அள்ளித் தருவது குருவின் விழி – Sri.D.K.ஸ்ரீனிவாசன்
ஆசார்ய கடாட்சத்தால் அதிகப் பலன் கிடைக்கும்.
தேவர்களின் அருளால் கிடைக்காததெல்லாம் குருவின் அருட்பார்வையால் கிடைக்கும். இதைச் சொல்லும் ஸ்வாமி தேசிகன் ஒரு சுலோகத்தில் அருமையாகச் சொல்லுகிறார்.
மற்ற தேவதைகள் தராத லாபத்தைக் குருகடாக்ஷம் தரும். நிறைய கண்கள் இருந்தால் என்ன? பெரிய தேவர் ஆனால் என்ன? அவர்கள்பார்வை ஆசார்ய கடாட்சத்திற்கு ஈடாகுமா? ஆகாது.
நம்மைவிட அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்த பெரியவர்களை உவந்து உறவினராகக் கொள்வது அரிய பேறுகளில் எல்லாம் அரியது ஆகும். அது எல்லா வலிமையையும் நமக்குத் தரும்.
அன்னையாய் தந்தையாய் ஆச்சாரியனாய் இப்படி பல பரிமாணங்களில் மிளிரும் சத்குருவின் அருளைப் பரிபூரணமாய்ப் பெற சீடன் கடுமையாய் தவம் பழக வேண்டும்.
அமுதமொழிகள் பாடல்:
சாதுக்கள் சங்கம் சத்தியப்பாதையில் சாவடியாய் நிற்கும் மடமனமே! சாவடியில் தங்கு சோர்வு தனை நீக்கிச் சாந்தி கொள்வாய் எந்தன் மடமனமே!
அதுபோல நம் மனம் பிரார்த்தனைகளின் மூலம் அந்த ஆன்மிகப் பேரலைகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அப்போது அந்த மகான்களின் உணர்வுகளை கிரகித்து முன்னேறலாம். பாரதியார்
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்கலாமோ? ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ? ஆயிரநூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயனவன் பெருமையை நான் சுருக்கிச் சொல்வேன்
என்று பாடுவதைக் கவனிக்க வேண்டும்.
தாய் தன் குழந்தை கேட்பதையெல்லாம் கொடுப்பாள். இஷ்டதெய்வம் தாயைப்போன்று தன் பக்தன் கேட்பதையெல்லாம் அளித்து விடுவார். ஆனால் குருவோ கோடி தாயன்பை நம்மிடம் கொட்டுவார். ஆனால் கேட்பவற்றையெல்லாம் கொடுத்து விட மாட்டார். சீடனின் பக்குவம் என்ன? எந்த நிலைகளை அடைவதற்கு அவன் மனம் தகுதி பெற்றுள்ளது என்பதைப் புரிந்து அதனை மட்டுமே அளிப்பார்.
உன்னைப் பாடாய்ப்படுத்தும் தீய சக்திகளிலிருந்து சீடனின் வாழ்க்கை தூய்மை உள்ளதாக உண்மையாக விளங்கும்போதே குருவின் சக்தியை அவனால் கிரகித்து மேன்மை அடைய முடிந்தது.
வேதாந்தம் சொல்வது இதைத்தான். குருவின் அருளால் வினைகள் எரிந்துவிடுகின்றன. எனவே அவரே நமது ஆத்ம பந்து.
பெரியவர்களின் நெருங்கிய தொடர்பு நமக்கு இன்றியமையாதது என்பதை நினைவில் வைத்தால் உய்வு பெறலாம்.

அடக்க வேண்டிய ஆறு குணங்கள்
காமம், கோபம், லோபம்,மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு தீய குணங்கள் நமக்குப் பகைவர்கள். அவற்றை வெல்லவேண்டும் என்று கண்ணன் அரசர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.“அரசர்களே! பகைவர் கூட்டத்தில் முதன்மை பெற்றவை சில உண்டு. அவை எளிதில் வெல்ல முடியாதவை. தகாத இடத்தில் கோபம், பேராசை முதலியவை அவை. எல்லாக் காரியங்களையும் கெடுத்துவிடுபவை. அவற்றை நீங்கள் முதலில் வெல்லுங்கள்”.
பகையரசர்களை வெல்வது அப்புறம் கிடக்கட்டும். அதற்கு முன் ஜெயிக்க வேண்டியவை இந்த ஆறு உட் பகைவர்களை. அவற்றை வெல்ல முயலுங்கள். இவற்றை ஜெயிப்பது கஷ்டம்தான். ஆனால், ஜெயிக்கா விட்டால் எல்லா லட்சியங்களும் வீணாகிவிடும். நண்பகலில் சூரியன் அனலாய்த் தகித்தாலும், சாலையில் நடந்து சென்று விடலாம். ஆனால், சூரிய உஷ்ணத்தைக் கிரகித்த பின் வெளிப்படுத்தும் சுடுமணலில் நடப்பது வெகு சிரமம். செருப்பு அப்போது அவசியமாகிறது.சூரியனை விட சூரிய வெப்பத்தை வெளிவிடும் மணலுக்கே சக்தி அதிகம்.
மனிதனை மயக்கும் மாயைகளான காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சாரியம் நம்மை அழிக்க வல்லவை.விழிப்புணர்வும் விவேகமும் பிரார்த்தனையும் ஒருவனுக்கு சுடுமணலில் செருப்பைப் போன்று உதவி செய்து மாயையின் கட்டுக்களிலிருந்து விடுவிக்கின்றன. பொறுமையோடிருந்து கோபக்கனலை உடனே அணைக்க முயல வேண்டும்.காமம்,கோபம்,பேராசை ஆகிய மூன்று தளைகளிலிருந்தும் விடுபடுவோம். விடுபட துணைபுரிவது அன்பு. அறம் நிலைக்க அன்பு தேவை.
என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதனை அறம். – என்பது குறட்பா.
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். வலிமை நிறைந்த களஞ்சியமாக உன்னை உருவாக்கிக்கொள். நம் மனதை உரம் பெறச் செய்வது எவ்வாறு?
1) யார் இகழ்ந்து பேசினாலும் அவர்களிடம் கோபம் கொள்ளாமல் இருத்தல். 2) நம் மனம் புண்படும்படி பேசிக் கெடுதல் செய்திருந்தாலும் அவர்களுக்குச் சேவை செய்தல். 3) பிறர் நமக்கு கஷ்டம் தந்தாலும் கூட முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்தல். 4) கொடிய பகைவனிடம் இனிமையும் நன்மையுமான வார்த்தைகளையே பேசுதல். 5)யாரிடத்திலும் சினம், பகை, பொறாமை கொள்ளாமல் அதை மறந்துவிடுதல். இப்பண்புகளை கடைபிடித்தால் எப்போதும் வெற்றிதான்.
அபசாரத்தைத் தவிர்த்திடுக!
பகவதபசார பாகவதாபசாரங்கள் கொடியவை. அவை நேராமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ப்ரபத்தி பண்ணினவர்கள் பெருமாளுக்கு பக்தராகிவிட்டபடியால் பக்தவத்ஸலனான பெருமாளைச் சேர்ந்த அவர்கள் என்ன பன்னினாலும் அபசாரம் ஆகாது என்று நினைக்கக்கூடாது. இங்கெடுத்த ஸ்ரீஸூக்தியின் அர்த்தம்.
அபசாரங்களை நெருங்கவிடாதீர்கள். அவற்றை தூரத்தள்ளுங்கள். என்னதான் பகவானுக்கு அந்தரங்கரானாலும் சில விஷயங்களில் கவனம் தேவை. ஒரு உதாரணம் பார்ப்போம்.
ராஜகுமாரன் ராஜாவுக்கு மிக நெருங்கினவன். ஆனாலும் அவன்கூட ஒழுக்கமானவனாக சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோமே. நமக்குச் சிறிதளவும் தீங்கு வரக்கூடாதென்று நினைத்தால் நாம் அபசாரங்களை அறவே விட்டொழிக்க வேண்டும்.
நாம் திருமாலடியார்களில் ஒருவராக இருப்பதால், நமக்கு சிறப்பான அனுக்கிரகம் கிடைக்குமானாலும், நாம் பெருமாளிடமும் பாகவதர்களிடமும் அபசாரப்படலாகாது. பெருமாளுக்கு அனுகூலராகிவிட்ட மாத்திரத்தால் நாம் பகவானிடமோ, அடியாரிடமோ, மனம் போனபடி நடக்கலாகாது.
பாகவதர்கள் மனம் நோக எதையும் செய்யக்கூடாது. இதற்கு ஒரு உதாரணம்.
ராஜகுமாரன் தவறு செய்தால் குமாரனிடம் உள்ள வாத்ஸல்யத்தால் ராஜா பெரும் தண்டனை தராதிருக்கலாம். ஆனாலும் ராஜகுமாரனும் கவனத்துடன்தான் நடக்க வேண்டும்.
பிழை நேர்ந்தால் சிறிதேனும் தண்டனை பெற்றே தீரவேண்டி வரும். சிறிய தண்டனையும் வரவேண்டாமெனக் கருதினால் நாம் எல்லாவித அபசாரங்களையும் தூரத்தள்ளிவிட வேண்டும்.
எந்த அபசாரத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது. இடம் தந்தால் பகவானின் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.
ஒரு மல்லிகைப் பூ மலர்ந்தால் சிறிது தூரம் அதைச் சுற்றி மணம் கமழும். அதே மலர் நூற்றுக்கணக்கில் மலர்ந்தால் அவற்றின் நறுமணம் இன்னும் அதிக தூரம் வரை பரவும்.
ஒரு தோட்டமே மலர்ந்தால் அங்கிருந்து வரும் வாசம் அபரிமிதமாக இருக்கும். எங்கிருந்தெல்லாமோ வண்டுகள் அம்மலர்களைத் தேடி வரும் . மானிடப் பிறவி எடுத்ததன் நோக்கம் தன்னை குணவான் ஆக்குதற் பொருட்டேயாம்.
பூக்களின் மணம் போன்று ஒருவனுடைய நற்செயலும், நன்மொழியும், நல்லெண்ணமும் சேர்ந்து மனிதனைக் குணவான் ஆக்கும்.
நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்
என்று இதையே சைவத்தில் அப்பரும் கூறுகிறார்.
சில அடிப்படையான ஒழுக்க விஷயங்கள் சனாதன தர்மத்தின் எப்பிரிவிலும் ஒரே மாதிரியாகவே இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
தனவந்தர்களும் புலவர்களும்
அரசர்கள் பண்புடன் இருக்க வேண்டும். பண்பில்லாத அரசனிடம் போய் பணத்திற்காக வித்வான்கள் நிற்பது கூடாது.
பெரும் பணக்காரர்களிடம் சென்று பணத்துக்காகப் புகழ்வது அழகல்ல. விஜயநகர சாம்ராஜ்யத்தில் பதவியையும் பணத்தையும் ஏற்கும்படி சுவாமி தேசிகனின் நண்பர் வித்யாரண்யர் அழைத்த பொழுது அதை மறுக்கும் வகையில் தேசிகன் அருளிய வைராக்கிய பஞ்சகத்தின் கடைசி பாகம் அற்புதமானது.
அரசர்களை அறிஞர்கள் இவ்வாறு துதி செய்து பிழைப்பது அவசியமில்லை. ஆனால் ஏனோ புலவர்கள் தங்கள் கல்வியை அடமானம் வைப்பது போல வயிற்றுப் பாட்டுக்காக வீணாக அவர்களை நாடுகிறார்கள். என்ன பரிதாபம்! என்கிறார் தேசிகன்.
“நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி துதி கற்று உலகில் துவள்கிலேன்” என்று. இதனை அமுதனாரும் சொல்கிறார்.
எத்தனை சிறப்புகள் வருவதாக இருந்தாலும் குலப் பெருமையை கெடுக்கக் கூடிய செயல்களை ஒருவன் செய்யாமல் விட்டு விட வேண்டும்.
நிலையான பெருமையை வேண்டுபவர், அவற்றைப் பெற முடியவில்லை என்றாலும் கூட தாழ்ந்த செயலைச் செய்து பெருமை அடைய கருதக்கூடாது.
அரசர்களாக இருந்தாலும், அவர்களைச் சரியான பாதையில் செலுத்த வேண்டுமே தவிர, அவர்கள் விரும்பும் செயல்களை தன்னுடைய சுயநலத்திற்காகச் செய்யக்கூடாது.
சுவாமி நம்பிள்ளை ஒரு முறை, அரசாங்க அதிகாரி ஒருவரிடம் மடம் நிர்மாணம் செய்வதற்காக பொருள் உதவியை வேண்டிச் சென்றார். அப்பொழுது அவர், “நம்மாழ்வாரை போலவே தான் ஒரு திருவாய்மொழியை எழுதி இருப்பதாகச் சொல்லிப் படித்துக் காண்பித்தார்”.
நம்பிள்ளை மேலுக்கு நன்றாக இருக்கிறது என்று வாய் வார்த்தைக்காகச் சொன்னதும் அந்த அதிகாரி, நம்மாழ்வார் வேறு எந்தப் பணியும் இல்லாமல் திருவாய்மொழி எழுதினார். நான் ஒரு பக்கம் அரசாங்க அலுவலர்களை கவனித்துக்கொண்டும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டும் திருவாய்மொழியும் எழுதுகிறேன் என்று சொன்னால், நான் நம்மாழ்வாரை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக அல்லவா பொருள் என்று சொல்ல, நம்பிள்ளை அவன் ஆணவத்தைக்கண்டு வெறுத்துப்போய் இப்படிப்பட்ட ஒரு அதிகாரியிடம் பொருளை வேண்டிச் சென்றதற்காக மிக மிக வருந்தி, பெருமாளிடம் மன்னிப்பு கேட்டார் என்று சொல்லுவார்கள்.
இரணியகசிபு தன்னுடைய நாட்டு மக்கள் எல்லோரும் தன்னுடைய நாமத்தைத் தவிர வேறு எதையும் சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தான்.
ஆனால், அவனுடைய பிள்ளையான பிரகலாதன், நீங்கள் சொல்வது தவறு. அப்பா! யார் உயர்ந்தவரோ அவருடைய நாமத்தைத் தான் கூற வேண்டும். அப்படி உயர்ந்தவன் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனே என்று சொல்ல, கோபம் கொண்ட இரணியன், பிள்ளை என்றும் பாராமல், எல்லையற்ற தொல்லைகளைத் தந்தான். ஆயினும் பிரகலாதன் மன உறுதியுடன் இருந்தான்.
கடைசியில் இரணியகசிபு அழிந்த கதை நமக்கு எல்லாம் தெரியும்.
எனவே, அரசர்கள் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். மக்களைக் காக்கும் செயல்களைச் செய்ய வேண்டும். ஆணவம் கொஞ்சமும் இருக்கக்கூடாது. புலவர்களை மதிக்க வேண்டும். இதைத்தான் திருக்குறளும், முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்று அறிவுறுத்துகிறது.
பெற்ற தாய்க்கு பணிவிடை செய்யுங்கள்
தன்னைப் பெற்றெடுத்த தாய்க்குப் பணிவிடை செய்ய வேண்டும்.தாய்மைக்கு என்ன பொருள் தெரியுமா?
குழந்தைப் பேறு அடைவது மட்டுமல்ல தாய்மை; குறை, தகுதி, பிரதிபலன் கருதாமல் தூய அன்பு செலுத்துவதே தாய்மை.
தாய் அன்பு உலகத்தையே அரவணைக்கும் ஆற்றல் கொண்டது. குழந்தையின் அழுகுரல் கேட்டுப் பாலூட்டும் தாயை விட, குழந்தையின் பசியறிந்து, பாலூட்டும் அன்னையே சிறந்தவள். தந்தையை விடவும் குருவை விடவும் தாய் போற்றுதலுக்குரியவள். இதை ஸ்வாமி தேசிகன் ஒரு சுலோகத்தில் சொல்கிறார்.
அன்னை தன் பிள்ளைக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளாள். ஆகையால் அவளுக்குப் பணிவிடைகள் புரிவது மகனின் கடமை. அவளுக்கு இவன் பணிவிடை பண்ணியே தீர வேண்டும்.
ஐந்து மாதக் குழந்தை தன் அன்னையின் முகத்தைத் தவிர வேறு எதையும் அறிந்திராது. சில சமயங்களில் அன்னையை விடுத்து தன் தந்தையிடம் கூடச் செல்லாது.
பெரியோர்களுக்குள் சிறந்தவர் ஆசாரியன் என்று சிலர் கருதுகிறார்கள்; அம்மாதான் என்று வேறு சில மகான்களின் கருத்து.
தந்தையைக் காட்டிலும் நூறு மடங்கு மேன்மை கொண் டவள் தாய். பிறப்பு என்பது எல்லா உயிருக்கும் ஒரே தன்மை யேயாகும். ஆனால் வாழ்வில் உயர்வு, தாழ்வு என்பது அவர்கள் செய்கின்ற தர்மத்தை பொறுத்தே அமையும். அதே போல் மேல் நிலையில் வாழ்ந்தாலும் உயர்பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர். தாய்மையைப் போற்றி அவரின் பண்புகளைத் தாமும் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் அவர்களின் பெருமைகளை அறியாத சிற்றறிவு படைத்தவர் உள்ளத்தில் உண்டாவதில்லை.
அதைப் போல் ஆற்றல் மிகுந்த தாயை மதிக்காமல் நடந்தால் நீங்காத துன்பம் உண்டாகும். அமுதமொழிகள் பாடல் ஒன்று.
அன்னையே உந்தன் அணைக்கு மடியில்
என்னையே புதைத்தங்கு இனிதாய் கிடப்பேன்
இறைவனிடம் தாய் சேய் உறவு பூணும் பக்தன் கோவிலுக்குச் செல்லும் போது என் அன்னையின் மடியில் அமரப் போகிறேன். அவளின் அன்பு மடியில் துயிலச்செல்கிறேன் என்ற உயர் சிந்தனைகளுடன் சென்றால் அன்னையின் மடியே ஆனந்தம் என்பதை அனுபூதியாக்கலாம்.
