துலா ராசி :
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் அஷ்டமத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். சில தினங்களில் அவர் ஒன்பதாம் இடத்தை நோக்கி நகரப் போகிறார். அதுவரையில் உங்கள் முயற்சிகள் சின்ன சின்ன தடைகளை சந்திக்கும். உங்களுக்கே குழப்பமான மனநிலை ஏற்படும். எதிர்மறை சிந்தனைகள் தலைதூக்கும். அவற்றை நீங்கள் அலட்சியப்படுத்த வேண்டும்.
அதைப்போலவே பொருளாதார நிலையிலும் இந்த கன்னி ராசி நேயர்களுக்கு சில சிக்கல்கள் மாதத்தின் முற்பகுதியில் இருக்கவே செய்கிறது. காரணம் தனாதிபதியாகவும் களத்திர காரகனாகவும் இருக்கக்கூடிய செவ்வாய் மாதத்தின் முற்பகுதியில் மீனத்தில் இருக்கக்கூடிய நிலை. இந்த நிலை சில எதிர்பாராத பொருளாதார சிக்கல்களையும் வம்பு வழக்குகளையும் உண்டாக்கும். இல்லாவிட்டால் உடலில் சிறு நோய்கள் தோன்றும். கணவன் மனைவி இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படும். இவற்றிலெல்லாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.
குடும்ப சுபநிகழ்ச்சிகளில் சிறிய தடைகள் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு சில நெருக்கடிகள் இம்மாதத்தில் ஏற்படும். சிறிய பிரச்சினைகள் கவனிக்காமல் விட்டு விட்டால் அது பெரிய கஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகம் விழிப்போடு இருக்கவேண்டும். கேட்டை,மூலம், திருவோணம், புனர்பூசம் முதலிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு தொழில் கிரகமான சூரியன் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பது மூன்றாம் இடத்தில் கேது சனி இணைந்திருப்பதும் ஒரு சில எதிர்பாராத நன்மைகளை அளிக்கும். இம்மாதம் தொடர்ந்து ஏதாவது ஒரு சனிக்கிழமை அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று நவக்கிரக சன்னதியை வலம் வந்து வணங்குங்கள்.நல்லது.
—————————————————————————————————————————————————-
விருச்சிக ராசி :
உங்கள் ராசிநாதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார். ஏழாம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். ஆத்மகாரகன் சூரியன் ஒன்பதாமிடத்தில் நல்ல நிலையில் இருக்கிறார். தனாதிபதி குரு இரண்டாம் இடம். அவர் கேது சனியோடு சேர்ந்து இருப்பதால் பொருளாதார முன்னேற்றமானது சற்று குறைவாகவே இருக்கும். எதிர்பார்த்தபடி முன்னேற்றங்கள் இருக்காது. ஆயினும் ஆத்மகாரகன் சூரியன் எல்லாவற்றையும் விழிப்புடன் கடந்து விட வழி காட்டுவான். அஷ்டம ஸ்தானத்தில் ராகு இருப்பதும் கேது சனி முதலிய கோள்கள் பார்ப்பதும் உடல் ரீதியான சில பிரச்சினைகளையும், அல்லது கோர்ட், கேஸ் முதலிய வம்பு வழக்குகளையும் கொண்டு வந்து சேர்க்கும் என்பதால் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்ளவும்.

உறவினர்களிடம் சில கருத்து மோதல்கள் வரலாம். முன்யோசனையுடன் திட்டமிட்டால் சங்கடங்களை சமாளிக்கலாம். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் கோரிக்கைகளை அவர்களிடம் வைத்திருந்தால் அவர்கள் இம்மாதம் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். நீங்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்து இருந்தால் நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். தொழிலதிபர்களை பொறுத்தவரையில் சில நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.அதிக முதலீடு இல்லாத சேவை தொழில்களில் லாபம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஊக்கம் பிறக்கும். உபயோகப்படுத்தும் பொருட்களின் மீது கவனம் தேவை. சிக்கனம் என்பது அவசியம். காரணம் சில எதிர்பாராத விரயங்கள் உங்களை அறியாமலேயே நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வரவும். வாக்கு ஸ்தானத்தில் சனியும் கேதுவும் இருப்பதால் சிலர் உணர்ச்சி வசமாக பேசி விவகாரத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் வாக்கையும் நாக்கையும் இம்மாதம் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டால் மிகுந்த துன்பங்கள் வராது .
—————————————————————————————————————————————————-
தனுசு ராசி :
ஆத்ம காரகனான சூரியன் உங்கள் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதி. அவர் அஷ்டமத்தில் மறைந்து இருப்பது என்பது அவ்வளவு நல்ல அமைப்பல்ல .அது மட்டுமல்லாமல் உங்கள் லக்னத்திலேயே இருக்கக்கூடிய குரு கேது சனி முதலிய நீண்ட காலம் இருக்கக்கூடிய கோள்களும் அதனை ராகு பார்ப்பதும் நீங்கள் தொடர்ந்து பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்பதையே காட்டுகின்றது. இதில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் குருவினுடைய ஸ்தான பலம் குறைந்து இருந்தாலும் கூட, உங்கள் ராசிநாதனான அவர், உங்கள் ராசியில் அமர்ந்து, உங்கள் ஏழாம் இடத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார் என்பதால், மற்ற கோள்களால் வரக்கூடிய சங்கடங்கள் சற்று குறையும். இதுவரை இருந்த நிலைகளில் சிறு முன்னேற்றம் ஏற்படும். தடைகளும் ஓரளவு நீங்கி ஒளி பிறக்கும்.
உங்களுடைய புத்திசாலித்தனமான முதலீடுகளும் திட்டங்களும் ஓரளவு உங்களை காப்பாற்றி புதிய பாதைக்கு உங்களை இட்டுச் செல்லும். கணவன்-மனைவி கருத்து மோதல்கள் அடங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும். இந்த ஆதரவான நிலையால் பல பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலும் கூட அவைகள் பெரிதாகத் தெரியாது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் பண விரயம் ஏற்படலாம். எனவே, செலவுகளில் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பினை நீங்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொழிலில் தேவையில்லாத முதலீடுகளை போடும் காலம் அல்ல இது. இருக்கும் தொழிலை நன்கு திட்டமிட்டு வளர்க்கவே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
இப்பொழுது உள்ள சூழ்நிலையில் நீங்கள் எந்த விஷயத்திலும் அதிகமான எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருக்கக் கூடாது. உங்கள் முழு கவனமும் இருக்கும் பல சிக்கல்களிலிருந்து புத்திசாலித்தனமாக மீண்டு வருவதிலேயே இருக்க வேண்டும். வியாழக்கிழமை தோறும் நீங்கள் ராகவேந்திரர் கோயிலுக்கோ அல்லது உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வருவது உங்கள் மனதிற்கு நல்ல வலிமையையும் ஆறுதலையும் தரும். தெய்வ பலம் இம்மாதம் உங்களுக்கு நன்மையை தரும்.
—————————————————————————————————————————————————-
அன்புள்ள மகர ராசி நேயர்களே!
இம்மாதம் உங்கள் ராசிநாதனான சனி உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதி சூரியன் உங்கள் களத்திர நட்பு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பகை, கடன் முதலிய ஸ்தானங்களுக்கு உரிய புதன் அதே இடத்தில் ஆட்சி பெற்று ராகுவோடு இணைந்திருக்கிறார். விரைவில் சுகஸ்தானத்தில் செவ்வாய் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்தோடு அமர இருக்கிறார். சில கிரக நிலைகள் உங்களுடைய ராசிக்கு சில சங்கடங்களை காட்டுகின்றன.
சில எதிர்பாராத செலவுகள் மனச்சங்கடங்கள் ஏற்படலாம்.காரணம் சில ஜாதகங்களில் தசா புத்தி கடுமையாக இருக்கும். சோம்பலால் காரியம் தள்ளிப்போடுதல், எதிர்மறை சிந்தனைகளால் மனம் அவ்வப் பொழுது கவலைப் படுதல் முதலிய விஷயங்கள் நடந்து வருகின்றன. நீங்கள் எவ்விதத்திலும் தாமதத்திற்கு இடம் தரக்கூடாது. இன்றே செய் நன்றே செய் என்பதுபோல உறுதியோடு சில காரியங்களை செய்தால் நல்லது. உங்களுக்கு சில எதிர்பாராத ஆலோசனைகளும் உதவிகளும் கிடைக்கும்போது அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களை அலட்சியப்படுத்தாமல் ஆலோசனை செய்து ஒரு காரியத்தை செய்யும் பொழுது அவர்களுடைய உதவியும் உங்களுக்கு கிடைக்கும். தொழில்நுட்பத்துக்கு அனுகூலமாக மாதத்தின் முற்பகுதியில் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்லது. காவல்துறை, கட்டிட பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்கள் இம்மாதம் சில அனுகூலங்களைப் பெறுவார்கள். வணிகம் செய்பவர்களுக்கு மிதமான வளர்ச்சி இருக்கும். தொழில் நிமித்தமாக பல புதிய முயற்சிகளை நீங்கள் தொடங்குவதற்கான ஆலோச னைகளில் ஈடுபடலாம். உங்களோடு பணிபுரிகின்ற நண்பர்களால் ஆதாயங்கள் உண்டு. அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் பெரிய சலுகைகள் பெற முடியாத அளவிற்கு தடைகள் நீடிக்கும். உத்தியோக நிமித்தமாக பலர் இருந்த இடத்தைவிட்டு பெயர வேண்டியிருக்கும்.
மாணவர்களுக்கு சாதகமான மாதம் தான். அஷ்டமாதிபதி நட்பு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நண்பர்களிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். அவ்வப்பொழுது தியானம் செய்யுங்கள். உணவிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துங்கள். தெய்வ பலத்தால் பல சங்கடங்களை கடந்து நன்மைகள் பெறுகின்ற மாதமாக இந்த மாதம் அமையும்.
—————————————————————————————————————————————————-
கும்ப ராசி:
இம்மாதம் பணத்தேவைகள் உங்களுக்கு பெரிய அளவுக்கு பிரச்சனை இருக்காது. காரணம் உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது. தனாதிபதி குருவும் இணைந்து இருக்கிறார். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வேகமாகப் பேசுவதை கொஞ்சம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ரத்தம் நரம்பு முதலியவற்றில் சில நோய்கள் சிலருக்கு ஏற்படலாம்.
அரசாங்க விஷயங்களில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பது சாதகமாக அமையாது. தந்தை மற்றும் தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் நேரலாம் .அவர்களுக்கே உடல்நிலை சரியில்லாமல் இருந்து சில செலவுகள் ஏற்படலாம். தாயின் உடல்நிலை ஆரோக்கியமாகவே இம்மாதமும் அடுத்த மாதமும் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே நல்ல இணக்கம் இருக்கும். ஆயினும் சின்னச் சின்ன உரசல்கள் தோன்றவே செய்யும். அவைகள் பெரிதுபடுத்தாமல் விடவேண்டும்.
உத்தியோகம், வேலை போன்றவற்றில் கடுமையான நிலை இருக்கும். அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். புதிய முதலீடுகளில் இப்பொழுது எவ்விதத்திலும் கவனம் செலுத்த வேண்டாம். எந்த முயற்சியாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளிப் போடவும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இம்மாதம் மிகச் சிறந்த மாதம் என்று சொல்லமுடியாது. மிதமான பலன்களே நடக்கும். மாணவர்கள் மிகுந்த பொறுப்புடனும் அதிக சிரத்தையும் எடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் எதிர்பார்ப்புக்கு கொஞ்சம் மாறாக சில விஷயங்கள் நடக்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் இம்மாதம் கவனத்தோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு அலுவலகத்திலேயே சில சங்கடங்கள் நேரலாம்.
வீட்டில் தினந்தோறும் தங்கள் வழிபாட்டு நேரத்தை கொஞ்சம் கூட்ட்டிக்கொள்ளவும். குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது கோயிலுக்குச் சென்று வருவதை வழக்கமாகச் செய்யுங்கள். பெரிய கோயில்கள் இம்மாதம் திறந்திருக்காது. வீட்டுக்கு அருகாமையில் சிறு விநாயகர் கோயிலோ சிவன் கோயிலோ பெருமாள் கோயிலோ இருந்தால் அங்கு அவசியம் சென்று வரவும். ஆஞ்சநேயர் கோயிலாக இருந்தாலும் நல்லது. தெய்வ பலத்தால் இம் மாதங்கள் பல தடைகளும் கவலைகளும் நீங்கி நல்லபடியான நிகழ்வுகள் நடக்கும்.
—————————————————————————————————————————————————-
மீன ராசி:
இம்மாதம் சில எதிர்பாராத ஏற்றங்கள் உங்களுக்கு நடக்கும். சென்ற மாதத்தின் உழைப்பின் சம்பளம் இம்மாதம் பெறுவீர்கள். வழக்குகள் மற்றும் அரசாங்கத்தில் நீங்கள் எதிர்பார்த்த தகவல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சில பிரச்சினைகளில் உள்ள தடைகள் நீங்கும் .சுபகாரியம் வீட்டில் நடப்பதற்கான பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. பொருளாதார பலமும் நன்றாகவே இருக்கிறது.
தொழில் ஸ்தானத்திற்கு குரு வந்து அவர் சுக ஸ்தானத்தையும் தன ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். நண்பர்களுடன் குடும்ப உறுப்பினர்களும் ஏதேனும் கசப்புகள் ஏற்பட்டு இருந்தால் அவைகள் குருவின் பார்வையினால் விலகி சுமுக உறவு ஏற்படும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். நோயில் இருப்பவர்கள் நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
எனவே, ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். .தொழிலதிபர்களுக்கும் வணிகர்களுக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் அலைச்சலும் அதற்கேற்றவாறு அதிகமாகவே இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற காலம் அல்ல. புதிய திட்டங்களையும் தள்ளிப்போடவும். இப்பொழுது உள்ள சூழல் அதற்கு ஏற்றவாறு இல்லை.
பித்தம் மற்றும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஏற்ற எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். சர்க்கரை, ரத்த அழுத்தம் முதலிய நோய்களால் சங்கடப்படுபவர்கள் சற்றும் அலட்சியமாக இருக்கக்கூடாது. வீட்டில் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வழிபடுங்கள். உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அருகாமையிலுள்ள கோயிலுக்குச் சென்று வாருங்கள். இம்மாதத்தை பெரிய பிரச்சினை இன்றிக் கடக்கலாம்.
சனிப்பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் Sani Peyarchi Palangal
