மேஷ ராசி :
உங்கள் ராசிக்கு நான்காம் வீடான கடகத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் தந்தையின் மூலம் சில உதவிகள் ஏற்படும். அரசாங்கத்தின் சகாயம் மூலமும், கடன் விண்ணப்பங்கன் மூலமும், வீடு, வாகனம், சொத்து முதலிய ஆதாயம் ஏற்படும். இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய தனகாரகன் ஆகிய சுக்கிரன், நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றத்தையும் தருவான். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும் பத்தில் நல்ல சந்தோஷம் நிலவும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
நண்பர்களிடம் சில சின்ன சின்ன கசப்பு அனுபவங்கள் ஏற்படலாம். அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் இருக்கலாம். அப்படி இடமாற்றம் வந்தாலும் கவலைப்பட வேண்டாம். அவை உங்களுக்கு நன்மையாகவே முடியும்.சொந்தத் தொழில் புரிபவர்களுக்கு மிக அதிக மான உழைப்பு தர வேண்டியிருக்கும். ராசி அதிபதியான செவ்வாய், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதனால், மாதத்தின் முற்பகுதி சில நஷ்டங்களையும், எதிர்பாராத சிக்கல்களையும் ஏற்படுத்தும். நாம் ரகசியமாக வைத்திருந்த விஷயம் எதிர்பாராமல் வெளிவந்து நமக்கு சங்கடத்தைத் தரலாம். பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் பித்தம் தரும் உணவுகளை குறைத் துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் வீட்டில் இருக்கும் இந்தக் காலத்தில் , வீணாக்காது ,எதிர்காலத்திற்கு நன்கு திட்டமிட வேண்டும். காலம் விளையாட்டாக போய்விடும், திடீரென்று படிப்பில் அக்கறை செலுத்த முடியாத ஒரு நிலை ஏற்படும், எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும், சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று விளக்கு போடலாம்.
—————————————————————————————————————————————————-
ரிஷப ராசி :
உங்கள் ராசிக்கு நான்காம் அதிபதி நான்காம் இடத்திற்கு 12-ம் இடமான 3ம் இடத்தில இருக்கிறார். எனவே தாயின் உடல்நிலையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று இருக்கிறார். அவர் இடையில் மாறினாலும் தன ஸ்தானத்திற்கு தான் போகிறார். அதுவும் அவருடைய நல்ல ஸ்தானமே. எனவே பணப் பிரச்சனைகள் வராது. கணவன் மனைவி உறவினர்கள் இவர்களோடு நல்ல சுமுகமான உறவு நீடிக்கும்.
கொரோனா காலமாக இருந்தாலும் கூட ஒரு சிலர் இடம் மாறி பணியாற்ற வேண்டி இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவி கிடைக்கும். கலைத் தொழிலை மேற்கொண்டு இருப்பவர்களுக்கு புதிய உற்சாகம் பிறக்கும். நேரடியாக அவர்களுக்கு இக்காலத்தில் வருமானம் கிடைக்காவிட்டாலும் ஏதேனும் ஒரு மறைமுக வருமானம் கிடைக்கும்படியான சூழல் ஏற்படும். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சூரியன் இருப்பதால், புதிய பதவி, மதிப்பு முதலியவை ஏற்படும். ஆரோக்கியமும் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.
பொதுவாகவே இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரியசிக்கல் கடந்த சில மாதங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. குரு, கேது, ராகு, சனி போன்றவை இடைஞ்சலான இடத்தில் இருப்பதால் பல தொல்லைகள் ஏற்படவே செய்யும்.எதிர்பாராத அலைச்சல், காரியத்தடை, மன உளைச்சல்கள் முதலியவை ஏற்படும். எனவே, எச்சரிக்கை வேண்டும். ஆயினும் மற்ற கிரகங்களான சுக்கிரன், சூரியன், லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இவற்றால் சற்று நிம்மதி கிடைக்கும் .இறைவனை வேண்டுவதன மூலமும் தியானம் மேற்கொள்வதன் மூலமும் மனஅமைதி கிடைக்கும். அதன் மூலமாக புதிய சிந்தனை பிறக்கும். வியாழக்கிழமைகளில் தவறாமல் ராகவேந்திரர் கோயிலுக்கோ அல்லது அருகாமையிலுள்ள தக்ஷிணாமூர்த்திக்கோ வழிபாடு செய்யவும்.
—————————————————————————————————————————————————-

மிதுன ராசி :
சக்கரம் போல் நன்மையும் தீமையும் உங்களுக்கு மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ராசிநாதனான புதன் ஆட்சியில் இருக்கிறார்.ஆயினும் ராகுவின் பிடி ராசியை ஆக்கிரமித்து இருப்பதாலும், அதற்கு நேர் ஏழாவது ராசியில் சனி, கேது, குரு முதலிய கிரகங்கள் இருப்பதாலும் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும் இக்கிரகங்கள் விரைவில் மாற இருக்கின்றன. அதுவரை பொறுமையோடு நீங்கள் இருந்தால் மிக விரைவாக உங்களுக்கு வெற்றிப் பாதை திறக்கும்.
இது வரை திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு அதற்கான ஒரு வெளிச்சம் தெரிகிறது. பத்தாமிடமான கேந்திரத்தில் மீன ராசியில் செவ்வாய் இருப்பதும் அவர் லாபத்தை நோக்கி சஞ்சரிப்பதும் உங்களுக்கு தொழில் முதலிய விஷயங்களிலும், வேலை முதலிய விஷயங்களிலும் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதற்கான வழி.
தொழிலதிபர்களுக்கு நிச்சயமாக ஓரளவு லாபம் கூடுதலாகவே கிடைக்கும். குறிப்பாக பரம்பரைத் தொழிலைச் செய்து வருபவர்களுக்கு நிச்சயம் லாபம் உண்டு. நட்பு போலவே இருந்து பகையாக மாறக்கூடிய சிலரை கவனித்து எச்சரிக்கையுடன் இருக்கவும். மிகுந்த எச்சரிக்கையோடு ஈடுபட்டால் அரசு உதவியம், வங்கிகள் உதவியும் ,நண்பர்கள் உதவியும் கிடைக்கும்.
மாணவர்கள் திட்டமிட்டுப் படித்தால், வெற்றி காணலாம். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தையும் ஓய்வு உழைப்பு உடற்பயிற்சி தியானம் முதலிய நல்ல விஷயங்களை தவற விட்டு விடாமல் இருக்க வேண்டும். கிரகங்களால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தையும் உடல் நல பிரச்சனை களையும் தீர்க்கும். புதன்கிழமை உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வரவும்.
—————————————————————————————————————————————————-
கடக ராசி :
உங்கள் ராசியில் அரசாங்க கிரகமான சூரியன் சஞ்சரிக்கிறார். அவன் நல்ல ஆத்மபலத்தை தரக் கூடியவன். உங்கள் ராசிக்கு தன காரகன். குடும்பாதிபதி. அவன் லக்னத்திலேயே இருப்பது ஒரு விதத்தில் சரி என்றாலும் கூட, இன்னொரு விதத்தில் சில சங்கடங்களையும் ஏற்படுத்தும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பொதுவாகவே அவ்வப்பொழுது நீங்கள் மனச்சோர்வை சந்திப்பீர்கள். அதிலிருந்து மீண்டு வரவேண்டும். சற்று கவனம் இல்லாவிட்டால் கஷ்டம்.
உங்களுடைய செல்வாக்கை சிதைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கும். மிகுந்த அலைச்சலை ஏற்படுத்தித்தரும் சூழ்நிலைகள் அமையும். இவற்றையெல்லாம் எதிர்பார்த்து முன்னதாகவே நீங்கள் உங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டால் சங்கடங்களை தவிர்க்கலாம்.எனவே சோர்வில்லாமல் உங்கள் தொழிலை செய்து வாருங்கள். சற்று தாமதம் ஆனாலும் நல்ல பலன் கிடைக்கும்.
ஆறில் சனியும் கேதுவும் இருப்பதால் மற்ற பல இன்னல்கள் தீர்ந்து விடும். பெண்கள் எச்சரிக்கையோடு பேசவேண்டும். இல்லாவிட்டால் மிகுந்த பிரச்சனைகள் ஏற்படும். இதுவரை நீங்கள் சேமித்து வைத்திருந்தால் இம்மாதம் அவற்றைக் கொண்டு உங்கள் பொருளாதார நிலைகளை அதிக சிரமமின்றி சமாளித்துவிடலாம். இப்பொழுது சற்று பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் சூழ்நிலைகள் தெரிகின்றன.
மாணவர்களைப் பொறுத்தவரையில் இம்மாதம் அவர்களுக்கு நல்ல மாதமே. அவர்கள் எதிர்பார்த்த கல்வியில் சிறப்பான நிலைக்கு வரலாம். இந்த ராசியில் பிறந்து ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் சந்திரனுக்குரிய திங்கட்கிழமை சிவன் கோயிலுக்குச் சென்று பார்வதி பரமேஸ்வரர் களை வணங்கி நலம் பெறலாம்.
—————————————————————————————————————————————————-
சிம்ம ராசி :
இம்மாதம் உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கு விரயத்தில் சஞ்சரிக்கிறார் என்பதால் சில மனக் குழப்பங்களும் வாழ்க்கையில் ஏற்படும் .அதைப்போலவே சுகாதிபதி செவ்வாய் எட்டில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவர் இன்னும் சில நாட்களில் மேஷத்தில் தன் ஆட்சி வீட்டுக்கு வருகிறார் .அதுவரையில் இந்த சிரமங்கள் இருக்கவே செய்யும். அதை கடந்துவிட்டால் இந்த மாதம் சிம்ம ராசி நேயர்களுக்கு சந்தோஷம்தான்.
ஆயினும் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்கே உரிய தைரியத்தினால் பிரச்சனைகளை எளிமையாக கடந்து விடுவீர்கள். புதிய திட்டங்கள் போன்றவற்றில் சிறு தடைகள் ஏற்படலாம். அவற்றை கொஞ்ச காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. ராசி அதிபதி 12 ஆம் இடத்திற்கு போய் விட்டாலும் கூட குரு ஒன்பதாம் இடத்தையும் உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தையும் பார்ப்பதால் பொருளாதார ரீதியான பல நன்மைகள் ஏற்படும்.தொழிலில் முன்னேற்றங்களும் திருப்பங்களும் ஆதாயங்களும் ஏற்படும்.
சகோதர சகோதரிகளால் சில சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள். ஆனால் அவை ஏமாற்றம் அளிக்கும். குறிப்பாக பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சில நல்ல அதிர்ஷ்டங்கள் காத்திருக்கின்றன. இதுவரை ஏற்பட்டிருந்த கடன்களை அடைப்பதற்கு முயற்சி செய்யவும். உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி அனுகூலமாக இருக்கும். சுவாதி அனுஷம், உத்திராடம் திரு வோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.
குடும்பத்தில் ஏற்படுகின்ற சிறு கருத்து வேறுபாடுகள் பெரிதாகாமல் இருக்க வேண்டும்.விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்பது பழமொழி. அந்த பழமொழியை மறக்கவேண்டாம். உறவுகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் முன்னே பின்னே இருந்தாலும் கூட நாளை நமக்கு உதவி என்றால் அருகே வருபவர்கள். வழக்கு முதலியவற்றில் நீங்கள் எதிர்பார்த்த திருப்பங்கள் நடைபெறும். மாணவர்கள் தங்கள் படிப்பு குறித்த புதிய திட்டங்களை வகுத்து கொள்ளவது நல்லது. சில நல்ல மனிதர்களின் சந்திப்பும் தொடர்பும் இம்மாதம் உங்களுக்கு கிடைக்கும்.அதன்மூலமாக உங்கள் முன்னேற்றம் வலுப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது நல்லது.
—————————————————————————————————————————————————-
கன்னி ராசி :
சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தந்தை வழியாகவும், தந்தைவழி உறவுகளின் மூலமாகவும் சில அனுகூலங்கள் ஏற்படும். அரசாங்க ஆதாயமும் கிடைக்கும். 10-ஆம் இடத்தில் ராகு புதன் தொழில் முதலிய விஷயங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு இரண்டுக்கு 9க்கும் உரிய சுக்கிரன் முற்பகுதியில் ஆட்சியாகவும் பிற்பகுதியில் தொழில் ஸ்தானத்தை நோக்கியும் நகர்கிறார். இதன் மூலமாக கையில் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும்.மிக அதிகமாக இல்லாவிட்டாலும் தேவைக்கு எப்படியும் பணம் வந்து விடும்.
தொழில் அபிவிருத்தியும் மாதத்தின் பிற்பகுதியில் நன்றாக நடைபெறும். சுகஸ்தானத்தில் குரு இருந்தாலும் கூட, அவரோடு கேது சனி முதலிய கிரகங்கள் இணைந்து அங்கே ஒரு கிரக யுத்தம் நடந்து கொண்டிருப்பதால் சுகம் பாதிக்கும்.
வண்டி வாகன போக்குவரத்துகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அது இந்த மாதத்துக்கு மட்டுமல்ல இந்த வருடம் முழுமைக்கும் அப்படி இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ஆவது ராசியில் செவ்வாய் இருக்கிறார். அடுத்து அவர் எட்டாவது ராசிக்கு மாறப் போகிறார் எனவே நண்பர்களிடமும் வியாபாரத்தில் நீங்கள் சந்திக்கக்கூடிய நபர்களிடமும் எச்சரிக்கையோடு பழகவேண்டும். குடும்ப உறவுகளின் அன்யோன்யம் எந்த வகையிலும் பாதிக்காது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஓரளவு சென்ற மாதத்தைவிட இந்த மாதம் வேலை பளு குறையும்.
சுபகாரிய திருமண முயற்சிகள் உங்களுக்கு அனுகூலமாக நடக்கும். உத்தர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த நன்மையை பெறுவார்கள். அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, சுவாதி முதலிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு சில நன்மைகள் ஏற்படும்.
மாணவர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் நல்ல நிலைக்கு உங்கள் பெற்றோர்களால் உயர்த்தப்படுவர். நீங்கள் விரும்பிய ஒரு படிப்பில் சேர கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கும். அது உங்கள் எதிர்காலத்திற்கு நல்ல பயனையும் ஊக்கத்தையும் தரும். வெள்ளிக்கிழமை அருகில் இருக்கும் அம்பாள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வரவும்.
ஆடி மாத ராசி பலன்கள் 2020 (துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்)
