்வார்கள்.
ஒன்று சகஸ்ரநாமம் .
இன்னொன்று லகு சகஸ்ரநாமம்.
மூன்றாவதாக சத நாமம்.
சகஸ்ரநாமம் ஆயிரம் நாமங்களின் தொகுப்பு.அதைவிட கொஞ்சம் குறைவாக இருந்தால் அதையும் சகஸ்ரநாம கணக்கில் சேர்த்து லகு சகஸ்ரநாமம் என்பார்கள்.
ஆனால் 100 அல்லது 108 என்கிற எண்ணிக்கையில் நாமங்களின் தொகுப்பு இருந்தால், அதனை சதநாமாவளி என்று சொல்வார்கள்.
இந்த இராமானுஜ நூற்றந்தாதி சதநாமாவளி என்கிற கணக்கில் சேரும்.
வைணவத்தில் ஆழ்வார்களால் பாடப்பட்ட திருமால் திருத்தலங்களில் எண்ணிக்கை 108.
போற்றி மந்திரங்களை 108 முறை சொல்லப்படவேண்டும். ஜபமாலையில் கூட பெரும்பாலும் 108 என்கிற எண்ணிக்கையில் தான் மணிகள் கோர்க்கப்பட்டிருக்கும்.
இதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம்.
12 மாதங்களில் சூரியன் 27 நட்சத்திரங்களை கடக்கிறான்.
27 நட்சத்திரங்கள் என்று சொன்னாலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு .27 ஐ நான்கால் பெருக்கினால் 108 பாதங்கள் வரும்.ஒரு வருடத்தில் 108 பாதங்களை சூரியன் கடப்பதால் 108 சிறப்பு. ஜோதிட கட்டத்தில் 9 கிரகங்கள் 12 ராசி கட்டங்களில் இருக்கின்றன. இந்த 9 ஐ 12 என்கிற எண்ணினால் பெருக்கினால் 108 வரும்.
ஆழ்வார்கள் பன்னிருவர். அந்த ஆழ்வார்கள் நமக்கும் இறைவனுக்கும் உள்ள ஒன்பது வகையான உறவுகளைப் பற்றி சொல்லி இருக்கின்றனர். இந்த 12ஐ 9 ஆல் இரண்டையும் பெருக்கினால் 108 என்பது வரும்.
எனவே எந்த வகையில் பார்த்தாலும், நமது சமயத்தில், சைவமாக இருந்தாலும் வைணவமாக இருந்தாலும், 108 என்ற எண்ணிக்கை மிகச்சிறந்த எண்ணிக்கை.
இதன் கட்டுரையின் இரண்டாவது பகுதியை படிக்க இங்கு கிளிக் செய்யவும் :
வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்?
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது ஓங்கும்அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!
சோமாசியாண்டான் அருளியதென்பர்
சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம இராமா னுச! இதென் விண்ணப்பமே.
வேதப்பிரான்பட்டர் அருளியதென்பர்
இனியென் குறைநமக் கெம்பெரு மானார் திருநாமத்தால்
முனிதந்த நூற்றெட்டுச் சாவித் திரியென்னும் நுண்பொருளை
கனிதந்த செஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித்தந்தான்
புனிதன் திருவரங் கத்தமு தாகிய புண்ணியனே.
———————————————————————————————
பூமன்னு மாது பொருந்திய மார்பன்* புகழ் மலிந்த-
பாமன்னு மாறன்* அடிபணிந்து உய்ந்தவன்* பல் கலையோர்-
தாம்மன்ன வந்த இராமானுசன்* சரணாரவிந்தம்-
நாம்மன்னி வாழ* நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே.
கள்ளார் பொழில் தென்னரங்கன்* கமலப் பதங்கள் நெஞ்சில்-
கொள்ளா* மனிசரை நீங்கி* குறையல் பிரானடிக்கீழ்-
விள்ளாத அன்பன் இராமானுசன்* மிக்க சீலமல்லால்-
உள்ளாது என் நெஞ்சு* ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே.
மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,* வஞ்ச முக்குறும்பாம்-
குழியைக் கடக்கும்* நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்*
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி* அல்லா-
வழியைக் கடத்தல்* எனக்கு இனி யாதும் வருத்தமன்றே.
தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து* தலமுழுதும் கலியே-
ஆள்கின்ற நாள் வந்து* அளித்தவன் காண்மின்* அரங்கர்மௌலி-
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்*
வாழ்கின்ற வள்ளல்* இராமானுசன் என்னும் மாமுனியே.
ஆண்டுகள் நாள் திங்களாய்* நிகழ்காலம் எல்லாம் மனமே!-
ஈண்டு* பல்யோனிகள் தோறும் உழல்வோம்* இன்றோர் எண்ணின்றியே-
காண்தகு தோவண்ணல் தென்னத்தி ஊரர் கழலிணைக்கீழ்ப்*
பூண்டவன்பாளன்* இராமானுசனைப் பொருந்தினமே.
உதிப்பன உத்தமர் சிந்தையுள்* ஒன்னலர் நெஞ்சம்அஞ்சி-
கொதித்திட* மாறி நடப்பன* கொள்ளைவன் குற்றம்எல்லாம்-
பதித்த என் புன்கவிப் பாஇனம் பூண்டன பாவுதொல்சீர்*
எதித்தலை நாதன்* இராமானுசன் தன் இணைஅடியே
இடுமே இனிய சுவர்க்கத்தில்* இன்னும் நரகிலிட்டுச்-
சுடுமே? அவற்றை* தொடர்தரு தொல்லை* சுழல்பிறப்பில்-
நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம்வசத்தே*
விடுமே? சரணமென்றால்,* மனமே! நையல் மேவுதற்கே?
செழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன்* திருவடிக்கீழ்-
விழுந்திருப்பார் நெஞ்சில்* மேவு நல்ஞானி* நல் வேதியர்கள்-
தொழும் திருப்பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்*
எழுந்திரைத்து ஆடும் இடம்* அடியேனுக்கு இருப்பிடமே.
Click here to Read Part 2 of this Article :
